சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய யுவராஜ்சிங்கிற்கு சச்சின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். 60 நாட்கள் நடைபெற்ற புற்று நோய் சிகிச்சையில், அவருக்கு 3 முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு குணமடைந்தார்.


அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்குப் பிறகு ஒரு மாத கால ஓய்விற்காக லண்டன் சென்றார்.

ஓய்வுக்கு பிறகு லண்டனில் இருந்து இன்று காலை டெல்லி திரும்பினார். யுவராஜ் சிங்கை அழைத்து செல்ல யுவராஜ்சிங்கின் தாயார் ஷப்னம் மற்றும் அவரது உறவினர்கள் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்து அவரை வரவேற்றனர்.

யுவராஜ்சிங் தாயகம் திரும்பும் தகவலை அறிந்து கொண்ட அவரது ரசிகர்களும் அங்கே திரண்டு இருந்தனர்.
சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங்குக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


சீக்கிரமாக குணமடைந்து நாடு திரும்பிய சகோதரார் யுவராஜ்சிங்கிற்கு எனது வாழ்த்துக்கள். கேன்சர் என்னும் நோயுடன் போராடி வென்ற யுவியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என கூறியிருந்தார்.

காயம் தந்த சோகம்

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பதால், அவர்கள் சார்ந்திருக்கும் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


கிரேம் ஸ்மித்(ராஜஸ்தான் ராயல்ஸ்):

தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன் ஸ்மித், 31. இவர், முதல் மூன்று ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த 2008ல் 11 போட்டியில் விளையாடிய இவர், ராஜஸ்தான் அணி கோப்பை வெல்ல காரணமாக விளங்கினார். சொந்த மண்ணில் 2009ல் நடந்த தொடரில் 12 போட்டியில் பங்கேற்றார்.

இந்தியாவில் 2010ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில், டில்லி அணிக்கு எதிராக "பீல்டிங்' செய்த போது, இவரது வலது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால், இரண்டு போட்டியோடு வெளியேறினார்.

கடந்த முறை புனே வாரியர்ஸ் அணி, இவரை ஏலத்தில் எடுத்தது. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக "பீல்டிங்' செய்த போது, இவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட, நான்கு போட்டியில் மட்டுமே விளையாட முடிந்தது.இம்முறை ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என நினைத்த ஸ்மித்துக்கு, காயத்தின் சோகம் துரத்தியது.

இரண்டு மாதங்களுக்கு முன், இடது கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்ட இவருக்கு, "ஆப்பரேஷன்' தேவை என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் இவர், ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்து, ஏமாற்றம் அடைந்தார்.


யுவராஜ் சிங்:

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், 30. முதல் மூன்று ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடினார். கடந்த முறை இவரை புனே வாரியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்து, கேப்டனாக நியமித்தது. இதுவரை 57 ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 5 அரைசதம் உட்பட 1237 ரன்கள் எடுத்துள்ளார்.

சமீபத்தில் இவர், நுரையீரலில் ஏற்பட்ட "கேன்சர்' கட்டிக்கு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். காயத்தில் இருந்து மீண்டு வரும் இவர், ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இது, புனே அணிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


இஷாந்த் சர்மா:

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 23. முதல் மூன்று தொடர்களில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவரை, கடந்த ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இதுவரை 43 போட்டியில் பங்கேற்று 36 விக்கெடக் கைப்பற்றியுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் கணுக்கால் காயத்திற்கு "ஆப்பரேஷன்' செய்து கொண்ட இவருக்கு ஆறு மாத காலம் ஓய்வு தேவைப்படுவதால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் டெக்கான் அணி சிறந்த வேகப்பந்துவீச்சாளரை இழந்து தவிக்கிறது.


மற்ற வீரர்கள்:

இதேபோல, ஆஸ்திரேலிய "ஆல்-ரவுண்டர்' மற்றும் புனே வாரியர்ஸ் அணி வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ், காயம் காரணமாக விலகினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் அபினவ் முகுந்த், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால், பத்து நாட்களுக்கு போட்டியில் விளையாடமாட்டார்.

நியூசிலாந்து கேப்டன் மற்றும் டில்லி டேர்டெவில்ஸ் அணி வீரர் ராஸ் டெய்லர், காயம் காரணமாக பாதியில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்தால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கங்குலி இப்போதும் சிறந்த கேப்டன் தான்

கடந்த ஐ.பி.எல். போட்டியில் 9-வது இடத்தை பிடித்த புனே வாரியர்ஸ் அணியின் தொடக்கமே சிறப்பாக அமைந்தது. கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் முதல் ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 28 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.

முதலில் ஆடிய புனே வாரியர்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. ஸ்டீவன் சுமித் 39 ரன்னும், உத்தப்பா 36 ரன்னும் எடுத்தனர். மலிங்கா, முனாப் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்னே எடுத்தது. தினேஷ் கார்த்திக், பிராங்ளின் தலா 32 ரன் எடுத்தனர். அசோக் திண்டா 4 விக்கெட்டும், முரளி கார்த்திக் 2 விக்கெட் டும் எடுத்தனர்.

மும்பை அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஹர்பஜன்சிங் கூறியதாவது:-

கங்குலி தான் இன்னும் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்து இருக்கிறார். அவரது அணியில் சிறந்த மேட்ச் வின்னர்கள் இல்லை என்றாலும் வீரர்களின் திறமையை கண்டறிந்து அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

சுழற்பந்து வீரர்களை அவர் சரியான முறையில் பந்துவீச்சில் பயன்படுத்தினார். நாங்கள் சிறப்பாக வீசி 129 ரன்னுக்குள் புனே அணியை கட்டுப்படுத்தினோம். இந்த ரன் எடுக்க கூடிய இலக்காகும். எங்களது பேட்டிங் தொடக்கத்தில் சிறப்பாக இல்லை. 2 ஓவரில் 3 விக்கெட் விழுந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி குறித்து கங்குலி கருத்து தெரிவித்தார். அவர் கூறும்போது, இந்திய அணியின் கேப்டன் பதவியை பெறும் திறமை ஹர்பஜன்சிங்கிடம் உள்ளது. சாம்பியன் `லீக்' போட்டியிலும் நேற்றைய ஆட்டத்திலும் அவரது கேப்டன் ஷிப் பிரமாதமாக இருந்தது என்றார்.

பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் சச்சின்

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியானவர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். சச்சின் உண்மையிலேயே பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர். அவருடைய 100 சத சாதனைக்கு அருகில்கூட யாராலும் நெருங்கக்கூட முடியாது.

அதற்கு வாய்ப்பேயில்லை என்று நினைக்கிறேன் என்றார். ஐபிஎல் போட்டி குறித்துப் பேசிய அவர், "கடந்த ஐபிஎல் போட்டியில் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால் இப்போது சர்வதேச அளவில் சிறப்பாக ஆடி திறமையை நிரூபித்துவிட்டதோடு, நல்ல பார்மில் உள்ளதால் எவ்வித நெருக்கடியுமின்றி மகிழ்ச்சியாக விளையாடுவேன்.

இந்த ஐபிஎல்லைப் பொறுத்தவரையில் 18 ஆட்டங்களில் விளையாடவுள்ளோம். அனைத்துப் போட்டிகளுமே சவால் நிறைந்தவை. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றே காத்திருக்கிறோம்.

கடந்த காலத்தைப் பற்றியோ, வரும் போட்டிகளையோ பற்றியோ அதிக அளவில் சிந்திக்கவில்லை' என்றார்.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு தனது தலைமையிலான அரசு பரிந்துரைக்கும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவாண், மகராஷ்டிர சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜொலிப்பார்களா புதிய நட்சத்திரங்கள்

ஐ.பி.எல்., தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று அசத்துகின்றனர். இம்முறை களமிறங்கும் சில புதுமுகங்கள்:

*ரிச்சர்டு லெவி(மும்பை இந்தியன்ஸ்) :

தென் ஆப்ரிக்க வீரரான ரிச்சர்டு லெவி, நியூசிலாந்து அணிக்கு எதிரான சமீபத்திய "டுவென்டி-20' போட்டியில் 45 பந்துகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குகிறார். துவக்க வீரரான சச்சினுடன் இணைந்து கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

*ஜேம்ஸ் பட்டின்சன்(கோல்கட்டா):

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த பட்டின்சன், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 11 விக்கெட் கைப்பற்றினார். கோல்கட்டா அணிக்காக களமிறங்கும் இவர், "வேகத்தில்' அசத்தலாம்.

*ஜார்ஜ் பெய்லி(சென்னை கிங்ஸ்):

ஆஸ்திரேலிய அணியின் "டுவென்டி-20' கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், முதல் போட்டியிலேயே இந்திய அணியை வீழ்த்திக் காட்டினார். இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். துவக்க வீரராக களமிறங்கி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*கேதர் தேவ்தர்(டெக்கான் சார்ஜர்ஸ்):

பரோடாவை சேர்ந்த கேதர் தேவ்தார், உள்ளூர் "டுவென்டி-20' தொடரான முஸ்தாக் அலி டிராபியில், டில்லி அணிக்கு எதிரான அரையிறுதியில் 40 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். தற்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக கைகொடுப்பார் என நம்பப்படுகிறது.

*மைக்கெல் கிளார்க்(புனே வாரியர்ஸ்):

ஐ.பி.எல்., தொடரில் விளையாட மறுத்துவந்த ஆஸ்திரேலியா அணி கேப்டன் கிளார்க், இம்முறை புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதால் இம்மாத இறுதி வரை ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க மாட்டார். இதற்கு பின் தான் இவரது அதிரடியை காண முடியும்.

*பிராட் ஹாக்(ராஜஸ்தான் ராயல்ஸ்):

"சுழல் மன்னன்' வார்ன் இல்லாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிராட் ஹாக்கின் வருகையால் உற்சாகம் அடைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்று அசத்தினார். இவர், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் பலம் சேர்க்க உள்ளார்.

*ஆண்ட்ரே ரசல்(டில்லி டேர்டெவில்ஸ்):

வெஸ்ட் இண்டீஸ் "ஆல்-ரவுண்டர்' ரசலின் வருகை டில்லி அணிக்கு கூடுதல் வலிமையை சேர்த்துள்ளது. ஐ.பி.எல்., தொடரில் முத்திரை பதித்து வரும் மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான கெய்ல், போலார்டு போல ரசலும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.