இது டிராவிட் விருப்பம்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முன்பாக மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும்,'' என்கிறார் இந்திய வீரர் டிராவிட்.இந்திய அணியின் முன்னணி வீரர் டிராவிட்.

கடந்த 2007ல் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். அதிசயமாக மீண்டும் ஒருநாள் அணியில் தற்போது வாய்ப்பு பெற்றுள்ள டிராவிட், டி.ஒய். பாட்டீல் இணையதளத்தை அறிமுகம் செய்துவைத்து பேசியது:டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் அனைத்து வசதிகளும் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மைதானம் கட்ட ஆரம்பித்தனர். அப்போது ஐ.பி.எல்., தொடர் இல்லை. இதனால் கடந்த ஆண்டு இங்கு நடந்த ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முன்பாக இந்த மைதானத்தில் ஒரு சர்வதேச போட்டியிலாவது பங்கேற்க வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு டிராவிட் தெரிவித்தார்.

3வது தங்கம் வென்றார் போல்ட்

உலக தடகள போட்டியில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மூன்றாவது தங்கம் வென்று அசத்தினார். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.

நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 4து100 மீ., ரிலே ஓட்டத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட், ஸ்டீவ் முல்லிங்ஸ், மைக்கேல் பிராடர், அசபா பாவல் கூட்டணி, பந்தய தூரத்தை 37.31 வினாடிகளில் கடந்து, தங்கம் வென்றது. இப் போட்டியில் டிரினிடாட் அன்ட் டொபாகோ அணியினர் வெள்ளிப் பதக்கமும், இங்கிலாந்து அணியினர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

உலக சாதனை ஏமாற்றம்: இத்தொடரின் 100 மீ., மற்றும் 200 மீ., ஓட்டத்தில் உலக சாதனை படைத்து தங்கம் வென்ற போல்ட், 4து400 மீ., ரிலே ஓட்டத்தில் மூன்றாவது தங்கம் பெற்றுள்ளார்.

ஆனாலும், 4து100 மீ., ரிலே ஓட்டத்தில் போல்ட் கூட்டணி உலக சாதனையை நூலிழையில் தவறவிட்டது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் 4து100 மீ., ரிலே ஓட்டத்தில் இதே கூட்டணி பந்தய தூரத்தை 37.10 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தது. இதன்மூலம் 0.21 வினாடியில் உலக சாதனை பறிபோகிவிட்டது.

கடந்த 1936ம் ஆண்டு நடந்த பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் முன்னாள் அமெரிக்க வீரர் ஜெசி ஓவன்ஸ், 100 மீ., 200 மீ., 4து100 மீ., ரிலே உள்ளிட்ட மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்றார். தவிர, இவர் நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்றார்.

சுமார் 73 ஆண்டுகளுக்கு பின் பெர்லின் மைதானத்தில் மூன்று போட்டியிலும் உசைன் போல்ட் தங்கம் வென்று சாதித்தார். இதன்மூலம் இரண்டாவது முறையாக மூன்று பிரிவிலும் போல்ட் தங்கம் வென்றுள்ளார். முன்னதாக கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் மூன்று பிரிவிலும் தங்கம் வென்றார்

பந்தை எறிகிறார் முரளிதரன் : மீண்டும் சர்ச்சை

பந்தை எறிவது தொடர்பான சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் முரளிதரன். இவர், அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை அணியின் "சுழல் மன்னன்' முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(777) வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு தொடர்பாக 1995 முதல் சர்ச்சை நீடிக்கிறது.

ஐ.சி.சி., மீது தவறு: தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத முரளிதரன் வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந் துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட அபாரமாக பந்து வீசினார். இந்தச் சூழலில் இவர் மீது மீண்டும் பந்தை எறிவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இம்முறை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: ஐ.சி.சி., நிர்ணயித்துள்ள 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்துவீசுகிறார் முரளிதரன். வெறும் கண்ணால் பார்த்தாலே இவர் பந்தை எறிவது தெளிவாக தெரியும். "சூப்பர் ஸ்லோ-மோஷன்' கேமரா மூலம் பார்க்கும் போது இத்தவறை துல்லியமாக உறுதி செய்யலாம்.

இதற்காக முரளிதரன் மீது குறை சொல்ல முடியாது. இவர் தனது பணியை கச்சிதமாக செய்கிறார். இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஐ.சி.சி., மீது தான் தவறு உள்ளது. ஒரு வீரர் பந்தை எறிகிறார் என்றால் உடனே பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறார். ஆய்வகத்தில் அவரது உடல் அசைவை கண்காணிக்கின்றனர்.

பின்னர் சரியாக தான் பந்துவீசுகிறார் என விடுவித்து விடுகின்றனர். இது முரளிதரன் விஷயத்திலும் பல முறை நடந்துள்ளது. இவரது உடல் முழுவதும் "பல்புகளை' பொருத்தி பரிசோதனை செய்தனர். இறுதியில் பந்தை எறியவில்லை என தெரிவித்தனர்.

உண்மையிலேயே இவர் பந்தை எறியவில்லை என்று சொல்ல முடியுமா? சோதனையின் போது தன்னால் விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்துவீச முடியும் என நிரூபிக்கிறார். ஆனால் பரபரப்பான போட்டியின் போது இதனை கடைப்பிடிக்க முடிவதில்லை.

கிரிக்கெட் போட்டிகள் ஆய்வகத்தில் விளையாடப்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பவுலிங் தொடர்பான தனது சோதனை முறைகளில் ஐ.சி.சி., மாற்றம் செய்ய வேண்டும். விதிமுறையை மீறும் பவுலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மார்க் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்

"கார்பரேட் டிராபி': அட்டவணை அறிவிப்பு

இந்திய கேப்டன் தோனி, யுவராஜ், டிராவிட் உள் ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் "கார்பரேட் டிராபி' தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப் பட்டது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் (பி.சி.சி.ஐ.,) முதன் முறையாக வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான "கார்பரேட் டிராபி' தொடர்(50 ஓவர் போட்டி) தொடர், வரும் செப்., 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.

தோனி, யுவராஜ் பங்கேற்பு: இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஏர் இந்தியா (ப்ளூ மற்றும் ரெட்) அணியில் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சிமெண்ட்ஸ் அணி சார்பில் டிராவிட், பத்ரிநாத், பாலாஜி விளையாட உள்ளனர். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார். முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, டாட்டா அணி சார்பில் பங்கேற்கிறார்.

12 அணிகள்: இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை குரூப் "ஏ', "பி', "சி' "டி' என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ., நேற்று வெளியிட்டது. குரூப் "ஏ' லீக் போட்டிகள் மொகாலியிலும், குரூப் "பி' லீக் போட்டிகள் விசாகபட்டினத்திலும், குரூப் "சி' லீக் போட்டிகள் தர்மசாலாவிலும், குரூப் "டி' லீக் போட்டிகள் பெங்களூருவிலும் நடக்கிறது. செப்., 8ம் தேதி பெங்களூருவில் பைனலில் நடக்கிறது.

ஒரு கோடி பரிசு: தொடரில் கோப்பை கைப்பற்றும் அணிக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வெல்ல உள்ளது. தொடர் நாயகன் விருதுக்கு ரூ. 2 லட்சமும், ஆட்டநாயகன் விருதுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. நேரடி ஒளிபரப்பு: இத்தொடருக்கான ஸ்பான் சராக "சகாரா ஏர் இந்தியா' நிறுவனம் உள்ளது. ஒளிபரப்பு உரிமையை நிம்பஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் பெற்றுள்ளது. அனைத்து போட்டிகளும் நியோ ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

சச்சினிடம் பேட்டிங் பயிற்சிக்கு தயாரா?

ஏலத்தில் அதிக தொகை கேட்கும் நபருக்கு ஒருநாள் முழுவதும் பேட்டிங் பயிற்சி அளிக்க தயார். அந்த பணம் வசதியற்ற குழந்தைகள் நலனுக்காக செலவிடப்பட உள்ளது,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர், சேவை பணிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது 400 ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது முன்னேற்றத்துக்கு உதவி வருகிறார்.

ஒரு வாரம் உதவி: "பிறருக்கு உதவி மகிழுங்கள்' என்ற கொள்கையுடன் நாடு முழுவதும் ஒரு வார காலத்துக்கு (வரும் செப். 27 முதல் அக். 3 வரை) சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதன் விளம்பர தூதராக சச்சின் உள்ளார். சிறு குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் அதிரடி அறிவிப்பை இவர் வெளியிட்டுள்ளார். இதன்படி தனது ஒருநாள் நேரத்தை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் நபருக்கு நாள் முழுவதும், பேட்டிங் பயிற்சி கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சச்சின் அளித்த பேட்டி: நவீன காலத்தில் மற்ற எல்லாவற்றையும் விட காலநேரம் முக்கியம். இதை பயன்படுத்த நினைத் தேன். இதன் படி எனது ஒருநாள் நேரத்தை அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு நாள் முழுவதும், தாராளமாக பேட்டிங் பயிற்சி கொடுக்க உள் ளேன். இதில் சிக்கனப் பேர் வழிகளுக்கு இடமில்லை. நீங்கள் கொடுக்கும் பணம், பின்தங்கிய குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு செலவிடப்படும்.

திருப்தியாக உள்ளது: இவ்வாறு உதவி பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது நமக்கும் திருப்தியாக இருக்கும். நான் சிறுவயதில் இருந்த போது உதவி பெறும் நிலையில் இருந்தேன். இப்போது கொடுக்கும் இடத்தில் உள்ளேன். அதனால் மகிழ்ச்சியாக கொடுக்கிறேன். இதன் மூலம் மக்களிடையே உதவி செய்யும் மனப்பாங்கை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்.

தந்தை காரணம்: எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டதற்கு என் தந்தை தான் காரணம். அவர் எப்போதும் தாராளமாய் நடந்து கொள்வார். வீடுகளுக்கு பேப்பர், பால் பாக்கெட் கொடுக்கும் சிறுவர்களுக்கு பள்ளி கட்டணத்தை செலுத்த உதவுவார். இந்த சம்பவம் தான் என்னை, நலவாழ்வுத் திட்டங்களில் ஈடுபடுத்த உதவியது.

என் வழியில் மகள்: எனது மகளும் என்னைப் போல சரியான பாதையில் தான் செல்கிறாள். கடந்த ஆண்டு அவளின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தோம். அப்போது அவள், ""இந்த ஆண்டு எனக்கு பரிசுப் பொருள் வேண்டாம். அதற்கு செலவாகும் 200 அல்லது 300 ரூபாயை பணமாக என்னிடம் தாருங்கள். அதனை குழந்தைகள் முன்னேற்றத் திற்கு உதவும் நிறுவனத்திடம் கொடுக்க உள்ளேன்,'' என்றார். எனது பயிற்சியாளர் ராம்காந்த் அர்ச் ரேக்கர் தாராளமாக உதவி செய்வார். பயிற்சிக்கு பின்பு சோர்வாக இருக்கும் போது, எனக்கு தேநீர் உட்பட பல செலவுகளுக்கு ஆகும் பணத்தை கொடுத்து உதவுவார். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்