பவுலர்களுக்கு எச்சரிக்கை

ஐ.பி.எல்., தொடரில் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் பவுலர்கள் மீது, அம்பயர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பவுலர்களுக்கான கடும் விதிமுறைகள் கடந்த பிப். 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, போட்டியின் போது பவுலர் பந்தை எறிவதாக அம்பயர் அல்லது "மேட்ச் ரெப்ரி' சந்தேகப்பட்டு தெரிவித்தால், தொடர்ந்து பவுலிங் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.

இதையடுத்து இந்த விதியை, ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக கடைபிடிக்குமாறு, அம்பயர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐ.பி.எல்., இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கை விவரம்:

புதிய விதிப்படி பவுலர்கள் பந்துவீசும் முறையில் சந்தேகம் இருந்தால், அம்பயர்கள் <உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இந்தியாவில் நடந்த உள்ளூர் தொடரின் போது, இம்முறைதான் பின்பற்றப்பட்டது.

போட்டிகளின் போது அம்பயர்கள் நேரடியாக அல்லது "டிவி' ஒளிபரப்பின் மூலம் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பவுலர்கள் நடவடிக்கையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை விதி 24.2ன் படி பவுலர் பந்தை எறிவதாக அம்பயர் அல்லது "மேட்ச் ரெப்ரி' தெரிவித்தால்,போட்டியில் விதிக்கு புறம்பாக செயல்பட்டதாக, பிரிவு 2 ன் விதி நடைமுறைப் படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.புதிய கிரிக்கெட் விதிப்படி ஒரே போட்டியில் மூன்றாவது முறையாக, பந்தை எறிவதை அம்பயர் உறுதி செய்தால், அந்த பவுலர் தொடர்ந்து பவுலிங் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.

வெற்றியுடன் துவக்குமா சென்னை கிங்ஸ்?

ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியில் இன்று "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு வலுவான அணிகள் களமிறங்குவதால், விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

ஐ.பி.எல்., தொடரில் ஐந்தாவது சீசன் இன்று துவங்குகிறது. இன்றைய முதல் லீக் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹர்பஜனின் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் காணுகின்றன.

சொந்த மண் பலம், தொடர்ந்து இரு முறை கோப்பை வென்றது, வெற்றிகரமான கேப்டன் என்று புகழப்படும் தோனி ஆகிய சாதக அம்சங்கள் நிறைய இருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு "ஹாட்ரிக்' கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.

"சூப்பர் பார்ம்':

இதுவரை நடந்த நான்கு தொடர்களில் இரு முறை சாம்பியன், தலா ஒரு பைனல், அரையிறுதிக்கு முன்னேறிய பெருமை இந்த அணிக்கு உண்டு. துவக்கத்தில் அணியின் வெற்றி தோல்விகள் மாறி, மாறி சென்றாலும், கடைசியில் "டாப்-4' இடத்துக்குள் அணியை எப்படியாவது கொண்டு வந்து விடுவார் தோனி. அந்தளவுக்கு இவரது வியூகங்கள் வெற்றி தேடித்தரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், சமீபத்திய இந்திய அணிக்கு கிடைத்து வரும் தொடர் தோல்விகள், ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்கு பாதிப்பு தருமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

போலிஞ்சர் "ரிட்டர்ன்':

காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த ஆஸ்திரேலியாவின் போலிஞ்சர், புதுப்பொலிவுடன் இன்று களம் காணுகிறார். இவருடன் ஆல்பி மார்கல் வேகப்பந்துவீச்சை கவனித்துக் கொள்வார். சுழலில் வழக்கம் போல தமிழகத்தின் அஷ்வின் இடம்பெறுவார். நான்காவது வெளிநாட்டு வீரர் வாய்ப்பு, ஜார்ஜ் பெய்லி அல்லது குலசேகராவுக்கு கிடைக்கலாம்.

சச்சின் விலகல்:

மும்பை அணியை பொறுத்தவரையில் சச்சினிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்ற ஹர்பஜன், தன்னை மீண்டும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இவர் உள்ளார். இந்த அணியினர், சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தியது போல, ஐ.பி.எல்., தொடரிலும் கோப்பை வெல்ல வேண்டும் என களமிறங்கியுள்ளனர்.

இதற்கேற்ப அணியும் சரியான கலவையில் உள்ளது. துவக்கத்தில் சச்சினுடன், "ஜெட்' வேகத்தில் ரன்சேர்க்க ரிச்சர்டு லெவி உள்ளார். இவரை வெளியேற்றும் வேகத்தைப் பொறுத்து தான் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு. "மிடில் ஆர்டரில்' ரோகித் சர்மா, அபு நேச்சிம், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக் உள்ளனர்.

சமீபத்தில் நல்ல "பார்மில்' <உள்ள போலார்டு மிரட்ட காத்திருக்கிறார். இதனால், ஹர்பஜன் கடைசி நேரத்தில் போட்டியை முடித்து தரும் வகையில் வரலாம். கிப்சும் அணியில் உள்ளார்.

பவுலிங் அபாரம்:

மும்பை அணியின் மற்ற அணிகளை விட சிறப்பாக உள்ளது. வேகத்துக்கு மலிங்கா, மிட்சல் ஜான்சன், முனாப் படேல், ஆர்.பி.சிங், திசரா பெரேரா உள்ளனர். சுழலில் ஹர்பஜன் சிங்கிற்கு கைகொடுக்க பிரக்யான் ஓஜா, ராபின் பீட்டர்சன் கூட்டணி காத்திருக்கிறது.

2011 தொடரின் பைனலில், சென்னையிடம் தோல்வியடைந்து இருந்த மும்பை அணி, இன்று பழி தீர்க்க முயற்சிக்கும். அதேநேரம், சாம்பியன்ஸ் லீக் தொடர் லீக் போட்டியில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு, சென்னையும் கணக்கு தீர்க்க காத்திருக்கிறது என்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

கேப்டன் பதவியை தாரைவார்த்தார் சச்சின்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஹர்பஜன் வசம் ஒப்படைத்தார் சச்சின். நட்சத்திர வீரரான இவர், கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விலகியது பல்வேறு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் சென்னையில் நாளை துவங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் இருந்தார். இவர், திடீரென கேப்டன் பதவியை ஹர்பஜன் சிங்கிடம் வழங்கும்படி, உரிமையாளர் நீடா அம்பானியிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில், ""மும்பை இந்தியன்ஸ் அணியை, எனது குடும்பமாக கருதுகிறேன். தற்போது எனக்கு கேப்டன் பொறுப்பில் இருந்து சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. அணி உரிமையாளர்கள் முகேஷ், நீடா அம்பானியிடம் ஆலோசித்தேன்.

கேப்டன் பொறுப்பை ஹர்பஜன் சிங்கிடம் வழங்கும்படி தெரிவித்தேன். சிறந்த அனுபவ வீரரான ஹர்பஜன், அணியை திறம்பட வழிநடத்துவார் என நம்புகிறேன். மும்பை அணிக்கு கேப்டனாகும் தகுதி இவரிடம் உள்ளது, என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீடா அம்பானி கூறுகையில், ""கேப்டன் பொறுப்பில் இருந்து சச்சின் விலகியது வருத்தமான விஷயம். இவரது முடிவு சரியாக இருக்கும் என்பதால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

மிகப்பெரிய கவுரவம்:

ஹர்பஜன் சிங் கூறுகையில், ""மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை சச்சின், எனக்கு வழங்கியதை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன். மும்பை அணியில் திறமையான வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இளம் வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து, அணியை திறம்பட வழிநடத்தி வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முயற்சிப்பேன், என்றார்.

பின்னணி என்ன?

சச்சின் நீண்ட காலமாக கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்க இயலாது என்ற நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம்.

* மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த நான்கு முறை கேப்டனாக இருந்த சச்சினால், ஒருமுறை கூட கோப்பை வெல்ல முடியவில்லை. அதே நேரத்தில் 2011ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஹர்பஜன் தலைமையில் மும்பை அணி, கோப்பை வென்று அசத்தியது. இதையடுத்து இவரே கேப்டன் பதவியில் தொடர வேண்டுமென மும்பை அணி நிர்வாகம் விரும்பியிருக்கலாம். இதனை அறிந்து கொண்டு சச்சினும் தானாகவே பதவியில் இருந்து விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

100 தங்க நாணயம்

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த சச்சின், தங்க மழையில் நனையப் போகிறார். இவரது சாதனையை கவுரவிக்கும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்கம்(எம்.சி.ஏ.,) 100 தங்க நாணயங்களை பரிசாக வழங்க உள்ளது.

இது குறித்து எம்.சி.ஏ., இணைச் செயலர் நிதின் தலால் கூறுகையில்,"" பாராட்டு விழாவுக்கு சச்சின் ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. 100 தங்க நாணயங்களின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும்,என்றார்.

அய்யய்யோ கிரிக்கெட் - நினைத்தாலே பயமாக இருக்கிறது

போதும்,போதும் என்கிற அளவிற்கு இந்த கிரிக்கெட் காய்ச்சல் அனைவருக்கும் பரவிவிடும். பிடிக்காதவர்களையும் படுத்தி எடுத்துவிடும்."ஸ்கோர்' என்ற வார்த்தையால் கொன்று எடுத்துவிடுவார்கள்.

கடமைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, உழைப்பை வீணடித்தபடி வீட்டின் தொலைக்காட்சியில் மொத்தகூட்டமும் முடங்கிப்போகப் போகிறது.இது பெரிய குற்றம் என்றால் கடமையை,வேலையை செய்யப்போன இடத்தில், "டிவி'யிலும், கம்ப்யூட்டர் திரையிலும் கிரிக்கெட் பார்ப்பது குற்றத்திலும் கொடியது, துரோகத்தில் சேர்த்தி.

இந்த குற்றத்தையும், துரோகத்தையும் எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் செய்ய, மொத்த கூட்டத்தையும் மூளைச்சலவை செய்து தயாராக்கி வைத்தாகிவிட்டது. இதை விமர்சிப்பவன்தான் இன்றைய காலக்கட்டத்தில் கோமாளியாக சித்தரிக்கப்படுவான்.

தலைநகரின் தலைமைச் செயலகமே மின்தட்டுப்பாடு காரணமாக "ஜெனரேட்டரில்' ஓடிக்கொண்டு இருக்கிறது. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வை சந்திக்க மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் புனித பணியை மேற்கொள்ளப்போகிறார்கள்.

மின்சாரம் இல்லாததால், பல உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் கூட நடக்காமல் தள்ளிப்போடப்படும் நிலையில், இரவை பகலாக்கும் விதத்தில் வாரியிறைக்கப்படும் வெளிச்சத்திற்கு காரணமான மின்சாரத்தை வீணாக்கும் கிரிக்கெட் இந்த நேரத்தில் அவசியம்தானா என்று வழக்கு போடப்பட்டுள்ளது.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லாமல் பிரபுதேவா, பிரியங்கா சோப்ரா பங்கேற்கும் நடனங்களுடன் சென்னையில் கிரிக்கெட் திருவிழா குதூகலமாக துவங்கிவிடும். மின்சாரமே இல்லாவிட்டாலும் "ஜெனரேட்டரை' ஓட்டியாவது கிரிக்கெட்டை நடத்திவிடுவார்கள். "ஜெனரேட்டருக்கான' டீசலுக்கு எங்கே போவது, கொஞ்சநாளைக்கு மானியமாக வழங்கப்படும் டீசலை இந்த பக்கம் திருப்பிவிடவேண்டியதுதான். நமக்கு கிரிக்கெட்தானே முக்கியம்.

ஒரு வேளை வழக்கின் அடிப்படையில் கிரிக்கெட் நடைபெறாமல் போனால் இடிவிழுந்தது போலாகிவிடுவான் நம் மறத்தமிழன். காரணம் ஒரு சில மணி நேர ஆட்டத்தை காண, முதல் நாளே வரிசையில் நின்று, போலீசிடம் அடிபட்டு, இந்த ஆட்டத்தை பார்க்க 700 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட்டை முண்டியடித்து வாங்கி தீர்த்துவிட்டார்கள். பால் விலை, பஸ் டிக்கெட் விலை கூடிவிட்டது என்று இவர்கள் எல்லாம் வாயைத்திறந்து பேசவே கூடாது.

200 நாடுகளுக்கு மேல் இருந்தாலும், கடந்த 100 ஆண்டுகளாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 நாடுகளில் மட்டுமே வளர்ந்த இந்த கிரிக்கெட்டிலும், இரண்டு நாடுகள் இன்றைக்கும் உப்புக்கு சப்பாணிதான். தோற்பதற்காகவே விளையாட வருபவர்கள். பிறகு ஒரு நாட்டை ஆட்டையிலே சேர்க்கமாட்டார்கள். மீதம் உள்ள ஐந்து நாட்டின் வீரர்களை ஆளாளுக்கு ஏலம் எடுத்து கோடி, கோடியாக சம்பாதிக்க நடத்தப்படுவதுதான் இந்த சீசன் கிரிக்கெட் விளையாட்டு.

வரும் 4 ந்தேதி துவங்கி மே மாதம் 27 ந்தேதி வரை நடைபெறும் போட்டியில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன. தோராயமாக ஒரு வீரர் 16 ஆட்டங்களில் கலந்து கொண்டு 48 மணிநேரம் களத்தில் இருப்பார்.இதில் பன்னாட்டு விளம்பரம் அச்சிடப்பட்ட பேட்டை "கேமரா' முன் நீட்டிய நேரம், எப்போதவாது பந்தின்பின் ஓடிய நேரம், எப்போதும் ரசிகைகளுக்கு "ஆட்டோகிராப்' போட்டுக்கொடுத்த நேரம் உள்ளிட்டவையும் அடங்கும். ஒரு நிமிடத்திற்கு 1200 ரூபாய் அளவில் சம்பாத்தியம் என்றால் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் மயக்கமே வரும்.

இதனால்தான் டெஸ்ட், ஒருநாள் போட்டியைவிட இந்த "டுவென்டி-20'யில் தான் வீரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ரொம்ப மெனக்கெட வேண்டாம். ஐந்து நாளும் வெயிலில் நிற்கவேண்டாம். நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று "சீன்' காட்ட வேண்டாம்.

உலக கோப்பையின் போது ஓட, ஓட விரட்டி தோற்கடிக்கப்பட்ட இலங்கை அணியின் மலிங்கா, மும்பை இந்தியன் அணிக்காக விளையாடுவார். அவருடன் சச்சினும் கைகோர்த்துக்கொண்டு களம் இறங்குவார். கேட்டால் "கிரிக்கெட் இஸ் ஏ கேம்' என்பார்கள். அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. பணம் தான் பிரதானம்.

பல காலமாக கிடப்பில் உள்ள எல்லைப்பிரச்னை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளை பற்றி ஒரு மணி நேரம் உட்கார்ந்து பேச நேரமில்லாத இந்தியா-பாக்., பிரதமர்கள் இணைந்து பல மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் விளையாட்டாயிற்றே. போதும் போதாதற்கு சோனியாவும், ராகுலும் கூட சிறப்பு பார்வையாளர்கள்.

இப்படி முக்கியஸ்தர்கள் துவங்கி சாமன்யன் வரை தந்த ஆதரவால் மண்சார்ந்த, மரபுசார்ந்த விளையாட்டை முனை தெரியாமல் நசுக்கிய பெருமை இந்த கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. நசுக்கப்பட்டதில் தேசிய விளையாட்டான ஹாக்கியும் அடக்கமாகிப்போனதுதான் பெரிய வேதனை.

இப்படி தேசமே கொண்டாடிப்பார்த்த, மும்பையில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் "மேட்ச் பிக்சிங்' சூதாட்டம் நடந்தது என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தக்க ஆதாரம் இருப்பதாக சொல்லி செய்தி வெளியிட்டது. இதற்கு ஒரு நடிகைதான் "மீடியேட்டர்' என்று முகம் தெரியாமல் ஒரு நடிகையின் படத்தையும் வெளியிட்டது.

அப்படியானால் அன்று ரசிகர்கள் காட்டு கத்தலாய் கத்தியது, விடிய, விடிய "டிவி' பார்த்தது, விடிந்தபிறகும் வெடி போட்டது, முகம் தெரியாதவர்களுக்கு இனிப்பு வழங்கியது எல்லாமே ஒரு விளையாட்டு என்ற பெயரில் நடந்த நாடகத்திற்குதானா.

நான்தான் அந்த அரைகுறை உடையுடன் கூடிய நடிகை என்று தானாகவே மீடியா முன் ஆஜரான வடமாநில நடிகை நூபுர், எனக்கு எந்த கிரிக்கெட் வீரர்களையும் தெரியாது, எனது புகழுக்கு(!) களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது விடிந்ததும் வழக்கு போடப்போகிறேன் என்று ரொம்பவே ஆவேசப்பட்டார். விடிந்து பார்த்தால் எனக்கு "லேசாக' இலங்கை வீரர் தில்ஷனைத் தெரியும் என்றார். அத்தோடு ஆவேசம் அடங்கிவிட்டது. இன்றைய தேதி வரை வக்கீல் "நோட்டீஸ்' கூட அனுப்பவில்லை

இப்படி எப்படி பார்த்தாலும் கிரிக்கெட் என்பது நாடகமாகவும், மூளைச்சலவை செய்வதாகவும், இளைய வயதினரின் நேரத்தை கொல்வதாகவும் உள்ள ஒன்றாகவே உள்ளது. கிட்னியை விற்று கூட கிரிக்கெட் பார்ப்பேன் என்று பெங்களூரு ரசிகர் சொன்னதாக வந்த செய்தியைப் படித்தாலே எந்த அளவு கிரிக்கெட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இவர், இந்தியாவின் ஒரு பானை சோற்றுக்கான ஒரு பருக்கையை போன்றவர்.

சச்சினை பொறுத்தவரை நூறு சதம் அடித்தவுடனேயே "ரிட்டையர்' ஆவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ எனக்கு தெரியும் எப்போது ஒய்வு பெறுவது என்று சொல்லிவிட்டார்.யாருக்கு தெரியும் அவரது பல நூறு கோடி பெறுமான அசையா மற்றும் அசையும் சொத்துக்களைத் தாண்டி உள்ள கடனை அடைப்பதற்காக விளையாடுகிறாரோ என்னவோ. பாவம் வெளிநாட்டில் இருந்து பரிசாக வந்த காருக்கு கூட வரி விலக்கு கேட்டவர்தானே.

இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லையே என்று வேறு பலருக்கு வருத்தம். நீதிபதி மார்கண்டேயே கட்சூ நன்றாகத்தான் கேட்டார்,"பாரத ரத்னா என்பது சமூகத்திற்காக சேவை செய்தவர்களுக்காக தரப்படும் மிக உயர்ந்த விருது, இதை தங்களது சுய முன்னேற்றம் மற்றும் வருமானத்திற்காக செயல்படும் கிரிக்கெட் வீரர்களும், சினிமாக்காரர்களுக்கும் கேட்பது என்பது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. அந்த விருதை இனியும் கொச்சை படுத்தாதீர்கள். எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது' என்றார். நமக்கும்தான்.

நம்மை "ஹீரோ'வாக தலையில் வைத்து கொண்டாடும் தேசத்தில் மாறி,மாறி மதுபான விளம்பரங்களில் நடிக்கிறோமே, நமது ரசிகர்கள் நாம் சொன்னால் நஞ்சை கூட ரசித்து குடித்துவிடுவார்களே என்று, கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் தோனியும், ஹர்பஜனும் மதுபான விளம்பரங்களில் தோன்றி, குடிப்பதை உற்சாகப்படுத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

பணமும்,செல்வாக்கும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற கிரிக்கெட் அமைப்பின் எண்ணத்திற்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. தேர்தல் சமயம் பாதுகாப்பு தரமுடியாது கொஞ்சம் காலம் தள்ளி விளையாட முடியுமா என்று கேட்டதற்கு, அதெல்லாம் முடியாது என்று தென் ஆப்ரிக்காவிற்கு சென்று விளையாடியவர்கள்தானே இவர்கள்.

இவர்களுக்கு பணமே பிரதானம். உண்மையில் இந்திய அணி என்பது ஒன்றும் இந்தியாவிற்கு கட்டுப்பட்ட அணி கிடையாது. இதனால் இந்தியாவிற்கு எந்த வருமானமும் கிடையாது. இந்திய அணி என்ற பிராண்டை வைத்துக்கொண்டு பணத்தால் குளிப்பது சில தனியார் அமைப்புகள்தான். இவ்வளவு வருமானம் வந்தபோதும் வரி செலுத்துவதில் நிறைய முரண்பாடு உண்டு. யாரும் கேள்விகேட்க முடியாது. தகவல் அறியும் சட்டத்தில் இருந்து கூட விலக்கு பெற்றுள்ளார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் தேசம். இவர்கள் மீது காட்டும் கண்மூடித்தனமான பாசம்தான்.

வறுமையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் நாளுக்கு நாள் பெருகிவரும் ஏழை இந்தியாவில், பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கே பரிதவிக்கும் பழமையான தேசத்தில், அடிப்படை தேவைகளுக்கே அல்லல்படும் எளிய நாட்டில், கிரிக்கெட்டை விளையாடுங்கள்; ஆனால் அதை திருவிழா போல கொண்டாடாதீர்கள்.

கிரிக்கெட்டிற்கு எதிரான புலம்பலாக இதை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் ஆர்ப்பாட்டத்தில், ஆராவாரத்தில் மற்றவர்களின் குறிப்பாக மாணவர்களின் நலனை, எதிர்காலத்தை நசுக்கிவிடாதீர்கள் என்ற வேண்டுகோளாகவே ஏற்றுக்கொள்ளுங்கள். வேண்டுமானால் கெஞ்சலாக கூட வைத்துக்கொள்ளுங்கள்.

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். முரண்பாடாக பார்க்காதீர்கள் என்பதுதான் அவர்கள் தரப்பில் சொல்லும் ஒரே வார்த்தை. அதையேதான் நாம் திருப்பிச் சொல்கிறோம். உங்களிடம் உள்ள முரண்பாடுகளை விளையாட்டாக்காதீர்கள்.

உலக கோப்பை "டுவென்டி-20' ஒரு டிக்கெட் விலை ரூ. 13

இலங்கையில் நடக்கும் "டுவென்டி-20' உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது. லீக் போட்டிகளுக்கான ஒரு டிக்கெட் விலை ரூ. 13 தான்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடக்கும், நான்காவது "டுவென்டி-20' <உலக கோப்பை போட்டி, இலங்கையில் வரும் செப்., 18 முதல் அக்., 7 வரை நடக்கவுள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளுடன், தகுதி சுற்றில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், அயர்லாந்து என, மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கும். பின், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணி, "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த எட்டு அணிகளும் தலா இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இதில் முதல் இரு இடங்களை பெற்ற அணிகள் அரையிறுதியில் விளையாடும். பைனல், அக்., 7ல் கொழும்புவில் நடக்கும்.

நேற்று துவங்கியது:

இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நேற்று முதல் துவங்கியது. லீக் போட்டிகளுக்கு டிக்கெட் விலை மிகவும் குறைவாக ரூ. 13 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சுற்று போட்டிகளுக்கு ரூ. 127 என்றும், பைனலுக்கான டிக்கெட் விலை ரூ. 2,300 ஆகவும் விற்கப்படுகிறது.

அதிகபட்சம் "6':

ஐ.சி.சி., இணையதளத்தின் மூலம், ஆன் லைனிலும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். "சூப்பர்-8' பிரிவு போட்டிகளுக்கு, நபர் ஒன்றுக்கு அதிகபட்சமாக, நான்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும். அரையிறுதி மற்றும் பைனலுக்கு அதிகபட்சம் 6 டிக்கெட்டுகள் வரை வாங்கிக் கொள்ளலாம்.

காரணம் என்ன:

தற்போது இலங்கையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, டிக்கெட் விலை 10 மடங்கு உயர்த்தப்பட்டது. நாள் ஒன்றுக்கு ரூ. 500 என்றிருந்த டிக்கெட் விலையை, ரூ. 5000 ஆக உயர்த்தினர். இதனால் இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளியானது. இதனால் தான், உலக கோப்பை டிக்கெட் இந்தளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பெண்களுக்கு இலவசம்:

உலக கோப்பை "டுவென்டி-20' போட்டியின் போது, பெண்களுக்கான உலக கோப்பை தொடரும் நடக்கும். இதற்கான லீக் போட்டிகளின் போது, ரசிகர்களுக்கு இலவச அனுமதி தரப்பட்டுள்ளது. ஆண்கள் அணியினர் மோதும் அரையிறுதி, பைனலுக்கான டிக்கெட்டை பெறுபவர்கள், அதேநாளில் நடக்கும் பெண்கள் அரையிறுதி மற்றும் பைனலை பார்த்துக் கொள்ளலாம்.