ரோகித் சர்மாவால் புதிய குழப்பம்

ரோகித் சர்மா வரவால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வாய்ப்பு அளித்தால், "டாப்-ஆர்டரில்' இருக்கும் சேவக், சச்சின் அல்லது காம்பிரை நீக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

இந்திய அணியின் மிகச் சிறந்த "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. "சீனியர்' வீரர்கள் நிறைய பேர் இருப்பதால், நிரந்தர வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.


சுழற்சி முறை:

தற்போதைய முத்தரப்பு தொடரில் இவரை விளையாடும் லெவனில் இடம் பெறச் செய்வதில் கேப்டன் தோனி உறுதியாக உள்ளார். இதையடுத்து "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சேவக் நீக்கப்பட்டு, ரோகித் இடம் பெற்றார். இலங்கையுடனான போட்டியில் காம்பிர் நீக்கப்பட்டு, மீண்டும் ரோகித் வாய்ப்பு பெற்றார். இவ்விரு போட்டிகளிலும் இவர் சோபிக்கவில்லை.

ஆனாலும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க தோனி முடிவு செய்துள்ளார். இதையடுத்து அடிலெய்டில் வரும் 12ம் தேதி நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது குறித்து தோனி கூறுகையில்,""ரோகித் சர்மா அதிக போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது தான் சூழ்நிலைக்கு ஏற்ப பக்குவப்படுத்திக் கொள்ள முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியிலும் சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்,'' என்றார்.


கவாஸ்கர் எதிர்ப்பு:

தோனியின் இந்த முடிவுக்கு கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,""ஒரு வீரர் சரியாக செயல்படவில்லை என்றால், அவரை தாராளமாக நீக்கலாம். மாறாக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரருக்கு சுழற்சி முறை என்ற பெயரில் ஓய்வு அளிக்கக் கூடாது. என்னை பொறுத்தவரை சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். ரோகித் சர்மா அல்லது ரெய்னாவை நீக்கலாம்,'' என்றார்.

கவாஸ்கர் கூறுவதை ஏற்கலாம். "மிடில்-ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா ஆகிய 3 இளம் வீரர்கள் உள்ளனர். இதில் கோஹ்லி சிறப்பான "பார்மில்' இருப்பதால், அவருக்கு பிரச்னை இல்லை.

ரெய்னாவை எடுத்துக் கொண்டால் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த 22 போட்டிகளில் இரு அரைசதம் தான் அடித்துள்ளார். இதே காலக்கட்டத்தில் ரோகித் சர்மா 13 போட்டிகளில் 6 முறை அரைசதம் அடித்துள்ளார். உலக கோப்பைக்கு பின் ரெய்னாவின் சராசரி ரன் 44. ரோகித் சர்மா பங்கேற்ற இரு தொடர்களில், அவரது சராசரி 128, 76 என மிகவும் சிறப்பாக உள்ளது.

தவிர, ரெய்னாவின் "பவுன்சர்' பலவீனம் தொடர்கிறது. பெர்த்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் கூட "பவுன்சரை' தவறாக அடித்து தான் விக்கெட்டை பறிகொடுத்தார். செயல்பாட்டின் அடிப்படையில் பார்த்தால், ரெய்னாவைவிட ரோகித் முந்துகிறார்.


துணைக்கேப்டன் பிரச்னை

முத்தரப்பு தொடரில் "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதை அறிந்து தான், இந்திய அணியின் துணைக்கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை என தெரிகிறது.

ஆஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால், துணைக்கேப்டனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்டீவ் வாக், கேப்டனாக இருந்த போது, பாண்டிங் துணைக்கேப்டனாக இருந்தார். பின் பாண்டிங் கேப்டனாக இருந்த போது, மைக்கேல் கிளார்க் துணைக்கேப்டனாக இருந்தார்.

பாண்டிங்கிடம் இருந்து அணியை வழிநடத்தும் நுணுக்கங்களை கற்ற கிளார்க், தற்போது கேப்டன் பதவியில் அசத்துகிறார். இதனை இந்திய கிரிக்கெட் போர்டு புரிந்து கொண்டால் நல்லது.

விரைவில் மீண்டு வருவேன் - யுவராஜ்

நான் விரைவில் குணமடைய வேண்டுமென நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் அனுப்புகின்றனர்.

இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. கேன்சரில் இருந்து மீண்டு, இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கிறேன்,என, யுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். இவரது நுரையீரலுக்கு இடையில் "கோல்ப் பந்து அளவுக்கு சிறிய கேன்சர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

யுவராஜுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக, அவரது தந்தை யோகராஜ் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது "டுöவிட்டர் இணையதளத்தில் யுவராஜ் வெளியிட்ட செய்தி:
சிகிச்சை தாமதமானதற்கு எனது குரு சந்த் அஜித் சிங் ஹன்சாலிவாலா, பி.சி.சி.ஐ., மீது சிலர் பழி சுமத்துகின்றனர்.

இது மிகவும் தவறு. பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், அதன் நிர்வாகிகள் எனக்கு மிகப் பெரும் ஆதரவு அளிக்கின்றனர். இவர்களால் தான் சிறந்த சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சை தாமதமானதற்கு நான் தான் காரணம்.

எனது "பிசியோதெரபிஸ்ட்ஜதின் சவுத்ரி மீதும் சிலர் புகார் கூறுகின்றனர். இவர் மீது தவறு எதுவும் இல்லை. எனக்கு உதவி தான் செய்தார். நான் தான் மாற்று மருத்துவ முறையில் சில காலம் சிகிச்சை எடுத்தேன்.

தற்போது விரைவாக குணமடைந்து வருகிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் மிகவும் துணிச்சலாக போராடி, வலிமையான வீரராக மீண்டு வருவேன். நாடு முழுவதும் <உள்ள ரசிகர்கள் எனக்காக பிரார்த்திக்கின்றனர்.

கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் அனுப்புகின்றனர். இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

கேன்சர் நோயில் இருந்து மீண்ட அமெரிக்க சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்கை விரைவில் சந்தித்து ஊக்கம் பெற உள்ளேன். மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன், காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, "மீடியாவுக்கும் எனது நன்றி.

விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் உடை, தொப்பி அணிந்து நாட்டுக்காக மீண்டும் விளையாட காத்திருக்கிறேன். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு யுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அசத்தல் வெற்றி

பெர்த் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது போட்டியில் இந்தியா, இலங்கையை எதிர்த்து களமிறங்கியது.


முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணியின் தில்ஷன் (48), சங்ககரா (26), ஜெயவர்தனா (23) ஓரளவு கைகொடுத்தனர். சண்டிமால் 64 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (33) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 3, ஜாகிர் கான் 2 விக்கெட் வீழ்த்தினர்.


கோஹ்லி அபாரம்:

எட்டிவிடும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவக் (10) ஏமாற்றமான துவக்கம் தந்தார். சற்று நம்பிக்கையுடன் காணப்பட்ட சச்சின் 48 ரன்னுக்கு அவுட்டாகி, சதத்தில் சதம் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ரோகித் சர்மா (10), ரெய்னா (24), தோனி (4) நிலைக்கவில்லை. கோஹ்லி 77 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 46.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அஷ்வின் (30), ஜடேஜா (24) அவுட்டாகாமல் இருந்தனர்.

இறங்கி வருகிறது பி.சி.சி.ஐ., - சகாராவுடன் சமரச பேச்சு

சகாரா நிறுவனத்துடனான சிக்கலுக்கு தீர்வு காண, திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நீண்ட நாள் "ஸ்பான்சர்' சகாரா. பல்வேறு காரணங்களைக் கூறி, இந்திய கிரிக்கெட் போர்டுடனான (பி.சி.சி.ஐ.,) ஒப்பந்தத்தை துண்டித்தது. புனே வாரியர்ஸ் ஐ.பி.எல்., அணியின் உரிமையையும், வேறு யாருக்கும் விட்டுத்தரத் தயார் என்று அறிவித்தது.

தவிர, ஐந்தாவது தொடருக்கான ஏலத்திலும் பங்கேற்கவில்லை. இதனால், வரும் ஐ.பி.எல்., தொடரில் புனே அணி பங்கேற்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் கூறியது:

ஐ.பி.எல்., பிரச்னையில் தங்களுக்கு தீங்கிழைக்கப்பட்டதாக சகாரா உணர்கிறது. சகாராவுடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நல்ல நட்புணர்வு உள்ளதால், எதையும் பேசித்தீர்க்கத் தயாராக உள்ளோம். திறந்த மனதுடன் கூடிய சமரசத்தை எட்ட முயற்சிப்போம்.

அவர்களுடைய மனக்குறை எங்களுக்குத் தெரிகிறது. இதற்காக அனைத்தையும் உடனடியாக ரத்துசெய்வது சரியல்ல. இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் எல்லாம் வரத்தான் செய்யும். இருவரும் சந்திக்கும் போது அனைத்தும் சரிசெய்யப்படும்.

இவ்வாறு சீனிவாசன் கூறினார்.


அவசரப்பட மாட்டோம்:

இதுகுறித்து பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் மற்றும் ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறியது:

சகாரா நிறுவனம் எங்களிடம் 11 ஆண்டுகளாக "ஸ்பான்சராக' உள்ளது. இதனால் எந்த பிரச்னை குறித்தும், திறந்த மனதுடன், பேசித் தீர்க்க தயராக உள்ளோம்.

இவ்விஷயத்தை பொறுத்தவரையில் அவசரப்பட்டு எவ்வித முடிவும் எடுக்கப்படப் போவதில்லை. புனே வாரியர்ஸ் அணி இன்னும் ஐ.பி.எல்., தான் உள்ளது. இதுகுறித்து எவ்வித கடிதமும் எங்களுக்கு வரவில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

இவ்வாறு ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.


ரூ. 2234 கோடி இழப்பு:

சகாரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து சுமூக தீர்வு எட்டப் படவில்லை என்றால், பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 2234 கோடி இழப்பு ஏற்படும். இதனால் உடனடியாக புதிய "ஸ்பான்ஷரை' தேட வேண்டிய கட்டாய நிலைக்கு பி.சி.சி.ஐ., தள்ளப்பட்டு உள்ளது.

யுவராஜ் சிங்கிற்கு நுரையீரல் கட்டியால் ஆபத்து

யுவராஜ் சிங்கின் நுரையீரலில் ஆபத்தான "கேன்சர்' கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், நமது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில், இவரது இடது நுரையீரலில் "கோல்ப்' பந்து அளவுக்கு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. "இது வெறும் கட்டி தான்; கேன்சர் நோய் அல்ல' என, இவரது தாயார் ஷப்னம் சிங் கூறினார்.


அதிர்ச்சி செய்தி:

இந்தச் சூழலில், யுவராஜுக்கு ஏற்பட்டுள்ளது கேன்சர் கட்டி தான் என்ற அதிர்ச்சி தகவலை, அவரது பிசியோதெரபிஸ்டும் டாக்டருமான ஜதின் சவுத்ரி நேற்று தெரிவித்தார்.

பொதுவாக 0 நிலையில் கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை ஆரம்பம் என்பர். 1 முதல் 4ம் நிலை வரை இருந்தால், கேன்சர் கிருமி வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக அர்த்தம். யுவராஜின் கட்டி, நிலை 1ல் உள்ளதாம். இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரப்பி' சிகிச்சை மேற்கொணடு வருகிறார்.


இது குறித்து சவுத்ரி கூறியது:

யுவராஜ் நுரையீரலில் இருப்பது கேன்சர் கட்டி தான். இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது அல்ல. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டதால், குணப்படுத்திவிடலாம். கட்டியின் சில பகுதிகள் இருதயத்தின் ரத்தநாளங்களுக்கு மேல் உள்ளது. இதனால் கட்டி உடைந்து விடும் அபாயம் உள்ளது. ஆனாலும், 100 சதவீதம் குணப்படுத்தக் கூடியது தான்.


"ஆப்பரேஷன்' வேண்டாம்:

இவருக்கு "கீமோதெரப்பி' சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். கேன்சர் நோயாக இருக்கும் என சந்தேகித்த போது, ஆறு முறை "கீமோதெரப்பி' சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.

ஏற்கனவே ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்ததால், தற்போது மூன்று சுழற்சி முறையில் "கீமோதெரப்பி' கொடுத்தால் போதும். நல்லவேளை "ஆப்பரஷேன்' எதுவும் தேவைப்படவில்லை.

வரும் மார்ச் மாத இறுதியில் "கீமோதெரப்பி' சிகிச்சை முடியும். பின் யுவராஜுக்கு மீண்டும் "சிடி' ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். ஏப்ரலில் முழுமையாக தேறிவிடுவார். மே மாதத்தில் கிரிக்கெட் விளையாடலாம். முன்பைவிட தற்போது உற்சாகமாக இருக்கிறார். மனதளவில் தைரியமாக உள்ளார்.

இவ்வாறு சவுத்ரி கூறினார்.