தென் ஆப்ரிக்கா மீண்டும் நம்பர் 1

பரபரப்பான கொழும்பு டெஸ்ட் போட்டியை டிரா செய்த தென் ஆப்ரிக்க அணி, தொடரை 1–0 என கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் நம்பர்–1 இடத்தை பெற்றது. இலங்கை அணியின் போராட்டம் வீணானது.

இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 8/229 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. 

இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு 369 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது.

நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை அவ்வப்போது வந்து தொல்லை தந்தது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர் (13) ஏமாற்றினார். 

ஹெராத் வலையில் குயின்டன் (37), டிவிலியர்ஸ் (12) சிக்கினர்.  திருவான் பெரேரா சுழற்பந்துவீச்சில் கேப்டன் ஆம்லா (25), டுமினி (3) அவுட்டாகினர். ஸ்டைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து தவிக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது.

கடைசி ஒரு மணி நேரத்தில் எஞ்சிய இரு விக்கெட்டை கைப்பற்ற, இலங்கை அணி மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. துாணாக நின்ற பிலாண்டர் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, போட்டியை ‘டிரா’ செய்தது. 


21 ஆண்டுக்குப்பின்:

சுமார் 21 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி(124 புள்ளிகள்), டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தையும் பிடித்தது. இரண்டாவது, மூன்றாவது இடத்தில் முறையே ஆஸ்திரேலியா(123), பாகிஸ்தான் (103) அணிகள் உள்ளன. இந்திய அணி 102 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

முற்றுகிறது ஜடேஜா விவகாரம் - ஐ.சி.சி., அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுப்பு

தள்ளு’ விவகாரத்தில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜாவுக்கு ஐ.சி.சி., விதித்த அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்தது. இதனால், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. இதன் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.     

 அப்போது ஜடேஜாவை பிடித்து தள்ளிய ஆண்டர்சன் மீது, இந்திய அணியும், ஜடேஜா மீது இங்கிலாந்து அணியும் புகார் கொடுத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விசாரிக்கிறது.

சவுத்தாம்ப்டனில் நடந்த ஜடேஜா தரப்பு விசாரணையில், இரு வீரர்கள் மற்றும் அவர்களது சட்ட ஆலோசகர்கள் பங்கேற்றனர். ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன் (ஆஸி.,), இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரித்தார்.

முடிவில், ஆண்டர்சனை நோக்கி மிரட்டும் வகையில் சென்றதாக தெரிவித்து, ஜடேஜாவுக்கு முதல் டெஸ்ட் போட்டி சம்பளத்தில், 50 சதவீதம் அபராதம் விதித்தார்.

ஆண்டர்சன் மீதான விசாரணை, மூன்றாவது டெஸ்ட் முடிந்த மறுநாள் (ஆக., 1) நடக்கும். ஐ.சி.சி.,யின் முடிவை ஏற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது.

ஏற்கனவே, இப்பிரச்னை காரணமாக, பி.சி.சி.ஐ., மற்றும் இங்கிலாந்து போர்டு இடையே உரசல் ஏற்பட்டது. இப்போது, பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெ ளியிட்ட அறிக்கையில்,‘ ஐ.சி.சி., விதித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ஜடேஜா தரப்பில் எவ்வித தவறும் இல்லை என, நம்புகிறோம். இவ்விஷயத்தில் ஜடேஜாவுக்கு முழு ஆதரவு உண்டு,’ என, தெரிவித்துள்ளது.

தள்ளு விவகாரம் தள்ளிவைப்பு

ரவிந்திர ஜடேஜா, ஆண்டர்சன் ‘தள்ளு’ விவகாரம் தொடர்பான விசாரணை, ஆக., 1க்கு தள்ளிவைக்கப்பட்டது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நாட்டிங்காமில் முதல் டெஸ்டில் பங்கேற்றது. 

இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஜடேஜாவை பிடித்து தள்ளியுள்ளார் ஆண்டர்சன். இதுகுறித்து ஆண்டர்சன் மீது ‘லெவல்–3’, ஜடேஜா மீது ‘லெவல்–2’ ன் கீழ், இருதரப்பிலும் மாறி மாறி புகார் செய்யப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கமிஷனர் கார்டன் லுாயிஸ் சம்பவம் குறித்து விசாரிக்கிறார். 

நேற்று நடந்த முதற்கட்ட விசாரணையில், இரு நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் சார்பில் சட்ட வல்லுனர்கள் குழு ஆஜராகியது.

தற்போது அடுத்த கட்ட விசாரணை, மூன்றாவது டெஸ்ட் முடிந்த மறுநாள் அதாவது, ஆக., 1ல் நடக்கும். ‘வீடியோகான்பரன்சிங்’ முறையில் இரு வீரர்களிடம் விசாரிக்கப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்.

ஒருவேளை தடை வழங்கப்பட்டால், அதை எப்போது முதல் அமல் படுத்துவது என்பதை லுாயிஸ் முடிவு செய்வார்.

ஷரபோவா கருத்துக்கு சச்சின் பதில்

லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நேரடியாக கண்டுகளித்தார். 

அப்போது. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, ‘சச்சினை யார் என்று தெரியாது’ என, கூறினார்.

சதத்தில் சதம் உட்பட பல சாதனைகள் படைத்த சச்சின் பற்றி, ஷரபோவா சொன்ன இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து சச்சின் கூறுகையில்,‘‘ஷரபோவா கருத்தில் அவமதிப்பு எதுவும் இல்லை. அவர், கிரிக்கெட் போட்டியை பார்ப்பவர் அல்ல,’’ என்றார்.  

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், ‘டுவென்டி–20’ அரங்கில், ‘சூப்பர் ஓவரில்’ ‘மெய்டன்’ வீசிய முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) தொடர் நடக்கிறது. கயானாவில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ரெட் ஸ்டீல் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. 

பின் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுக்க, போட்டி ‘டை’ ஆனது. இதனையடுத்து போட்டியின் முடிவு ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது.

‘சூப்பர் ஓவரில்’ இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். அதிக ரன்கள் எடுக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

முதலில் களமிறங்கிய காயானா அணி, ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. பின் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கோடு வந்த ரெட் ஸ்டீஸ் அணிக்கு, கயானாவின் சுனில் நரைன் பந்துவீசினார். 

முதல் நான்கு பந்தில் ஒரு ரன் கூட வழங்காத நரைன், 5வது பந்தில் பூரனை அவுட்டாக்கினார். கடைசி பந்திலும் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. இதனையடுத்து கயானா அணி வெற்றி பெற்றது. 

இதன்மூலம் ‘டுவென்டி–20’ வரலாற்றில், ‘சூப்பர் ஓவரை’ ‘மெய்டனாக’ வீசிய முதல் பவுலர்கள் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

சுனில் நரைன் ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடுகிறார். இவரது ‘சுழல் ஜாலம்’ கைகொடுக்க, 2012, 2014ல் கோல்கட்டா அணி கோப்பை வென்றது.