விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை

என்னைப் பற்றியும், எனது முடிவுகளைப் பற்றியும் கூறப்படும் விமர்சனங்களையும், குறைகளையும் நான் கண்டுகொள்வதில்லை என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை தோனி களம் இறக்கி வருவதும், அதற்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்த தோனி இவ்வாறு கூறினார்.


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக நாகபுரியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:


இந்திய அணியில் யார் எல்லாம் களம் இறங்குவார்கள் என்பதை இப்போதே கூறிவிட முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப எவரெல்லாம் களம் இறங்குவார்கள் என்பது போட்டி தொடங்கும் முன் முடிவு செய்யப்படும்.


யுவராஜ் சிங் சிறப்பாகப் பந்து வீசி வந்தாலும் அவரை முழுவதுமாக பந்து வீச்சாளராகப் பயன்படுத்த முடியாது. அது அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.

தேர்வு செய்யும் அணியை வைத்து எந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முடியுமோ அவ்வளவு சிறப்பாக ஆடுவோம் என்றார் தோனி.


லெக் ஸ்பின்னர் சாவ்லாவுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை களம் இறக்க வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூறியுள்ளது குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு, அடுத்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து நான் அதிகம் கவலைப்படுவது இல்லை. சாவ்லா விளையாடுவது சிறந்தது என்ற காரணத்தினாலேயே அவரைத் தொடர்ந்து களம் இறங்கவைத்து வருகிறேன்.

யுவராஜுக்கு திருமணம்

உலக கோப்பை கிரிக்கெட் விளையாடும் லெவன் அணியில் களமிறங்குவாரா அல்லது வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என, யுவராஜ் சிங் குறித்து அதிக குழப்பம் நிலவியது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இதில் பேட் செய்யவில்லை. பின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார்.

இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல.

உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.

சர்ச்சையைக் கிளப்பும் விதிமுறை

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டங்களுக்கு இணையாக பரபரப்பாக பேசப்படுவது யூடிஆர்எஸ் (Umpire Decision Review System) எனப்படும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை.


மைதானத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்தாலும், சந்தேகத்தின் பேரில் அதனை எதிர்த்து முறையீடு செய்ய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதே இந்த முறையின் சிறப்பு அம்சம். இது முழுக்க முழுக்க வீரர்களுக்கு சாதகமான அம்சம் என்றாலும், கேப்டன் தோனி, யுவராஜ் உள்பட பல வீரர்கள் இந்த முறை குழப்பத்தை ஏற்படுத்துவதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.


அதே நேரத்தில் இதற்கு வீரர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. யூடிஆர்எஸ் மூலம் முறையீடு செய்வதற்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி கோரிக்கை விடுத்துள்ளார். நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஸ்மித், ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா உள்ளிட்டோரும் யூடிஆர்எஸ் முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இந்த முறை, கத்தில் இருக்கும் நடுவர்களின் அதிகாரத்தை குறைக்கும் என்பதால் நடுவர் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.


இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அந்த அணி வீரர் பீட்டர்சனுக்கு யூடிஆர்எஸ் முறை மூலம் அவுட் கேட்டும் அது கிடைக்காததால், நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சம்பளத்தின் பெரும்பகுதியை அபராதத்தால் இழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.


மனிதத் தவறுகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீக்க முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டதுதான் யூடிஆர்எஸ். இந்த முறை மூலம் களத்தில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேனுக்கு நடுவர் அவுட் கொடுக்கும்போது, அதில் சந்தேகம் இருந்தால் அந்த வீரர் 3-வது நடுவரை அணுகமுடியும்.


அதே போல ஒரு வீரர் அவுட் இல்லை என்று நடுவர் அறிவித்தால், அதனை எதிர்த்து பீல்டிங் செய்யும் அணியினர் மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்ய முடியும். அவர் விடியோ மூலம் மீண்டும் ஆய்வு செய்து தனது முடிவை வழங்குவார். இரு அணி வீரர்களுமே நடுவரின் தீர்ப்பை எதிர்த்து இரண்டு முறை முறையீடு செய்ய முடியும்.

அவர்களது முறையீடு சரியாக இருந்து ஏற்கப்பட்டால் அவர்களுக்கான இரண்டு வாய்ப்புகளும் அப்படியே இருக்கும். முறையீடு தவறாக இருந்தால், ஒவ்வொரு முறையீடுக்கும் ஒரு வாய்ப்பு கழித்துக் கொள்ளப்படும்.


முக்கியமாக எல்பிடபிள்யூ, ரன் அவுட், ஸ்டம்பிங் ஆகிய முறையில் அவுட் செய்யப்படும்போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம்.


முன்பெல்லாம் மைதானத்தில் இருக்கும் நடுவர் அவுட் கொடுத்துவிட்டால், அது தவறு என்றாலும் பேட்ஸ்மேன்கள் அதனை ஏற்றுக் கொண்டு கண்டிப்பாக வெளியேற வேண்டும். இப்படி பலமுறை நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்த வீரர்கள் ஏராளம். அதே நேரத்தில் பேட்ஸ்மேன் அவுட் ஆகியிருந்தும், நடுவரால் அவுட் இல்லை என அறிவிக்கப்படும்போது, பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது வீரர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்த முறை அமலில் உள்ளது.


பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு முதன்முறையாக 2009 நவம்பர் 24-ம் தேதி நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


அதன்பிறகு இம்முறை சில நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலோடு பயன்படுத்தப்பட்டபோதும், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக 2011 ஜனவரியில் தான் (ஆஸ்திரேலியா-இங்கிலாந்துக்கு இடையிலான தொடர்) இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 2011 உலகக் கோப்பையில் யூடிஆர்எஸ் முறை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). உலகக் கோப்பையில் அமல்படுத்தப்பட்ட பின் ஒன்றிரண்டு ஆட்டங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


பெங்களூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதன்முறையாக சர்ச்சைக்குள்ளானது இந்த யூடிஆர்எஸ் முறை. இயன் பெல்லுக்கு எல்டபிள்யூ முறையில் அவுட் கேட்டு யூடிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுகியது இந்திய அணி. டி.வி. ரீபிளேயில் பந்து ஸ்டம்பை தாக்குவது உறுதிசெய்யப்பட்டபோதும், அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கெனவே இந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த கேப்டன் தோனி அதன்பின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


ஸ்டம்புக்கும், இயன் பெல் நின்ற இடத்துக்கும் இடையிலான தூரம் 2.5 மீட்டராக இருந்ததாலேயே அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அவருக்கு அவுட் கொடுக்கப்படாதது, ஆட்டத்தின் போக்கையே மாற்றியது, இந்தியா- இங்கிலாந்து இடையிலான அந்த ஆட்டம் "டை'யில் முடிந்தது.


இதனால் யூடிஆர்எஸ் முறை குறித்து தோனி தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதற்கு ஐசிசி உடனடியாக பதிலடி கொடுத்தது. யூடிஆர்எஸ் விதிமுறைகளை தோனி சரியாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஐசிசி கூறியது. இதையடுத்து தோனிக்கு ஆதரவாக களம் இறங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐசிசி-க்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.


இதனிடையே யூடிஆர்எஸ் விதியில் எல்பிடபிள்யூ முறையில் திடீரென மாற்றம் செய்துள்ளது ஐசிசி. இதுவரை ஸ்டெம்புக்கும் பேட்ஸ்மேன் பந்தை காலில் வாங்கும் இடத்துக்குமானதூரம் 2.5 மீட்டர் தூரம் என்று இருந்ததை 3.5 மீட்டர் என அதிகரித்துள்ளனர். இந்த மாற்றத்தின் பின்னணி என்ன என்பதும் தெரியவில்லை. கிரிக்கெட்டில் இதுவரை எந்த புதிய விதிமுறைகளும் இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்தது இல்லை.


இந்த சர்ச்சைகளுக்குப் பின் யூடிஆர்எஸ் விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே தனது பயணத்தைத் தொடர்கிறது யூடிஆர்எஸ்.

உலக கோப்பை தொடருக்கு சிக்கல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன. இப்போட்டிகளின் போது தாக்குதல் நடத்த அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மத்திய புலனாய்வு இயக்குனர், அனைத்து கடலோர மாநில உள்துறைச் செயலர், டி.ஜி.பி.,க்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.


இதில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலக கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாதிகள் இயக்கம், அடுத்த சில வாரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு புனே, ஜெர்மனி பேக்கரியில் தாக்குதல் நடத்திய ஜபைடுதீன் அன்சாரி மற்றும் அவரது சகாக்கள் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர்.


மும்பை மாதிரி:

இந்த தாக்குதலை 26/11 மும்பை சம்பவம் போல, நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதில் ஈடுபட உள்ள பயங்கரவாதிகள் சிலர், ஏற்கனவே இந்தியாவுக்குள் புகுந்து விட்டனர். மேலும் சிலர் இங்கு வருவதற்கு நேரம் பார்த்துக்கொண்டுள்ளனர்.

இதனால் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, எவ்வித மோசமான சம்பவமும் நடந்து விடாமல், தடுக்கும் வழிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் காரணமாக, ஏற்கனவே போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,"" பயங்கரவாத மிரட்டல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு வருகிறோம்.

தவிர, மாநில அரசுகளுடன், உள்ளூர் நிர்வாகங்கள் இணைந்து, வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்,'' என்றார்.

வலுவற்ற இந்திய சுழற் பந்துவீச்சு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை வரை 24 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.


தொடக்கத்தில் சில ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், மெல்ல மெல்ல பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.


இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 315 ஆட்டங்களில் விளையாடி 306 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி (4 ஆட்டங்களில் 15 விக்கெட்), உலகக் கோப்பையில்தான் முதல் முறையாக களம் கண்ட தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் (3 ஆட்டம், 11 விக்கெட்) ஆகியோர் பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர்.


ஒரு காலத்தில் சுழற் பந்துவீச்சு என்றாலே இந்தியாதான் என்ற நிலை இருந்தது. உலகப் புகழ்பெற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர்.


சுபாஷ் குப்தே (36 டெஸ்ட், 149 விக்கெட்), பிஷன் சிங் பேடி (67-266), சந்திரசேகர் (58-242), பிரசன்னா (49-189), வெங்கட்ராகவன் (57-156), அனில் கும்ப்ளே (132-619, 271 ஒரு தின ஆட்டம், 337 விக்கெட்), திலிப் தோஷி (33-114) போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர்.


இந்திய அணிக்கு புகழ் பெற்ற பல வெற்றிகளை அவர்கள் பெற்றுத் தந்துள்ளனர். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த இந்திய அணி, சுழற் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறையால் இப்போது திணறி வருகிறது.


ஹர்பஜன் அளவுக்கு புகழ் பெறாத மேற்கிந்தியத் தீவுகளின் சுலைமான் பென் (3 ஆட்டம், 8 விக்.), இங்கிலாந்தின் ஸ்வான் (4 ஆட்டம், 7 விக்.), கனடாவின் பாலாஜி ராவ் (4 ஆட்டம், 7 விக்.), தென் ஆப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சன் (3 ஆட்டம், 5 விக்.), அயர்லாந்தின் டாக்ரெல் (3 ஆட்டம், 5 விக்.), ஜிம்பாப்வேயின் ரேமண்ட் பிரைஸ் (3 ஆட்டம், 4 விக்.) ஆகியோர் கூட இந்த உலகக் கோப்பை போட்டியில் ஓரளவு முத்திரை பதித்துள்ளனர் என்றே சொல்லலாம்.


ஆனால், 2001-ல் ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைத்தவரும், 93 டெஸ்டுகளில் 393 விக்கெட்டுகளையும், 220 ஒரு தின ஆட்டங்களில் 248 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளவருமான ஹர்பஜன் சிங், இந்த உலகக் கோப்பையில் இதுவரை 3 ஆட்டங்களில் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.


அதுவும் அயர்லாந்துக்கு எதிராக அவரால் 9 ஓவர் வீசியும் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை; வங்கதேசத்துக்கு எதிராக ஒரே ஒரு விக்கெட் வீழ்த்தினார்.


மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான பியூஷ் சாவ்லா அயர்லாந்து (0-56), இங்கிலாந்துக்கு (2-71) எதிராக மிகவும் மோசமாகப் பந்துவீசினார் என்றே கூறலாம். 2008 ஜூலையில் பாகிஸ்தானுடனான ஆட்டத்துக்குப் பின் சுமார் இரண்டரை ஆண்டுகளில் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு ஆட்டத்தில் சாவ்லா பங்கேற்றுள்ளார்.


அவர் உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வானபோதே பலர் தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.


பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களான யுவராஜ் சிங் (அயர்லாந்து ஆட்டம் நீங்கலாக), யூசுப் பதான் ஆகியோரும் எதிர்பார்த்தபடி விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.


ஜாகீர் கான் தவிர மற்ற வேகப் பந்துவீச்சாளர்களும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்காத நிலையில், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமானால், சுழற் பந்துவீச்சாளர்களையே நம்பி உள்ளது.


அற்புதமான சுழற் பந்துவீச்சு பாரம்பரியத்துக்கு சொந்தமான இந்திய அணியின் இப்போதைய சுழற் பந்துவீச்சாளர்கள் இனிவரும் ஆட்டங்களிலாவது தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.