அதிகம் சம்பாதிக்கும் தோனி



அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், 31வது இடத்தில் இருந்து, 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் தோனி. 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, அனைத்துவித, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளவர் தோனி. கடந்த 2007 ("டுவென்டி-20'), 2011 ல் உலக கோப்பை வென்று தந்தார். 

சமீபகாலமாக அதிக சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவர் சுயநலத்துடன் செயல்பட்டு சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை உண்மையாக்கும் வகையில், பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி, உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில், கடந்த ஆண்டினை விட, 15 இடங்கள் முன்னேறி, 16வது இடத்தை பெற்றுள்ளார் தோனி. இந்திய அளவில் "டாப்பில்' உள்ள இவரது ஆண்டு வருமானம் ரூ. 179 கோடி. இதில் போட்டிகளில் கிடைத்த சம்பளம் ரூ. 20 கோடி தான். மற்ற அனைத்தும் பல்வேறு தொழில்கள் மூலம் கிடைத்த வரவு. 


முதலிடத்தில் உட்ஸ்:

கடந்த முதலிடத்தில் இருந்த டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை (ரூ. 406 கோடி), பின் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் (ரூ. 444 கோடி). 

கால்பந்து வீரர்கள் இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் (ரூ. 268 கோடி), போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரூ. 250 கோடி), அர்ஜென்டினாவின் மெஸ்சி (ரூ. 235 கோடி) ஆகியோர் 8, 9, 10வது இடத்தில் உள்ளனர்.


சச்சின் "51':

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா (ரூ. 165 கோடி), செர்பிய வீரர் ஜோகோவிச் (ரூ. 153 கோடி), ஸ்பெயினின் நடால் (ரூ. 150 கோடி) முறையே 22, 28, 30வது இடத்தை பெற்றுள்ளனர். 

ரூ. 138 கோடி சம்பாதிக்கும் தடகள வீரர் உசைன் போல்ட் (ஜமைக்கா), 40வது இடத்திலுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், 51வது இடம் தான் (ரூ. 125 கோடி) கிடைத்துள்ளது. 

சச்சினை மறக்க செய்த தவான்



சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷிகர் தவானை பற்றி தான் அனைவரும் பேசினர். சச்சின், சேவக் இல்லாததை ரசிகர்கள் உணரவில்லை,'' என, கபில்தேவ் தெரிவித்தார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவின் ஷிகர் தவான், ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறியது: 

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக ஷிகர் தவான் திகழ்கிறார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக துணிச்சலாக ஆடினார். 

துவக்க வீரராக ரோகித் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. இதனால், நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. தற்போது, இந்திய அணி இளம் வீரர்களின் வசம் சென்று விட்டது.

அணியில் சச்சின், சேவக் இல்லை என்பதை என்னால் உணர முடியவில்லை. அந்தளவுக்கு, தவானின் ஆட்டம் இருந்தது. 

தவிர, ரசிகர்களும் இவரை பற்றி மட்டுமே பேசினர். மற்ற வீரர்களைப்பற்றி பேசுவதில்லை. 

இவ்வாறு கபில்தேவ் கூறினார். 

ஸ்ரீசாந்துக்கு மேலும் சிக்கல் - பாயப்போகிறது புதிய வழக்கு



கிரிக்கெட் சூதாட்டத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீலுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், ஸ்ரீசாந்த், சண்டி, அங்கித் சவான் மீது ஜாமினில் வெளி வர முடியாத புதிய வழக்கு பதியப்பட உள்ளது. 

ஆறாவது பிரிமியர் தொடரில், "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட 25 பேர், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணத்துக்காக ஜாமினில் சென்ற அங்கித் சவான், இன்று சிறைக்கு திரும்ப உள்ளார்.

இதனிடையே, ஸ்ரீசாந்த், சண்டிலா ஆகியோரது நீதிமன்ற காவல் முடிந்து, நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது இருவரது ஜாமின் மனு மீதான விசாரணையும் நடந்தது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோரின் ஜாமின் மனுக்களை நிராகரித்த நீதிபதி, ஜூன் 18 ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். 

இதனிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீதும், மகாராஷ்டிரா கன்ட்ரோல் ஆப் ஆர்கனைஸ்டு கிரைம் (எம்.சி.ஓ.சி.ஏ.,) சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. 

சட்ட விரோதமாக பயங்கரவாதத்துக்கு பணம் செல்வதை தடுக்க, 1994ல் இந்த சட்டம் மகாராஷ்டிராவில் கொண்டு வரப்பட்டது. 


பயங்கரவாத தொடர்பு:

புக்கிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நிழல் <உலக தாதாக்கள் சோட்டா ஷகீல், தாவூத் இப்ராகிம் உடன் தொடர்புள்ளது அம்பலமானது. இதற்கான ஆதாரங்கள் போலீசிடம் உள்ளதாக தெரிகிறது.

இதனால், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத, எம்.சி.ஓ.சி.ஏ., சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.


ஜாமின் இல்லை

இதன் படி, தொடர்ந்து 30 நாட்கள் கூட போலீஸ் காவலில் வைத்திருக்க முடியும். ஜாமின் கிடைக்காது. இவர்கள் தொடர்பான வழக்கு தனி நீதிமன்றத்தில் நடக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்ரீசாந்த் வக்கீல் ரெபெக்கா ஜான் கூறுகையில்,"" ஸ்ரீசாந்த்துக்கு ஜாமின் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்கின்றனர்,'' என்றார். இதனிடையே, ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த புதிய ஜாமின் மனு, ஜூன் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

தோனிக்கு பங்கு - கிளம்பியது புதிய சர்ச்சை



கேப்டன் தோனியின் விளம்பர ஒப்பந்தங்களை கவனித்து வரும், "ரிதி ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தில் அவருக்கு 15 சதவீத பங்குகள் உள்ளதாம். 

இதே நிறுவனம் தான் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா போன்றோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், இவர்களுக்கு அணி தேர்வில் தோனி சாதகமாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டி அணிகளின் கேப்டனாக இருப்பவர் தோனி. கடந்த 2007 ("டுவென்டி-20'), 2011 ல் உலக கோப்பை வென்று தந்தார். 

இவரது 15 ஆண்டு கால நண்பர் அருண் பாண்டே, "ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்' என்ற விளையாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010ல், இந்நிறுவனம் தோனியை ரூ. 210 கோடிக்கு மூன்றாண்டு ஒப்பந்தம் செய்தது. 

அதாவது ஆண்டுக்கு ரூ. 70 கோடி வழங்கும். இந்நிறுவனம் பரிந்துரை செய்யும் விளம்பரங்களில் தோனி தோன்ற வேண்டும். 


பங்கு எப்படி

கடந்த 2012-13ல் 15.1 சதவீத பங்குகளை ஒதுக்கியுள்ளது. தவிர, ரிதி ஸ்போர்ட்ஸ் தொடர்புடைய நான்கு நிறுவனத்தில் தோனிக்கு பங்குள்ளதாம். இதில் ஒன்று தான் "ரிதி-எம்.எஸ்.டி-என் மோட்டார் ஸ்போர்ட்ஸ்'. இது தான் "மகி ரைசிங்' என்ற பெயரில் பைக் பந்தய நிறுவனத்தை செயல்படுத்துகிறது.

வீரர்கள் தொடர்பு: இதே ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தான் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோருடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தோனி உள்ளதால், இந்த வீரர்களை அணியில், இடம் பெறச் செய்து, தோனி "சுயலாபம்' பார்ப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

தேர்வு செய்ய முடியுமா: ஆனாலும், அணித் தேர்வில் கேப்டன் என்ற முறையில் மட்டுமே, தோனி தனது கருத்துக்களை கூற முடியும். ஐந்து பேர் கொண்ட தேர்வாளர்கள் குழு தான் இறுதி முடிவெடுக்கும். இவர்கள் கேப்டன் கருத்தை மீறி செயல்பட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. 

உதாரணமாக, பெரும்பாலான போட்டிகளில் சோபிக்காத போதும், ரவிந்திர ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் தோனி. சென்னை அணியிலும் ரவிந்திர ஜடேஜாவை (ரூ. 10.66 கோடி) சேர்த்தார். ஹர்பஜன் சிங்கை வெளியேற்றி அஷ்வினுடன், பிரக்யான் ஓஜாவை டெஸ்ட் அணியில் இடம் பெறச் செய்தார். இவர்கள் இருவரும் "ரிதி' நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சலுகை காட்டியிருக்கலாம்.

காரணம் என்ன: தவிர, "ரிதியுடன்' சென்னை அணிக்கும் ஒப்பந்தம் உள்ளது. இந்த அணியின் கேப்டனாகவும் தோனி உள்ளார். இதன் "கவுரவ' உறுப்பினர் குருநாத் தற்போது சிறையில் உள்ளார். இந்த ஒப்பந்தம் காரணமாகத் தான், சமீபத்திய சூதாட்டம் குறித்து தோனி வாய்திறக்க மறுப்பதாக கூறப்படுகிறது

பிச்சுக்கிச்சு பி.சி.சி.ஐ., - அவுட் ஆகிறார் சீனிவாசன்



உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சூதாட்ட விவகாரத்தில் சிதறிப் போயிருக்கிறது. 

நேற்று பிரிமியர் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து ராஜிவ் சுக்லா அதிரடியாக ராஜினாமா செய்தார். இன்று பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுவார் என தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்' செய்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் சிக்கினர். பின் சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினரும் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் பிடிபட்டார். 

இதனால் சீனிவாசன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. மொத்தமுள்ள 30 ("டை' ஏற்பட்டால், தலைவரின் ஒரு ஓட்டு தனி) உறுப்பினர்களில் 18 பேர், இவருக்கு எதிராக திரும்பியுள்ளதாக தெரிகிறது. 

ஆனால், மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டி(24 பேர்) இருந்தால் தான், சீனிவாசனை பதவியில் இருந்து நீக்க முடியும். இருப்பினும், எதிர்ப்பு அதிகரித்ததால், வேறுவழியின்றி வரும் 8ம் தேதி அவசர செயற்குழு கூட்டத்துக்கு சீனிவாசன் அழைப்பு விடுத்தார். 

அதேநேரம், இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.சி.சி.ஐ., பொருளாளர் அஜய் ஷிர்கே, செயலர் சஞ்சய் ஜக்டலே ராஜினாமா செய்தனர். செயற்குழுவை உடனடியாக கூட்டும்படி சீனிவாசனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. 

இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று மதியம் 2.30 மணிக்கு செயற்குழு கூடும் என, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் அனுராக் தாகூரிடம், சீனிவாசன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் இவர் பதவி விலகலாம்.