சென்னைக்கு கிடைத்தது பிளே ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் சீஸன் 5 போட்டிகளில் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 71வது போட்டியில் டெக்கான் சார்ஜஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி கொண்டது. பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டியான இதில், பெங்களூரு அணி தோற்றது.

முன்னதாக, பெங்களூரு அணி டாஸ் வென்றது. முதலில் பந்து வீசுவதாக அறிவித்த பெங்களூரு அணி, டெக்கான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதை அடுத்து களம் இறங்கிய டெக்கான் அணியில் துவக்க வீரர்களின் மோசமான செயல்பாட்டால் அணியின் ரன்குவிப்பு தடைப்பட்டது. அந்த அணியில் சதீஷ் தவான் முதல் ஓவரிலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் ஒரு பவுண்டரியுடன் 4பந்துகளில் 5 ரன் எடுத்தார்.

அவருடன் களம் இறங்கிய ரெட்டி 11 பந்துகளில் 7 ரன்னுக்கு நடையைக் கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒயிட் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் 3 விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில், சங்ககராவும் டுமினியும் ஆட்டத்தை நிதானமாகத் தொடர்ந்தனர். சங்ககரா 22 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 15 ரன் எடுத்தார்.

டுமினி 53 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 74 ரன்களை எடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் ஆட்டம் இழந்த பிறகு மீண்டும் விக்கெட்டுகள் மள மளவென விழுந்தன. பார்த்திவ் படேல் 16 ரன்னிலும், ஆஷிஷ் ரெட்டி 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 133 ரன் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது டெக்கான் அணி.

இதை அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சரவெடியாக வெடித்தார். 10 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து 27 ரன் எடுத்திருந்த நிலையில் ஸ்டைன் பந்தில் போல்டானார். உடன் இறங்கிய தில்ஷன் 4 ரன்களே எடுத்தார். இதற்காக அவர் எதிர்கொண்ட பந்துகள் 12.

அடுத்து களம் இறங்கிய விராத் கோலி 40 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 42 ரன் எடுத்தார். உடன் திவாரி 27 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர் பவுண்டரி அடித்து 30 ரன் எடுத்தார். இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தபிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது.

விரைந்து ரன் எடுக்க முனைந்து அனைவருமே ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். பெங்களூரு அணியின் மற்ற விக்கெட்டுகள் மள மளவென சரிய அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 123 ரன்னே எடுக்க முடிந்தது.

இதை அடுத்து டெக்கான் அணி தனது இறுதிப் போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதை அடுத்து, சென்னை அணி 4ம் இடத்தில் நீடித்து, பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது.

ஒரு சதம்-57 சிக்சர்: ஐ.பி.எல். ஹீரோ கெய்ல்

20 ஓவர் ஐ.பி.எல். போட்டி என்றாலே சிக்சர்கள், பவுண்டரிகள் மழை பொழியும். பேட்ஸ் மேன்களுக்கு ஆட்டம் பிடித்து விட்டதால் அடிப்பதெல்லாம் சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கும். அதேபோல் நேற்று டெல்லி அணிக்கு எதிரான நடந்த போட்டியில் பெங்களூர் அணி வீரர் கெய்ல் சிக்சர்களாக விளாசினார்.

நின்ற இடத்தில் இருந்து சிக்சர்களை தூக்கினார். 14-வது ஓவரில் இர்பான் பந்தில் 2 தொடர் சிக்சரும், 16-வது ஓவரில் நெகி பந்தில் 3 தொடர் சிக்சரும் விளாசியது இந்த ஐ.பி.எல். போட்டியின் சிறப்பம்சம் ஆகும்.

நேற்றைய போட்டியில் மட்டும் கெய்ல் 13 சிக்சர்கள் அடித்தார். இடையில் அவ்வப்போது பவுண்டரிகளும் பறந்தது. 62 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்சர்களுடன் 128 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்கனவே 13 போட்டிகளில் கெய்ல் 44 சிக்சர்கள் குவித்து இருந்தார். நேற்று எடுத்த 13 சிக்சர்களும் சேர்த்து 57 சிக்சர்களுடன் ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து ஹீரோவாக திகழ்கிறார்.

நேற்று ஐ.பி.எல். போட்டியில் தனது முதலாவது சதத்தையும் எட்டினார். இது ஐ.பி.எல். போட்டியின் 5-வது சதம் ஆகும். ஏற்கனவே டேவிட் வார்னர் (டெல்லி), கெவின் பீட்டர்சன் (டெல்லி), ரோகித்சர்மா (மும்பை), ரஹானே (ராஜஸ்தான்) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

கெய்ல் வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர். உலக கோப்பை போட்டியின் போது தன் நாட்டு அணிக்கு அவர் சரியாக ஆடவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனால் அவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பெங்களூர் அணி விலைக்கு வாங்கியது. ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு அவரது ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐ.பி.எல்., பிளே --ஆப் , பைனல் டிக்கெட் கட்டணம் குறைப்பு ஏன்?

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள, ஐ.பி.எல்., "பிளே- -ஆப்' மற்றும் பைனலுக்கான டிக்கெட் விற்பனை, நேற்று துவங்கியது.

ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம், 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன், பைனல், சென்னையில் நடப்பதும் உறுதியாகி உள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எல்., டுவென்டி- 20 கிரிக்கெட் போட்டிகள் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் "பி÷-ள-ஆப்' சுற்றின் இரண்டாவது ஆட்டம் வரும் 25ம்தேதியும், பைனல் 27ம்தேதியும் சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், சென்னை மைதானத்தில் 7,000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள மூன்று கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ.,) அனுமதி கொடுக்கவில்லை. இதனால், இறுதிப்போட்டி வேறு மாநிலத்திற்கு இடம் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், திட்டமிட்டபடி இறுதிப்போட்டி சென்னையில் நடப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

"பிளே ஆப்' மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலை துவங்கியது. இதுவரை சென்னையில் நடந்த எட்டு போட்டிகளுக்கும் குறைந்தபட்ச டிக்கட் கட்டணமாக 700 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சென்னை அணியின் "பிளே-ஆப்' வாய்ப்பு மங்கியதால், குறைந்தபட்ச டிக்கெட் கட்டணத்தில் தற்போது 200 ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கேலரிகளுக்கான குறைந்தபட்ச டிக்கட் கட்டணமாக 500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது.

அதற்கடுத்துள்ள 1,200ரூபாய்க்கான டிக்கெட் கட்டணமும் நேற்று அதிரடியாக குறைக்கப்பட்டு 750 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோல மற்ற ஸ்டாண்டுகளின் டிக்கெட் கட்டணமும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டதற்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் நடந்த பெரும்பாலான போட்டிகளை காண்பதற்கு குறைந்த அளவிலேயே ரசிகர்கள் கூட்டம் வந்தது. கூட்டத்தை அதிகரிப்பதற்காகவே டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ., அனுமதிப்பெற்று பூட்டி கிடக்கும் கேலரிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதால்தான், டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூதாட்ட விசாரணை: வெறும் கண்துடைப்பு

ஒரு நபர் விசாரணை என்ற பெயரில் சூதாட்ட புகாரை பி.சி.சி.ஐ., மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால், அணி உரிமையாளர்கள், மற்ற வீரர்கள் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல இந்தியா "டிவி' சேனல், நடத்திய புலனாய்வு செய்தியில், இந்திய உள்ளூர் கிரிக்கெட், ஐ.பி.எல்., தொடரில் நடக்கும் சூதாட்டம், கறுப்பு பண நடமாட்டம் குறித்து தெளிவாக தெரியவந்தது.

"ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஸ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய 5 இந்திய வீரர்கள் 15 நாள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் ரவி சவானி இதுகுறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டார்.

இவர் இந்த ஐந்து வீரர்களின் செயல்பாடு குறித்துதான் அறிக்கை தரவுள்ளார். ஆனால், புலனாய்வு செய்தியில் அணி நிர்வாகிகள், உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டு கேப்டன் ஒருவர் மற்றும் இந்திய அணியின் முக்கிய வீரர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பி.சி.சி.ஐ.,யின் கண்துடைப்பான விசாரணையால், இவர்கள் எல்லாம் தப்பிக்க வழி ஏற்பட்டுள்ளது.
இதனால், விசாரணை வளையத்தை இந்த ஐந்து பேருடன் முடித்துக் கொள்ளாமல், பெரியளவில் நடத்தினால், முழு உண்மை தெரியவரும்.


தனியாரிடம் தரலாம்:

ஒரு வேளை பி.சி.சி.ஐ., விசாரணை குழு அமைத்தால், இதில் இடம் பெறுபவர்களுக்கு, எப்படியும் நிர்வாகிகளுடன் தொடர்பு இல்லாமல் இருக்காது. அணி நிர்வாகிகளை விசாரிக்க வேண்டிய நிலையில், சென்னை கிங்ஸ் உரிமையாளர் சீனிவாசனும் விசாரிக்கப்படலாம். கடைசி அறிக்கையை பி.சி.சி.ஐ., தலைவராக உள்ள சீனிவாசனிடம் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையை தவிர்க்க, சுதந்திரமாக செயல்படும் தனியார் அமைப்பிடம் விசாரணையை ஒப்படைக்கலாம். ஏனெனில், 2000ல் ஏற்பட்ட சூதாட்ட புகாரை பி.சி.சி.ஐ., குழு சரியாக விசாரிக்கவில்லை. பின் சி.பி.ஐ., முழு உண்மையையும் வெளிக்கொண்டு வந்தது.


முழு விசாரணை:

டெக்கான் அணியின் சுதிந்திரா, முதல் தர போட்டியில் வேண்டுமென்றே "நோ-பால்' வீசியுள்ளார். கடந்த ஆண்டு பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி "பிக்சிங்' செய்யப்பட்டது என அமித் யாதவ் கூறினார். கறுப்பு பணம் தரப்படுவது குறித்து மோனிஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

தவிர, இந்தியா "டிவி' யை சேர்ந்தவர்கள் ஏஜன்ட் என்று சொல்லித் தான் வீரர்களிடம் பேசியுள்ளனர். அப்படியெனில், எந்த ஏஜன்ட்டும் வீரர்களை எளிதாக அணுகும் வகையில் உள்ளனர்.

முழு விசாரணை நடத்தும் பட்சத்தில், வீரர்கள்-ஏஜன்ட் தொடர்பு, ஏஜன்ட்-உரிமையாளர்கள் தொடர்பு குறித்து தெரியவரும்.


நிரந்தர தீர்வு வேண்டும்: மேகன்

மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பி.சி.சி.ஐ., அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனால் சூதாட்ட விசாரணையை நடத்தும் அதிகாரம், முழுப்பொறுப்பும் பி.சி.சி.ஐ.,க்கு உள்ளது. இது அவர்களின் வேலை. அதேநேரம், 5 வீரர்கள் "சஸ்பெண்ட்' மட்டும் போதாது. இதன் பின்னணி குறித்து விசாரித்து, நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.


தனியாக ஏலம் நடத்தலாம்

சூதாட்ட புகார் குறித்து ஐ.பி.எல்., அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" சர்வதேச போட்டியில் விளையாடிய சென்னை வீரர் சகாவுக்கு, ஏலத்தில் ரூ. 54 லட்சம் கிடைத்தது. ஆனால், மும்பை அணியின் அம்பதி ராயுடுக்கு ரூ. 30 லட்சம் மட்டும் தான். ஆனால், இவரது "டுவென்டி-20' திறமை, சகாவுடன் ஒப்பிடவே முடியாது.

இதனால், உள்ளூர் வீரர்களுக்கு, குறிப்பிட்ட தொகையை நிர்ணயிப்பதை தவிர்த்துவிட்டு, இந்த வீரர்களுக்கு தனியாக, வெளிப்படையான முறையில் பி.சி.சி.ஐ., ஏலம் நடத்த முன்வர வேண்டும்,'' என்றார்.


கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க சதி

"சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பஞ்சாப் வீரர் ஸ்ரீவாஸ்தவ் கூறுகையில்,"" முழங்கால் காயம் காரணமாக 2011, 2012 சீசனில் உ.பி., அணிக்காக பங்கேற்கவே இல்லை. இதே காரணத்துக்காக ஐ.பி.எல்., தொடரில் விளையாடவில்லை.

ஏன், பஞ்சாப் அணியின் முதல் 15 வீரர்கள் பட்டியலில் கூட இல்லை. கடந்த ஒரு மாதமாக லக்னோவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் நான் எப்படி, "நோ-பால்' வீச முடியும். இது என் கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க நடக்கும் சதி,'' என்றார்.

ஐ.பி.எல்., சூதாட்டம்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்

இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் சூதாட்ட புயல் கிளம்பியுள்ளது. ஐ.பி.எல்., தொடரில் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஸ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய 5 இந்திய வீரர்கள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

பிரபல இந்தியா "டிவி' சேனல், புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில், வீரர்கள், நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டு கேப்டன் ஒருவர் மற்றும் இந்திய அணியின் முக்கிய வீரர் ஆகியோர் சூதாட்டம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த ஐ.பி.எல்., தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீவாஸ்தவ் "நோ-பால்' வீச ரூ. 10 லட்சம் கேட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) விதிமுறைப்படி சர்வதேச போட்டியில் பங்கேற்காத வீரர்கள், ஐ.பி.எல்., தொடரில் ரூ. 30 லட்சம் தான் கிடைக்கும். ஆனால், புனே வீரர் மிஸ்ரா தான் ரூ. 1.5 கோடி வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதில் ரூ. 1.2 கோடி வரை கறுப்பு பணமாக கொடுத்துள்ளனர்.

ஐ.பி.எல்., தவிர, உள்ளூர் போட்டியிலும் சூதாட்டம் நடப்பதை, இந்தியா "டிவி' பகிரங்கப்படுத்தியது. இப்போது, டெக்கான் அணிக்காக பங்கேற்கும் சுதிந்திரா, கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டி ஒன்றில், "டிவி' நிருபரின் விருப்பத்திற்கு ஏற்ப, வேண்டுமென்றே "நோ-பால்' வீசியுள்ளார். இவர், ரூ. 60 லட்சம் கொடுத்தால், ஐ.பி.எல்., தொடரில் வேறு அணிக்கு தாவ தயார் என்றார்.

இப்பிரச்னை குறித்து பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி<.எல்., நிர்வாகிகள் "டெலி கான்பெரன்சிங்' முறையில் நீண்ட நேரம் விவாதித்தனர். முடிவில், புகாரில் சிக்கிய ஐந்து வீரர்களும் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இனி இவர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. இந்த ஐந்து பேரில், நான்கு வீரர்கள் கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறியது:

இந்தியா "டிவி'யின் பதிவுகளை பார்த்ததில் வீரர்கள் தவறு செய்திருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பி.சி.சி.ஐ.,க்கு பரிந்துரை செய்தோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் ரவி சவானி தலைமையில், முதற்கட்ட விசாரணையை துவக்க, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் முடிவு செய்துள்ளார். இவர்களது "சஸ்பெண்ட்' உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.


யார் அந்த வெளிநாட்டு கேப்டன்

தற்போதைய ஐ.பி.எல்., தொடரில், ஒரு அணிக்கு கேப்டனாக உள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது, புலனாய்வு செய்தியில் தெரிய வந்துள்ளது. இப்போதைய நிலையில் பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட், டேவிட் ஹசி, டெக்கான் அணிக்கு சங்ககரா, பெங்களூரு அணியின் வெட்டோரி கேப்டனாக உள்ளனர். இவர்களில் யார் அந்த கறுப்பு ஆடு என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


வீரர்கள் சிக்கியது எப்படி?

புலனாய்வு குறித்து இந்தியா "டிவி' தலைமை ஆசிரியர் ரஜத் சர்மா கூறியது:

கடந்த ஆண்டு நான்காவது ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் துவங்கிய எங்களது "ஆப்பரேஷன்' 2012, ஏப்ரல் 21 வரை நடந்தது. முதலில் டெக்கான் அணியின் சுதிந்திராவை அணுகினோம். உள்ளூர், ஐ.பி.எல்., போட்டிகளில் சூதாட்டம் நடப்பது குறித்த நிறைய தகவல்களை தெரிவித்தார். முதலில் இதை நாங்கள் நம்பவில்லை. பின், உள்ளூர் போட்டி ஒன்றில், சுதிந்திரா "நோ-பால்' வீசிய பின் நம்பிக்கை வந்தது.

பஞ்சாப் அணியின் ஸ்ரீவாஸ்தவை அணுகிய போது, ""ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டத்துக்கு தயாராக உள்ளேன்,'' என்றார். கோல்கட்டா அணியின் ரஜத் பாட்யா, ராஜஸ்தானின் சமத் பல்லா ஆகிய இருவரும் பணத்துக்காக, "ஸ்பாட் பிக்சிங்' செய்ய முடியாது என மறுத்தனர்.

புலனாய்வு குறித்த வீடியோவை, பி.சி.சி.ஐ., யிடம் தரத் தயாராக உள்ளோம். எங்களைப் பொறுத்தவரையில் வீரர்கள் நேர்மையாக விளையாட வேண்டும். தங்களை மதிக்கும் ரசிகர்கள் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரஜத் சர்மா கூறினார்.


ஸ்ரீவாஸ்தவ் மறுப்பு

புகார் குறித்து பஞ்சாப் வீரர் ஸ்ரீவாஸ்தவ் கூறியது:

நான்காவது ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின் "ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்' பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். இப்போதைய அணியில் இருந்து வேறு அணிக்கு, நல்ல தொகையுடன் மாற்றிவிடத் தயாராக இருப்பதாக கூறினர். இதுதொடர்பாக 50 வீரர்களை சந்தித்துள்ளோம் என்றனர். இவர்கள் பேசியதாக கூறப்படும் 15 வீரர்களிடம் நானும் பேசினேன்.

"பிக்சிங்' மற்றும் பணம் எப்படி வருகிறது என்பது குறித்து தான் அதிகம் பேசியதால், அனைவருமே சந்தேகப்பட்டனர். தவிர, ஒரு ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்தால், ரூ. 1 கோடி தரத்தயாராக உள்ளதாக கூறினர். நான் இதை ஏற்கவில்லை. இவர்களை 7 அல்லது 8 முறை சந்தித்துள்ளேன்.

புலனாய்வு வீடியோவில் வரும் குரல் என்னுடையது அல்ல. சூதாட்டத்தில் ஈடுபட்டேன் என்று கூறும் "டிவி' நிறுவனம், நான் ரூ. 10 லட்சம் கேட்டதாக கூறும் வீடியோவை வெளியிடாதது ஏன். இதுகுறித்து அவர்கள் மீது வழக்கு தொடர்வேன். அணி நிர்வாகம், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்திடம் தெளிவு படுத்த தயாராக உள்ளேன்.

இவ்வாறு ஸ்ரீவாஸ்தவ் கூறினார்.


எதுவும் பேச முடியாது

டெக்கான் வீரர் சுதிந்திரா கூறுகையில்,"" வீடியோ பதிவுகளை முழுவதும் பார்க்காமல் எதுவும் பேச முடியாது. தவிர, தற்போதைக்கு பேசும் நிலையிலும் நான் இல்லை. இவற்றில் இருந்து விடுபட்ட பிறகு அனைத்தையும் கூறுகிறேன்,'' என்றார்.


கவாஸ்கர் வரவேற்பு

வீரர்களை பி.சி.சி.ஐ., "சஸ்பெண்ட்' செய்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,"" இந்த நடவடிக்கை சரியானது தான். இது ஐ.பி.எல்., தொடருக்கு மட்டும் அல்லாது, முழு விசாரணையும் முடியும் வரை தற்காலிக தடை நீடிக்க வேண்டும்,'' என்றார்.


பார்லிமென்டில் கோரிக்கை

இந்திய வீரர்கள் மீதான சூதாட்ட புகார், பார்லிமென்டிலும் எதிரொலித்தது. நேற்று "ஜீரோ' நேரத்தின் போது, கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட பல உறுப்பினர்கள், புலனாய்வு செய்தி குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


5 வீரர்கள் விவரம்:

சுதிந்திரா, 28. ம.பி.,

* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), டெக்கான் சார்ஜர்ஸ் (ஐ.பி.எல்.,).
* "நோ-பால்' வீச ரூ. 50 ஆயிரம் பெற்றார்.
* இந்தூரில் நடந்த உள்ளூர் போட்டியில், சுதிந்திரா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை, "கிரீசிற்கு' வெளியே அதிகமாக காலை வைத்து வீசினார்.

ஸ்ரீவாஸ்தவ், 22, உ.பி.,

* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐ.பி.எல்.,).
* தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் ரூ. 10 லட்சம் கொடுத்தால் "நோ-பால்' வீச தயார் என கூறியுள்ளார்.

மோனிஷ் மிஸ்ரா, 28. ம.பி.,

* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் (ஐ.பி.எல்.,)
* வீடியோவில் இவர் கூறுகையில்,"" ஐ.பி.எல்., தொடரில், வீரர்களுக்கு பேசியதை விட அதிக பணம் தரப்படுகிறது. இதை கறுப்பு பணமாக அணி உரிமையாளர்கள் தருகின்றனர். பி.சி.சி.ஐ., எனக்கு ரூ. 30 லட்சம் நிர்ணயித்தது. ஆனால், ரூ. 1.5 கோடி வரை புனே நிர்வாகம் தந்தது. இதில் ரூ. 1.2 கோடி கறுப்பு பணமாக கொடுக்கப்பட்டது,'' என்றார்.


அமித் யாதவ், 22. கோவா.

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐ.பி.எல்.,)
* புலனாய்வு வீடியோவில் இவர் கூறுகையில்,"" கடந்த ஆண்டு பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி "பிக்சிங்' செய்யப்பட்டது. இப்போது பஞ்சாப் அணியில் எனக்கு ரூ. 10 லட்சம் தரப்படுகிறது. ரூ. 20 லட்சம் கொடுத்தால், வேறு அணிக்கு மாறத் தயார்,'' என்றார்.

அபினவ் பாலி, 26. டில்லி

டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,)
இடது கை சுழற் பந்து வீச்சாளர். இதுவரை 13 முதல் தர போட்டிகளில் பங்கேற்று, 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 592 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, "ஏ' பிரிவு போட்டிகள் 16ல் விளையாடிய இவர், 11 விக்கெட் கைப்பற்றினார். தற்போது, ஐ.பி.எல்., தொடரில் எந்த அணியிலும் பங்கேற்கவில்லை.