வலுவற்ற இந்திய சுழற் பந்துவீச்சு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை வரை 24 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.


தொடக்கத்தில் சில ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், மெல்ல மெல்ல பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.


இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 315 ஆட்டங்களில் விளையாடி 306 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி (4 ஆட்டங்களில் 15 விக்கெட்), உலகக் கோப்பையில்தான் முதல் முறையாக களம் கண்ட தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் (3 ஆட்டம், 11 விக்கெட்) ஆகியோர் பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர்.


ஒரு காலத்தில் சுழற் பந்துவீச்சு என்றாலே இந்தியாதான் என்ற நிலை இருந்தது. உலகப் புகழ்பெற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர்.


சுபாஷ் குப்தே (36 டெஸ்ட், 149 விக்கெட்), பிஷன் சிங் பேடி (67-266), சந்திரசேகர் (58-242), பிரசன்னா (49-189), வெங்கட்ராகவன் (57-156), அனில் கும்ப்ளே (132-619, 271 ஒரு தின ஆட்டம், 337 விக்கெட்), திலிப் தோஷி (33-114) போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர்.


இந்திய அணிக்கு புகழ் பெற்ற பல வெற்றிகளை அவர்கள் பெற்றுத் தந்துள்ளனர். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த இந்திய அணி, சுழற் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறையால் இப்போது திணறி வருகிறது.


ஹர்பஜன் அளவுக்கு புகழ் பெறாத மேற்கிந்தியத் தீவுகளின் சுலைமான் பென் (3 ஆட்டம், 8 விக்.), இங்கிலாந்தின் ஸ்வான் (4 ஆட்டம், 7 விக்.), கனடாவின் பாலாஜி ராவ் (4 ஆட்டம், 7 விக்.), தென் ஆப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சன் (3 ஆட்டம், 5 விக்.), அயர்லாந்தின் டாக்ரெல் (3 ஆட்டம், 5 விக்.), ஜிம்பாப்வேயின் ரேமண்ட் பிரைஸ் (3 ஆட்டம், 4 விக்.) ஆகியோர் கூட இந்த உலகக் கோப்பை போட்டியில் ஓரளவு முத்திரை பதித்துள்ளனர் என்றே சொல்லலாம்.


ஆனால், 2001-ல் ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைத்தவரும், 93 டெஸ்டுகளில் 393 விக்கெட்டுகளையும், 220 ஒரு தின ஆட்டங்களில் 248 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளவருமான ஹர்பஜன் சிங், இந்த உலகக் கோப்பையில் இதுவரை 3 ஆட்டங்களில் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.


அதுவும் அயர்லாந்துக்கு எதிராக அவரால் 9 ஓவர் வீசியும் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை; வங்கதேசத்துக்கு எதிராக ஒரே ஒரு விக்கெட் வீழ்த்தினார்.


மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான பியூஷ் சாவ்லா அயர்லாந்து (0-56), இங்கிலாந்துக்கு (2-71) எதிராக மிகவும் மோசமாகப் பந்துவீசினார் என்றே கூறலாம். 2008 ஜூலையில் பாகிஸ்தானுடனான ஆட்டத்துக்குப் பின் சுமார் இரண்டரை ஆண்டுகளில் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு ஆட்டத்தில் சாவ்லா பங்கேற்றுள்ளார்.


அவர் உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வானபோதே பலர் தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.


பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களான யுவராஜ் சிங் (அயர்லாந்து ஆட்டம் நீங்கலாக), யூசுப் பதான் ஆகியோரும் எதிர்பார்த்தபடி விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.


ஜாகீர் கான் தவிர மற்ற வேகப் பந்துவீச்சாளர்களும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்காத நிலையில், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமானால், சுழற் பந்துவீச்சாளர்களையே நம்பி உள்ளது.


அற்புதமான சுழற் பந்துவீச்சு பாரம்பரியத்துக்கு சொந்தமான இந்திய அணியின் இப்போதைய சுழற் பந்துவீச்சாளர்கள் இனிவரும் ஆட்டங்களிலாவது தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஏழு பேட்ஸ்மேன் பார்முலா தொடரும்

ஐந்தாவது பவுலர் வேலையை "பார்ட் டைம்' பவுலர்கள் பார்த்துக்கொள்வர். இதனால் ஏழு பேட்ஸ்மேன்களுடன் இன்று களமிறங்குவோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை இரண்டு உலக கோப்பை லீக் போட்டிகள் நடந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நான்கு இன்னிங்சில், அனைத்து அணிகளும் 326 ரன்களுக்கு மேல் குவித்தது. இதனால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக பெங்களூரு மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில், அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:

பெங்களூரு மைதானம் ஒளிவெள்ளத்தில் பேட்டிங் செய்ய சிறப்பாக உள்ளது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது, பந்து பேட்டிற்கு நன்றாக வருகிறது. சுழலுக்கும் சற்று ஒத்துழைப்பதால், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதில்லை.

பொதுவாக இந்தியாவில் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இல்லை. இது மோசமானது. பந்துவீச்சில் திருப்பம் ஏற்படும் நிலை இருக்கும் போது, வேகப்பந்துக்கு சாதகமாக எதிர்பார்க்க முடியாது.


பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:

இன்று பந்து வீச்சில் திருப்பம் ஏற்படுமா இல்லையா என்பதை சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் கடைசியாக இங்கு நடந்த 2 போட்டிகளில் 1300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டன. இன்றும், இதுபோல அதிக ரன்கள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். ஏனெனில் இங்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.


ஐந்தாவது பவுலர்?

ஐந்து பவுலர்களுடன் களமிறங்குவது என்பது தேவையில்லாதது. நமது பலத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அணிக்கு 30 ரன்கள் போதவில்லை என்ற நிலையில், யூசுப் பதான் அணியில் இருந்தால், அவரும் யுவராஜ் சிங்கும் சேர்ந்து ஐந்தாவது பவுலர் பணியை செய்வார்கள். இந்நிலையில் ஏழு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம்.

இந்திய அணியின் பவுலர்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால், அப்புறம் எல்லாம் மாறிவிடும். இருப்பினும், பேட்ஸ்மேன்கள் முழு அளவில் திறமை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அணியில் அனைவரும் ரன்கள் குவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது.


கோஹ்லிக்கு பாராட்டு:

யுவராஜ் நான்காவது இடத்தில் களமிறங்க விரும்புகிறார். இந்த இடத்தில் வரும் விராத் கோஹ்லி, வேக மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தவிர, 5, 6 அல்லது 7வது இடமாக இருந்தாலும் திறமையாக விளையாடுகிறார். ஆனால் நேரத்துக்கு ஏற்ப ரன்விகிதத்தை அதிகரிக்க யுவராஜ், யூசுப் பதானை களமிறக்கலாம்.


அஷ்வினுக்கு வாய்ப்பு?

அயர்லாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளனர். இதனால் ஹர்பஜன், யூசுப் பதான் போன்றவர்கள் இருந்தாலும், கூடுதல் "ஆப்' ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய முடிவு ஏற்பட்டுள்ளது. சாவ்லா கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும், அவர் முக்கிய நேரங்களில் உதவுவார். அதேநேரத்தில் அஷ்வினும் இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, முதல் 10 ஓவர்கள் கூட பவுலிங் செய்யச் சொல்லலாம்.


பலவீனமானது அல்ல:

உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் எந்த அணியையும், பலவீனமானது என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை. இதனால், அயர்லாந்துக்கு எதிராக தவறு செய்யமாட்டோம். இந்த அணியின் கெவின் ஓ பிரையன், இங்கிலாந்துக்கு எதிராக நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமக்கு எதிராக இப்படி விளையாட மாட்டார் என்று நம்புகிறேன். இவரை மீண்டும் ரன் அவுட்டாக்க முயற்சிப்போம்.
இவ்வாறு தோனி கூறினார்.


உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

""ரசிர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்,'' என, கேப்டன் தோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" வங்கதேச தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

பதிலடி கொடுக்குமா இலங்கை?

உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணி, இலங்கையை சந்திக்கிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை பைனலில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி தயாராக உள்ளது.

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.


பதிலடி வாய்ப்பு:

கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வீழ்த்தியது. இலங்கை அணி, இம்முறை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருப்பதால், கடந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், இலங்கை அணி காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.


"டாப்-ஆர்டர்' பலம்:

இலங்கை அணியின் "டாப்-ஆர்டர்' பலமாக காட்சி அளிக்கிறது. துவக்க வீரர்களாக உபுல் தரங்கா, தில்ஷன் சாதிக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம். கடந்த மூன்று போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் சங்ககரா, தனது "பார்மை' தக்க வைத்துக் கொள்ளும் பட்சத்தில், "மிடில்-ஆர்டரில்' விக்கெட் வீழ்ச்சியை தவிர்க்கலாம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சோபிக்கத் தவறியதால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் மகிலா ஜெயவர்தனா, சமரவீரா உள்ளிட்டோர் இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களை தவிர "ஆல்-ரவுண்டர்' மாத்யூஸ், சமர சில்வா உள்ளிட்டோரும் அதிரடி காட்டினால் கூடுதல் பலம்.


மலிங்கா நம்பிக்கை:

கென்யாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சாதனை படைத்த இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர், இன்றும் அசத்தலாக செயல்படும் பட்சத்தில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாகிவிடும்.

இவருக்கு குலசேகரா, பெரேரா, மாத்யூஸ் உள்ளிட்ட சக வேகங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது. சுழலில் அனுபவ முரளிதரன் இருப்பது பலம். கடந்த போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்காத இவர், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் வேட்டை நடத்த வாய்ப்பு உள்ளது. இவருடன், அஜந்தா மெண்டிஸ், ஹெராத், தில்ஷன் உள்ளிட்ட சக சுழற்பந்துவீச்சாளர்களும் இணைந்து மிரட்டலாம்.


"ஹாட்ரிக்' வாய்ப்பு:

ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்ள இருப்பது சவாலான விஷயம். இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், "ஹாட்ரிக்' வெற்றி பெற்று, காலிறுதி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தவிர, பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து 25வது வெற்றியை பதிவு செய்து புதிய வரலாறு படைக்கலாம்.


வாட்சன் எதிர்பார்ப்பு:

ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அரைசதம் கடந்து சூப்பர் துவக்கம் கொடுத்த "ஆல்-ரவுண்டர்' ஷேன் வாட்சன், இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு பிராட் ஹாடின் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம்.

பாண்டிங், மைக்கேல் கிளார்க் உள்ளிட்டோர் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தினால் நல்லது. "மிடில்-ஆர்டரில்' காமிரான் ஒயிட், டேவிட் ஹசி சாதிக்கும் பட்சத்தில் இலங்கை மண்ணில் ரன் மழை பொழியலாம்.


ஜான்சன் அபாரம்:

கடந்த இரண்டு போட்டியில் எட்டு விக்கெட் வீழ்த்தி உள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன், இன்றும் தனது விக்கெட் வேட்டையை தொடர வாய்ப்பு உள்ளது. இவருடன் அனுபவ பிரட் லீ இணைவது வேகப்பந்துவீச்சின் பலத்தை அதிகரித்துள்ளது.

டெய்ட், வாட்சன் உள்ளிட்ட வேகங்கள், "மிடில்-ஓவரில்' துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில், இலங்கை அணியின் ரன் வேட்டையை தடுக்கலாம். சுழலில் கிரெஜ்ஜா நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு ஸ்டீவன் ஸ்மித் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு சிக்கலாகிவிடும்.

இரு அணிகளிலும் பேட்டிங், பவுலிங்கில் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை இன்று எதிர்பார்க்கலாம்.

என்ன செய்கிறார் டிராவிட்?

கடந்த 2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்த கங்குலி, கும்ளே இம்முறை வேறு பணிகளில் "பிசி'யாக உள்ளனர். ஆனால், டிராவிட் மட்டும் "டிவி'யில் போட்டிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. 2003 உலக கோப்பை தொடரில் இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் சென்றார். 2007ல் சாதாரண வீரராக களமிறங்கினார்.

ஓய்வு பெற்ற இவரை, ஐ.பி.எல்., தொடரில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இருப்பினும் அபார கிரிக்கெட் அறிவு கொண்ட இவர், இம்முறை வர்ணணையாளராக தனது பணியை தொடர்கிறார். கட்டுரைகள் எழுதுவது, "டிவி' விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.

சுழல் ஜாம்பவான் கும்ளே, பெங்களூரு ஐ.பி.எல்., அணியின் ஆலோசகராகி விட்டார். தவிர, கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான இவர், பெங்களூருவில் போட்டிகளை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். உலக கோப்பை தொடர் குறித்து கட்டுரைகள் எழுதுவதிலும் தனது நேரத்தை செலவிடுகிறார்.


டிராவிட் பரிதாபம்:

ஆனால், கடந்த உலக கோப்பை தொடரில் அணியின் கேப்டனாக களமிறங்கிய டிராவிட்டின் நிலை தான் பரிதாபமாக உள்ளது. இந்திய அணியின் "சுவர்' என்று அழைக்கப்பட்ட இவர், பெங்களூரு ஐ.பி.எல்., அணியில் இருந்து, ராஜஸ்தான் அணிக்கு மாறினார்.

"டிவி'யில் வர்ணணை செய்யவோ, கட்டுரை எழுதும் பணியிலோ ஈடுபடவில்லை. மாறாக, வீட்டில் அமைதியாக உட்கார்ந்து "டிவி' யில் உலக கோப்பை போட்டிகளை கண்டு களித்து வருகிறார்

பலவீனமான இந்திய பவுலிங்

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடுகையில், பவுலர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. பவுலிங் மிகவும் பலவீனமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது,''என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை பெற்றுத் தந்தவர் கபில் தேவ். இதற்கு பின் இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு லீக் போட்டியில் நமது பவுலர்கள் ஏமாற்றினர்.

முதல் போட்டியில் பலம்குன்றிய வங்கதேச அணி 283 ரன்கள் எடுத்தது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. இதனால், இந்திய வெற்றி நழுவியது. இது குறித்து கபில் தேவ் அளித்த பேட்டி:

இந்திய அணியின் பவுலிங் மிகவும் பலவீனமாக உள்ளது. இதனை நான் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடுகையில், பவுலர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது. உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிராக 338 ரன்களை எடுத்த போதும், போட்டி "டை' ஆனது இது மிகுந்த மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

இதற்காக பவுலர்களை விமர்சிக்க விரும்பவில்லை. இவர்களால் சிறப்பாக பந்துவீச முடியாது என்று கூற இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். என்னை பொறுத்தவரை அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றதாக குறிப்பிடுவேன்.


அதிரடி மாற்றம்:

தற்போது, கிரிக்கெட் அரங்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 434 ரன்கள் எடுத்தும், ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை காண முடிந்தது. எனவே, நல்ல விஷயங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


வேகம் இல்லை:

உலக கோப்பை தொடர் நடக்கும் இந்த நேரத்தில், இந்திய அணியில் அதிவேகப்பந்துவீச்சாளர் இல்லை என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை. சச்சின், சேவக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்ரிக்க அணிகளில் காண முடியவில்லை. எனவே, நம்மிடம் இருப்பது, மற்றவர்களிடம் இல்லை.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது. எதிர்காலத்தில் "சூப்பர் பாஸ்ட்' பவுலர்கள் இரண்டு பேர் தேவை என்றால், அதற்காக திட்டம் வகுக்க வேண்டும்.


ஆர்வம் வேண்டும்:

ஒவ்வொருவரும் சச்சின், சேவக் அல்லது தோனியாக வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சிலராவது வேகப்பந்துவீச்சாளராக ஆர்வம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகள் கும்ளே போல் அல்லாமல் சச்சின் மாதிரி வர வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இந்திய அணியின் வெற்றி நாயகர்களில் கும்ளேவும் ஒருவர் என்பதை மறந்து விடுகின்றனர்.


வீண் நெருக்கடி:

ஐ.சி.சி., நடத்தும் முக்கிய தொடர்களில், போட்டிகளின் முடிவை தான் நம்மவர்கள் அதிகம் நினைக்கின்றனர். இதன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டு, சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. இந்த நெருக்கடியில் இருந்து விடுபடும் போது தான் வெற்றிப் பாதையை கண்டு கொள்ள முடியும். தற்போதைய உலக கோப்பை தொடரில் குறிப்பிட்ட அணிக்கு தான் வாய்ப்பு என்று உறுதியாக கூற முடியாது. எந்த ஒரு அணியும் முழுமையாக ஆதிக்கம் செலுத்த இயலாது.


தவறான முடிவு:

அடுத்த உலக கோப்பை தொடரில் கத்துக் குட்டி அணிகள் நீக்கப்படும் என்ற ஐ.சி.சி., முடிவு தவறானது. இது, கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சிக்கு தடையாக அமையும். அனுபவம் இல்லாத அணிகளோடு மோதும் போட்டிகள், முன்னணி அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக அமைகின்றன.

என்னை பொறுத்தவரை கத்துக்குட்டி அணிகள் மற்றும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் "பி' அணிகள் பங்கேற்கும் இன்னொரு உலக கோப்பை தொடரை நடத்த வேண்டும்.
இவ்வாறு கபில் தேவ் கூறினார்