சதம் அடிக்காவிட்டாலும் தெண்டுல்கரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது


உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் மோசமான ஆட்டம் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். 24 ஆண்டுகளாக விளையாடும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து எழுந்தது. 

இந்த நிலையில் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்டில் தெண்டுல்கர் அபாரமாக விளையாடினார். அவர் 155 பந்துகளை சந்தித்து 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

தெண்டுல்கரின் இந்த ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தெண்டுல்கர் சதம் அடிக் காவிட்டாலும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. இது மிகவும் அபாரமான ஆட்டங்களில் ஒன்றாக இல்லா விட்டாலும் பிரமிப்பாக இருந்தது. ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்ட போது தெண்டுல்கர் தனது கால்களை சரியாக பயன்படுத்து கொள்ள வில்லை. இதனால் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். 

இங்கிலாந்து சுழற்பந்தை எதிர்கொள்வதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த சிறப்பான ஆட்டம் மூலம் தெண்டுல்கரின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். 

இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

சர்வதேச போட்டியில் தெண்டுல்கர் 34 ஆயிரம் ரன்


சர்வதேச போட்டிகளில் தெண்டுல்கர் இன்று 34 ஆயிரம் ரன்னை கடந்தார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் சேர்த்து அவர் 34 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார்.

இன்று 2 ரன்னை எடுத்தபோது அவர் 34 ஆயிரம் (657 போட்டி) ரன்னை எடுத்தார். தெண்டுல்கர் 193 டெஸ்டில் 15,564 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் 10 ரன்னும் எடுத்துள்ளார்.

சதம் அடிப்பாரா சச்சின்?


கோல்கட்டா டெஸ்டில் சச்சின் சதம் அடித்து சாதிப்பார்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. சதத்தில் சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்த இவர், சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இவரது "பார்ம்' குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இவர், கோல்கட்டாவில் நாளை துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விளையாட உள்ளார். இதில் இழந்த "பார்மை' மீட்டு எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி கூறியது: கோல்கட்டா டெஸ்ட் குறித்து நிறைய செய்திகள் வெளியாகின்றன. சமீபகாலமாக "பார்மின்றி' தவிக்கும் சச்சின், கோல்கட்டா டெஸ்டில் சதம் அடித்து சாதிப்பார் என நம்புகிறேன். 

மும்பை டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் மூலம், தொடர் 1-1 என சமநிலை அடைந்தது. மீதமுள்ள இரண்டு டெஸ்டிலும், இந்திய அணி எழுச்சி பெற்று, தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

சச்சின் கூறுகையில்,"" ராயை நான் சந்தித்தது கிடையாது. கிரிக்கெட்டிற்கு இவர் அளித்துள்ள பங்களிப்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இவரைப்பற்றிய புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது பெருமை,'' என்றார்.

கங்குலி கூறுகையில்,"" பங்கஜ் ராய் துவக்க ஆட்டக்காரராக விளையாடும் போதெல்லாம், "ஹெல்மெட்' கிடையாது. அப்போது, வேகப்பந்துவீச்சாளர்களை எதிர் கொண்டு, 10 ரன்கள் எடுப்பது இப்போது 20 ரன்கள் எடுப்பதற்கு சமம்,'' என்றார். 

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. 25-ந்தேதி முதல் ஜனவரி 6-ந்தேதி வரை பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடும். முதலாவது 20 ஓவர் போட்டி பெங்களூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. 

இந்த நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவது கடினமானது என்று பாகிஸ்தான் ஒருநாள் போட்டி கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்டில் இந்தியா தோற்று இருந்தாலும் உள்ளூர் மண்ணில் அந்த அணி வலிமையானது தான். சொந்த மண்ணில் இந்திய வீழ்த்துவது கடினமானதே. 

20 ஓவர் போட்டியிலும், ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது. இதனால் அந்த அணியை உள்ளூரில் தோற்கடிப்பது கடும் சவாலானது. 

இந்திய அணியை வீழ்த்த எங்களது உடல் வலிமையும், மனவலிமையும் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருக்கும் தெரியும். எப்போதுமே இந்திய தொடர் வீரர்களுக்கு நெருக்கடியாக தான் இருக்கும். 

இவ்வாறு மிஸ்பா-உல்- ஹக் கூறியுள்ளார்.

பாக்., வீரர்களுக்கு தடை - பி.சி.பி., எச்சரிக்கை


இந்திய பயணத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் தனியார் "பார்ட்டி'களில் பங்கேற்க, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) தடை விதித்துள்ளது.

கடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. பல்வேறு முயற்சிகளுக்கு பின், மத்திய அரசு ஒருவழியாக அனுமதி அளிக்க, பாகிஸ்தான் அணி, இம்மாதம் இந்தியா வருகிறது.

தற்போதைய இங்கிலாந்து தொடருக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நாட்களில் (டிச., 23 - ஜன.,6) இரு அணிகளும் 2 "டுவென்டி-20', 3 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சமீபத்தில் வெளியிட்டது. 

இதன்படி 2 "டுவென்டி-20' போட்டிகள் பெங்களூரு (டிச. 25), ஆமதாபாத் (டிச. 27) மைதானங்களில் நடக்கவுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் சென்னை (டிச. 30), கோல்கட்டா (2013, ஜன. 3), டில்லி (2013, ஜன. 6) ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது. இம்மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க பி.சி.பி., செய்தி தொடர்பாளர் நதீம் சர்வார், பாதுகாப்பு மற்றும் காவல் துறை தலைவர் ஈஷான் சாதிக் ஆகியோர் அடங்கிய குழு இந்தியா வந்துள்ளது.

இதுகுறித்து நதீம் சர்வார் கூறியது: இந்திய பயணத்தின் போது பாகிஸ்தான் வீரர் தனியார் "பார்ட்டி'களில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல வீரர்கள் தங்கவுள்ள ஓட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. 

வீரர்களை பார்க்க, அவர்களது உறவினர், நண்பர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கையில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் போது பின்பற்ற பட்ட அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பாகிஸ்தான் வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு சார்பில் நடத்தப்படும் சிறப்பு விருந்தில் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மற்றும் போட்டி முடிந்த பின், வீரர்கள் அனைவரும் நேராக ஓட்டலுக்கு வந்துவிட வேண்டும். 

"ஷாப்பிங்', "பார்ட்டி' உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல போட்டிகளை காண வரும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு நதீம் சர்வார் கூறினார்.