வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்தியா ரெடி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் சாதிக்க, இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். முதல் போட்டி நடக்க உள்ள டில்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட், நாளை டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் துவங்குகிறது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கோல்கட்டா (நவ., 14-18), மும்பை (நவ., 22-26) ஆகிய இடங்களில் நடக்கிறது.

வலை பயிற்சி:
டில்லி டெஸ்டில் சாதிக்க, தோனி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியினர்,
பயிற்சியாளர் பிளட்சர் முன்னிலையில் நேற்று வலைப் பயிற்சி மேற்கொண்டனர். முதலில் துவக்க வீரர்களான சேவக், காம்பிர் ஜோடி இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரது வேகப்பந்துவீச்சில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர். அதன்பின் அஷ்வின், பிரக்யான் ஓஜா, ராகுல் சர்மா ஆகியோரது சுழலில் பயிற்சி மேற்கொண்டனர்.

பயிற்சியில் சச்சின்:
இதேபோல "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் சிறிது நேரம் வேகம் மற்றும் சுழற்பந்துவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பின் சச்சின், பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் ஆகியோருடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

பின் விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், அஜின்கியா ரகானே ஆகியோரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். அஷ்வின், ஓஜா ஆகியோருக்கு சிறிது நேரம் பேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டது. அதன்பின் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் முன்னிலையில் சுழற்பந்துவீச்சு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் நேற்று பயிற்சி மேற்கொண்டனர்.

ரஞ்சி கோப்பை - இன்று துவக்கம்

இந்தியாவின் முன்னணி முதல்தர தொடரான, ரஞ்சி கோப்பை தொடர் இன்று துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் தமிழக அணி, பரோடாவை சந்திக்கிறது.

இந்தியாவின் முதல் தர போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது ரஞ்சிக்கோப்பை தொடர். 1934 முதல் நடந்து வரும் இத்தொடரின், 77 வது சீசன் (2011-12) இன்று துவங்குகிறது.

இந்தியாவின் முன்னணி நகரங்கள், மாநிலங்கள் அடிப்படையில் அணிகள் சூப்பர் லீக், பிளேட் லீக் என இரு பிரிவுகளாக பிரித்து, போட்டிகள் முதலில் லீக் அடுத்து "நாக் அவுட்' முறையில் நடக்கும்.
சூப்பர் லீக் "ஏ' பிரிவில் மும்பை, நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் உட்பட 8, "பி' பிரிவில் தமிழகம், டில்லி உட்பட 7 என, மொத்தம் 15 அணிகள் உள்ளன. இதேபோல, பிளேட் பிரிவின் இரு பிரிவுகளில் தலா 6 அணிகள் உள்ளன.

போட்டி எப்படி:
சூப்பர் லீக்கின் இரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள், காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் லீக்கின் "ஏ' பிரிவில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், "பி' பிரிவின் முதல் இரு அணிகளும் மோதும் போட்டிகளில் வெல்லும் இரு அணிகள், காலிறுதிக்கு தகுதி பெறும்.

தமிழகம்-பரோடா:
கடந்த தொடரில் அரையிறுதியில் ராஜஸ்தானிடம் மோதிய தமிழக அணி, முதல் இன்னிங்சில் பின்தங்கியதால், பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

இம்முறை சென்னையில் துவங்கும் லீக் போட்டியில், இதுவரை இரு முறை (1954-55, 1987-88) மட்டுமே கோப்பை வென்ற தமிழக அணி, பரோடாவை எதிர்த்து களமிறங்குகிறது. கேப்டன் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த், பாலாஜி ஆகியோர் நம்பிக்கை தருவார்கள் என்று நம்பலாம்.
மற்றொரு போட்டியில் 39 முறை கோப்பை வென்ற மும்பை அணி, இம்முறை கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

இன்றைய முதல் லீக் போட்டியில் மும்பை, ரயில்வேஸ் அணியை சந்திக்கிறது. பிற போட்டிகளில் கர்நாடகம்-ராஜஸ்தான், டில்லி-அரியானா அணிகள் மோதுகின்றன.

பாக்., கிரிக்கெட் வீரர்கள் ஊழல்வாதிகள்

பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப் மீதான சூதாட்ட புகார் நிரூபணமானது. இவர்கள் லஞ்சம் பெற்றது விசாரணையில் அம்பலமானது. இது, கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக, லார்ட்சில் நடந்த டெஸ்டில் (ஆக., 2010), பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், 27, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், 28, முகமது ஆமிர் 19, ஆகியோர் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டனர். இதை "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகை, தனது புலனாய்வு மூலம் நிரூபித்தது.

ஐ.சி.சி., தடை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சல்மான் பட் (10 ஆண்டு), முகமது ஆசிப் (7 ஆண்டு), முகமது ஆமிர் (5 ஆண்டு) ஆகியோர், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

ஆமிர் ஒப்புதல்:
இந்த மூன்று வீரர்கள் மீதும் சதிசெய்து ஏமாற்றுதல், லஞ்சப்பணம் பெறுதல், போன்ற பிரிவுகளில், லண்டனில் உள்ள "சவுத்வொர்க் கிரவுன்' கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. இதில், முகமது ஆமிர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டதால், இவரிடம் விசாரணை நடக்கவில்லை.

எதிரான ஆதாரங்கள்:
ஆனால் மற்ற இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இருப்பினும், சல்மான் பட்-சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத் இடையிலான எஸ்.எம்.எஸ்., தகவல்கள், உரையாடல்கள், உட்பட 13 ஆதாரங்கள் இவர்களுக்கு எதிராக அமைந்தது. இதில் 19 நாட்களாக விசாரணை நடந்தது. முடிவில் 12 பேர் கொண்ட குழு, 16 மணி நேரம், 56 நிமிடங்கள் விவாதித்தது. 20 வது நாளில் 10--2 என்ற மெஜாரிட்டி அளவில், ஒரு மனதாக தீர்ப்பை வாசித்தனர்.

இருவர் குற்றவாளி:
இதில் சல்மான் பட் மீது இரு பிரிவுகளிலும், முகமது ஆசிப் மீது ஒரு பிரிவி<லும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவர்கள் குற்றம் செய்தது உறுதியானது. முகமது ஆசிப் மீதான, லஞ்சப் பணம் பெறுதல் குற்றச்சாட்டு குறித்து, இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை. தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது இருவரும் <உணர்ச்சியற்ற நிலையில், அமைதியாக இருந்தனர்.
இவர்களுக்குரிய தண்டனை விவரம், இந்த வாரத்தில் வெளியாகும். அதுவரை இருவரையும் ஜாமினில் விட நீதிபதி குக்கே உத்தரவிட்டார்.
7 ஆண்டு ஜெயில்
சல்மான் பட், முகமது ஆசிப் இருவரும், கிரிக்கெட் விளையாட்டு உலகில், சூதாட்டம் மற்றும் ஊழல் செய்து பிடிபட்டு, முதன் முதலாக ஜெயிலுக்கு செல்ல உள்ளனர். இதில் சல்மான் பட் மீது இருபிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டதால், ஏழு ஆண்டு தண்டனை கிடைக்கும். முகமது ஆசிப்பிற்கு இரு ஆண்டுகள் கிடைக்கும். தவிர, 1960ல் இருந்து செயல்பட்டு வரும் லண்டன் சவுத்வொர்க் கிரவுன் கோர்ட்டில், முதன் முதலாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் இவர்கள் தான்.
சோகமான நாள்

லண்டன் கோர்ட் வெளியிட்ட தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகிர் அபாஸ் கூறுகையில்,"" பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது சோகமான நாள். அதேநேரம், நீதி வென்றுள்ளது. இந்த வீரர்கள் ஏதோ தவறு செய்துள்ளனர். இது பாகிஸ்தான், உலக கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் தான். ஏனெனில் இதைக்கண்டு, மற்ற வீரர்கள் பயப்படுவார்கள்,'' என்றார்.

கிரிக்கெட்டுக்கு ஆபத்தா?

இந்திய மண்ணில் முதல் முறையாக நடந்த "பார்முலா-1' கார்பந்தயத்தால், கிரிக்கெட் போட்டிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது: இந்திய மண்ணில் முதல் முறையாக "பார்முலா-1' கார்பந்தயம் நடந்தது மகிழ்ச்சியான விஷயம். போட்டி துவங்கியது முதல், முடியும் வரை "திரில்'லாக இருந்தது. "பார்முலா-1' கார்பந்தயம் ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும்.
இந்தியா சார்பில் களமிறங்கிய "சகாரா போர்ஸ் இந்தியா' அணியை ஆதரத்து போட்டியை காண வந்தேன். இந்த அணியின் அட்ரியன் சுடில், சிறப்பாக செயல்பட்டு ஒன்பதாவது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் சாதிக்க முடியாமல் போனது ஏமாற்றமான விஷயம்.
"பார்முலா-1' வருகையால், இந்திய மண்ணில் கிரிக்கெட் போட்டிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. கிரிக்கெட் போட்டியின் புகழை, "பார்முலா-1' மூலம் குறைக்க முடியாது. இரண்டு வெவ்வேறு வகையை சேர்ந்தது. "பார்முலா-1' ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது.
காயம் காரணமாக, இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமான விஷயம். தற்போது காயத்தில் இருந்து மீண்டு, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

சுழற்சி முறையில் வாய்ப்பு - சேவக்

காயத்தில் இருந்து தப்பிக்க, போட்டியில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என, இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ.,6ம் தேதி டில்லியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில், தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட அதிரடி துவக்க வீரர் சேவக் இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சேவக் கூறியதாவது: காயம், உடற்தகுதி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இம்முறையை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் பேட்ஸ்மேன்களை காட்டிலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விரைவில் காயமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
காயம் காரணமாக இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடரில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் அப்போது நிறைய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்காததால், மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.

எந்த ஒரு வீரரும், காயத்தில் இருந்து மீள்வது எளிதான காரியமல்ல. காயத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். தற்போது எனது கவனம் முழுவதும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திறமையை நிரூபிக்க வேண்டும்.
இந்திய வீரர்கள், டெஸ்ட் போட்டியை காட்டிலும் ஐ.பி.எல்., போன்ற அதிகளவு பணம் புரலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. எந்த ஒரு வீரரும் முதலில் டெஸ்ட் போட்டியில் தான் விளையாட வேண்டும் என நினைப்பார்கள்.

ஏனெனில் டெஸ்ட் போட்டியின் மூலம் ஒரு வீரரின் உண்மையான திறமையை கண்டறிய முடியும். எந்த ஒரு வீரரும், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு, ஐ.பி.எல்., போன்ற போட்டிகளில் விளையாட விரும்பமாட்டார்கள்.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரின் போது நான் காயத்துடன் விளையாடினேன். இதேபோல "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினும், தொடைப்பகுதியில் காயத்துடன் விளையாடினார். காயம் குறித்து அதிகளவு சிந்திக்காமல், நாட்டுக்காக விளையாட நினைத்ததால், கோப்பை வென்று சாதிக்க முடிந்தது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், சச்சின் இடத்தை பூர்த்தி செய்வது கடினம். இதற்கு நீண்ட காலம் கடுமையாக போராட வேண்டும். தற்போதுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவேளை சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில், அவர்களது இடத்தை இளம் வீரர்கள் எளிதில் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு சேவக் கூறினார்.