இந்திய கிரிக்கெட் அணியை பலமாக்கியவர் கங்குலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலியை விமர்சித்து இருந்தார். 

தற்போது அவர் அதில் இருந்து பல்டி அடித்து கங்குலியை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டீவ்வாக் கூறியதாவது:–

கொல்கத்தா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கங்குலி தான். அவர் ஒரு சிறந்த கேப்டன். 

இந்திய அணியை பலமான அணியாக உருவாக்கியவர் ஆவார். கங்குலியும், டோனியும் வித்தியாசமான கேப்டன்கள். ஆனால் இருவருமே சிறந்தவர்கள்.

ஆசஷ் டெஸ்ட் தொடரில் 3–வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நன்றாகவே ஆடியது. இளம் வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி சிறப்பான நிலையை அடைய சில காலம் ஆகும். 

0–2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும். ஆஸ்திரேலிய அணி இனிவரும் 2 டெஸ் டில் வென்று 2–2 என்ற சமநிலையை அடைவது மிகவும் கடினம்.

20 ஓவர் போட்டியின் ஆதிக்கத்தால் டெஸ்ட் போட்டி அழிந்துவிட்டதாக கூறுவதை ஏற்கமுடிய வில்லை. டெஸ்ட் போட்டி உறுதியாகவே இருக்கிறது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆசஷ் டெஸ்ட் தொடரை அதிகமான ரசிகர்கள் ரசித்தனர்.

20 ஓவர் போட்டி இளம் வீரர்களுக்கானது. வீரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. ரசிகர்களும் விரும்புகிறார்கள். ஆனாலும் டெஸ்ட் போட்டியின் புகழ் மங்கி விட வில்லை.

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது தெண்டுல்கர் 200–வது டெஸ்டில் விளையாட உள்ளார். அதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இதை யாராலும் முறியடிப்பது கடினமே.

இவ்வாறு ஸ்டீவ்வாக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம் - டிராவிட் ஆவேசம்



கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், ரசிகர்களிடம் உள்ள தங்கள் மரியாதையை வீரர்கள் இழக்க நேரிடும்,'' என, டிராவிட் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட். பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக உள்ளார். இவரது அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர், சூதாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்டனர். 

இதுகுறித்து டிராவிட் வேதனையுடன் கூறியது:

கிரிக்கெட் போட்டிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் கிரிக்கெட் மீது உயிராக உள்ளனர். இவர்கள் தான், நாம் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று முடிவு செய்கின்றனர். 

நிர்வாகிகள் தனியாக உள்ளனர். ஏனெனில், ரசிகர்களும், வீரர்களும் தான் கிரிக்கெட்டை நடத்துகின்றனர். இதனால், இப்போட்டியின் மீது இழந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்கு போர்டு அல்லது அரசு என, யாராக இருந்தாலும் சரி பாகுபாடு பாராமல் உதவ வேண்டும். இது தான் நமக்கு முக்கியம்.


மதிப்பு குறையும்:

பிரிமியர் கிரிக்கெட் சூதாட்டத்துக்குப் பின், தினமும் பத்திரிகையின் முதல் பக்கத்தில் செய்தி வருகிறது. இது கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவாது. இதனால், கிரிக்கெட் வீரர்களின் மீது வைத்துள்ள மரியாதை, அன்பு, மதிப்பு ஆகியவை குறைந்துவிடும். ஒருவேளை இப்படி நடந்தால், இந்தியா போன்ற தேசத்தில் இது மிக, மிக சோகமான செய்தி. 

இவ்வாறு டிராவிட் கூறினார்.

ரவிந்திர ஜடேஜா நம்பர் 1 - ரேங்கிங் பட்டியலில் முன்னேற்றம்

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். 
இதன்மூலம் முன்னாள் கேப்டன் அனில் கும்ளேவுக்கு பின், 17 ஆண்டுகள் கழித்து, முதலிடம் பிடித்த இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, நான்கு இடங்கள் முன்னேறி, 733 புள்ளிகளுடன் முதன்முறையாக "நம்பர்-1' இடம் பிடித்தார். 

சமீபத்தில் முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஐந்து போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய இவர், முதலிடத்தை வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைனுடன் (733 புள்ளி) பகிர்ந்து கொண்டார். 

இதன்மூலம் ஐ.சி.சி., ரேங்கிங்கில், "நம்பர்-1' இடம் பிடித்த நான்காவது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக மணிந்தர் சிங் (டிச., 1987 - நவ., 1988), கபில் தேவ் (மார்ச் 1989), அனில் கும்ளே (நவ., - டிச., 1996) ஆகியோர் இந்த இலக்கை அடைந்தனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 18 விக்கெட் கைப்பற்றி, புதிய சாதனை படைத்த மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, 47 இடங்கள் முன்னேறி, 32வது இடம் பிடித்தார்.


தோனி பின்னடைவு:

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய கேப்டன் தோனி (7வது இடம்), விராத் கோஹ்லி (4வது இடம்) ஆகியோர் தலா ஒரு இடம் பின்தங்கினர். ஒரு இடம் முன்னேறிய சுரேஷ் ரெய்னா 17வது இடத்திலும், 16 இடங்கள் முன்னேறிய ஷிகர் தவான் 23வது இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா நீடிக்கிறார்.


இந்தியா முதலிடம்:

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அணிகளுக்கு இடையிலான ரேங்கிங்கில், 123 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. 

அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112) அணிகள் உள்ளன.

ஸ்ரீநாத் உலக சாதனையை சமன் செய்த மிஸ்ரா

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. 
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 163 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மிஸ்ரா 8.5 ஓவர் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். 

இவர் இந்த தொடரில் மொத்தம் 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இதனால் இருநாடுகள் மோதும் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீநாத்தின் உலக சாதனையை மிஸ்ரா சமன் செய்தார்.

ஸ்ரீநாத் நியூசிலாந்துக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட தொடரில் 18 விக்கெட் வீழ்த்தியிருந்தார். 

இதுவே இதுவரை அதிக விக்கெட் எடுத்த உலகசாதனையாக இருந்து. இதை இன்று மிஸ்ரா சமன் செய்து உள்ளார். 

அதற்கு அடுத்து வெஸ்ட்இண்டீசை சேர்ந்த பேட்டர்சன் இந்தியாவுக்கு எதிராக 6 போட்டிகளில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

வரலாறு படைத்தது இளம் இந்தியா - மூன்று மாதம், மூன்று கோப்பை

ஜிம்பாப்வேக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் அசத்திய இளம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அன்னிய மண்ணில் முதல் முறையாக தொடரை 5-0 என முழுமையாக வென்று வரலாறு படைத்தது.
ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 4-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி, முன்னிலை வகித்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி புலவாயோவில் நேற்று நடந்தது.


ரசூல் ஏமாற்றம்:

இந்திய அணியில், அம்பதி ராயுடு, ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அஜின்கியா ரகானே, ஷிகர் தவான் சேர்க்கப்பட்டனர். காஷ்மீரை சேர்ந்த "ஆல்-ரவுண்டர்' பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.


வில்லியம்ஸ் அரைசதம்:

ஜிம்பாப்வே அணிக்கு சிபாண்டா (5), கேப்டன் பிரண்டன் டெய்லர் (0), டிமிசன் மருமா (4) ஏமாற்றினர். மசகட்சா (32), ரவிந்திர ஜடேஜா பந்தில் போல்டானார். அமித் மிஸ்ரா "சுழலில்' வாலர் (8), சிகும்புரா (17), முடாம்போட்சி (4) வெளியேறினர். பொறுப்பாக ஆடிய சீன் வில்லியம்ஸ், அரைசதம் அடித்தார். 

இவரும் 51 ரன்களுக்கு மிஸ்ரா பந்தில் அவுட்டானார். பின் களமிறங்கிய முஷாங்வே (16), விடோரி (4) ஆகியோரும் மிஸ்ராவிடம் சரணடைந்தனர்.
ஜிம்பாப்வே அணி 39.5 ஓவரில் 163 ரன்னுக்கு சுருண்டது. ஜார்விஸ் (12) அவுட்டாகாமல் இருந்தார். 

இந்தியா சார்பில் "சுழலில்' மிரட்டிய அமித் மிஸ்ரா 6 விக்கெட் கைப்பற்றினார்.


தவான் நம்பிக்கை:

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மீண்டும் புஜாரா(0) ஏமாற்றினார். பின் இணைந்த ஷிகர் தவான், அஜின்கியா ரகானே ஜோடி நிதானமாக ஆடியது. விடோரி வீசிய 4வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த தவான், 6வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஜார்விஸ் பந்தில் தவான் (41) அவுட்டானார். 


ரகானே அரைசதம்:

ரவிந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரகானே, ஒருநாள் போட்டியில் தனது 3வது அரைசதம் அடித்தார். வாலர் பந்தில் ரகானே (50) வெளியேறினார். வாலர் வீசிய 34வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜடேஜா வெற்றியை உறுதி செய்தார். 

இந்திய அணி 34 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா (48), தினேஷ் கார்த்திக் (10) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை இந்தியாவின் அமித் மிஸ்ரா கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-0 என முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது.


முதல் "ஒயிட் வாஷ்'

ஜிம்பாப்வேக்கு "மரண அடி' கொடுத்த இந்திய அணி, அன்னிய மண்ணில் முதன்முறையாக 5-0 என ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக மூன்று முறை சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்து (2008-09, 2011-12), நியூசிலாந்து (2010-11) அணிகளுக்கு எதிரான தொடரை 5-0 என முழுமையாக வென்றது.


மூன்று மாதம்...மூன்று கோப்பை

 "உலக சாம்பியன்' இந்திய அணி, கடந்த மூன்று மாதத்தில் மூன்று கோப்பை வென்று "ஹாட்ரிக்' சாதனை படைத்தது. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி (ஜூன் 6-23) தொடரில் கோப்பை வென்றது. 

பின் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை (ஜூன் 28 - ஜூலை 11) கைப்பற்றியது. தற்போது ஜிம்பாப்வே மண்ணில் நடந்த ஒருநாள் தொடரை (ஜூலை 24 - ஆக., 3) வென்றது.