7-வது IPL - ஷேவாக்கை கழற்றி விட்டது டெல்லி அணி



ஏழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டது. இதன் மூலம் ஷேவாக் முதல் முறையாக பகிரங்க ஏலத்திற்கு வருகிறார்.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13-தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 5 வீரர்களை தொடர்ந்து தங்கள் அணிகளில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும், அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி வீதம் சம்பளமாக ஒதுக்க வேண்டும் என்றும், சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் தக்க வைக்கப்பட்டால் அவருக்கு ரூ.4 கோடி ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுகிறார்கள் என்ற பட்டியலை சமர்ப்பிக்க ஜனவரி 10-ந்தேதி (நேற்று) கடைசி நாளாகும். இதன்படி 8 அணி நிர்வாகங்களும் அந்த விவரங்களை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிரடியாக, எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளது. அந்த அணியின் உள்ளூர் நாயகன் 35 வயதான ஷேவாக் பார்மில் இல்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் 13 இன்னிங்சில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். 

ஓராண்டுக்கு மேலாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதால் அவரை வைத்துக் கொள்ள டெல்லி அணிக்கு விருப்பம் இல்லை. இதனால் தங்கள் அணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்து விட்டு, இந்த சீசனில் புத்தம் புதிய அணியை தேர்வு செய்யும் முடிவுக்கு டெல்லி அணி வந்துள்ளது.

முதல் மூன்று சீசனில் முத்திரை வீரர் அந்தஸ்துடன் அதிரடி காட்டிய ஷேவாக், அடுத்த மூன்று தொடர்களிலும் அந்த அணியில் நீடித்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக ஷேவாக் ஏலம் மூலம் விற்கப்பட இருக்கிறார். 

அவருடன் சேர்த்து மஹேலா ஜெயவர்த்தனே, டேவிட் வார்னர், கெவின் பீட்டர்சன், உன்முக் சந்த் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களும் ஏலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனாலும் மேட்ச் கார்டு சலுகையை பயன்படுத்தி ஏலத்தின் போது ஷேவாக்கை மறுபடியும் டெல்லி அணி வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.

வருகிறது 7 ஓவர் கிரிக்கெட்



கிரிக்கெட்டில் விறுவிறுப்பை அதிகரிக்க, 7 ஓவர்கள் கொண்ட "செவன் ஸ்டார் லீக்' தொடர் விரைவில் அரங்கேற உள்ளது.

மந்தமான டெஸ்ட் போட்டிகளால் வெறுத்துப் போன ரசிகர்களுக்கு ஒருநாள் (50 ஓவர்) போட்டி உற்சாகம் தந்தது. பின் அதிரடியான "டுவென்டி–20' போட்டி பெரும் வரவேற்பை பெற்றது. 


தூதுவர் தோனி:

இந்த வரிசையில், 7 ஓவர்கள் கொண்ட புதுமையான "செவன் ஸ்டார்' லீக் தொடர் துபாயில் நடக்க உள்ளது. இதற்கு ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளன. 

இதன் துாதராக இந்திய கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் மாதம் இத்தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனை அணிகள்:

ஐக்கிய அரபு .எமிரேட்சை (யு.ஏ.இ.,) சேர்ந்த அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மான், ராஸ்–அல்–கெய்மான், உம்–அல்–குய்வான், பூஜாய்ரா ஆகிய ஏழு அணிகள் இதில் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் இடம் பெறுவர்.


7 நாடுகள்:

யு.ஏ.இ., இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் முதல் முறையாக நடத்தப்படும் இத்தொடர், எதிர்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும். 

 இத்தொடர் வெற்றி பெறும்பட்சத்தில், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி–20' தொடர் போல, "செவன் ஸ்டார்' சாம்பியன்ஸ் லீக் தொடரை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கு நியூசிலாந்து மண்ணில் புது நெருக்கடி

நியூசிலாந்தில் வீசும் பலத்த காற்று இந்திய வீரர்களுக்கு பெரும் தொல்லையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வீரர்கள் உள்ளூரில் புலி தான். அன்னிய மண் என்று வந்து விட்டால், அவ்வளவு தான். எவ்வளவு அடி கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு திரும்புவர். 

கடந்த 2011ல் இங்கிலாந்து (0-4), 2011-12ல் ஆஸ்திரேலியா (0-4), 2013ல் தென் ஆப்ரிக்கா (0-1) என, பங்கேற்ற பங்கேற்ற 10 டெஸ்டில், 9ல் தோல்வியடைந்தது. ஒரு டெஸ்ட் போட்டியை (2013, ஜோகனஸ்பர்க்) மட்டும் "டிரா' செய்தது.

வரும் 12ம் தேதி இந்திய அணி, நியூசிலாந்து கிளம்புகிறது. இங்கு ஐந்து ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.


வரலாறு எப்படி:

கடந்த 1967–-68ல் முதன் முறையாக நியூசிலாந்து சென்ற போது, இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-–1 என, வென்றது. இதன் பின் 7 தொடர்களில், இந்திய அணி 2 டெஸ்டில் மட்டும் தான் வெற்றி பெற்றது.

கடைசியாக 2009ல் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி, 41 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரை (1–-0) வென்று திரும்பியது. இருப்பினும், நியூசிலாந்தில் மொத்தம் பங்கேற்ற 21 டெஸ்டில், இந்திய அணி 5ல் தான் வெற்றி பெற்றது.


வெற்றி தொடர்:

தவிர, ஒருநாள் தொடர்களை பொறுத்தவரையில், கடந்த 1975-–76 முதல் பங்கேற்ற 5 தொடர்களில் ஒன்றைக் கூட கைப்பற்றியதில்லை. முதன் முறையாக 2009ல் தோனியின் அணி தான் கோப்பை வென்று திரும்பியது. இதற்கு, அப்போதைய ஆடுகளங்கள் துணைக்கண்டத்தைப் போல, பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருந்தன.


கடும் சவால்:

இம்முறை இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஏனெனில், நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்குமாறு, வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே, சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் இருந்து தோல்வியுடன் திரும்பிய, தோனியின் படைக்கு, இது மற்றொரு சோதனை தான். சச்சின், டிராவிட், லட்சுமண் இல்லாத நிலையில், புஜாரா, விராத் கோஹ்லி, ரகானே போன்ற இளம் வீரர்கள் ஆறுதல் தந்த போதும், இவை வெற்றிக்கு போதவில்லை.


காற்று தொல்லை:

தவிர, நியூசிலாந்தில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். பந்துகள் பவுன்ஸ் ஆகும் அதேநேரத்தில், காற்றும் கைகொடுப்பதால் நன்கு "சுவிங்' ஆகும். இதை சமாளிப்பது கடினம் தான்.

தவிர, நியூசிலாந்து உலகத்தரம் வாய்ந்த அணி அல்ல என்ற போதிலும், சொந்தமண்ணில் அசைக்க முடியாத வீரர்களாக வலம் வருகின்றனர். இந்த சாதகத்தை பயன்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவதில் வல்லவர்கள்.
இதனால், இந்திய அணி இம்முறை வெற்றிபெற, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 
 

அனுபவம் உள்ளது

சமீபத்தில் இந்தியா "ஏ', 19 வயது அணிகளுடன் நியூசிலாந்து சென்று திரும்பிய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் கூறுகையில்,"" தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் கடினமானது. பந்து நன்கு "பவுன்ஸ்' ஆகும். நியூசிலாந்தில் காற்றின் வேகம் அதிகம். 

இதில் "சுவிங்' ஆகி வரும் பந்துகளை சந்திப்பது கடினம். முதலில் இருந்தே அடித்து விளையாட முடியாது. கோஹ்லி, ரகானே, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமிக்கு இங்கு விளையாடிய அனுபவம் உள்ளது,'' என்றார்.

தோனியுடன் காம்பிர் மோதலா?



எனக்கும், கேப்டன் தோனிக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் தான் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ற செய்தியில் உண்மையில்லை,’’ என, காம்பிர் தெரிவித்தார்.      

இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர், 32. இதுவரை 54 டெஸ்ட் (4,021 ரன்கள்), 147 ஒருநாள் (5,238) மற்றும் 37 ‘டுவென்டி-20’ (937) பங்கேற்றுள்ளார். கடைசியாக 2012, டிச.,ல் இங்கிலாந்துக்கு எதிரான் நாக்பூர் டெஸ்ட் போட்டிக்குப் பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.     
  
இவர், ‘அணியில் தனது இடத்தை தக்க வைக்க மட்டும் விளையாடுகிறார். வெற்றிக்கு முயற்சிப்பதில்லை,’ என, கேப்டன் தோனி புகார் கூறியதாக அப்போது செய்திகள் வெளியாகின.       

தற்போது, இழந்த ‘பார்மை’ மீட்க காம்பிர் போராடி வருகிறார். கடந்த 2009, நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், இரண்டு சதம் அடித்தார். ஆனாலும், எதிர்வரும் நியூசிலாந்து தொடரில் இவரது பெயரை தேர்வாளர்கள் பரிசீலிக்கக் கூட இல்லை.       

இதுகுறித்து காம்பிர் கூறியது: எனக்கும், கேப்டன் தோனிக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் தான் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ற செய்தியில் உண்மையில்லை. 

இது ஒரு சிலரால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை. இதைத்தான் நான் முதலில் கூறினேன். இப்போதும் இதையே தான் சொல்கிறேன். என் விஷயத்தில் மட்டுமல்ல சேவக், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் என, யாருக்கும் தோனியுடன் உரசல் கிடையாது. 

மோசமான ‘பார்ம்’ மற்றும் உடற்தகுதியால்  நாங்கள் அணியில் இல்லாத நேரத்தில், இப்படி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன, அவ்வளவு தான். மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.       

நியூசிலாந்து தொடரில் இடம் பெறாததால், எனக்கு பெரிய பாதிப்பு இல்லை. இதை எல்லோரும் நம்புங்கள். வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவதும், மீண்டும் திரும்புவதும், கிரிக்கெட்டில் சகஜம். சச்சின் தவிர, இந்திய அணியிலுள்ள வீரர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்தித்தவர்கள் தான்.       

கடந்த 2011 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தோள்பட்டை காயம் காரணமாக விலகிவிட்டு, பின் பிரிமியர் தொடரில் பங்கேற்ற போது, தேசத்தை விட கிளப் அணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினர்.   
    
இதெல்லாம் கட்டுக்கதை. காயமடைந்த நேரத்தில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். என்னைப் பொறுத்தவரை பிரிமியர் தொடரில் பங்கேற்பதை விட, இந்திய அணிக்காக விளையாடுவதற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.       

இவ்வாறு காம்பிர் கூறினார்.      

சென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்?



ஏழாவது பிரிமியர் கிரிக்கட் தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் பிப்., 12, 13ல் நடக்கவுள்ளது. 

இதற்கு முன் ஒவ்வொரு அணி நிர்வாகமும், எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றன என்ற விவரத்தை, ஜன.,10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். 

இதன்படி, சென்னை அணியில் கேப்டன் தோனி நீடிப்பது உறுதி. 2010, 2011ல் சென்னை அணி சாதிக்க முக்கிய காரணமாக இருந்த அஷ்வின், ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, ரெய்னாவும் அணியில் இருக்கலாம். 

கடந்த தொடரில் 18 போட்டிகளில் 32 விக்கெட் சாய்த்த வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோவும் தொடரலாம். அதேநேரம் மோகித் சர்மா, ஆல்பி மார்கல், மைக்கேல் ஹசியின் நிலை என்னாகும் எனத் தெரியவில்லை. 

மும்பை அணியை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், போலார்டு, மலிங்காவுடன், சமீபகாலமாக வேகத்தில் மீண்டும் மிரட்டி வரும் மிட்சல் ஜான்சன் என, ஐந்து பேர் உறுதியாக இருக்கலாம். அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் ஏலத்தில் மீண்டும் வாங்கப்படலாம். 


காம்பிர் நீடிப்பு:

கோல்கட்டா அணிக்கு கடந்த 2011ல் இருந்து கேப்டனாக உள்ள காம்பிர், 2012ல் கோப்பை வென்று கொடுத்தார். இவருடன், மனோஜ் திவாரி, யூசுப் பதான் மற்றும் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் தக்கவைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜஸ்தானை பொறுத்தவரையில் ரகானே, வாட்சன், பால்க்னர், டாம்பே நீடிக்க வாய்ப்பு உள்ளது.