11 பேர் அணியில் இடம் பெறுவது யார்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதே தற்போது அதிக எதிர்பார்ப்பாக உள்ளது. தொடக்க வீரர்களான தெண்டுல்கரும், ஷேவாக்கும் களம் இறங்குவார்கள்.

3-வது வீரராக காம்பீரும், 4-வது வீரராக யுவராஜ்சிங்கும், 5-வது வீரராக கேப்டன் டோனியும் களம் இறங்குவார்கள். 6-வது 7-வது வீரருக்கு போட்டி உள்ளது. வீராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, யூசுப்பதான் ஆகியோர் இந்த வரிசையில் இடம்பெறுவார்கள்.

இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் யூசுப்பதான் 7-வது வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடி “சதம்” அடித்தார். இதனால் யூசுப்பதான் இடம் பெறுவது உறுதியாகி விட்டது.

அவர் 7-வது வீரராக களம் இறங்குவார். 6-வது வீரருக்கான இடத்தில் கோக்லி, ரெய்னாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதை சுரேஷ் ரெய்னாவே ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

11 பேர் கொண்ட அணியில் யார் இடம்பெறுவது என்பது தொடர்பாக எனக்கும், வீராட் கோக்லி மற்றும் யூசுப்பதானுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. என்னை பொறுத்த வரை இந்திய அணி வெற்றி பெறு வதுதான் மிகவும் முக்கியம்.

அணியில் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். 6 மற்றும் 7-வது வீரராக ஆடி நான் 25-30 ரன் வரை எடுத்து இருக்கிறேன். ஆனால் இதை விட பெரிய ஸ்கோரை எடுக்க முடியும் என்று எனக்கு தெரியும்.

உலக கோப்பை போட்டியில் மிகப்பெரிய ரன்னை குவிக்க ஆவலுடன் இருக்கிறேன். உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெறுவது மிகப்பெரிய வாய்ப்பு. எந்த ஒரு வீரருக்கும் உலக கோப்பையில் ஆடுவது கனவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கோப்பை வெல்ல வேண்டாம்

ஒவ்வொரு அணியும் கோப்பை வெல்ல வேண்டும் என, அந்தந்த தேசத்தின் பத்திரிகைகள் வாழ்த்துகின்றன. ஆனால், இலங்கை அணி கோப்பை வெல்ல வெல்ல வேண்டாம் என்று, அந்நாட்டு பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள விளையாட்டு நிர்வாகங்களில் மிகவும் பணக்கார அமைப்பாக இருப்பது இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,). இதன் தலைவராக டி சில்வா இருந்து வருகிறார். எஸ்.எல்.சி.,யில் நிர்வாகிகள் தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து இலங்கையின் முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரத்னாயகே கூறுகையில்,"" அதிகளவில் ஊழல்கள் நடப்பதில் முதல் நிர்வாகம் எஸ்.எல்.சி.,க்கு தான்,'' என்றார்.

இந்நிலையில் <உலக கோப்பை தொடர் குறித்து இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில்,"" இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக கோப்பை வெல்லக்கூடாது,'' என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இதன் செய்தி ஆசிரியர் ரஸ்சல் பாலிபேன் கூறுகையில்,"" என்னை துரோகி என்று கூறினாலும் சரி, காட்டி கொடுப்பவன் என்றாலும் சரி, இதற்காக என்னை பிடித்துச் சென்று தூக்கில் கூட போடுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இலங்கை அணி கோப்பை வெல்லக் கூடாது.

ஒருவேளை கோப்பை வென்றால் என்ன நடக்கும், சற்று நினைத்துப்பாருங்கள், தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாகிகளே தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள். ஏனெனில், அவர்களது நிர்வாகத் திறமையால் தான் உலக கோப்பை வெல்ல முடிந்தது என்று கூறுவார்கள்,'' என்றார்.

சச்சினுக்காக உலக கோப்பை - ஸ்டீவ் வாக் எதிர்ப்பு

சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்திய அணியின் தவறான அணுகுமுறை. தனிப்பட்ட நபருக்காக அல்லாமல் நாட்டு மக்களுக்காக கோப்பை வெல்ல வேண்டும்'' என, ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு 1999ல் உலக கோப்பை வென்று தந்தவர் ஸ்டீவ் வாக். தற்போதைய தொடரில், சச்சினுக்காக கோப்பை வெல்ல வேண்டும் என அனைத்து இந்திய வீரர்களும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியது:

எந்த ஒரு தனிநபரையும் விட விளையாட்டு என்பது பெரியது. தேசிய அணியில் பங்கேற்கும் வீரர்கள், ஒரு வீரருக்காக கோப்பை வெல்ல வேண்டியதில்லை.

இது சரியான அணுகுமுறை அல்ல. இந்த தொடரில் சச்சின், நட்சத்திர வீரராக பிரகாசிக்க முடியாமல் போகலாம். ஆனால், முக்கியமான நேரங்களில் இவர் தான் உபயோகமாக இருப்பார்.

இம்முறை கோப்பை வெல்வதற்காக, அனுபவம் வாய்ந்த இந்திய அணி, நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இவர்களிடையே போராட்ட குணத்தை வளர்த்ததில் பயிற்சியாளர் கிறிஸ்டனுக்கு முக்கிய பங்குள்ளது.

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் இத்தொடர், ரசிகர்கள் இடையே ஒருநாள் போட்டிக்கு தீவிர ஆர்வத்தை கொண்டு வரும். இது இந்திய அணி கோப்பை வெல்வதை பொறுத்து முடிவாகும்.

தொடரின் முதல் சில போட்டிகளின் முடிவுகளை வைத்து எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை. பனிப்பொழிவு இருப்பதால், காலிறுதி போன்ற நிலையில், "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

ஒரு லட்சம் ரன்கள்

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடரில், மொத்தம் 303 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 27616.4 ஓவர்கள் வீசப்பட்டு 1,24,967 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. தவிர, 4247 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.


இதுவரை நடந்த உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட ரன், விக்கெட் விபரம்:


ஆண்டு போட்டி ரன் விக்கெட்

1975 15 6162 208

1979 14 5168 202

1983 27 12046 408

1987 27 12522 385

1992 39 15107 514

1996 36 15225 474

1999 42 16963 597

2003 52 20441 734

2007 51 21333 725

மொத்தம் 303 124967 4247



103 சதம்

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடரில், 67 பேட்ஸ்மேன்கள் இணைந்து மொத்தம் 103 சதம் அடித்துள்ளனர். இதில் இந்தியாவின் சச்சின், கங்குலி, ஆஸ்திரேலியாவின் மார்க் வாக், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் அதிகபட்சமாக தலா 4 சதம் அடித்துள்ளனர்.


ஒவ்வொரு உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட சதம் விவரம்:


ஆண்டு போட்டி சதம்

1975 15 6

1979 14 2

1983 27 8

1987 27 11

1992 39 8

1996 36 16

1999 42 11

2003 52 21

2007 51 20

மொத்தம் 303 103


* கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹைடன் 66 பந்தில் சதம் கடந்தார். இது உலக கோப்பை அரங்கில் எடுக்கப்பட்ட அதிவேக சதம். கடந்த 1979ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிரீனிட்ஜ், 173 பந்தில் 106 ரன்கள் எடுத்தார். இது உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட ஆமைவேக சதம்.

* வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு (102 ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 1975), விவியன் ரிச்சர்ட்ஸ் (138* ரன், எதிர்-இங்கிலாந்து, 1979), இலங்கையின் அரவிந்த டி சில்வா (107* ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 1996), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (140* ரன், எதிர்-இந்தியா, 2003), கில்கிறிஸ்ட் (140 ரன், எதிர்-இலங்கை, 2007) உள்ளிட்டோர் உலக கோப்பை பைனலில் சதம் கடந்த வீரர்கள்.

* உலக கோப்பை அரங்கில், முதல் சதத்தை பதிவு செய்தவர் இங்கிலாந்தின் டெனிஸ் அமிஸ். இவர், கடந்த 1975ல் இந்தியாவுக்கு எதிராக 137 ரன்கள் எடுத்தார்.


உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட சாதனை சதம்:


சதம் வீரர் ரன் எதிரணி ஆண்டு

முதல் அமிஸ் (இங்கிலாந்து) 137 இந்தியா 1975

25வது ரிச்சர்ட்ஸ் (வெ.இ.,) 110 பாக்., 1987

50வது மார்க் வாக் (ஆஸி.,) 110 நியூசி., 1996

75வது வான் நூர்ட்விஜ் (நெதர்லாந்து) 134* நமீபியா 2003

100வது ஹைடன் (ஆஸி.,) 103 நியூசி., 2007

தொடர்ந்து விளையாடுவேன் - கங்குலி பல்டி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேன். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து விளையாடுவேன்,'' என, கங்குலி திடீரென தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி (38). கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், இந்தியாவில் நடக்கும் முதல் தர போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

பின், ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், "கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணியில் இடம் பிடித்து, கேப்டனாக செயல்பட்டார். மூன்று ஐ.பி.எல்., தொடரில், 40 போட்டிகளில் பங்கேற்று, 7 அரைசதம் உட்பட 1031 ரன்கள் எடுத்துள்ளார்.


ஒதுக்கப்பட்ட தாதா:

தாதா என்று கோல்கட்டா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவரை, நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், கோல்கட்டா உட்பட எந்த ஒரு அணியும் தேர்வு செய்ய முன்வரவில்லை. கொச்சி அணி கங்குலியை தேர்வு செய்ய முன்வந்த போதும், பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐ.பி.எல்., போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.


ஓய்வு அறிவிப்பு:

இதுகுறித்து ஆங்கில "டிவி' சானலுக்கு கங்குலி அளித்த பேட்டியில்,"" ஐ.பி.எல்., உட்பட அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போகிறேன். எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராகும் திட்டம் உள்ளது,'' என, தெரிவித்து இருந்தார்.


திடீர் மறுப்பு:

இந்நிலையில் தனது ஓய்வு செய்திக்கு கங்குலி திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறியது:

கடந்த தொடரில் நான் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தேன். எனது வயதுள்ள கில்கிறிஸ்ட், டிராவிட், லட்சுமண் ஆகியோர் இன்னும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று தெரியவில்லை.

கொச்சி அணியில் இருந்து என்னை அணுகினர். நானும் இதற்கு சம்மதித்து இருந்தேன். ஆனால் இதற்குரிய விதியை திருத்தவில்லை.

கிரிக்கெட் விதிப்படி பழைய சாதனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் என்னை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், திறமை அடிப்படையில் இல்லாமல், பல்வேறு காரணங்களுக்காக, என்னை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டனர்.

இதனால் தான், இந்த ஐ.பி.எல்., தொடரில் தான் விளையாட முடியாது என்று தெரிவித்து இருந்தேன். ஒருவேளை ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன். மற்றவகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன்.

இதுகுறித்து நான் சொன்ன செய்திகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.