ரியோடி ஜெனிரோவில் 2016 ஒலிம்பிக்

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பான 121-வது ஒலிம்பிக் கமிட்டிக் கூட்டம் கோபன்ஹேகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், ஸ்பெயின் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. கூட்டத்தின் முடிவில் நடந்த ஓட்டெடுப்பில் பிரேசில் அதிக ஓட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து 2016-ல் ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளன

ஐ.சி.சி., சர்வதேச விருது பெற்ற வீரர்கள்

கிரிக்கெட் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி., சர்வதேச விருது பெற்ற வீரர்கள்.

சிறந்த கிரிக்கெட் வீரர்: மிட்சல் ஜான்சன் (ஆஸி.,)

சிறந்த டெஸ்ட் வீரர்: கவுதம் காம்பிர் (இந்தியா)

சிறந்த ஒருநாள் வீரர்: தோனி (இந்தியா)

"டுவென்டி-20' சிறந்த வீரர்: தில்ஷன் (இலங்கை)

சிறந்த அம்பயர்: அலீம்தார் (பாக்.,)

சிறந்த அணி: நியூசிலாந்து

சிறந்த வளரும் வீரர்: பீட்டர் சிடில் (ஆஸி.,)

இந்த ஆண்டின் சிறந்த இணை வீரர்: வில்லியம் போர்ட்பீல்டு (அயர்லாந்து)

சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: கிளைர் டெய்லர் (இங்கிலாந்து).

ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் வெளியிடப்பட்டுள்ளன. தோனி, சச்சின், சேவக், காம்பிர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் இந்த அணிகளில் இடம்பெற்றுள்ளனர். இரு அணிகளிலும் கேப்டன் பொறுப்பைப் பெற்று தோனி சாதித்துள்ளார்.


ஐ.சி.சி., டெஸ்ட் அணி:

கவுதம் காம்பிர் (இந்தியா), ஆன்ட்ரூ ஸ்டிராஸ் (இங்கிலாந்து), டிவிலியர்ஸ் (தெ.ஆ.,), சச்சின் (இந்தியா), சமரவீரா (இலங்கை), கிளார்க் (ஆஸி.,), தோனி (இந்தியா - கேப்டன்), அல் ஹசன் (வ.தேசம்) மிட்சல் ஜான்சன் (ஆஸி.,) ஸ்டூவர்ட் பிராட் ( இங்கிலாந்து), டேல் ஸ்டைன் (தெ.ஆ.,) மற்றும் ஹர்பஜன் சிங் (இந்தியா)



ஐ.சி.சி., ஒருநாள் அணி:

சேவக் (இந்தியா), கெய்ல் (வெ.இ.,) பீட்டர்சன் (இங்கிலாந்து), தில்ஷன் (இலங்கை), யுவராஜ் (இந்தியா) மார்ட்டின் குப்தில் (நியூசி.,) தோனி (இந்தியா -கேப்டன், வி.கீ.,) பிளின்டாப் (இங்கிலாந்து) குலசேகரா, மெண்டிஸ் (இலங்கை), உமர் குல் (பாக்.,). 12வது வீரர்: திலன் துஷாரா (இலங்கை)

சாலஞ்சர் டிராபி: யுவராஜ் நீக்கம்

சாலஞ்சர் டிராபி தொடருக்கான "இந்தியா-ரெட்' அணியில் கேப்டன் யுவராஜ் சிங் காயம் காரணமாக நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக அமேயா ஸ்ரீகாந்தே சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா புளூ, ரெட், கிரீன் அணிகள் பங்கேற்கும் சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நாக்பூரில் நடக்கிறது. இதில் இந்திய ரெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்தார்.

இவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து யுவராஜ் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் இவர் வரும் 8ம் தேதி துவங்கும் சாலஞ்சர் டிரபி தொடரிலும் நீக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக அமேயா ஸ்ரீகாந்தே சேர்க்கப்ட்டுள்ளார். இந்த அணியின் கேப்டன் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார் என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.

விளையாட்டில் அரசியல் கலப்பது நல்லதல்ல

விளையாட்டில் அரசியல் கலப்பது சிறந்த வீரர்களைச் சோர்வடையச் செய்துவிடும் என, முன்னாள் தடகள வீராங்கனை சைனி வில்சன் தெரிவித்தார்.

கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியில் 16-வது ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் கலந்துகொள்ள வந்திருந்த, முன்னாள் தடகள வீராங்கனை சைனி வில்சன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்தியாவில், கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதேபோல, அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தற்போது குத்துச்சண்டை, துப்பாக்கி சுடும் பிரிவுகளில் நமது வீரர்கள் சாதனைபுரிந்து வருகின்றனர்.

மூணாறில் விளையாட்டு மைதானம் அமைத்து சிறந்த வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல, கொடைக்கானலிலும் அமைக்கலாம்.

இந்தியா முழுவதும் கிராமங்களில் உள்ள திறமையானவர்களைக் கண்டெடுத்து, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து, முறையான பயிற்சி அளித்தால், சர்வதேச அரங்கில் நமது வீரர்கள் சாதனைகளைப் படைப்பர் என்றார் அவர்.

முன்னதாக, விளையாட்டுப் போட்டிகளை கல்லூரியின் இணைத் தாளாளர் டாக்டர் கீதா ஆப்ரகாம் தொடக்கிவைத்தார்.

4 அணிகளாக மாணவ, மாணவியர் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் சாம் ஆப்ராகாம் தலைமை வகித்தார்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு தடகள வீராங்கனை சைனி வில்சன் பரிசுகளை வழங்கினார். இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மார்க் அணியினர் பெற்றனர்.

கல்லூரி முதன்மை செயல் அலுவலர் டேனியல் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் டீன் நிஷாபாலு, ஒருங்கிணைப்பாளர் பாலு, உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தீஸ்குமார், ஆஷா சந்திரன் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்

பாகிஸ்தானிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தோம்; டோனி புலம்பல்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேற்றப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோற்று, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் அரை இறுதியில் நுழைய முடியும் என்ற நிலை இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 2 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இதனால் இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு பறிபோனது. இந்திய அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி ஆறுதலானது. இதனால் எந்த பலனும் இல்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் ஆடி 205 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெறும் என்று இந்திய வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்தனர். டோனியும் அதற்கு ஏற்றவாறு வீரர்களை தேர்வு செய்தார்.

ஆட்டம் முக்கியம் இல்லை என்று கருதி தெண்டுல்கருக்கு ஓய்வு கொடுத்தார்.

ஆஸ்திரேலியாவும் எதிர் பார்த்ததற்கு ஏற்றவாறு தொடக்கத்தில் சிறப்பாக ஆடியது. ஒரு கட்டத்தில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. திடீரென விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன.

187-வது ரன்னில் 8-வது விக்கெட்டை இழந்தது. இதனால் போட்டி பரபரப்பு ஆனது. ஆஸ்திரேலியா தோற்று விடாதா என்ற ஏக்கத்தில் அந்த போட்டியை தெண்டுல்கர், டிராவிட், பிரவீண்குமார், பயிற்சியாளர் கிர்ஸ்டன் ஆகியோர் டெலிவிஷனில் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலியா கடைசி பந்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்திய அணி வெளியேற்றப்பட்டது குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றதால் வந்த வினை. மிகவும் முக்கியமான அந்த ஆட்டத்தில் சரியாக விளையாட வில்லை. இந்த தோல்விதான் எங்களை வெளியேற்றி விட்டது. எங்களது துரதிருஷ்டம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

அந்த போட்டியில் நாங்கள் எளிதாக வெற்றி பெற்று இருப்போம்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சில தவறுகளை செய்து விட்டோம். பந்து வீச்சாளர்கள் சில தவறுகள் செய்தாலும் சிறப்பாக வீசினார்கள். நெக்ரா, பிரவீண்குமார், ஹர்பஜன், அமித்மிஸ்ராவின் பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடுவோம் அந்த தொடரில் முழு பலத்துடன் விளையாடுவோம்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்