தோனி மீது வழக்கு


மத உணர்வுகளை புண்படுத்தியதாக கேப்டன் தோனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி, 31. இவர் பல்வேறு பொருட்களுக்கு விளம்பர "மாடலாக' உள்ளார். 

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில பத்திரிகை ஒன்று, அட்டை படத்தில் தோனியை விஷ்ணு மாதிரி சித்தரித்து இருந்தது. 

கைகளில் பல விளம்பர பொருட்கள் இருந்தன. அதில், ஒரு கையில் "ஷூ' இடம் பெற, பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

இதற்கும் தோனிக்கும் சம்பந்தம் கிடையாது. சம்பந்தப்பட்ட பத்திரிகை தான் கற்பனையாக படத்தை வெளியிட்டு உள்ளது. 

ஆனால், இந்து கடவுள் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, பெங்களூருவை சேர்ந்த சமூக சேவகர் ஜெயகுமார், தோனி மீது வழக்கு தொடர்ந்தார். 

இதை ஏற்றுக்கொண்ட பெங்களூரு 6வது கூடுதல் பெருநகர நீதிபதி சூரி கான், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். 

இவ்வழக்கு மே 12ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சேவக்கை சுற்றி வளைத்த கும்பல்


போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேவக் உள்ளிட்ட வீரர்களை, கும்பலாக சுற்றி வளைத்ததால், ஒரே நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பினர். 

பிரிமியர் கிரிக்கெட் தொடரில், டில்லி அணிக்காக விளையாடி வருகின்றனர் இந்திய வீரர்கள் சேவக், ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் நமன் ஓஜா. இவர்கள் டில்லியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

ஹெல்மெட் அணிவது, பாதுகாப்பாக பயணம் செய்வது உள்ளிட்ட பல விதிகளை வலியுறுத்த இருந்தனர். இவர்களுடன், பள்ளி சிறுவர்களும் பங்கேற்றனர். இதற்காக "இந்தியா கேட்' பகுதிக்கு வந்த இவர்களை, பத்திரிகையாளர்கள் கும்பலாக சுற்றி வளைத்தனர். 

விலகிச் செல்லுமாறு போலீசார் மற்றும் வீரர்கள் கூறியும், அவர்கள் கேட்கவில்லை. அந்த இடத்தை விட்டு கிளம்பிய ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா இருவரும் தங்களது காருக்குள் சென்று அமர்ந்தனர். 

தொடர்ந்து சேவக்கும் அவர்களுடன் செல்ல, அந்த இடத்தை விட்டு உடனடியாக கிளம்பினர். 

சேவக் கூறுகையில்,"" பயணங்களின் போது வேகமாக செல்ல வேண்டாம். சாலை விதிகளை மதிக்க வேண்டும். 

இதனால், விபத்துக்கள் நடப்பது குறையும்,'' என்றார்.

ஐ.பி.எல். போட்டியில் தெண்டுல்கர் சாதனை


ஐ.பி.எல். போட்டியில் அதிக பவுண்டரி அடித்தவர் என்ற சாதனையை தெண்டுல்கர் படைத்தார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 8 பவுண்டரி அடித்தார். 

இதன்மூலம் அவர் அதிக பவுண்டரி அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 289 பவுண்டரி அடித்துள்ளார். 

ஐ.பி.எல். போட்டியில் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் `டாப் 5' வீரர்கள் வருமாறு:- 

1. தெண்டுல்கர் (மும்பை): 289 பவுண்டரி- 76 மேட்ச். 

2. காம்பீர் (கொல்கத்தா): -281 (84). 

3. ஷேவாக் (டெல்லி): 254 (75). 

4. டிராவிட் (ராஜஸ்தான்): 252 (83). 

5. காலிஸ் (கொல்கத்தா): 236 (86).

200வது டெஸ்டில் சச்சின்


கடந்த 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்து வரும் சச்சினுக்கு, 200 வது டெஸ்டில் பங்கேற்க தகுதி உள்ளது,'' என, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரட் லீ தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. இவர் 198 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இன்னும் 2 போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில், 200வது டெஸ்டில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம். 

இதுகுறித்து பிரட் லீ கூறியது:

சச்சின் ஓய்வு பெற வேண்டும் என, பல்வேறு "மீடியா' கூறுகின்றன. 198 டெஸ்டில் பங்கேற்றுள்ள ஜாம்பவானான இவருக்கு மரியாதை தரவேண்டும். உலகில் அதிக ரன்கள் சேர்த்த வீரர். ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், சச்சின் என, இதில் யார் சிறந்தவர் என்று கூற வரவில்லை. 

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் சச்சின் சிறந்தவர். ஏனெனில், நான் வளர்ந்த காலத்தில் இருந்து, இவர் தான் "ஹீரோ'. பேட்டிங்கில் தொடர்ந்து சச்சின் ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், ஓய்வை முடிவை அவரிடமே விட்டுவிட வேண்டும். இது தான் சரியானது. 

கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் நீடித்து வரும் சச்சினுக்கு, 200வது டெஸ்டில் பங்கேற்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது. இதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். ஏனெனில், இவருக்குப் பின் இந்த இலக்கை அடையும் வீரரை பார்க்க முடியாது. 

ஆஸ்திரேலிய மக்களால் மிகவும் நேசிக்கப்படும் வீரரான சச்சின், உலகளவில் வீரர்களுக்கு "ரோல் மாடலாக' உள்ளார். 

இன்னும் நீண்ட நாட்கள் இவர் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். அதேநேரம், எப்போது ஓய்வு என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு பிரட் லீ கூறினார்.

IPL போட்டியில் 2000 ரன்னை கடந்த 10-வது வீரர் டிராவிட்


ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் அபாரமாக விளையாடி 40 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன் எடுத்தார்.
 
இதில் 40-வது ரன்னை எடுத்தபோது ராகுல் டிராவிட் 2 ஆயிரம் ரன்னை தொட்டார். 82 ஆட்டத்தில் விளையாடி அவர் 2011 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் 2 ஆயிரம் ரன்னை எடுத்த 10-வது வீரர் டிராவிட் ஆவார்.
 
இந்த 6-வது ஐ.பி.எல். தொடரில் கிறிஸ் கெய்ல், ஷேவாக், டோனி, விராட் கோலி ஆகியோர் 2 ஆயிரம் ரன்னை எடுத்து இருந்தனர். அந்த வரிசையில் தற்போது டிராவிட் இணைந்துள்ளார்.