இந்திய அணிக்கு ஸ்பான்சர் யார்?

இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய, ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' சகாரா நிறுவனம் கடந்த 2001, ஜூன் 2ல் ரூ. 4723 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
கடந்த 11 ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் "சகாரா' பெயர் கொண்ட "ஜெர்சி' இல்லாமல் பார்க்கவே முடியாது. 

பின், 2008ல் பிரிமியர் தொடர் துவங்கப்பட்ட போது, ஒரு அணியை வாங்க முயற்சித்தது சகாரா. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை இட்டது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,).

பின் 2010ல் ஒருவழியாக புனே பிரிமியர் அணியை வாங்கியது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ.,யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இந்தியா மற்றும் புனே அணியின் "ஸ்பான்சரில்' இருந்து விலகுவதாக, கடந்த பிப்., 4ல் நடந்தது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த அக்., 27ல் புனே அணி உரிமத்தை, பி.சி.சி.ஐ., ரத்து செய்தது. இப்போது 9 மாதங்கள் கழித்து, இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் வெளியிட்ட அறிக்கை:

இந்திய ஆண்கள், 19 வயது, "ஏ' அணி மற்றும் பெண்கள் அணிக்கு, 2014, ஜன. 1 முதல் 2017, மார்ச் 31 வரை "ஸ்பான்சர்' செய்ய, புதிய ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்காக, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள விண்ணப்பங்கள், மும்பை வான்கடே மைதானத்தில் நவ., 11 முதல் டிச., 7 வரை கிடைக்கும். இவை டிச., 9, மதியம் 3.00 மணி வரை ஏற்கப்படும். அன்று ஒப்பந்தங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட "ஸ்பான்சர்' அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி


2018–ம் ஆண்டுக்கான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இதில் ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஆக்கி இந்தியா அனுமதி கோரி இருந்தது.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. 

உலக கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி இங்கிலாந்தில் ஜூலை 7–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12–ல் இருந்து 16 ஆக உயத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் டெஸ்ட் ஆல்ரவுடண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், முதலிடத்திற்கு முன்னேறினார். 

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய அஸ்வின், 124 ரன்கள் குவித்ததுடன், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனால் அவர் 81 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். வங்கதேச வீரர் சாகிப் அல் அசன், தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக்கஸ் காலிஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


இதேபோல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறிய அஸ்வின், இப்போது 45-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சு தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு வந்துள்ளார். 



ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோரும் சர்வதேச தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர். அறிமுக  டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த 14-வது இந்திய வீரரான ரோகித் சர்மா, பேட்டிங் தரவரிசையில் 63-வது இடத்திலும், பந்து வீச்சு தரவரிசையில் ஷமி 53-வது இடத்திலும் உள்ளனர்.



மும்பையில் 14-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டி முடிந்ததும், புதிய தரவரிசை வெளியிடப்படும்.

ரோகித் மாற்றத்திற்கு காரணம்

மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபின்தான், ரோகித்தின் ஆட்டத்தில் மாற்றம் உண்டானது,'' என, இந்திய அணி ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில் இந்தியாவின் ரோகித் அறிமுக போட்டியில் சதம் விளாசினார். அணியின் முன்னிலைக்கு கைகொடுத்த இவர் குறித்து கவாஸ்கர் கூறியது: 

இந்த ஆண்டு ரோகித்துக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிரிமியர் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்தான், இவரது ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 

இதற்கு முன்பும் கூட, இவரிடம் திறமை இருந்தது. ஆனால், விக்கெட்டின் மதிப்பு இவருக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, கேப்டன் பதவி ஏற்றதுதான், ரோகித்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். 


அசத்திய அஷ்வின்:

முக்கியமாக, கேப்டன் தோனி இவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இதன்படி, அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. 

சக வீரர் அஷ்வினும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எப்படி செயல்பட்டராரோ, அதைத்தான் நேற்றும் வெளிப்படுத்தினார். தவிர, நெருக்கடியை சிறப்பாக எதிர் கொண்டார். இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

நடுவரின் தவறான முடிவு - தெண்டுல்கரின் அவுட் டில் சர்ச்சை

தெண்டுல்கர் பேட்டிங் செய்ய மைதானத்துக்கு நடந்து வந்துபோது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பினர். ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை கைதட்டி வரவேற்றனர்.
199–வது டெஸ்டில் விளையாடும் அவர் தான் சந்தித்த 3–வது ஓவரில் 2 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தெண்டுல்கர் 10 ரன்னில் இருந்தபோது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். 

ஆனால் அவரது அவுட் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெலிவிசன் ரீபிளேயில் பார்த்தபோது மிகவும் மேலாக செல்வது தெரிந்தது. அதாவது ஸ்டம்புக்கு மேலே செல்லக்கூடிய பந்துக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து நடுவர் லாங் இந்த தவறான முடிவை எடுத்து அவுட் கொடுத்தார். நடுவரின் இந்த மோசமான முடிவால் தெண்டுல்கர் ஏமாற்றம் அடைந்தார். 

அதோடு ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர். அவரது ஆட்டத்தை காண ஈடன்கார்டன் மைதானத்துக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.