விளம்பர ஒப்பந்தம்: தோனி சாதனை

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க்கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார்.


இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் "டுவென்டி-20 உலக கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்தார். டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு "நம்பர்-1 இடம் பெற்று தந்தார். பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்(ஒரு நாள் போட்டி) பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என மூன்று பணிகளிலும் பட்டையை கிளப்பும் இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இவரை ஒப்பந்தம் செய்ய ஐ.எம்.ஜி., பெர்சப்ட் உள்ளிட்ட 9 விளம்பர நிறுவனங்கள் போட்டியிட்டன. "கேம்பிளான் என்ற நிறுவனம் 10.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சமீபத்தில் தோனி வழக்கு தொடுத்தார். எனவே, இம்முறை மிகவும் கவனமாக இருந்தார்.


திருமண பரிசு:


இறுதியில் ரிதி ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் மற்றும் மைண்ட்ஸ்கேப் நிறுவனங்கள் சேர்ந்து தோனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 210 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் தோனி கையெöழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை முந்தினார்.


கடந்த 2006ல் இவரை, மூன்று ஆண்டுகளுக்கு "ஐகானிக்ஸ் நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் சாக்ஷியை கைப்பிடித்த தோனிக்கு, 210 கோடி ரூபாய் ஒப்பந்தம் மிகப் பெரிய திருமண பரிசாக அமைந்துள்ளது.


ரூ. 6 கோடி சம்பளம்:

இது குறித்து ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பொது மானேஜர் சஞ்சய் பாண்டே கூறுகையில்,""தோனியுடன் 3 ஆண்டுகளுக்கு 210 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மை தான். கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இனி தோனியின் விளம்பரங்கள் அனைத்தையும் நாங்கள் கையாள்வோம்,என்றார்.

நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான தோனி, தற்போது பெப்சி, ரீபோக், கோத்ரெஜ் உள்ளிட்ட 22 நிறுவனங்களின் பொருட்களுக்கு "மாடலாக உள்ளார். ஒரு பொருளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். சச்சின் 15 பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறார். இவர், 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.



நல்ல லாபம்:

தற்போது விளம்பர நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட வீரர் "மாடலாக தோன்றும் ஒவ்வொரு பொருட்களுக்கான சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் வரை "கமிஷனாக பெறுகின்றன. வரும் 2011ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடக்க இருப்பதால், கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகரிக்கும். எனவே, தோனியின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டைகர் அந்தஸ்து:


இது குறித்து ரிதி ஸ்போர்ட்ஸ்-மைண்ட்ஸ்கேப் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் பரிவு தலைவர் சங்கீத் ஷிரோத்கர் கூறுகையில்,""ஆண்டுக்கு குறைந்தபட்சம் 70 கோடி ரூபாய் என்ற கணக்கில் தான் 210 கோடி ரூபாய்க்கு தோனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதிகமான பொருட்களுக்கு இவர், விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் எங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் கோல்ப் வீரர் டைகர் உட்சுக்கு நிகரான அந்தஸ்தை தோனி பெற்றுள்ளார்,என்றார்.

எனது சாதனையை ஹர்பஜன் எட்டுவார்: முரளிதரன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது சாதனையை, ஹர்பஜனால் மட்டுமே எட்ட முடியும்,''என, முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், வரும் 18ல் துவங்கும் இந்தியாவுடனான போட்டியுடன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். "சுழல்' மன்னனான இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 132 டெஸ்டில் 792 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

இதுகுறித்து முரளிதரன் கூறியதாவது:

டெஸ்ட் போட்டியில் எனது சாதனைகளை எட்டக் கூடிய ஒரே பவுலராக இந்தியாவின் ஹர்பஜனை குறிப்பிடலாம். இவர் எவ்வளவு காலம் கிரிக்கெட் அரங்கில் விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது. இவர் நீண்ட நாட்கள் விளையாடும் பட்சத்தில், இச்சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 85 டெஸ்டில் 355 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர், அதிக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பட்சத்தில் விரைவில் சாதிக்கலாம்.

சாதனை முக்கியமல்ல:

சாதனைக்காக என்னால் நீண்ட நாட்கள் விளையாட முடியாது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில், 800 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த மகிழ்ச்சியோடு ஓய்வு பெறுவேன்.

சிக்கலில் டெஸ்ட்:

"டுவென்டி-20' போட்டிகளில் வரவால் டெஸ்ட் போட்டிகள் கிட்டத்தட்ட அழிந்து விட்டன என்றுதான் கூற வேண்டும். இதேபோல ஒருநாள் போட்டிகளின் மதிப்பு குறைந்து விட்டது. தற்போது "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே பிரபலமடைந்துள்ளது.

சச்சின் சிறந்தவர்:

கிரிக்கெட் அரங்கில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா இருவரையும் சிறந்த வீரர்களாக கருதுகிறேன். இவர்களுக்கு எதிராக பந்துவீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கடைசி டெஸ்டில் சச்சினுக்கு எதிராக பந்துவீச இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளது.

பலிக்காத கனவு:

கிரிக்கெட் அரங்கில் நிறைய சாதனைகள் படைத்த எனக்கு, ஒரு சில கனவுகள் நிறைவேறாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதாவது இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடர் கூட கைப்பற்ற முடியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு குறித்து எவ்வித எண்ணமும் இல்லை. ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விரும்பும் வரை விளையாட திட்டமிட்டுள்ளேன். ஓய்வுக்கு பின், அரசியல் அல்லது பயிற்சியாளராக செயல்பட விருப்பம் இல்லை. எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு முரளிதரன் கூறினார்.

ஓய்வு பெறுகிறார் முரளிதரன்

டெஸ்ட் போட்டிக்கு "குட்பை' சொல்கிறார் முரளிதரன். இந்தியாவுக்கு எதிரான காலே டெஸ்ட் போட்டிக்கு பின், முறைப்படி ஓய்வு பெறுகிறார்.


இலங்கையின் "சுழல் மன்னன்' முரளிதரன். கடந்த 1992ல் தனது 20வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.1995ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்டில் இவர் பந்தை எறிவதாக சர்ச்சை எழுந்தது. அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்துவீசுவதாக கூறிய அம்பயர் டேரல் ஹேர் 7 முறை "நோ-பால்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.


இதிலிருந்து மீண்ட முரளிதரன் சாதனை வீரராக ஜொலித்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதுவரை 132 டெஸ்டில் 792 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 11 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.


ஓய்வு முடிவு:

ஐ.பி.எல்., "சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியில் இடம் பெற்றுள்ள இவர், சமீப காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து ஓய்வு பெற முடிவு செய்தார். ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன், இலங்கை அணியின் தேர்வுக் குழு தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் கேப்டன் சங்ககராவை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக பங்கேற்கும்படி தேர்வுக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த முரளிதரன், வரும் 18ல் துவங்கும் இந்தியாவுடனான காலே டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""மிகச் சிறந்த "ஆப்-ஸ்பின்னரான' முரளிதரன், காலே டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். அதிபர் ராஜபக்சேவின் ஆசியுடன் விடைபெறுகிறார்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக கோப்பை: டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை(50) தொடரில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளார் முரளிதரன். இது பற்றி இவரது மானேஜர் குஷில் குணசேகரா கூறுகையில்,""இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அவசரமாக அறிவிக்கப்பட்டதால், ஓய்வு பெற முடிவு செய்தார்.


இவருக்கு மாற்றாக, சிறந்த வீரர்கள் யாரும் கிடைக்காத பட்சத்தில் 2011, உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என தேர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்,''என்றார்.


18 ஆண்டுகள்: கடந்த 18 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் முரளிதரன், டெஸ்டில் ஆயிரம் விக்கெட் வீழ்த்த வேண்டும் என எண்ணி இருந்தார். இதற்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. டெஸ்ட் மட்டும் அல்ல அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளது.


இது குறித்து சமீபத்தில் இவர் கூறுகையில்,""தற்போது 38 வயதாகி விட்டது. டெஸ்ட் போட்டிகளில் முன்பு போல் பந்துவீச முடிவதில்லை. 15 முதல் 16 ஓவர்கள் வீசினால் மிகுந்த களைப்படைந்து விடுகிறேன். ஒரு நாள் போட்டிகளில் 10 ஓவர் வீசினால் போதும் என்பதால், பிரச்னை இல்லை. இதிலும் சிரமம் ஏற்பட்டால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவேன்,''என்றார்.


மும்மூர்த்திகள்: டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் கும்ளே(619 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன்(708 விக்.,) மற்றும் முரளிதரன் ஆகியோர் "சுழல்' ஜாலம் காட்டினர். கும்ளே, வார்ன் ஓய்வு பெற்று விட்ட நிலையில், இவர்களுக்கு நிகரான வீரர்களை இன்று வரை கண்டறிய முடியவில்லை. தற்போது முரளிதரனும் ஓய்வு பெற உள்ளதால், டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்படும்.

சேவக்கின் ரசிகன் நான்: ஹெய்ன்ஸ்

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக்கின் ரசிகன் நான்,'' என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசின் முன்னாள் துவக்க வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், பயிற்சி வழங்குவதற்காக துபாய் வந்துள்ளார். இந்திய அணியின் சேவக், யுவராஜ் உள்ளிட்டோர் தன்னை கவர்ந்த வீரர்கள் என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹெய்ன்ஸ் கூறியதாவது: இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக்கின் ரசிகன் நான். இவர் விளையாடும் அனைத்து போட்டிகளையும் கண்டு மகிழ்வேன். வேகம், சுழல் என அனைத்துவித பவுலிங்கையும் பதம்பார்க்கக் கூடியவர்.

தற்போது பவுலர்கள் இவருடைய உடலுக்கு பந்துவீச துவங்கியுள்ளனர். எனவே இதற்கேற்ப பயிற்சி மேற்கொண்டால், இதுபோன்ற பந்துகளை எளிதாக சமாளிக்க முடியும்.

இந்திய அணியில் என்னை கவர்ந்த மற்றொரு வீரர் யுவராஜ் சிங். "டுவென்டி-20', ஒருநாள் போட்டிகளில் அசத்தி வரும் இவர் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும். இதற்கு அடுத்து வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை, உலகின் தலைசிறந்த துவக்க வீரராக கருதுகிறேன். இதேபோல நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லி சிறந்த பவுலராக வீரராக கருதுகிறேன்.

இவ்வாறு ஹெய்ன்ஸ் கூறினார்.

4 உலகக் கோப்பைகளில் விளையாடியவர்

1998, 2002, 2006, 2010 என 4 உலகக் கோப்பைகளில் விளையாடியவர் பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் தியேரி டேனியல் ஹென்றி.

இவர் 1977-ம் ஆண்டு பிரான்ஸின் லெஸ் யூலிஸ்ஸில் பிறந்தார். 6-வயதில் கால்பந்து விளையாடத் துவங்கிய ஹென்றி, எதிரணி வீரர்களிடம் பந்தை வேகமாக தட்டிச்சென்று கோல் அடிப்பதிலும், எதிரணியின் கோல் முயற்சிகளைத் தடுப்பதிலும் கில்லாடியாகத் திகழ்ந்தார்.

1994-ம் ஆண்டு தனது 17-வது வயதில் மோனாகோ கிளப்பிற்காக விளையாடிய ஹென்றி, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 1997-ம் ஆண்டு பிரான்ஸ் தேசிய அணியில் இடம்பிடித்தார்.

1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்து பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு காரணமாக இருந்தார்.

2000-ல் நடைபெற்ற ஐரோப்பா சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹென்றி, அந்த போட்டியில் அதிகபட்சமாக 3 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

2002-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய ஹென்றியால் கோல் அடிக்க முடியாமல் போனது. இந்த உலகக் கோப்பையில் ஹென்றி தான் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே ரெட் கார்டு பெற்றார். இதனால் உருகுவேக்கு எதிரான அடுத்த போட்டியில் அவருக்கு விளையாட தடைவிதிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு நடைபெற்ற பிஃபா சம்மேளன கோப்பையில் பங்கேற்ற பிரான்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்தார் ஹென்றி.

2006-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார். இந்த உலகக் கோப்பையில் அவர் 3 கோல்கள் அடித்தார்.

பிஃபா சம்மேளன கோப்பையின் தங்கப் பந்து விருது, 2 முறை  ஐரோப்பாவின் தங்க ஷூ விருது, 2 முறை பிஃபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருது, 5 முறை பிரான்ஸின் சிறந்த கால்பந்து வீரர் விருது, 5 முறை ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

பார்சிலோனா, ஆர்செனல் உள்ளிட்ட கிளப்புகளுக்காக 455 ஆட்டங்களில் விளையாடி 232 கோல்கள் அடித்துள்ளார். 1997-ம் ஆண்டு முதல் தற்போது வரை 128 ஆட்டங்களில் விளையாடி 56 கோல்கள் அடித்துள்ளார். 2010 உலகக் கோப்பையில் பங்கேற்ற பிரான்ஸ் அணியிலும் ஹென்றி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.