தொடரை வென்றது இந்தியா - வங்கதேச அணிக்கு ஏமாற்றம்

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணி 47 வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று மிர்புரில் நடந்தது. 

‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரகிம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். வங்கதேச அணியில் தஷ்கின் அகமது, மிதுன் அறிமுக வாய்ப்பு பெற்றனர். 

இந்திய அணிக்கு ரகானே டக்–அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். மழை பெய்ததால், 5.2 ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டு, பின் மீண்டும் போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டு துவங்கியது. 

அகமது வேகத்தில் உத்தப்பா (14), ராயுடு (1) அவுட்டானர். புஜாரா (11), பின்னி (3), மிஸ்ரா (4) என அடுத்தடுத்து அகமதுவிடம் சிக்கினர். கேப்டன் ரெய்னா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்தவர்களும் சொதப்ப, இந்திய அணி 25.3 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. வங்கதேச அணி சார்பில் தஷ்கின் அகமது 5 விக்கெட் வீழ்த்தினார். 

வங்கதேச அணிக்கு துவக்கத்திலேயே மோகித், பின்னி தொல்லை தந்தனர். தமிம் இக்பால் (4), அனாமுல் (0) மோகித் வேகத்தில் அவுட்டானர். முஷ்பிகுர் (11), மிதுனை (26) பின்னி ஆட்டமிழக்க செய்தார். 

சாகிப் அல் ஹொசைன் (4), ஜியார் (0) மோகித்திடம் சிக்கினர். மற்றவர்களும் ஏமாற்ற, வங்கதேச அணி 17.4 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் பின்னி 6, மோகித் 4 விக்கெட் வீழ்த்தினர். 

 இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என கைப்பற்றியது. 

0 comments:

Post a Comment