உலக கோப்பை: சச்சினுக்கு கவுரவம்

உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரின் விளம்பர தூதராக, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நியமித்துள்ளது.

இந்தியா-இலங்கை-வங்கதேச நாடுகள் இணைந்து, அடுத்த ஆண்டு (பிப்.,19-ஏப்.,2) உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், இத்தொடருக்கான விளம்பர தூதராக இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று நியமனம் செய்தது.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூன் லார்கத் கூறுகையில், "" சச்சினை, வரும் 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதராக நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு, இவரை தவிர வேறு யாரும் பொறுத்தமானவர்களாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

இவர் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் ரோல் மாடலாக விளங்குகிறார். இது இவரது சிறப்பம்சம்,'' என்றார்.

சொந்த மண் பெருமிதம்:


இது குறித்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறுகையில், ""அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஏனெனில் இதில் பங்கேற்பதன் மூலம், அதிக முறை உலக கோப்பை தொடரில் (6 முறை) விளையாடிய பெருமையை, முன்னாள் பாகிஸ்தான் வீரர் மியான்தத்துடன் பகிர்ந்து கொள்வேன்.

தவிர, இம்முறை உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டங்களில் நடக்கிறது. சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு கோப்பை வென்று தர ஆவலோடு உள்ளேன். சொந்த மண்ணில் நடக்கும் இத்தொடருக்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது பெருமிதம் அளிக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், உலக கோப்பை தொடர் மிகவும் உயர்ந்தது. இதில் பங்கேற்க ஒவ்வொரு வீரரும் விரும்புவார்கள்,'' என்றார்.

சச்சின் ரகசியம்

கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் சச்சின். இதன் ரகசியம் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறேன்,'' என, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த வில்வித்தை நட்சத்திரம் தீபிகா குமாரி. சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அடுத்து, சீனாவின் குவாங்சு நகரில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டிலும்(நவ. 12-27) தங்கப்பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.

இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர், இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் குறித்து வியப்பு தெரிவிக்கிறார். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருவதன் ரகசியம் பற்றி, அவருடன் பேச விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தீபிகா கூறியது:

நான் சிறுவயதில் இருந்தே சச்சினின் ரசிகை. எனது "ரோல் மாடலாக' அவரை தான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவ்வளவு நீண்ட காலம் விளையாடுவதன் ரகசியம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். கிரிக்கெட்டை போல, வில்வித்தையில் சாதிக்கவும் அதிக கவனம் தேவை.

மிகுந்த ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். இது தொடர்பாக சச்சின் எனக்கு வழிகாட்ட வேண்டும். அவரிடம் இருந்து நிறைய ஆலோசனைகள் பெற விரும்புகிறேன். அவரை சந்தித்து மிக நீண்ட நேரம் பேச ஆசைப்படுகிறேன்.

ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்ல கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனாலும், சீனாவின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப பக்குவப்படுத்திக் கொள்ள போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. இது எனது செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு தீபிகா குமாரி கூறினார்.

சுழல் பந்துவீச்சில் சூரர்

30 வயது நிறைவடைந்த பின்னர் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை விளையாடிய ஒரே இந்திய வீரர் திலீப் ரசிக்லால் தோஷி.

1947-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிறந்தவர் திலீப் தோஷி. இளமை முதலே கிரிக்கெட் விளையாடினாலும், குஜராத் மாநில அணிக்காக விளையாடினாலும் தேசிய அணிக்கு அவர் தேர்வானது 30 வயதுக்குப் பின்னர்தான்.

இருந்தபோதும் தனது விடாமுயற்சியில் அணியில் நீண்ட நாள் இடம்பிடித்து விளையாடினார்.

இடது கை ஆட்டக்காரரான திலீப் தோஷி, சிறந்த சுழல் பந்துவீச்சாளர் வரிசையில் இடம்பிடித்தவர். இவரது அபாயகரமான சுழல்பந்துவீச்சு எந்த அதிரடி பேட்ஸ்மேனையும் நிலைகுலையச் செய்யும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் தோஷி அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதைத் தொடர்ந்து இதே தொடரில் மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி கண்டது.

இந்தப் போட்டியிலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்டார்.

இதே தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் கொல்கத்தா ரசிகர்கள் இவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

பின்னர் கொல்கத்தாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார் திலீப் தோஷி.

தோஷியின் துல்லியமான பந்துவீச்சு அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அதோடு இந்திய அணிக்கு வரிசையான வெற்றிகளையும் அள்ளிக் கொடுத்தது.

30 வயதுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 100 விக்கெட்டுகள் எடுத்த 2-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தோஷி. இதற்கு முன்பு கிளாரி கிரிம்மெட் இந்த சாதனையைச் செய்திருந்தார்.

தோஷி 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 6 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6வி-102.

15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறந்த பந்துவீச்சு 4வி-30.

1979 முதல் 1983-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார் தோஷி

சிறந்த துவக்க ஆட்டக்காரர்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் சடகோபன் ரமேஷ்.

1975-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சிறுவயது முதலே கிரிக்கெட் ஈடுபாடு கொண்டிருந்ப் சடகோபன் ரமேஷ் படிப்படியாக பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார். சடகோபன் ரமேஷ் இடதுகைவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமிழக அணியில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணிக்குத் தேர்வானார். மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிரான போட்டியில் அவர் சதமடித்து தேர்வாளர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

அதுமட்டுமல்லாமல் அப்போது இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்த கே. ஸ்ரீகாந்தின் ஆலோசனையின் பேரில் தேசிய அணிக்குத் தேர்வு பெற்றார்.

முதல் ஆட்டமே பாகிஸ்தான் அணியுடன் ஆடினார். வக்கார் யூனுஸ், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் வீசிய பந்துகளை எதிர்கொண்டு அற்புதமாக விளையாடினார். முதல் இன்னிங்ஸில் 41 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.

அதைத் தொடர்ந்து வந்த போட்டிகளில் அபாரமாக ஆடி 2 சதங்களையும் அடித்தார். ஆனால் அதன் பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு சடகோபன் ரமேஷ் பரிமளிக்கவில்லை. இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின்போது 5 இன்னிங்ஸ்களில் அவர் சரியாக விளையாடவில்லை. 5 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதற்கு அடுத்து ஒரு இன்னிங்ஸில் மட்டுமே 50 ரன் எடுத்தார்.

அவரது மோசமான புட்வொர்க் காரணமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தார். இதன்பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதேபோலவே ஒரு நாள் போட்டி அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,367 ரன்கள் சேர்த்துள்ளார் ரமேஷ். இதில் 2 சதங்களும், 8 அரை சதங்களும் அடங்கும். சராசரி 37.97. அதிகபட்ச ஸ்கோர் 143.

24 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 646 ரன்களை எடுத்துள்ளார். அதில் 6 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 82.

மேலும் ஒரு நாள் போட்டிகளில் ஒரே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்திய பந்துவீச்சாளர்களில் யாருக்குமே இல்லாத பெருமை சடகோபன் ரமேஷுக்கு உண்டு. ஒருநாள் போட்டிகளில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த சாதனைதான் இது. இதுவரை இந்தச் சாதனையை வேறு எந்த இந்திய வீரரும் நிகழ்த்தியதில்லை. மேற்கிந்தியத் தீவு வீரர் நிக்ஸன் மெக்லீனின் விக்கெட்தான் அது. அதுவே அவருக்கு கடைசி விக்கெட்டாகவும் அமைந்தது. இப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

கிரிக்கெட் புரட்சியில் அனில் கும்ளே

கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் அனில் கும்ளே போட்டியிட இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வருகை, கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவராக தற்போது மைசூர் மன்னரும் அரசியல் பிரமுகருமான ஸ்ரீகாந்ததத்தா உடையார் உள்ளார். செயலராக முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் இருக்கிறார். இவர்கள், தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.


இந்தச் சூழலில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதில், உடையார் செல்வாக்கை முறியடிக்க பிரிஜேஷ் படேல் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த மும்மூர்த்திகளான கும்ளே, வெங்கடேஷ் பிரசாத், ஸ்ரீநாத் ஆகியோரை களமிறக்குகிறார். இம்முறை பிரிஜேஷ் போட்டியிடவில்லை.


இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் கும்ளே, தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். துணை தலைவர் பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத் மற்றும் செயலர் பொறுப்புக்கு ஸ்ரீநாத் போட்டியிடுகின்றனர். மற்றொரு கர்நாடக வீரரான டிராவிட் தற்போது விளையாடி கொண்டிருக்கிறார். இவருக்கும் நிர்வாகத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் முன்னாள் வீரரான குண்டப்பா விஸ்வநாத்தை, உடையார் வீழ்த்தினார். எனவே, இவரை சமாளிப்பது எளிதான காரியம் அல்ல.


தோல்வி வரலாறு:கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் வீரர்கள் போட்டியிட்டு தோல்வி அடைந்த வரலாறு உண்டு. கடந்த 2000ல் அரியானா கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கபில் தேவ், ரன்பிர் சிங் மகேந்திராவிடம் தோல்வி அடைந்தார். 2001ல் நடந்த மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், சரத் பவாரிடம் வீழ்ந்தார். எனவே, கும்ளே மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்த வேண்டும்.


இவரை போன்ற சிறந்த வீரர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில் காலடி எடுத்து வைப்பது, நாட்டின் மற்ற கிரிக்கெட் சங்கத்திலும் புரட்சியை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு விடை கொடுத்து விட்டு, கிரிக்கெட் வீரர்களே நிர்வாகத்திலும் பங்கு வகிக்க வழி வகுக்கும்.


இரு பதவிகள்:தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக கும்ளே உள்ளார். இதே போல ஐ.சி.சி., "மேட்ச் ரெப்ரி'யாக ஸ்ரீநாத் உள்ளார். இப்படி முக்கிய பணிகளில் இருக்கும் போது, கர்நாட கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு இவர்களால் போதிய நேரம் ஒதுக்க முடியாது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கும்ளே கூறியது:


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற நிலையில், கிரிக்கெட் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். நாட்டின் "நம்பர்-1' அணியாக கர்நாடகாவை மாற்ற வேண்டும். இங்கிருந்து நிறைய வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கு அடிமட்ட அளவில் நிறைய மாற்றங்களை செய்வது அவசியம். பள்ளி மற்றும் கிளப் கிரிக்கெட்டின் கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும்.


என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறேன். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருப்பதால், கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது என்பது தவறு. இரண்டு பொறுப்புகளையும் கவனிக்க போதிய நேரம் இருப்பதால் தான், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன்.

ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே கிரிக்கெட் நிர்வாகத்தில் நுழைய முடியும். இதன் அடிப்படையில் தான் தேர்தலில் டிராவிட் போட்டியிடவில்லை. இம்முறை நடக்கும் தேர்தலில் இரு கோஷ்டிகள் மோதவில்லை. அனைவரும் கர்நாடக கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்காக தான் பாடுபடுகிறோம்.
இவ்வாறு கும்ளே கூறினார்.