இங்கிலாந்துக்கு கோப்பை பெற்றுத் தந்தவர்

1966-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை இங்கிலாந்துக்கு பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் பாபி மூர்.

இவர் 1941-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இங்கிலாந்தின் பார்கிங் நகரில் பிறந்தார். பள்ளியில் படித்தபோது பள்ளி அணிக்காக கால்பந்து விளையாடினார். இளம் வயதிலேயே மிகச்சிறந்த தடுப்பாட்டக்காரராக திகழ்ந்த மூர், 1956-ம் ஆண்டு வெஸ்ட் ஹாம் யுனைட்டெடு அணிக்காகவும், பின்னர் மான்செஸ்டர் யுனைட்டெடு அணிக்காகவும் விளையாடினார்.

தலையால் முட்டியும், உயரமாக துள்ளிக்குதித்தும் எதிரணியினரிடம் இருந்து பந்தை லாவகமாக பறிக்கும் அசாத்திய திறமைபெற்றவர். கால்பந்து மட்டுமன்றி கிரிக்கெட்டிலும் கை தேர்ந்தவர். இங்கிலாந்தின் எஸ்ùஸக்ஸ் அணிக்காக சில காலம் கிரிக்கெட் விளையாடினார். 1960-ம் ஆண்டு 23 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்தார்.

பின்னர் இங்கிலாந்து கால்பந்து அணிக்குள் நுழைந்தார். 1962-ம் ஆண்டு அப்போதைய இங்கிலாந்து கேப்டன் ஜானி ஹெய்ன்ஸ் ஓய்வுபெற்றதையடுத்து மூர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அப்போது மூர் 12 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இங்கிலாந்தின் இளம் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி பல்வேறு ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியது. 1966-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூர் தலைமையில் பங்கேற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதனால் இங்கிலாந்தின் செல்லப்பிள்ளையானார்.

1970-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய மூர் தலைமையிலான அணி காலிறுதி வரை முன்னேறியது. தொடர்ந்து 108 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சிறப்பையும் மூர் பெற்றார். இவரது இந்த சாதனையை பின்னர் பீட்டர் ஷில்டான் (125 ஆட்டங்களில் கேப்டன்), டேவிட் பெக்காம் (109) ஆகியோர் தகர்த்தனர்.

கால்பந்தில் ஓய்வுபெற்ற பிறகு பல்வேறு கால்பந்து கிளப்புகளில் மேலாளராக பணியாற்றினார்.  
1990-ம் ஆண்டு லண்டன் வானொலியில் கால்பந்து வர்ணனையாளராக பணியாற்றினர். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் சகாப்தத்தை ஏற்படுத்திய மூர், 1993-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

சர்ச்சை நாயகன்

வடக்கு அயர்லாந்து அணியின் சிறந்த விங்கராகத் திகழ்ந்த ஜார்ஜ் பெஸ்ட் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர்.

இவர் 1946-ம் ஆண்டு மே 22-ம் தேதி வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் பிறந்தார். பள்ளியில் படித்தபோது தனது 11-வது வயதில் கால்பந்து விளையாட ஆரம்பித்தார். இளம் வயதிலேயே சிறந்த விங்கராகவும், ஆக்ரோஷமான நடுகள ஆட்டக்காரராகவும் விளங்கினார்.

தனது 15-வயதில் மான்செஸ்டர் யுனைட்டடு அணியில் இடம்பிடித்தார். மான்செஸ்டர் யுனைட்டடு அணிக்காக விளையாடிய இவர், 1968-ம் ஆண்டு ஐரோப்பியன் கோப்பையை மான்செஸ்டர் அணிக்கு பெற்றுத்தந்தார். அந்த ஆண்டு ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தால் மான்செஸ்டர் அணிக்கு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுத்தந்தவர்.

1964-ம் ஆண்டு வடக்கு அயர்லாந்து அணியில் இடம்பிடித்து, பின்னாளில் அந்த அணியின் கேப்டனாகவும் உருவெடுத்தார். இவரது தலைமையில் வடக்கு அயர்லாந்து 37 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. பெஸ்ட் கேப்டனாக இருந்த காலத்தில் 9 கோல்கள் அடித்துள்ளார்.

1971-ம் ஆண்டு பெல்பாஸ்ட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெஸ்ட் அடித்த கோலே, அவரது கால்பந்து வாழ்க்கையில் மிகச்சிறந்த கோலாகும். இவரது தலைமையிலான அணி 1978-ம் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றது. 

1982-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய அணியில் பெஸ்ட் இடம்பெறவில்லை. வயது முதிர்வு மற்றும் குடிப்பழக்கத்தால் ஆட்டத்திறன் குறைந்ததே இதற்குக் காரணம்.  மான்செஸ்டர் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளுக்காக விளையாடியுள்ள இவர் 579 ஆட்டங்களில் 205 கோல்கள் அடித்துள்ளார்.

பீலே தேர்வு செய்த 2004-ம் ஆண்டின் சிறந்த 125 கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர். தொழில்முறை கால்பந்து சங்கத்தின் "ஆல் ஸ்டார்' விருது, பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் கெüர டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். குடிப்பழக்கத்துக்குள்ளான பெஸ்ட் பல்வேறு பிரச்னைகளில் சிக்கினார். குடிபோதையில் கார் ஓட்டியதற்காக இவருக்கு 3 மாதம் சிறைதண்டனையும், 20 மாதங்கள் கார் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டு சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் பெஸ்ட் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்கள் செயலிழந்தன. 2005, நவம்பர் 25-ம் தேதி அவர் உயிரிழந்தார்

இதுவரை சாம்பியன்கள்

உலக கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை (1958, 62, 70, 94, 2002) கோப்பை வென்று சாதித்துள்ளது. இதுவரை கோப்பை வென்ற அணிகள்: 

ஆண்டு    சாம்பியன்    கோல்    எதிரணி    இடம்

1930    உருகுவே    4-2    அர்ஜென்டினா    உருகுவே
1934    இத்தாலி*    2-1    செக்கோஸ்லேவியா    இத்தாலி
1938    இத்தாலி    4-2    ஹங்கேரி    பிரான்ஸ்
1950    உருகுவே    2-1    பிரேசில்    பிரேசில்
1954    மே.ஜெர்மனி    3-2    ஹங்கேரி    சுவிட்சர்லாந்து
1958    பிரேசில்    5-2    சுவீடன்    சுவீடன்
1962    பிரேசில்    3-1    செக்கோஸ்லேவியா    சிலி
1966    இங்கிலாந்து*    4-2    மே.ஜெர்மனி    இங்கிலாந்து
1970    பிரேசில்    4-1    இத்தாலி    மெக்சிகோ
1974    மே.ஜெர்மனி    2-1    நெதர்லாந்து    மே.ஜெர்மனி
1978    அர்ஜென்டினா*    3-1    நெதர்லாந்து    அர்ஜென்டினா
1982    இத்தாலி    3-1    மே.ஜெர்மனி    ஸ்பெயின்
1986    அர்ஜென்டினா    3-2    மே.ஜெர்மனி    மெக்சிகோ
1990    மே.ஜெர்மனி    1-0    அர்ஜென்டினா    இத்தாலி
1994    பிரேசில்**    3-2    இத்தாலி    அமெரிக்கா
1998    பிரான்ஸ்    3-0    பிரேசில்    பிரான்ஸ்
2002    பிரேசில்    2-0    ஜெர்மனி    ஜப்பான்-கொரியா
2006    இத்தாலி**    5-3    பிரான்ஸ்    ஜெர்மனி
* கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போட்டிகள்
** "பெனால்டி' முறையில் வெற்றி

2011 உலகக் கோப்பையை வெல்வதே கனவு: சச்சின்

2011-ம் ஆண்டு ஆசிய கண்டத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதே எனது கனவு என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.


இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தற்போது உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக எங்களை தயார் செய்து வருகிறோம். உலகக் கோப்பையை வெல்வது என்பது எனது கனவு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கனவும் அதுதான். மும்பை இறுதிப்போட்டியில் விளையாடும் கனவு நனவாக எல்லாம் சேர்ந்து வரவேண்டும்.


தற்போதுள்ள இந்திய அணி திறமைவாய்ந்ந்த அணியாக திகழ்வதால் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு நல்லவாய்ப்பு உள்ளது. எனவே நீண்டகாலத்திற்கு பிறகு இந்த உலகக் கோப்பையில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


தற்போது இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. முதலிடம் பெறுவது என்பது கடினமானது. தொடர்ந்து அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.


நாங்கள் கடந்த 20 மாதங்களாக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறோம். எல்லா அணிகளும் முதலிடத்திற்கு வர விரும்புகின்றன. அதனால் நாங்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடி வருகிறோம் என்றார் டெண்டுல்கர்.

எதிர்காலம் பற்றி டெண்டுலல்கரிடம் கேட்டபோது, எப்போது கிரிக்கெட்டில் விளையாட்டின் மீதுள்ள உற்சாகம் குறைகிறதோ, அப்போது ஓய்வுபெறுவேன். நீண்டகாலம் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கருதுகிறேன். கிரிக்கெட் வேட்கை குறையும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

ஜொலிக்க காத்திருக்கும் நட்சத்திரங்கள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்மில்லை. ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். இவர்களில் "டாப்-10' வீரர்கள் வருமாறு:

கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்)

மத்திய கள வீரரான இவர், உலககோப்பையில் உற்று நோக்கப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார். ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக ரூ. 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், 2008ல் "பிபா' வழங்கிய உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார், 

போர்ச்சுகல் அணி சார்பில் 68 போட்டிகளில் பங்கேற்று 22 கோல்கள் அடித்துள்ளார். வெகு தூரத்திலிருந்து கோல் அடிக்கும் திறமை பெற்ற இவர், "பிரீ-கிக்', "பெனால்டி கிக்' அடிப்பதில் வல்லவர். 
உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-25

லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா)

 பார்சிலோனா கிளப் அணி சார்பில் விளையாடி வரும் மெஸ்சி, முன்கள வீரராக அசத்தக் கூடியவர். அர்ஜென்டினா அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 13 கோல்கள் அடித்துள்ளார். எதிரணி வீரர்களின் தடுப்பை தகர்க்க கூடிய இவர், தலையால் முட்டிக் கோல் அடிப்பதில் கை தேர்ந்தவர். 

கடந்த 2009 ம் ஆண்டு "பிபா' வழங்கிய உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை மெஸ்சி வென்றுள்ளார். உலககோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது யார் என்பதில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. 

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-22

வேய்ன் ரூனே (இங்கிலாந்து)

கால்பந்து அரங்கில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் வேய்ன் ரூனே. முன்களத்தில் மிரட்டக் கூடிய இவர், எதிரணிகளின் வியூகத்தை நொடிப் பொழுதில் தகர்த்தெறியும் திறமை படைத்தவர். பம்பரமாய் சுழன்று ஆடக் கூடிய இவர், எதிரணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடியவர். இங்கிலாந்து அணி சார்பில் 57 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 25 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-இல்லை, வயது-24

காகா (பிரேசில்)

 திறமையான நடுக்கள வீரர் காகா. அனைவரும் ரசிக்கக் கூடிய விதத்தில் விளையாட்டு உணர்வுடன் ஆடக் கூடியவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், நீண்ட காலமாக மிலன் கிளப் அணிக்காக விளையாடியவர். தற்போது ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ, ரொனால்டினோ ஆகியோர் இந்த முறை பிரேசில் அணியில் இடம் பெறவில்லை. 

இதனால் சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பிரேசில் அணி சார்பில் இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 26 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-2 முறை (2002, 2006), கோல்-1, வயது-27

பெர்னாண்டோ டோரஸ் (ஸ்பெயின்)

பெர்னாண்டோ டோரஸ் தனது 7வது வயது முதல் கால்பந்து விளையாட ஆரம்பித்தார். 10 வது வயதில் 55 கோல்கள் அடித்து அசத்தினார். லிவர் பூல் கிளப் அணி அசத்திவரும் இவர், கோல் அடிப்பதில் வல்லவர். கோல் அடிப்பதற்காகவே பிறந்தவர் என போற்றப்படக் கூடியவர். அதிரடி மட்டுமின்றி மிகவும் நுணக்கமாக ஆடக் கூடிய திறமை படைத்தவர். முன் கள வீரரான இவர், பந்தை "பாஸ்' செய்வதில் கில்லாடி. ஸ்பெயின் அணி சார்பில் 71 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 23 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-3, வயது-25

சாமுவேல் இடோ (கேமரூன்)

ஆப்ரிக்க கண்டத்தின் மிகச் சிறந்த முன் கள வீரராக கருதப்படுகிறார் கேமரூனின் சாமுவேல் இடோ. தனது 16 வயதில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், கிளப் போட்டிகளில் 108 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். தற்போது இன்டர் மிலன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த முறை அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றுள்ள இவர், சாதித்துக் காட்டுவதில் உறுதியாக உள்ளார். கேமரூன் அணிக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 44 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-2 முறை (1998, 2002), கோல்-1, வயது-28

ஆண்டர்சன் டிகோ (போர்ச்சுகல்)

போர்ச்சுகல் அணியின் அனுபவ வீரர் ஆன்டர்சன் டிகோ. செல்சியா கிளப் அணி சார்பில் அசத்தி வரும் இவர், கடந்த உலககோப்பை (2006) தொடரில் அசத்தினார். மத்திய கள வீரரான டிகோ, பந்தை "பாஸ்' செய்வதில் திறமை மிக்கவர். எதிரணி வீரர்களின் தடுப்பை மிக எளிதாக தகர்ப்பவர். கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பின், போர்ச்சுகல் அணி சார்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார் டிகோ.

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-32

கார்லஸ் டெவேஸ் (அர்ஜென்டினா)

அர்ஜென்டினாவின் சிறந்த முன்கள வீரர் கார்லஸ் டேவேஸ். மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர வீரரான இவர், துல்லியமாக கோல் அடிப்பதில் சிறந்தவர். அர்ஜென்டினா அணி சார்பில், 51 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 8 கோல்கள் அடித்துள்ளார். அணியின் பயிற்சியாளர் மாரடோனா, இந்த முறை உலககோப்பையில் டேவேசை மிகவும் நம்பியுள்ளார். எதிர்பார்த்த படி, டேவேஸ் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலககோப்பை- ஒரு முறை (2006), கோல்-1, வயது-26

தியரி ஹென்றி (பிரான்ஸ்)

 முன்கள வீரரான தியரி ஹென்றி, சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகிறார். உலககோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் போது, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், தனது கையால் கோலடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் உலககோப்பைக்கு தகுதி பெற்றது. அயர்லாந்து வாய்ப்பை இழந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதற்காக ஹென்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தற்போது 32 வயதானாலும் இவரது ஆட்டத்தின் வேகம் குறையவில்லை. மிகவும் "ரிலாக்சாக' ஆடக் கூடியவர். பிரான்ஸ் அணி சார்பில் 114 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 51 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-3 முறை (1998, 2002, 2006), கோல்-6, வயது-32

மிராஸ்லாவ் குளோஸ் (ஜெர்மனி)

 அதிரடி ஆட்டக்காரர் மிராஸ்லாவ் குளோஸ், இதுவரை விளையாடிய 2 உலககோப்பை தொடர்களில் தலா 5 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இச்சாதனை படைத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் குளோஸ். தலையால் முட்டிக் கோல் அடிப்பது இவரது தனிச் சிறப்பு. பேயர்ன் முனிக் கிளப் அணி சார்பில் விளையாடி வருகிறார். இதுவரை ஜெர்மனி சார்பில் 93 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 48 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை- 2 முறை (2002, 2006), கோல்-10, வயது-31

ஆன்ட்ரே பிர்லோ (இத்தாலி)

மத்திய கள வீரரான பிர்லோ தனது 16 வயதில் கால்பந்து அரங்கில் காலடி எடுத்து வைத்தார். ஏ.சி.மிலன் கிளப் அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். கடந்த 2006 ம் ஆண்டு இத்தாலி அணி, உலககோப்பை வெல்ல இவரது பங்கும் முக்கியமானதாக அமைந்தது. தூரத்திலிருந்து மிக துல்லியமாக கோல் அடிக்கும் திறமை பெற்ற இவர், இந்த முறையும் அசத்த காத்திருக்கிறார். 

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-30

மோரிமோடோ (ஜப்பான்)

ஆசிய அணியான ஜப்பான் சார்பில் சாதிக்க காத்திருக்கிறார் மோரிமோடோ. ஆசியாவின் சிறந்த இளம் வீரராக வலம் வரும் இவர், பெனால்டி ஏரியாவில் திறமையாக ஆடக் கூடியவர். 22 வயதான இவர், ஜப்பான் லீக் போட்டிகளில் மிக இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். 

இவரது உருவம், எடை, செயல்பாடுகள் ஆகியவை பிரேசிலின் ரொனால்டோவை ஒத்திருப்பதால், இவர் "ஜப்பான ரொனால்டோ' என அழைக்கப்படுகிறார். முதல் முறையாக 
உலககோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இவர், ஜப்பான் அணிக்கு கைகொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

கிளின்ட் டெம்ப்சே (அமெரிக்கா)

அமெரிக்க அணியின் முன்னணி வீரர்களில் டெம்ப்சேவுக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 2006 ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலககோப்பை தொடரில், அமெரிக்கா தரப்பில் கோல் அடித்த ஒரே வீரர் இவர் தான். நடுக்கள வீரரான இவர், அதிரடியாக ஆடக் கூடியவர். பல்காம் கிளப் அணிக்காக விளையாடி வரும் இவர், மைதானத்தில் துடிப்புடன் செயல்படக் கூடியவர். 

அமெரிக்கா சார்பில் 62 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 18 கோல்கள் அடித்துள்ளார். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இவர், அமெரிக்கா உலககோப்பை தொடருக்கு முன்னேற முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

உலககோப்பை -ஒரு முறை (2006), கோல்-1, வயது-27