டிராவிட் மீது அதிக மதிப்பு - பணிந்தார் காம்பிர்


டிராவிட் மீது எப்போதுமே அதிக மதிப்பு உண்டு. அவருக்கு எதிராக கடும் வார்த்தைகளை பயன்படுத்தவில்லை,'' என, காம்பிர் தெரிவித்தார்.

கோல்கட்டாவில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், காம்பிரின் கோல்கட்டா அணி, டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. 

இதில், ராஜஸ்தானின் வாட்சன், கோல்கட்டாவின் பிஸ்லா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காம்பிர், டிராவிட் உரசிக் கொள்ள, பிரச்னை பெரிதானது. 

இத்தொடரில் காம்பிர், இரண்டாவது முறையாக எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னதாக பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லியுடன் சண்டையிட்டார். இதையடுத்து கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். 

இது குறித்து "டுவிட்டர்' இணையதளத்தில் காம்பிர் வெளியிட்ட செய்தியில், "டிராவிட்டுடன் சொற்போரில் ஈடுபட்டது உண்மை. ஆனால், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. அவர் மீது எப்போதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன்,' என, குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ், காம்பிர் நீக்கம் - ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் வாய்ப்பு


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங், கவுதம் காம்பிர் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. ஷிகர் தவான், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றனர்.

இங்கிலாந்தில், வரும் ஜூன் 6-23ம் தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, கடந்த ஏப்., 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சேவக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு "கல்தா' கொடுக்கப்பட்டது. 

இந்த உத்தேச அணியில் இருந்து, சிறந்த 15 பேர் கொண்ட இறுதி அணி, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டது.

இதில் சீனியர் வீரர்களான கவுதம் காம்பிர், யுவராஜ் சிங் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான், இர்பான் பதான், வினய் குமார், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், அமித் மிஸ்ரா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா, வினய் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

IPL 6 - புதிய சாதனை

பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் அடித்த ரெய்னா, பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

இதன் மூலம் சர்வதேச "டுவென்டி-20' (தென் ஆப்ரிக்கா, 2010, 101 ரன்கள்) மற்றும் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதற்கு முன் கெய்ல், பிரண்டன் மெக்கலம் என, இருவரும் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

* நேற்று 53 வது பந்தில் சதத்தை எட்டிய ரெய்னா, பிரிமியர் வரலாற்றில் அதிவேக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 14வது இடத்தை பெற்றார். முதல் மூன்று இடங்களில் கெய்ல் (30 பந்து), யூசுப் பதான் (37), கில்கிறிஸ்ட் (42) உள்ளனர். 

* ஆறாவது பிரிமியர் தொடரில் அடிக்கப்பட்ட மூன்றாவது சதம் இது. இதற்கு முன் கெய்ல் (175), வாட்சன் (101) சதம் அடித்து இருந்தனர். 

* ஒட்டுமொத்த பிரிமியர் வரலாற்றில் அடிக்கப்பட்ட 27வது சதம் இது. 

ஐ.பி.எல். போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்


6-வது ஐ.பி.எல். போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதுபற்றிய ஒரு பார்வை:-

கிறிஸ்கெய்ல் (பெங்களூர்)

ஐ.பி.எல். போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக கிறிஸ்கெய்ல் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு ஐ.பி.எல். போட்டியிலும் அதிக ரன் எடுத்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். இந்த முறையும் அவர் தான் முன்னிலையில் உள்ளார். 10 ஆட்டத்தில் 484 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக்ரேட் 166.89. 36 சிக்சர் அடித்தும் முதலிடத்தில் உள்ளார்.

புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 175 ரன் குவித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். அவர் அதிரடியாக ஆடினால் பவுலர்களின் நிலை திண்டாட்டம் தான். பெங்களூர் அணியின் துருப்பு சீட்டாக இருக்கும் அவர் சிறந்த அதிரடி வீரராக ஜொலிக்கிறார்.

இதேபோல வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ராம்பால் பெங்களூர் அணியின் முன்னணி பவுலர்களில் ஒருவராக திகழ்கிறார். 6 ஆட்டத்தில் 10 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

சுனில் நரீன் (கொல்கத்தா)

இந்த ஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார். 9 ஆட்டத்தில் 15 விக்கெட் எடுத்துள்ளார். சிறந்த சுழற்பந்து வீரராக உள்ளார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் சிரமப்படுகிறார்கள்.

பிராவோ (சென்னை)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார். 15 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சிறந்த பீல்டரும் ஆவார். களத்தில் விளையாடுவதில் மட்டுமல்ல நடனம் ஆடுவதிலும் இவர் ரசிகர்களை கவர்ந்தவர்.

போலார்ட், சுமித் (மும்பை)

மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடும் அதிரடி வீரர்களில் ஒருவர் ஆவார். ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளார். மிகசிறந்த பீல்டர் ஆவார். 9 ஆட்டத்தில் 201 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக்ரேட் 144.60 ஆகும். 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான இவரது அதிரடி ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.

இதேபோல தொடக்க வீரர் சுமித்தும் அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கொல்கத்தா, பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். பாண்டிங் இடத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

(இதேபோல ஐதராபாத் அணியில் உள்ள டாரன்சேமி, ராஜஸ்தான் அணியில் உள்ள கெவன் கூப்பர் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். 20 ஓவர் உலககோப்பையில் தற்போதைய சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.)

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு எப்போது?


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி மே 4ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது.

இங்கிலாந்தில், வரும் ஜூன் 6-23ம் தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 

லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் தலா முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் ஜூன் 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ள அரையிறுதியில் விளையாடும். பைனல், ஜூன் 23ம் தேதி பர்மிங்காமில் நடக்கவுள்ளது.

"ஏ' பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து அணிகளும், "பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் ஜூன் 6ம் தேதி கார்டிப் நகரில் நடக்கவுள்ள தொடரின் முதல் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. அதன்பின் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் (ஜூன் 11), பாகிஸ்தான் (ஜூன் 15) அணிகளுடன் விளையாடுகிறது.

இத்தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, கடந்த ஏப்., 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சேவக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு "கல்தா' கொடுக்கப்பட்டது. இந்த உத்தேச அணியில் இருந்து, சிறந்த 15 பேர் கொண்ட இறுதி அணி, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் வரும் மே 4ம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்பட உள்ளது.


இந்திய உத்தேச அணி விவரம்: முரளி விஜய், ஷிகர் தவான், காம்பிர், உன்முக்த் சந்த், கோஹ்லி, யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ரகானே, அம்பதி ராயுடு, ஜாதவ், தோனி, விரிதிமான் சகா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, சேனா, பர்வேஸ் ரசூல், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டிண்டா, உமேஷ் யாதவ், ஷமி அகமது, இர்பான் பதான், வினய் குமார், பிரவீண் குமார், ஈஷ்வர் பாண்டே, சித்தார்த் கவுல்.