ஐ.பி.எல்.லில் பாகிஸ்தான் வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சேர்ப்பது குறித்து வரும் 14-ம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுடன் ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் சுக்லா கூறியது:

ஐபிஎல் போட்டியின் பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். சில அணிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக உள்ளனர். இதேபோல் சில அணிகளின் அதிகாரிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

அப்படியிருக்கையில் ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் ஐபிஎல் போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. எனவே யாருக்கு எதிராகவும் தடை என்ற கேள்விக்கே இடமில்லை.

பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டியில் சேர்ப்பது குறித்து ஆட்சி மன்றக் குழு கூட்டத்தின்போது விவாதிக்கப்படும். எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடமே உள்ளது. அவர்களை ஏலம் எடுப்பதா, வேண்டாமா என்பதை அணி உரிமையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஐபிஎல் போட்டியின் போது வீரர்கள் காயமடைவதால்தான் சர்வதேச அளவிலான போட்டிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று இட்டுக்கட்டி கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டியின்போது வீரர்கள் காயத்தோடும், களைப்போடும் இருந்தாலும்கூட, அவர்களை விளையாடும்படி வற்புத்தப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. வீரர்களின் காயத்துக்கு ஐபிஎல் போட்டியை மட்டுமே குற்றம்சாட்ட முடியாது.

இந்தியா-இங்கிலாந்துத் தொடரில்தான் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். எனவே காயம் எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம்.

பைனலில் இளம் இந்திய அணி

நான்கு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், இளம் இந்திய அணி (19 வயது) கடைசி லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீசை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து நாளை நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குபட்ட வீரர்கள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆந்திராவில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ஹெர்வத்கர் (22), கேப்டன் உன்முக்த் சந்த் (28), சுமாரான துவக்கம் கொடுத்தனர். வோஹ்ரா (44) அரைசத வாய்ப்பை இழந்தார்.

தியோபிராட் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுக்க, இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது.

சற்று கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அல்லைன், ஹாட்ஜ் இருவரும் அதிகபட்சமாக தலா 31 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 40.5 ஓவரில் 168 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.


பைனலில் இந்தியா:

இத்தொடரில் ஒவ்வொரு அணியும் 6 லீக் போட்டிகளில் பங்கேற்றது. இதில் இந்திய அணி அனைத்து போட்டியிலும் வென்றது.

இதையடுத்து இந்திய அணி, பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள இலங்கையுடன் (3 வெற்றி), நாளை பைனலில் மோதுகிறது. மூன்று, நான்காவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்திக்கின்றன.

இந்தியா-இங்கிலாந்து தொடரில் "ஹாட் ஸ்பாட்' இல்லை

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப் போவதில்லை,'' என, இத்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பி.பி.ஜி., ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைமை அதிகாரி வாரன் பிரன்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி அக்.14ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.


புதிய தொழில்நுட்பம்:

சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில், பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என்பதை உறுதி செய்ய "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி ஆடுகளத்தின் இரு புறமும் "இன்பிரா ரெட் கேமரா' பொருத்தப்படும். இதில் போட்டியின் ஒவ்வொரு அசைவும் படம் பிடிக்கப்படும். இவை கறுப்பு வெள்ளை "நெகடிவ்' படங்களாக "கம்ப்யூட்டரில்' பதிவு செய்யப்படும்.

பந்து பேட்டின் மீது படும் போது, அந்த இடம் மட்டும் வெள்ளையாக தெரியும். இதை வைத்து "அவுட்' என்பதை உறுதி செய்யலாம். கிரிக்கெட்டில் முதன் முதலாக 2006-07ல் நடந்த ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டது. இந்த "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை செலவாகும்.


"ஹாட் ஸ்பாட்' சர்ச்சை:

சமீபத்தில், இங்கிலாந்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால் பி.சி.சி.ஐ., அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை மற்றும் "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்தை எதிர்த்தது.

பி.பி.ஜி., ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைமை அதிகாரி வாரன் பிரன்ணன் கூறுகையில், ""இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடரின் போது "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் எழுந்தது வருத்தமளிக்கிறது.

டி.ஆர்.எஸ்., மற்றும் "ஹாட் ஸ்பாட்' முறைக்கு, பி.சி.சி.ஐ., ஆதரவு அளிக்காததால், இந்திய மண்ணில் நடக்கவுள்ள தொடரில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதில்லை.

புதிதாக நான்கு கேமராக்கள் வாங்கி உள்ளோம். இதனை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள தொடர்களில் பயன்படுத்தி, "ஹாட் ஸ்பாட்' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'' என்றார்.

நடையை கட்டியது நடப்பு சாம்பியன்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் இருந்து, "நடப்பு சாம்பியன்' சென்னை கிங்ஸ் வெளியேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், 46 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. வார்னர் அதிரடி சதம் கைகொடுக்க, வெற்றிபெற்ற நியூ சவுத் வேல்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடரின் "ஏ' பிரிவு கடைசி லீக் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூ சவுத்வேல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற காடிச், பேட்டிங் தேர்வு செய்தார்.


நல்ல துவக்கம்:

நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு வாட்சன், வார்னர் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். போலிஞ்சரின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசினார் வாட்சன். இவர் 21 ரன்னுக்கு அவுட்டானார். பின் வார்னருடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.


சூப்பர் ஜோடி:

ஸ்மித் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபுறம் வார்னர் சென்னை அணியினரின் பவுலிங்கை உண்டு, இல்லை என்று துவம்சம் செய்தார். வார்னர் 38 ரன் எடுத்திருந்த போது, கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை, ஜகாதி கோட்டை விட்டார்.

கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட வார்னர், சிக்சர் மழை பொழிந்தார். ஜகாதி,
போலிஞ்சர், ரெய்னா, அஷ்வின் என, யாரையும் விட்டு வைக்கவில்லை.


வார்னர் சதம்:

இரண்டாவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தநிலையில், ஸ்மித் (31) வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வார்னர், 58வது பந்தில் தனது 2வது "டுவென்டி-20' சதத்தை பதிவு செய்தார். பிராவோ வீசிய 19வது ஓவரில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுக்கப்பட்டது.

20 ஓவரில் நியூ சவுத்வேல்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது.


ஹசி ஆறுதல்:

அரையிறுதிக்கு முன்னேற, 17 ஓவரில் 202 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்கியது. வழக்கம் போல் ஹசி, முரளி விஜய் துவக்கம் தந்தனர். கிளார்க்கின் முதல் ஓவரில் ஹசி, மூன்று பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், அம்பயர் ஜோகனின் (தெ.ஆப்.,) தவறான தீர்ப்பில் ஹசி (37) அவுட்டானார்.

முரளி விஜய் (17) மீண்டும் ஏமாற்றினார். 14 பந்துகளில் 28 ரன்கள் விளாசிய ரெய்னா அவுட்டானதும், சென்னை அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. கரைசேர்ப்பார் என்று எதிர்பார்த்த கேப்டன் தோனி, 2 ரன்னுக்கு அவுட்டாகி வெறுப்பேற்றினார். பிராவோவும் (16) நிலைக்கவில்லை. சகா "டக்' அவுட்டானார்.

பத்ரிநாத் (13) இம்முறையும் சொதப்பினார். அஷ்வின் (1) நிலைக்கவில்லை. கடைசியில் குலசேகரா (18), போலிஞ்சர் (17) போராடிய போதும், வெற்றிக்கு உதவவில்லை.

சென்னை அணி 18.5 ஓவரில் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. நியூ சவுத் வேல்ஸ் அணி 6 புள்ளியுடன், அரையிறுதிக்கு முன்னேறியது.

அதிசயம் நிகழ்த்துமா சென்னை கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்றைய முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், சென்னை அணி நல்ல "ரன்ரேட்டில்' இமாலய வெற்றி பெற வேண்டும். பின் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணியை சந்திக்கிறது.


மோசமான துவக்கம்:

சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய், ரெய்னா ஆகியோர் துவக்கத்தில் திணறுவது பின்னடைவை ஏற்படுத்துகிறது. இன்று இவர்கள் எழுச்சி பெற வேண்டும். கேப்டன் தோனி, பத்ரிநாத் தங்களது ஆமை வேக ஆட்டத்துக்கு விடைகொடுக்க வேண்டும். "ஆல்-ரவுண்டராக' டுவைன் பிராவோ அசத்துவது நம்பிக்கை தருகிறது.

கடந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கிய போலிஞ்சர் இன்றும் தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தால் எதிரணிக்கு சிக்கல் ஏற்படும். இவரை தவிர அஷ்வின், மார்கல், ஜகாதி உள்ளிட்டோர் தங்களின் வலிமையை நிரூபிக்க வேண்டும்.


ஸ்மித் நம்பிக்கை:

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு துவக்கத்தில் வாட்சன், வார்னர், டேனியல் ஸ்மித் ஆகியோர் கைகொடுக்கின்றனர். கேப்டன் சைமன் காடிச் "பார்மிற்கு' திரும்பினால் நல்லது. ஸ்டீபன் ஸ்மித்தின் அசத்தல் ஆட்டம் இன்றும் தொடரலாம்.

பவுலிங்கில் ஸ்டீவ் ஓ கபே, ஸ்டீபன் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஹென்ரிக்ஸ் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும்.

சென்னையில் இன்று நடக்கும் மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில், டிரினிடாட் அண்டு டுபாகோ அணி, கேப் கோப்ராஸ் அணிகள் மோதுகின்றன.


வாய்ப்பு எப்படி?:

சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இம்முறை "ஏ' பிரிவு "குரூப் ஆப் டெத்' என அழைக்கப்பட்டது. இதற்கேற்ப அரையிறுதிக்கு முன்னேற அணிகள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இன்று கேப் கோப்ராஸ் வெற்றி பெற்றால்(5 புள்ளிகளுடன்) நல்ல "ரன் ரேட்' இருப்தால், மும்பையை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கு முன்னேறும். இதே போல சென்னை அணியை, நியூ சவுத் வேல்ஸ் வென்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை பெறும்.

மாறாக கோப்ராஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகள் தோல்வி அடையும் பட்சத்தில் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். பின் நியூ சவுத் வேல்ஸ், சென்னை கிங்ஸ், டிரினிடாட் டுபாகோ ஆகிய 3 அணிகள் இடையே அரையிறுதிக்கு முன்னேறுவதில் போட்டி இருக்கும். இனை அனைத்து நான்கு புள்ளிகள் பெற்று இருக்கும். அப்போது "ரன் ரேட்' அடிப்படையில் வாய்ப்பு முடிவு செய்யப்படும்.

எனவே, இன்று சென்னை அணி முதலில் நல்ல "ரன் ரேட்டில்' வெற்றி பெற வேண்டும். அதற்கு பின் அதிர்ஷ்டம் அடித்தால், அரையிறுதி வாய்ப்பை பெறலாம்.