இலக்கு இல்லாத இந்திய அணி

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான புதிய இலக்குகளை இந்திய அணி நிர்ணயித்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் வரிசையாக தோல்வி அடைந்த இந்தியா, தொடரை இழந்ததோடு, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் முதலிடத்தையும் கோட்டை விட்டது. இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியது.


புள்ளிகள் குறைவு:

கடந்த 2009, டிச. 6ம் தேதி தோனி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் முதல் முறையாக முதலிடம் பெற்றது. அடுத்த 20 மாதங்களில் தென் ஆப்ரிக்காவுடனான தொடரை "டிரா' செய்தது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்றது.

வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் வெற்றிவாகை சூடியது. இந்த தொடர்களின் போது இந்திய வீரர்கள், போதும் என்ற மனநிறைவோடு காணப்பட்டனர். வெற்றி தாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.

உதாரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 15 ஓவரில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்ததால், எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருந்ததால், போட்டியை வீணாக "டிரா' செய்தனர். இதனால் "ரேங்கிங்' பட்டியலில் வீணாக புள்ளிகளை இழந்தது.


திட்டம் இல்லை:

இந்திய அணியின் சரிவுக்கு சரியாக திட்டமிடாததும் முக்கிய காரணம். "நம்பர்-1' இடத்தை பெறுவதை காட்டிலும், அதனை தக்க வைப்பதே மிகவும் கடினம் என்பதை அறிந்து கொள்ள நம்மவர்கள் தவறினர். முதலிடத்தில் இருக்கிறோம் என்ற மிதப்பில் இருந்தனர். அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம், எத்தனை வெற்றிகளை பெறப் போகிறோம் என புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளவில்லை.

தவிர, ஏதாவது ஒரு வீரரை தான் பெரிதும் சார்ந்து இருந்தது. இலங்கை, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்களை "டிரா' செய்ய லட்சுமண் காரணமாக இருந்தார். இவரது சிறப்பான ஆட்டம் அணிக்கு பெரிதும் கைகொடுத்தது.

இதே போல ஆஸ்திரேலியாவுடனான மொகாலி டெஸ்டில் கடைசி வரை பொறுப்பாக ஆடிய லட்சுமண், இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து அணிக்கு "திரில்' வெற்றி தேடி தந்தார். இத்தகைய ஒரு வீரர் இங்கிலாந்து தொடரில் கிடைக்கவில்லை. டிராவிட் இரண்டு சதம் அடித்த போதும், அது அணியின் தோல்வியை தவிர்க்க உதவவில்லை.

இந்திய அணியில் கூட்டுமுயற்சியும் காணப்படவில்லை. நமது வீரர்கள் 80 முதல் 70 சதவீதம் வரை இந்திய மண்ணில் தான் விளையாடுகின்றனர். இதனால் தான் வெளிநாடுகளில் சோபிக்க முடியவில்லை என்கிறார் தோனி. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் ஹெடிங்லி, பெர்த், ஜமைக்கா போன்ற இடங்களில் இவரது தலைமையில் தான் இந்தியா வெற்றி பெற்றது. டிராவிட், சச்சின், லட்சுமண், ஜாகிர், போன்றவர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில் அவர்களுக்கு நிகரான மாற்று வீரர்கள் இல்லை.

இந்திய அணி இழந்த பெருமையை மீட்க, குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் தேவைப்படலாம். இந்த காலக்கட்டத்தில் புதிய இலக்குகளை நிர்ணயித்து, டெஸ்ட் அரங்கில் மீண்டும் எழுச்சி பெற தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.


பி.சி.சி.ஐ., அதிரடி

இந்திய அணியின் வீழ்ச்சி பற்றி மும்பையில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,)செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர் மற்றும் செயலர் சீனிவாசன் இணைந்து நல்ல தீர்வு காண்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பற்றி நிர்வாகிகள் கவலை வெளியிட்டனர். பி.சி.சி.ஐ., தலைவர் மற்றும் செயலரிடம் உரிய தீர்வு காணும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு பதிலாக 5 ஆண்டுகளில் முன்னாள் வீரர்கள் தேசிய தேர்வுக்குழு உறுப்பினராக முடியும் என விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,''என்றார்.

இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம்?

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் வீழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 3 டெஸ்டில் தோல்வி அடைந்து, "நம்பர்-1' இடத்தை இழந்ததற்கு மோசமான பேட்டிங்கே காரணம் என தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அடித்துச் சொல்கிறார்.

தேசத்தை மறந்து பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே தோல்விக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது. தவறான வீரர்கள் தேர்வு மற்றும் அளவுக்கு அதிகமான கிரிக்கெட் போட்டிகளே வீழ்ச்சிக்கு காரணம் என, இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,)மீதும் பழி சுமத்துகின்றனர். இது பற்றி விரிவாக ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. இங்கிலாந்துடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. இதையடுத்து டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தை பறிகொடுத்தது. முதலிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியது.


ஓய்வில்லாத போட்டி:


இந்த வீழ்ச்சிக்கு ஓய்வில்லாத போட்டிகளே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில், ஆஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் இந்திய அணி இரண்டு மடங்கு போட்டிகளில் பங்கேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கணக்கிட்டால், இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலியாவோ 7 டெஸ்டில் தான் பங்கேற்றுள்ளது.

இதே போல இந்தியா 29 ஒரு நாள் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 23 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளன. இப்படி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் பெரும்பாலான இந்திய வீரர்கள் சோர்வடைந்தனர். இதனால் தான் இங்கிலாந்து மண்ணில் சோபிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதை மறுத்த தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது:

இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் தான் முக்கிய காரணம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளும் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தான் இருக்கின்றன. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, "டுவென்டி-20' என ஏதாவது ஒரு வகையிலான போட்டிகளில் பங்கேற்கின்றன. எனவே, இந்தியா மட்டும் அதிக போட்டிகளில் விளையாடவில்லை.

இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியதால், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங் "கிளிக்' ஆகவில்லை. "டாப்-5' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். "பவுலிங்', "பீல்டிங்கிலும்' நம்மவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட தவறினர். தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து "வேகங்கள்' அசத்தினர்.

ஜாகிர் கான் காயம் பற்றி அதிகம் விவாதிக்க தேவையில்லை. தோல்விக்கு வீரர்கள் அல்லது பி.சி.சி.ஐ., அல்லது நிர்வாகிகள் மீது பழி சுமத்தும் பணியில் ஈடுபட வேண்டாம். தற்போது இந்திய அணி மோசமான காலக்கட்டத்தை நோக்கி செல்கிறது. நமது வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிந்து விரைவில் முதலிடத்தை மீண்டும் பிடிப்போம். தற்போது இந்திய வீரர்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். ரசிகர்கள் தான் அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.


ஐ.பி.எல்., பாதிப்பு:

அடுத்து, பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால், நம்மவர்கள் டெஸ்ட் போட்டிக்கான அணுகுமுறையை மறந்து விட்டனர். டிராவிட்டை தவிர மற்றவர்கள் "டுவென்டி-20' போன்று அதிரடியாக "ஷாட்' அடித்து அவுட்டாகினர். தவிர, அதிமான ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்றதால் சோர்ந்து விட்டனர். ஜாகிர், காம்பிர், சேவக் போன்றவர்களுக்கு காயமும் ஏற்பட்டது.


பி.சி.சி.ஐ., நடவடிக்கை:

டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வீரர்களை பி.சி.சி.ஐ., தேர்வு செய்யாததே தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து பி.சி.சி.ஐ., செயலவர் சீனிவாசன் கூறுகையில்,""ஜாகிர், சேவக், காம்பிர் ஆகியோருக்கு காயம் ஏற்பட, ஒரு போட்டியில் கூட இந்தியா முழு பலத்துடன் பங்கேற்க இயலவில்லை. சுமார் 2 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த போது யாரும் விமர்சிக்கவில்லை.

ஒரு தொடரில் தோற்றவுடன் அனைத்து தரப்பிலும் இருந்து புகார் கூறப்படுகிறது. தேசத்துக்காக விளையாடுவதை தான் வீரர்கள் விரும்புகின்றனர். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடாத வீரர்களுக்கு ஐ.பி.எல்., தொடரில் மவுசு இருக்காது. இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் நமது வீரர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். பின் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.


முன்னாள் வீரர்கள் பாய்ச்சல்

தோனி தலைமையிலான அணியின் மோசமான ஆட்டத்தை, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர். அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமென வலியுறுத்தினர். "சீனியர்' வீரர்களுக்கு விடைகொடுத்து விட்டு விராத் கோஹ்லி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

கங்குலி: டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவது சகஜம். ஆனால், வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி, மிகப் பெரும் ஸ்கோரை எட்ட முடியாதது வருத்தம் அளிக்கிறது. இது, இத்தொடருடன் முடிந்து விடுமா அல்லது வீழ்ச்சியின் துவக்கமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கும்ளே: அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோரது ஓய்வுக்கு பின் டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமடையும். எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, தற்போதே நான்கு அல்லது ஐந்து இளம் வீரர்களை கண்டறிய வேண்டும். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா போன்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

அருண் லால்: இங்கிலாந்து மண்ணில் சந்தித்த தோல்வி, இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. 35 அல்லது 38 வயதான வீரர்களுடன் இனியும் விளையாடுவதில் அர்த்தமில்லை. இவர்களுக்கு கண் பார்வை குறைவு, உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு பதில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

வினோத் காம்ப்ளி: இங்கிலாந்தின் ஸ்டிராசுடன் ஒப்பிடுகையில் கேப்டனாக தோனியின் வியூகம் எடுபடவில்லை. தவறான திட்டங்களை வகுத்தார். சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையில், இத்தொடர் தான் மிக மோசமானதாக அமைந்தது.

வெங்கசர்க்கார்: முன்னணி பவுலர்களுக்கு காயம், எளிய "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டது போன்றவை சிக்கலை ஏற்படுத்தியது. லார்ட்ஸ் டெஸ்டில் கேப்டன் தோனியே "பவுலிங்' செய்ய வேண்டிய பரிதாப நிலைமையை காண முடிந்தது. வீரர்கள் மத்தியில் வெற்றி தாகம், போராடும் குணம் இல்லாததே தோல்விக்கு காரணம்.

இது போன்ற அணியை பார்த்ததில்லை - கங்குலி

இந்திய அணியின் பேட்டிங் இத்தொடரில் சிறப்பாக இல்லை. இங்கிலாந்து அணியிடம் "நம்பர்-1' இடத்தை ஒப்படைத்து விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற இந்திய அணியை பார்த்ததில்லை,'' என, கங்குலி வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டிராவிட் தவிர, மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை கொடுக்கின்றனர்.

பவுலர்கள் மட்டமாக செயல்படும் நிலையில், பீல்டிங் அதைவிட மோசம். இதனால் அடுத்தடுத்து "அடி' வாங்கி வருகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியினர் சாதாரணமாக விளையாடுகின்றனர். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இங்கிலாந்து அணி 372 ரன்கள் குவித்தது. இது இந்தியாவுக்கு மோசமான நாள். இப்படி ஒரு இந்திய அணியை, பத்து ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை.


பயிற்சி இல்லை:

இதற்காக இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வமில்லாமல் உள்ளனர் என்பது தவறு. போதியளவு பயிற்சிகள் இல்லை என்பதே உண்மை. முக்கிய வீரர்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக இங்கிலாந்து வந்திருந்தனர்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல, குறைந்தது இரண்டு பயிற்சி போட்டிகள் இருந்திருக்க வேண்டும். இங்கு, இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடி, டெஸ்டில் பங்கேற்றது.


மீண்டு வரும்:

இருப்பினும், இதிலிருந்து மீண்டு வரும் திறன் இந்தியாவுக்கு உண்டு. இத்தொடருடன் டிராவிட், சச்சின், லட்சுமண் ஆகியோருக்கு கிரிக்கெட் முடிந்து விடவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய தொடர் காத்திருக்கிறது.


மோசமான தொடர்:

சமீபத்தில் இந்திய அணி மோசமாக செயல்பட்ட முதல் தொடர் இது தான். சச்சின், டிராவிட் ஆகியோரிடம் மக்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.

பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு இது சோதனைக் காலம். இந்திய அணியில் "சீனியர்கள்' அதிகம் இருப்பதால், அவர்களை கையாளுவதில் சிக்கல் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் ஒருமுறை வெற்றி துவங்கி விட்டால், அப்புறம் அவருக்கு நல்ல நேரம் தான். ஏனெனில் இந்திய வீரர்கள் நல்ல பண்பாளர்கள்.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: முதலிடத்தை இழந்தது

பிர்மிங்ஹாமில் நடந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. பர்மிங்ஹாமில் 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். காம்பீர் 38 ரன்களுக்கும், டிராவிட் 22 ரன்களுக்கும், லஷ்மன் 30 ரன்களுக்கும், பிரவீண் குமார் 26 ரன்களுக்கும்அவுட்டாயினர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். இங்கிலாந்து தரப்பில் பிராட், பிரஸ்னன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அதிரடியா விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 710 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் குக் அபாராமாக விளையாடி 294 ரன்களை குவித்தார்.

மோர்கன் 104 ரன்களுக்கும், ஸ்டிராஸ் 87 ரன்களுக்கும், பீட்டர்சன் 63 ரன்களுக்கும், பிரையர் 53 ரன்களுக்கும் அவுட்டாயினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 486 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர்.

காம்பீர் 14 ரன்களுக்கும், டிராவிட் 18 ரன்களுக்கும், லஷ்மண் 2 ரன்களுக்கும், ரெய்னா 10 ரன்களுக்கும் அவுட்டாயினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 40 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அமீத் மிஸ்ரா 22 ரன்களுக்கும், பிரவீண் குமார் 40 ரன்களுக்கும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாயினர்.

இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி மட்டும் சிறப்பாக விளையாடி 74 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது. தோனி தலைமையில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடர் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து வேகத்தில் சரிந்தது இந்தியா

பர்மிங்ஹாம் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டையை கிளப்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு சுருண்டது. மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். தோனி மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

முக்கியமான மூன்றாவது டெஸ்ட், பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பீல்டிங்' தேர்வு செய்தார்.


சேவக் ஏமாற்றம்:

இங்கிலாந்து "வேகங்கள்' போட்டுத் தாக்க, இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவக், தான் சந்தித்த முதல் பந்திலேயே "டக்' அவுட்டானார். இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்து, இவரது "கிளவ்ஸ்' பகுதியை உரசிச் சென்றது.

அதனை பிடித்த விக்கெட் கீப்பர் பிரையர் "அவுட்' கேட்டார். இதனை ஏற்க அம்பயர் ஸ்டீவ் டேவிஸ் மறுத்தார். உடனே இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் "ரிவியு' கேட்டார். இதில் பந்து, "கிளவ்சில்' பட்டது உறுதி செய்யப்பட, சேவக் வெளியேற நேர்ந்தது.


விக்கெட் மடமட:

பின் இணைந்த, காம்பிர்-டிராவிட் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த போது, பிரஸ்னன் பந்தில் காம்பிர் (38) போல்டானார். அடுத்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். பிராட் வேகத்தில் நடையை கட்டிய சச்சின் (1), இம்முறையும் சதத்தில் சதம் காண தவறினார்.

பிரஸ்னன் பந்தில் "இந்திய பெருஞ்சுவர்' டிராவிட்டும் (22) சரிந்தார். ஆண்டர்சன் பந்தில் சுரேஷ் ரெய்னா (4), காலியானார். லட்சுமண் (30), பிரஸ்னன் பந்தில் தேவையில்லாத "ஷாட்' அடித்து வெளியேறினார். அமித் மிஸ்ரா (4) நிலைக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து தத்தளித்தது.


தோனி அரைசதம்:

இந்த நேரத்தில் பொறுப்பாக ஆடிய கேப்டன் தோனி, பிரவீண் குமார் ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்டது. ஆண்டர்சன், பிரஸ்னன், பிராட் பந்துகளில் தலா ஒரு சிக்சர் பறக்க விட்ட தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 22வது அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்த நிலையில், பிரஸ்னன் பந்தில் பிரவீண் (26) அவுட்டானார்.

தோனி 77 ரன்களுக்கு பிராட் பந்தில் வெளியேற, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. இஷாந்த் சர்மா (4), ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் பிரஸ்னன், பிராட் தலா 4, ஆண்டர்சன் 2 விக்கெட் கைப்பற்றினர்.


நல்ல துவக்கம்:

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், அலெஸ்டர் குக் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்திருந்தது.

அரைசதம் கடந்த ஸ்டிராஸ்(52), குக்(27) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணியின் கைவசம் விக்கெட்டுகள் அப்படியே இருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை சோதனை காத்திருக்கிறது.