டெஸ்டுக்கு அழிவில்லை

"கிரிக்கெட் அரங்கில் அதிவேக வளர்ச்சி கண்டுள்ள "டுவென்டி-20' போட்டிகளால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒருபோதும் அழிவில்லை,'' என, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து "டுவென்டி-20' போட்டி புதிய அவதாரம் எடுத்து உள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), உலககோப்பை "டுவென்டி-20' தொடர்களின் மூலம், இத்தகைய குறைந்த நேர போட்டிக்கு உலக அளவில் மவுசு கூடியுள்ளது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியினால் டெஸ்ட் கிரிக்கெட் டுக்கு பாதிப்பு ஏற்படும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி கூறுகையில், "" டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு, "டுவென்டி-20' போட்டிகளால் சிறிதளவும் பாதிப்பு ஏற்படாது. பாரம்பரிய கிரிக்கெட்டான டெஸ்ட் போட்டி தொடர்ந்து நீடிக்கும். மற்ற போட்டிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டால் வளம் பெறும். ஒரு அணி மற்றும் வீரரின் முழுதிறமையை வெளிக்கொணரும் மேடையாக டெஸ்ட் கிரிக்கெட் உள்ளது. எனவே, வீரர்கள் இத்தகைய போட்டியை ஒரு பொழுதும் மறந்துவிடமாட்டார்கள்,'' என்றார்

ஒலிம்பிக் போட்டி வரலாறு

ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது.


கி.பி. 393-ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதித்தார். பின்னர் 1890-ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன.


கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவரான ஜியஸ் கடவுளை போற்றும் வகையில் கொண்டாடப்பட்ட திருவிழாவின் ஒரு பிரிவுதான் ஒலிம்பிக்போட்டி. இந்த போட்டியில் கிரேக்க மரபினர் மட்டுமே கலந்து கொண்டனர். அப்போதைய கிரேக்க சாம்ராஜ்யம் ஸ்பெயின், துருக்கி வரை பெரியாதாக இருந்தது.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆனா கிரிடம் சூட்டப்பட்டது.

இந்த ஒலிம்பிக் போட்டியை புதுபிக்க பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பேரன் பியரி டி குபர்டின் என்பவர் விரும்பினார். அதன்படி 1896 ஏப்ரல் 6 -ம் தேதி ஏதென்ஸ் நகரில் பல நாடுகள் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியை அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் அரசன் தொடங்கிவைத்தார்.


முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 உலக நாடுகள் கலந்து கொண்டன. தடகள போட்டிகள், குத்துசண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன.


ஒலிம்பிக்கின் 11-வது நாள் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மராத்தான் போட்டியில் கிரேக்க வீரர் ஸ்பிரி டான் லூயின் தங்கம் வென்றார்.


1914-ம் ஆண்டு பேரான் டி.குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் சங்க மாநாட்டின் போது வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் வழங்கினார்.


1920-ல் ஆன்ட் லெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தபடி அமைந்திருக்கும். இது ஒலிம்பிக்கில் பங்குபெரும் 5 கண்டங்களையும் குறிக்கும். மேல்புற வரிசையில் நீலம், கருப்பு, சிகப்பு நிறத்திலும் கீழ்வரிசையில் மஞ்சள், பச்சை நிறத்திலும் வளையங்கள் அமைந்திருக்கும்.


1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர். 1988 சியோல் ஒலிம்பிக்கில்தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது.

1896-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் சேர்த்துக் கெள்ளப்படவில்லை. 1900-ம் ஆண்டு பாரிசில் நடந்த 2-வது ஒலிம்பிக் போட்டியில் கோல்ப், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.


1928-ல் தான் பெண்கள் தடகள போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. த்ற்பொது ஒலிம்பிக் பொட்டியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ஒருசில நாடுகள் சர்வதேச போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதித்து உள்ளன.


1992- பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளின் போது ஈரான் நாட்டு கொடியை ஒரு ஸ்பானிய பெண் ஏந்திவர தேர்வு செய்யபட்டதால் அந்நாட்டு அணியினர் ரகளை செய்துவிட்டனர். அல்ஜிரியா நாட்டு வீராங்கனை ஹஸிபா பவுஸ் மெர்கா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போதுதிறந்த காலுடன் ஓடி அசிங்கப்படுத்தினார் என்று அந்நாட்டு பழமைவாதிகள் கூறினர். சிட்னி ஒலிப்பிக்கில் பெண்கள் சாதனைகளே அதிகமாக பேசப்பட்டது.



இதுவரை ஒலிம்பிக் போட்டி நடந்த இடங்கள்:


எதென்ஸ்-1896
பாரீஸ்-1900
செயின்ட் லூயிஸ்-1904
லண்டன்-1908
ஸ்டாக்ஹோம்-1912
ஆண்ட்வெர்ப்-1920
பாரீஸ்-1924
ஆம்ஸ்டர்டாம்-1928
லாஸ் ஏஞ்சல்ஸ்-1932
பெர்லின்-1936
லண்டன்-1948
ஹெல்சின்சி-1952
மெல்போர்ன்-1956
ரோம்-1960
டோக்கியோ-1964
மெக்சிகோ-1968
முன்ஜி-1972
மோன்தொல்-1976
மாஸ்கோ-1980
லாஸ் ஏஞ்சல்ஸ்-1984
சியோல்-1988
பார்சிலோனா-1992
அட்லாண்டா-1996
சிட்னி-2000
எதென்ஸ்-2004
பீஜிங்-2008

பீட்டர்சனுக்கு காலில் அறுவைச் சிகிச்சை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனுக்கு புதன்கிழமை காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆஷஸ் தொடரின் மீதமுள்ள 3 டெஸ்டுகளில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் போதே பீட்டர்சன் குதிகாலில் காயம் காரணமாக அவதிப்பட்டார். 4 ஊசிகள் போட்டுக் கொண்டு ஆட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில், அவருக்கு குதிகாலில் அறுவைச் சிகிச்சை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை மருத்துவ அதிகாரி நிக் பெய்ர்ஸ் பரிந்துரைத்தார்.

குணமடைவதற்காகவும், இதுபோன்ற காயம் மீண்டும் ஏற்படாமல் இருக்கவும் பயிற்சிகளை பீட்டர்சன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு சுமார் 6 வாரங்கள் ஆகலாம். எனினும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரது காயம் குறித்து ஆராயப்படும் என்றார் பெய்ர்ஸ்.

இது குறித்து பீட்டர்சன் கூறியதாவது: இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு ஆஷஸ் தொடரில் பங்கேற்பது என்பது வாழ்நாள் கனவாகும். இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆஷஸ் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாகும்.

காயம் காரணமாக ஆட்டங்களில் பங்கேற்க முடியாமல் போவதை வெறுக்கிறேன். காயங்களில் இருந்து மீண்டு விரைவில் மீண்டும் விளையாடுவேன் என்றார்.

ஐ.சி.சி., ரேங்கிங்கை விட சிறந்தது அர்ஜூனா விருது

அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இது ஐ.சி.சி., ரேங்கிங்கை விட மிகவும் சிறந்தது,'' என இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்ட டெஸ்ட் வீரர்கள் பட்டியலில், இந்திய வீரர் காம்பிர் "நம்பர்-1' இடத்தை பிடித்து இருந்தார். அந்த மகிழ்ச்சியில் திளைத்து இருந்த காம்பிருக்கு, மற்றொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இவரது பெயர் "அர்ஜூனா' விருதுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளம் பூரிக்க காம்பிர் தெரிவித்தது:

*முதலில் ஐ.சி.சி., ரேங்கிங், இப்போது அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைத்தது என, எல்லாம் சேர்த்து பெருமகிழ்ச்சியாக உள்ளதா?
அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை வாழ்க்கையின் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது "நம்பர்-1' டெஸ்ட் வீரர் என்ற அந்தஸ்தை காட்டிலும் பெரியது. என்னை அங்கீகரித்த இந்திய அரசிற்கும், இந்திய கிரிக்கெட் போர்டிற்கும் (பி.சி.சி.ஐ.,) நன்றி. எனது வெற்றியில் பங்கெடுத்துக் கொண்ட எல்லோருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது மூலம் அடுத்து வரும் போட்டிகளிலும் தேசத்திற் காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

*கடந்த 2008 ம் ஆண்டு உங்கள் கனவு காலம். இதுபோல மீண்டும் அமையுமா?

தற்போது அதிகமாக கிரிக்கெட் விளையாடப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன்கள் எடுப்பது என்பது இயலாது. காலமும், பார்மும் ஒத்துழைத் தால் மனரீதியில் உறுதியாக தயாராகலாம். ஆனால் பார்ம் இல்லையென்றால் அவ்வளவு தான்.

*அடுத்து வரக்கூடிய தொடர்களுக்கு இந்திய அணி தயாராக உள்ளதா?

ஆமாம். நமது அணி கடந்த பல மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அசத்துகிறோம். முக்கியமாக வெளிநாட்டு தொடர்களில் வெற்றி பெற்று வருகிறோம். அபூர்வமாக "டுவென்டி-20' உலக கோப்பை போட்டியில் பேட்டிங்கில் மொத்தமாக ஏமாற்றியதால் தோல்வி கிடைத்தது.

*இந்திய வீரர்களால் "ஷாட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்ள முடியாதது தான் காரணமா?

இது தவறான கருத்து. இதனை நான் முழுமையாக மறுக்கிறேன். "ஷாட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இருந்திருந்தால் இந்திய அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் உலகின் பல இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க முடியுமா?. நாங்கள் சிறப்பாக செயல்பட மீடியா உதவியும் எங்களுக்கு முக்கியம்.

* உங்கள் அணி கைப்பற்றிய ஒருநாள் தொடர்களில் எது உங்களுக்கு பிடித்தது?

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் எனக்கு திருப்பு முனை தந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் எனக்கு சிறந்த தொடர். அதில் தான் 150 ரன்கள் எடுத்தேன். இலங்கை மைதானங்களில் இவ்வளவு ரன்கள் எடுப்பது கடினம். எப்படி சாதித்தீர்கள் என பிறர் கேட்டபோது தான், நான் வியந்தேன்.

*வரும் தொடர்களில் அசத்துவதற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இந்திய அணிக்கு வர இருக்கும் தொடர்கள் சவாலானவை. தற்போது கிடைத்துள்ள ஓய்வில் கடினமான பயிற்சிகள் செய்து பிட்னஸ் மற்றும் மனஉறுதியை வளர்த்துக்கொள்வேன். இதை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது, நேரத்திற்கு வீட்டிற்கு வந்து சாப்பிடுவது, உறங்குவது போன்றவை மகிழ்ச்சியாக உள்ளது. அணியுடன் பயணத்தில் இருக்கும் போது இதையெல்லாம் இழக்க வேண்டும். ஆனால் கிரிக்கெட் தான் என்னுடைய தொழில் என நினைத்துக்கொள்வேன். இவ்வாறு காம்பிர் தெரிவித்தார்.

இந்திய அணிக்கு புகழாரம்: இந்திய அணியின் தொடர் வெற்றி குறித்து காம்பிர் கூறுகையில்,""இதற்கு முன்பு எந்த இந்திய அணியும் தொடர்ந்து எட்டு அல்லது ஒன்பது தொடர்கள் வென்றதில்லை. இது மிகப்பெரிய செயல். நாம் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை அதன் மண்ணில் வீழ்த்தி இருக்கிறோம். இது அவ்வளவு எளிதானது அல்ல,'' என்றார்

ரூ.8 கோடி வருமானவரி செலுத்தும் தெண்டுல்கர்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் தெண்டுல்கர். 20 ஓவர் போட்டியில் விளையாட விட்டாலும் அவர் விளம்பரங்கள் மூலம் தொடர்ந்து கோடிக்கணக்கில் வருமானங்களை குவித்து வருகிறார்.

பல வெற்றிகளை பெற்று புகழ் பெற்ற கேப்டன் டோனியை விட அவர் தான் அதிக வருமானம் சம்பாதித்து இருக்கிறார். 2008-09-ம் ஆண்டுக்கான வருமானவரி செலுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். அவர் ரூ.8.1 கோடி செலுத்தியுள்ளார். 2007-08-ம் ஆண்டில் அவர் ரூ.8.7 கோடி செலுத்தி இருக்கிறார்.

கேப்டன் டோனி ரூ.4.7 கோடி செலுத்தி 2-வது இடத்தில் உள்ளார். அவர் 2007-08-ம் ஆண்டில் ரூ.3.4 கோடி செலுத்தி இருந்தார்.

கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்த ஷேவாக் தற்போது வருமானவரி செலுத்துவதில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர் ரூ.3.1 கோடி செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஷேவாக் ரூ.1.9 கோடி செலுத்தி இருந்தார்.

யுவராஜ்சிங் ரூ.2.6 கோடி செலுத்தி 4-வது இடத்திலும், டிராவிட ரூ.2.4 கோடி செலுத்தி 5-வது இடத்திலும் உள்ளனர். யுவராஜ்சிங் கடந்த ஆண்டு ரூ.2 கோடியும், டிராவிட் ரூ.3.1 கோடியும் வருமானவரி செலுத்தி இருந்தனர்.