சவாலை சந்திக்க தயார்: யுவராஜ்

இங்கிலாந்து வீரர்களின் சவாலை சந்தித்து, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதே முக்கிய குறிக்கோள்,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் (ஜூலை 21-ஆக.,18) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூலை 21ம் தேதி, லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பின் இடம் பெற்றார் யுவராஜ் சிங். இதுகுறித்து இவர் கூறியது:

இங்கிலாந்து அணி மிகச்சிறந்த அணி. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானது. ஆனால், இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பலர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபகாலமாக, வெளிநாடுகளிலும் இந்திய அணி நல்ல வெற்றிகளை பெறத் துவங்கியுள்ளது. இதனால் இரு அணிகள் இடையிலான தொடர், சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் விளையாடுவதும் கிரிக்கெட் தான். இதற்கான அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்பதே விருப்பம். இது அவ்வளவு எளிதல்ல என்பது நன்கு தெரியும்.

தற்போதைய இங்கிலாந்து தொடர், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சவாலான தொடர். ஆனால் ஒவ்வொரு சவாலையும், ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு சாதிக்க முயற்சிப்பேன்.

இங்கிலாந்து அணியின் பீட்டர்சனைப் பற்றி நன்கு தெரியும். அவருக்கு பந்து வீச மிகவும் ஆர்வமாக உள்ளேன். இதன் மூலம், பீட்டர்சனையும், மற்ற வீரர்களையும் அவுட்டாக்கினால், மிகவும் பெருமைப்படுவேன்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

தொடரை கைப்பற்றுமா இந்தியா

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் துவங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி காத்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்தியஅணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், இன்று டொமினிகாவின் ரோசாவு நகரில் உள்ள விண்சர் பார்க் மைதானத்தில் துவங்குகிறது.

பார்படாஸ் ஆடுகளத்தை போல, இங்கும் பந்துகள் அதிக வேகத்துடன் பவுன்சர் ஆகும் என்று தெரிகிறது. இதற்கேற்ப இந்திய பேட்ஸ்மேன்கள் சுதாரித்துக் கொண்டால் நல்லது. கடந்த இரண்டு போட்டிகளில் 22 ரன்கள் மட்டும் எடுத்த முரளி விஜய், ராம்பால் பந்தில் அடிக்கடி அவுட்டாகிறார்.

இதேபோல, 46 ரன்கள் எடுத்த விராத் கோஹலி, எட்வர்ட்ஸ் பவுலிங் என்றால் பயப்படுகிறார். இவர்கள், இன்று வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை அணியில் மாற்றம் செய்ய கேப்டன் தோனி விரும்பும் பட்சத்தில் பார்த்திவ் படேல், பத்ரிநாத் களமிறங்கலாம்.

மற்றபடி துவக்க வீரர் அபினவ் முகுந்த், சீனியர் டிராவிட், லட்சுமண் அணிக்கு மீண்டும் கைகொடுக்கலாம். வழக்கம் போல ரெய்னா இம்முறையும் நல்ல "பார்ட்னர்ஷிப்' அமைப்பார் என நம்புவோம்.


முனாப் வாய்ப்பு:

பவுலிங்கை பொறுத்தவரையில் இஷாந்த் காயத்தால் அவதிப்பட்டாலும் இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. இவருடன் பிரவீண் குமார் சாதிக்க முயற்சிக்கலாம். அபிமன்யு மிதுனுக்குப் பதிலாக, இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற முனாப் படேலை சோதித்து பார்த்தால் நல்லது.

சுழலில் வழக்கம் போல ஹர்பஜன் சிங் இறங்கலாம். இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் தேவை எனில், அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு செல்லும்.


சர்வான் இல்லை:

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சர்வான் நீக்கப்பட்டு, இளம் வீரர் பாவெல் சேர்க்கப்பட்டுள்ளது பலன் தருமா என இன்று தெரியும். துவக்க வீரர் சிம்மன்ஸ் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில் இளம் வீரர்கள் கிர்க் எட்வர்ட்சிற்கு வாய்ப்பு செல்லலாம்.

மற்றபடி, பரத், "மிடில் ஆர்டரில்' டேரன் பிராவோ, சீனியர்கள் சந்தர்பால், கேப்டன் சமி, கடந்த போட்டியில் அசத்திய சாமுவேல்ஸ், விக்கெட் கீப்பர் பாக் ஆகியோர் திறமை நிரூபித்து வெற்றிபெற்று, தொடரை சமன் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இவர்களுக்கு பவுலிங்கில் எட்வர்ட்ஸ், ராம்பால் கைகொடுக்க காத்திருக்கின்றனர். தவிர, கீமர் ரோச், சுழலில் தேவேந்திர பிஷூ இந்திய அணிக்கு தொல்லை தரலாம்.

இதுவரை எந்த டெஸ்ட் தொடரிலும் தோல்வியடையாத கேப்டன் என்ற பெருமையை இம்முறையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் தோனி. இருப்பினும், இந்த போட்டியில் வென்று, வெற்றி கோப்பையுடன் திரும்புவார் என்று நம்பப்படுகிறது.

தடையிலிருந்து தப்புவாரா தோனி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச வேண்டும். தவறினால், இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய கேப்டன் தோனிக்கு தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பார்படாஸ் நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் "டிரா' ஆனது.


அபராதம்:

இப்போட்டியில் இந்திய பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். மூன்று ஓவர்கள் வரை தாமதமாக பந்துவீசியதால், இந்திய அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் கேப்டன் தோனிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 60 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 30 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.'

ஏற்கனவே இந்த ஆண்டின் துவக்கத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் தோனி உட்பட போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது வரும் 6ம் தேதி டொமினிகா நகரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.

இப்போட்டியிலும் இந்திய பவுலர்கள் தாமதமாக பந்துவீசும் பட்சத்தில், கேப்டன் தோனிக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

ஐ.சி.சி., 2.5 விதிமுறையின் படி, 12 மாத காலத்துக்குள் மூன்று போட்டிகளில் தாமதமாக பந்துவீசும் அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதனால் இவர், இத்தொடரில் கட்டாக், கோல்கட்டா மைதானங்களில் நடந்த போட்டிகளில் விளையாடவில்லை.


கவலைப்பட தேவையில்லை :தோனி

இரண்டாவது டெஸ்ட் குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ""இரண்டாவது டெஸ்ட் "டிரா' ஆனது குறித்து கவலைப்படத் தேவையில்லை. சில நேரங்களில் மழை, மோசமான வானிலை போன்ற காரணங்களால் போட்டி பாதிக்கப்படுவது இயற்கையான ஒன்று. இயற்கை நிகழ்வுகளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

கூடுதலாக 12 முதல் 13 ஓவர்கள் வீசப்பட்டிருந்தால், சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம். சமீபத்தில் நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடரில் இருந்தே வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. பேட்டிங்கில் லட்சுமண், டிராவிட், ரெய்னா உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடினர். இக்கட்டான நிலையில் இவர்களது செயல்பாடு இந்திய அணிக்கு கைகொடுத்தது,'' என்றார்.

இன்று இந்திய அணி அறிவிப்பு - சந்தேகத்தில் சேவக்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணித் தேர்வு, இன்று சென்னையில் நடக்கிறது. காயம் காரணமாக துவக்க வீரர் சேவக் இடம் பெறுவது சந்தேகம்.

இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் (ஜூலை 21-ஆக.,18) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஜூலை 21ம் தேதி துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று சென்னையில் நடக்கிறது.

ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர், வெஸ்ட் இண்டீசில் உள்ள கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளட்சருடன் "வீடியோ கான்பரன்சிங்' முறையில் விவாதித்து அணியை தேர்வு செய்வர்.

வெஸ்ட்இண்டீஸ் தொடரில் இடம் பெறாத சச்சின், ஜாகிர் கான், காம்பிர், போன்ற முன்னணி வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவர் எனத்தெரிகிறது. ஆனால் அதிரடி துவக்க வீரர் சேவக்கின், காயத்தின் தன்மை குறித்து உறுதியான தகவல் எதுவும் வராததால், இவரது தேர்வு கேள்விக்குறியாக உள்ளது.

தேர்வுக் குழுவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத ஒருவர் கூறுகையில்,"" காம்பிர், ஜாகிர் கான் உடற்தகுதி குறித்து தான் தகவல் வந்துள்ளது. சேவக் காயம் குறித்து இதுவரை எவ்வித செய்தியும் எங்களுக்கு வரவில்லை. காம்பிர், சேவக்கிற்கு பதில் துவக்க வீரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் தான் எங்களுடைய தேர்வு. இவர்கள் சிறப்பாக விளையாடாதது ஏமாற்றம் தான்,'' என்றார்.

இதை பார்க்கும் போது, முதல் டெஸ்டில் சேவக் இடம் பெறுவது சந்தேகம். வரும் ஜூலை 29ல் நாட்டிங்காமில் துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஒருவேளை சேவக் பங்கேற்கலாம். சேவக் இல்லாத நிலையில் காம்பிருடன் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு, மீண்டும் முரளி விஜய்க்கு கிடைக்கலாம்.


ரெய்னா உறுதி:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில், அடுத்தடுத்து அரை சதம் அடித்துள்ள ரெய்னாவுக்கு இங்கிலாந்து தொடரில் இடம் உறுதி. மற்றொரு "மிடில் ஆர்டர்' இடத்துக்கு விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, யுவராஜ் சிங் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


இஷாந்த் "ஓ.கே':

பவுலிங்கை பொறுத்தவரையில் ஜாகிர் கானுடன், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா தேர்வாகலாம். நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஸ்ரீசாந்த், அபிமன்யு மிதுன் இடையே போட்டி காணப்படுகிறது. சுழலில் ஹர்பஜன், அமித் மிஸ்ரா இடம் பெறலாம்.

நோ-பாலில் அவுட்டான தோனி

பார்படாஸ் டெஸ்டில் இந்திய கேப்டன் தோனி, "நோ-பாலில்' அவுட்டானது தெரியவந்துள்ளது. இதற்கு "டிவி ரீப்ளேயில்' நேர்ந்த தவறு தான் காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.

இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், இந்திய அணிக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டன. விராத் கோஹ்லி (பந்து இடுப்பில் பட்டது), ரெய்னா (பந்து பேட்டில் படவில்லை), கேப்டன் தோனி ("நோ-பாலில்' அவுட்) ஆகியோருக்கு தவறான அவுட் கொடுக்கப்பட்டது.


மீண்டும் மோசம்:

தற்போது இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், பார்படாசில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 38 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் இணைந்த லட்சுமண், ரெய்னா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அப்போது 53 ரன்கள் எடுத்திருந்த ரெய்னாவுக்கு, பந்து தொடையில் பட்ட நிலையில் தவறாக "அவுட்' கொடுக்கப்பட்டது.


சந்தேகத்துக்குரிய "அவுட்':

இப்போட்டியின் 59வது ஓவரின் கடைசி பந்தை எட்வர்ட்ஸ் வீசினார். இதை தோனி (2 ரன்) "மிட் ஆன்' திசையில் தூக்கி அடித்தார். அதை அங்கு நின்றிருந்த சந்தர்பால் "கேட்ச்' செய்தார். இருப்பினும் எட்வர்ட்ஸ் வீசிய பந்து "நோ-பாலாக' இருக்கலாம் என்று, அம்பயர் இயான் கோல்டு சந்தேகப்பட்டார்.


"ரீப்ளேயில்' தவறு:

இதனால், தோனியை சற்று நிற்கச் சொல்லிவிட்டு, "டிவி' அம்பயரிடம் முறையிட்டார். இங்கு தான் தவறு ஏற்பட்டுள்ளது. அதாவது எட்வர்ட்ஸ் வீசிய சந்தேகத்துக்குரிய பந்தை "ரீப்ளே' செய்து பார்க்காமல், வேறொரு பந்துவீச்சை "ரீப்ளே'யில் காண்பித்துள்ளனர். அதில், எட்வர்ட்ஸ் "கிரீசுக்கு' வெளியே கால் வைக்கவில்லை. இதன்படி தோனிக்கு "அவுட்' தரப்பட்டது.

உண்மையில் தோனி அவுட்டான பந்து, "நோ-பால்' தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தவறுக்கு "ரீப்ளே' ஒளிபரப்பியவரே காரணம். இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோனி வெளியேறிய சிறிது நேரத்தில், பேட்டிங்கில் மற்றவர்களும் சொதப்ப, இந்திய அணி 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது. ஏற்கனவே "டி.ஆர்.எஸ்.,' முறை இல்லாமல், இந்திய அணி அதிகமாக பாதிக்கப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில் "ரீப்ளே' ஒளிபரப்பு செய்பவர்களும், தங்கள் பங்குக்கு இந்திய அணியை சோதிக்க துவங்கியுள்ளது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மொத்தம் 25.3 ஓவர்கள் மட்டும் தான் வீசப்பட்டது. மழையால் போட்டி நிறுத்தப்பட்ட போது, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, 103 ரன்கள் பின் தங்கியிருந்தது.