புதிய தொழிலில் குதிக்கிறார் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சர்வதேச அளவில் புதிய தொழிலில் குதிக்கிறார். உடலில் நீண்ட நேரம் நறுமணத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் ஆண்களுக்கான வாசனை திரவியம் (சென்ட்) விற்பனையை, துபாய் நிறுவனத்துடன் இணைந்து தொடங்குகிறார்.

முதலில் இந்தியா அதன் பிறகு அரபு நாடுகள், பிறகு உலகின் மற்ற இடங்களுக்கும் அவரது நிறுவனம் தொடங்கப்படும்.

அடுத்த மாதம் இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, டோனி நிறுவனத்தின் சென்ட்டுகள் இந்திய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்து விடும்.

இதன் மூலம் சர்வதேச அளவில் இது போன்ற விற்பனையில் குதிக்கும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை டோனி பெறுகிறார்.

டென்னிஸ் பிரபலங்கள் ரோஜர் பெடரர், மரிய ஷரபோவா ஆகியோர் ஏற்கனவே இது போன்று 'சென்ட்' விற்பனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் - ஓய்வு முடிவில் லட்சுமண்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து லட்சுமண் ஓய்வு பெறத்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய டெஸ்ட் அணியில் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் லட்சுமண், 37. கடந்த 1996ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

இதுவரை 134 டெஸ்டில், 17 சதம், 56 அரைசதம் உட்பட 8781 ரன்கள் எடுத்துள்ளார். பெரும்பாலான டெஸ்டில், நான்காவது இன்னிங்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்துள்ளார்.

"நான்காவது இன்னிங்ஸ் நாயகன்' என்றழைக்கப்படும் இவர், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற டெஸ்ட் அணியில் இடம் பெற்ற போதும், பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால், விரைவில் ஓய்வு பெறுவார் என்று நம்பப்பட்டது.

தொடர்ந்து அணியில் இருப்பதால், இளம் வீரர்களுக்கு பெரும் தடையாக உள்ளார் என்ற விமர்சனங்கள் இவரை பாதித்து விட்டதாம்.

எதிர்வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவும் இவருக்கு விருப்பம் இல்லையாம். இதனால், இந்த டெஸ்ட் தொடருடன், ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து, தனது நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இறுதி முடிவை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தோனி படை தயார்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்கிறோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இது முடிந்தவுடன், இலங்கையில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

இதற்கான இந்திய அணியின் புதிய ஆடை அறிமுக விழா நடந்தது. இதில் பங்கேற்ற கேப்டன் தோனி கூறியது:

இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க, ஒவ்வொரு போட்டியின் போதும், அதிக இடைவெளி இருந்தது. தற்போது நீண்ட தொடரில் கலந்து கொள்ள மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகவுள்ளோம்.

யுவராஜ் சிங்கை "டிரெசிங் ரூமில் மிஸ்' பண்ணுகிறோம். இவரின் பணியை கோஹ்லி நிரப்பிவிட்டார். தற்போது மீண்டும் யுவராஜ் அணிக்கு திரும்பி இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த புதிய ஆடை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடக்கும். இந்த ஆடையினால் ரன்கள் அதிகமாகுமா என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதிக வசதியாக உணர்கிறேன். ரசிகர்கள் "டிவி'யில் போட்டியை காணும் போது, வெள்ளை நிறத்தில் இருந்தால் டெஸ்ட் போட்டி என்றும், நீல நிறத்தில் இருந்தால் ஒரு நாள் போட்டி என்றும் கணிப்பார்கள்.

தற்போது இதன் மூலம் "டுவென்டி-20' போட்டி என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். மேலும் இந்த ஆடையில் மூவர்ணக் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது என் இதயத்தின் அருகில் உள்ளதால், கொஞ்சம் சிறப்பானது.

இவ்வாறு தோனி கூறினார்.

யுவராஜ் சிங் கூறுகையில்,""கடந்த இரண்டு மாதங்களாக கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன் என நினைக்கவில்லை. இதை என் வாழ்வின் முதல் போட்டியாகத்தான் கருதுகிறேன்,'' என்றார்.

நியூசிலாந்து தொடருக்காக பயிற்சியை துவக்கினார் சச்சின்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, பயிற்சியை துவக்கினார் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின்.

இந்தியா வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் (ஆக., 23 முதல் செப்., 11 வரை), 2 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் வரும் ஆக., 23 முதல் 27 வரை நடக்கிறது.

இதனிடையே, ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்குப் பின், இந்திய வீரர் சச்சின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு வேண்டும் என்பதற்காக, சச்சின் தானாக விலகினார். தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறார்.

இதற்காக, நேற்று காலை சச்சின் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்.சி.ஏ.,) வந்தார். மதியம் என்.சி.ஏ., "பிசியோதெரபிஸ்டிடம்' நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.

பின், வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில், சச்சின் பேட்டிங் பயிற்சி செய்தார். கடந்த சில நாட்களாக இங்கு பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஜாகிர் கானை அழைத்து, தனக்கு பந்து வீசுமாறு கூறி, பயிற்சி செய்தார்.

இலங்கை டுவென்டி-20 தொடரில் மேட்ச் பிக்சிங்

இலங்கையில் நடக்கும் உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் "மேட்ச் பிக்சிங்' நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல்., போல, இலங்கை பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.,) "டுவென்டி-20' போட்டிகளை நடத்த, இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,) கடந்த ஆண்டு முயற்சித்தது. இந்திய வீரர்கள் விலகல் காரணமாக, கடைசியில் தொடர் ரத்தானது.

இம்முறை இந்திய வீரர்கள் இல்லாமல், கிறிஸ் கெய்ல், சாகிப் அல் ஹசன், அப்ரிதி போன்றவர்களை கொண்டு, தொடர் நடத்த திட்டமிட்டனர். காயம் காரணமாக கெய்ல், சாகிப் போன்றோர் கடைசி நேரத்தில் விலகினர்.

இதனிடையே, அங்கிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்' பத்திரிகைக்கு ஒரு "டேப்' ஒன்று வந்தது. இதில், எஸ்.எல்.பி.எல்., தொடரில் "மேட்ச் பிக்சிங்' செய்வது தொடர்பாக பேச்சுகள் பதிவாகியுள்ளதாம். பெரும்பாலும் இவை இந்தியில் இருப்பதால், முழு விவரத்தை அந்த பத்திரிகை வெளியிடவில்லை.

இந்த "டேப்', தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.எல்.சி.,யும் விசாரணை நடத்துகிறது என்றாலும், எவ்வித தகவலையும் தர மறுக்கின்றது.


தொடருக்கு பாதிப்பா:

கடந்த மூன்று நாட்களாக நடக்கும் போட்டிகளுக்கு, பெரியளவில் வரவேற்பு இல்லை. மைதானங்கள் காலியாக கிடக்கின்றன. இப்போது, "மேட்ச் பிக்சிங்' புகாரும் கிளம்பியது தொடரை அதிகமாக பாதிக்கும் என்று தெரிகிறது.


ஒன்றும் செய்யாது:

இதுகுறித்து தொடர் நிர்வாக அதிகாரி சந்தீப் பாம்மர் கூறுகையில்,"" ஊழல் புகாரால் தொடருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இது, ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவை எச்சரிக்கையாக இருக்க செய்யப்பட்ட ஏற்பாடாக கூட இருக்கலாம். தவிர, வெறும் புகார் தான். இதில் உறுதியில்லை,'' என்றார்.