சென்னை அணிக்கு தோனி நோ - கேப்டன் பதவிக்கு குட்பை

சூதாட்ட சர்ச்சை காரணமாக, சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுகிறார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பையும் உதற உள்ளார்.

கடந்த 2008ல் பிரிமியர் ‘டுவென்டி–20’ தொடர் துவங்கிய போது, சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 

இவரது சிறப்பான தலைமையில் சென்னை அணி 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்றது. 2010ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில் கடந்த பிரிமியர் தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சையில் சென்னை அணி வசமாக சிக்கியது. முத்கல் குழு அறிக்கையில் தோனி உட்பட 6 இந்திய வீரர்கள் பெயர்கள் இடம் பெற்றன.

இதுகுறித்த விசாரணையில், சென்னை அணி உரிமையாளர் தொடர்பாக தவறான தகவலை தோனி கொடுத்ததாக புதிய சர்ச்சை கிளம்பியது. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப்பட, தனது ‘இமேஜ்’ பாதிக்கப்பட்டதாக தோனி கருதினார். 

இதையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சீனிவாசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தோனி, இந்தியா சிமென்ட்ஸ்  துணைத் தலைவர் மற்றும் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

இது ஏற்கப்படவில்லை என்றாலும், இரு தரப்பிலும் தீவிர விவாதம் நடக்கிறது.

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுவது உறுதியானால், வரும் ஏப்., 16ல் துவங்கும் ஏழாவது பிரிமியர் தொடரில் சென்னை அணிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.


பதிலளிக்க மறுப்பு

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதவி விலகல் குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது. 

அப்போது கூறுகையில்,‘‘ இதுபோன்ற கேள்விளுக்கு பதிலளிக்கப் போவதில்லை. ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் குறித்து மட்டும் கேளுங்கள்,’’ என்றார்.


அடுத்து யார்

தோனி ஒருவேளை விலகினால், புதிய கேப்டனாக ரெய்னாவை நியமிக்க இயலாது. ஏனென்றால் இவரது பெயரும் முத்கல் அறிக்கையில் உள்ளது.  இதனால், தமிழக வீரர் அஷ்வின் அல்லது குஜராத்தை சேர்ந்த ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.


அணியில் நீடிப்பாரா

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலக அனுமதி கேட்டுள்ளார் தோனி. இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கும் இவர், சாதாரண வீரராக மற்றவரின் தலைமையில் விளையாடுவது கடினம். இதனால் சென்னை அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனிக்கு பரிசாக ஒளிரும் ஸ்டம்ப்ஸ்

இந்திய அணி ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றால், கேப்டன் தோனிக்கு, ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ பரிசு தர உள்ளனர்.

வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இப்போட்டிகளின் போது, ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.          
                    
இதன்படி விக்கெட் மீது பந்து பட்டதும், ‘பேட்டரியில்’ இயங்கும் எல்.இ.டி விளக்குகள் கொண்ட ‘பெயில்ஸ்’ ஒளிரும். இதில் இருந்து அனுப்பப்படும் ‘ரேடியோ சிக்னல்’ வாயிலாக ஒட்டுமொத்த ‘ஸ்டம்ப்ஸ்’ சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.

இதைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவின் எக்கெர்மான். இந்த உலக கோப்பை தொடருக்காக 32 ‘ஸ்டம்ப்ஸ்’, 40 ‘பெயில்ஸ்’களை வங்கதேசம் கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து எக்கெர்மான் கூறியது:

‘எல்.இ.டி., ஸ்டம்ப்ஸ்’ தொட்டவுடன் ஒளிரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, விக்கெட் கீப்பர் ‘கிளவ்ஸ்’ லேசாக பட்டால் போதும், சிவப்பு நிறத்தில் மின்னும். 

அம்பயர்கள் முடிவு எடுக்கவும் பெரும் உதவியாக உள்ளது. இதை அமைக்க செலவு அதிகம்.ஒரு போட்டிக்கு ரூ. 24 லட்சம் வரை தேவைப்படும். ‘பெயில்சின்’ விலையில் ஒரு ‘ஐ–போன்’ வாங்கிவிடலாம்.

இதனால், போட்டி முடிந்ததும் வீரர்கள் ‘ஸ்டம்ப்சை’ எடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட இம்முறை அனுமதி இல்லை. இந்திய அணி கேப்டன் தோனியை பொறுத்தவரையில், வெற்றி பெற்றவுடன் ‘ஸ்டம்ப்சை’ எடுத்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர். 

இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால், தோனிக்காக சில ‘ஸ்பெஷல்’ ஏற்பாடுகளை செய்து, ‘ஸ்டம்ப்சை’ பரிசாக தர திட்டமிட்டுள்ளேன். 

இவ்வாறு எக்கெர்மான் கூறினார்.

தொடருமா அமித் மிஸ்ரா மேஜிக்?

இந்திய பந்துவீச்சுக்கு புத்துயிர் அளித்துள்ளார் அமித் மிஸ்ரா. தனது ‘சுழல்’ மந்திரத்தால் எதிரணிகளை கட்டிப் போடும் இவர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 31. கடந்த 2003ல் முதன் முதலாக இந்திய அணியில் இடம் பெற்ற போதும், இதுவரை 13 டெஸ்ட் (43 விக்.,), 23 ஒருநாள் (40 விக்.,) போட்டிகளில் தான் பங்கேற்றுள்ளார்.      

பிரிமியர் போட்டி வரலாற்றில், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மலிங்காவுக்கு (103 விக்.,) அடுத்து, 2வது இடம் பெற்றுள்ளார் அமித் மிஸ்ரா (76 போட்டி, 95 விக்.,).      

கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்தார்.    
               
சமீபத்திய ஆசிய கோப்பை போட்டியில், கோஹ்லி வாய்ப்பு தர பாகிஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட் சாய்த்து அசத்தினார். இதையடுத்து, முதல் ‘டுவென்டி–20’ (2010, ஜிம்பாப்வே) போட்டியில் பங்கேற்று, நான்கு ஆண்டுக்குப் பின், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது.       

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த லீக் போட்டியில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து, 2 விக்கெட் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.      

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அசத்திய இவர், 18 ரன்னுக்கு 2 விக்கெட் சாய்த்து, மீண்டும் ஆட்டநாயகன் ஆனார். இவரது வருகையால் இந்திய அணியின் பவுலிங்  பலம் பெற்றுள்ளது.

அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து அமித் மிஸ்ரா கூறியது:      

எப்போதும் நல்லவிதமாகவே நினைப்பேன்.  களத்துக்கு வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்தது குறித்து அதிகம் கவலைப்பட்டதில்லை. எனது பவுலிங்கில் முன்னேற்றம் செய்வது குறித்து  முயற்சித்துக் கொண்டிருப்பேன். இதற்காக பயிற்சியாளர், கேப்டனிடம் அதிகம் ஆலோசித்தது உண்டு.       

இவ்வாறு அமித் மிஸ்ரா கூறினார்.      


தோனி ஆதரவு

கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சற்று நெருடலாக காணப்பட்டார். பந்தை முடிந்தளவுக்கு சிறப்பாக சுழற்றி வீசினால் போதும் என, அமித் மிஸ்ராவிடம் தெரிவித்தேன். இதை சரியாக செய்தது மிகவும் மகிழ்ச்சி,’’ என்றார்.

கிறிஸ் கெய்ல் 100வது டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், தனது 100வது டெஸ்டில் களமிறங்க காத்திருக்கிறார். வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இம்மைல்கல்லை எட்ட உள்ளார்.      

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், 34. கடந்த 1999ல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், 2000ம் ஆண்டு நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். 

இதுவரை இவர், 99 டெஸ்ட் (6933 ரன்), 255 ஒருநாள் (8743 ரன்), 38 சர்வதேச ‘டுவென்டி–20’ (1130 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.      

கெய்ல், தனது 100வது டெஸ்டில் களமிறங்க காத்திருக்கிறார். இதற்கான அறிவிப்பை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு நேற்று அறிவித்தது. 

இதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட், இரண்டு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜமைக்காவில் (ஜூன் 8–12) நடக்கிறது. 

இப்போட்டியின் மூலம் கெய்ல், தனது 100வது டெஸ்டில் விளையாட உள்ளார். தவிர இப்போட்டி, இவரது சொந்த ஊரான ஜமைக்காவில் நடக்க இருப்பதால், உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். இதன்மூலம் 100வது டெஸ்டில் விளையாடும் 59வது சர்வதேச வீரர் மற்றும் 9வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமை பெற உள்ளார். 

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் சச்சின் அதிகபட்சமாக 200 டெஸ்டில் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சந்தர்பால் 153 டெஸ்டில் பங்கேற்றுள்ளார்.      

இத்தொடரின் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிரினிடாட் (ஜூன் 16–20), கயானாவில் (ஜூன் 26–30) நடக்கவுள்ளன. இரண்டு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் டொமினிகாவில் (ஜூலை 5, 6) நடக்கின்றன. 

இத்தொடருக்கு பின், வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் (ஆக., 20, 22, 25), ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ (ஆக., 27), இரண்டு டெஸ்ட் (செப்., 5–9, 13–17) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

உலககோப்பைக்கு முன்பு விதிமுறையில் மாற்றம் இல்லை - ICC

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகள் 2011–ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது.

பீல்டிங் கட்டுப்பாட்டு, 2 புதிய பந்துகள் ஆகிய விதிகள் கொண்டு வரப்பட்டது. இரண்டு முனையில் இருந்தும் புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டன. 

இதனால் சுழற்பந்து வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி இந்த விதியை மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

பேட்டிங் பவர் பிளேயில் 4 வீரர்கள் மட்டுமே எல்லை கோடு அருகே இருக்க வேண்டும். பேட்டிங் பவர் பிளேயை 16 முதல் 40 ஓவருக்குள் எடுக்க வேண்டும்.

இந்த புதிய விதிக்கு இந்தியாவோடு, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் எதிர்த்தன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆதரித்தன. வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா நடுநிலை வகித்து உள்ளன.

இந்த நிலையில் உலக கோப்பைக்கு முன்பு வரை இந்த விதிமுறையில் மாற்றம் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாகி தேவ் ரிச்சர்ட்சன் கூறியதாவது:–

உலக கோப்பை வரை ஒருநாள் போட்டி விதிமுறையில் மாற்றம் செய்யும் எண்ணம் இல்லை. உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு தான் ஐ.சி.சி. கூட்டம் கூட்டப்படும். விதியை மாற்றுவது பற்றி மறு ஆய்வு செய்யப்படும்.

20 ஓவர் போட்டிக்கு இணையாக இருக்கும் வகையில் தான் 50 ஓவர் போட்டியில் இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.