54 நாட்கள்...76 போட்டிகள்: ஐ.பி.எல்., அட்டவணை அறிவிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், சென்னையில் வரும் ஏப்ரல் 4ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 54 நாட்களில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர், வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

இத்தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மும்பையில் நேற்று அறிவித்தது. வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

கடந்த தொடரில் அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, சமீபத்தில் ஐ.பி.எல்., தொடரில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்ட்டா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 54 நாட்கள் நடக்கும் இத்தொடரில், 72 லீக் போட்டிகள், மூன்று "பிளே-ஆப்' (பைனலுக்கான தகுதிச் சுற்று), ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கின்றன. பெங்களூருவில் இரண்டு "பிளே-ஆப்' போட்டிகளும், சென்னையில் ஒரு "பிளே-ஆப்' மற்றும் பைனல் (மே 27) நடக்கிறது.

லீக் போட்டிகள் அனைத்தும், முதல் மூன்று தொடரில் விளையாடியது போல நடக்கும். அதாவது ஒரு அணி, மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை லீக் போட்டியில் விளையாடும். இதில் ஒரு போட்டி உள்ளூரிலும், மற்றொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாடும்.

லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், பைனலுக்கான "பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

முதல் "பிளே-ஆப்' போட்டியில், முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு நேரடியாக முன்னேறிவிடும். இரண்டாவது "பிளே-ஆப்' போட்டியில் 3, 4வது இடத்தில் உள்ள அணிகள் மோதும்.

இதில் வெற்றி பெறும் அணி, முதல் "பிளே-ஆப்' போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன், மூன்றாவது "பிளே-ஆப்' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெறும்.

100வது சதத்தைப் பற்றி நினைக்கவில்லை

100-வது சதத்தைப் பற்றிய சிந்தனையின்றி போட்டியை மிகவும் ரசித்து விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறேன் என்று சச்சின் கூறியுள்ளார்.

சச்சினின் 100-வது சதத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவர் மேலும் கூறியது:

100-வது சதம் என்பது வெறும் எண்ணிக்கைதானே என்று சொல்வது எளிது. ஆனால் அதை அடிப்பது கடினம். 100-வது சதம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் நான் போட்டியை ரசித்து விளையாடவே விரும்புகிறேன். ரசிப்புத் தன்மை மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன்.

இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியோடு விளையாடுவதிலும், வெற்றிபெறுவதிலுமே முழுக் கவனமும் உள்ளது என்றார்.

இலங்கையில் ஐ.பி.எல்., போட்டிகள்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நடக்கும் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் ஒரு சில போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு தலைவர் தர்மதாசா கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளை நடத்துவதன் மூலம் இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர்.

கிரிக்கெட் போர்டும் நல்ல வளர்ச்சி பெறும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யிடம் ஏற்கனவே பேசியுள்ளோம். இதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

தவிர, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒரு நாள் உள்ளிட்ட போட்டிகளும் ஆண்டிற்கு மூன்று முறை நடந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன்,'' என்றார்.

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக டிரவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர் இருந்தார்.

சமீபத்தில் இவரை, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்க, அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முறைப்படி விலகினார்.

இவருக்கு மாற்று பயிற்சியாளராக, முன்னாள் இலங்கை அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிசை, நேற்று கோல்கட்டா அணி நிர்வாகம் நியமித்தது.

இவரது பயிற்சியின் கீழ், இலங்கை அணி கடந்த 2009ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் பைனலுக்கு முன்னேறியது.

இதுகுறித்து கோல்கட்டா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கூறுகையில், ""கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக டிரவர் பெய்லிசை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவரது அனுபவம், கோல்கட்டா அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.

பெய்லிஸ் கூறுகையில், ""கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு, அணி நிர்வாகத்தினருக்கும், அதன் சீனியர் வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக நடந்த ஐ.பி.எல்., தொடர்களை பார்த்துள்ளேன்.

இதில் கோல்கட்டா அணியினரின் செயல்பாட்டினை நன்கு அறிந்துள்ளேன். ஒவ்வொரு வீரரின் திறமைக்கேற்ப பயிற்சி அளித்து, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்,'' என்றார்.

பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டம் - மீண்டும் ஏமாற்றிய சச்சின்

சிட்னி டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது. 41 ரன்னுக்கு அவுட்டாகிய சச்சின், 100வது சர்வதேச சதம் அடிக்க மீண்டும் தவறினார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. "டாஸ் வென்ற தோனி "பேட்டிங் தேர்வு செய்தார். துவக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் காம்பிர் "டக் அவுட்டாகி சரிவைத் துவங்கி வைத்தார். சிறிது நேரத்தில் "சீனியர் டிராவிட்டும் (5) ஏமாற்றினார்.

சற்று நேரம் போராடிய சேவக் 30 ரன்கள் எடுத்தார். லட்சுமண் (2) மறுபடியும் சொதப்பினார். விராத் கோஹ்லி (23) ஏமாற்றினார்.

பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சச்சின், 41 ரன்களுக்கு அவுட்டாகி, மீண்டும் சதத்தில் சதம் அடிக்கும் சாதனையை நழுவ விட்டார். சற்று தாக்குப்பிடித்த அஷ்வின் 20 ரன்கள் எடுத்தார்.

ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மூவரும் "டக் அவுட்டாகினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரைசதம் அடித்த தோனி (57) அவுட்டாகாமல் இருந்தார்.

பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் வார்னர் (8), மார்ஷ் (0), கோவன் (16) விக்கெட்டுகளை இழந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது.

பாண்டிங் (44), கிளார்க் (47) அவுட்டாகாமல் இருந்தனர். ஜாகிர் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.