டிவிலியர்ஸ் உலக சாதனை

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் சாதனை மழை பொழிந்தார். அதிவேக அரைசதம், அதிவேக சதம் கடந்து உலக சாதனை படைத்தார். தென் ஆப்ரிக்க அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.     

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. 

இரண்டாவது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது. மார்பக புற்று நோய் விழிப்புணர்வுக்காக தென் ஆப்ரிக்க வீரர்கள் ‘பிங்க்’ நிற உடையணிந்து விளையாடினர். ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.


சூப்பர் ஜோடி: 

வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சொதப்பலாக பந்துவீச, தென் ஆப்ரிக்க அணியின் முதல் மூன்று வீரர்களும் சதம் கடந்தனர். ரோசவ் 128 ரன் எடுத்தார்.       

பின் டிவிலியர்ஸ், ஆம்லா விளாசித் தள்ள அணியின் ஸ்கோர் 400 ரன்களை தாண்டியது.      டிவிலியர்ஸ்,149 ரன்களுக்கு( 44 பந்து, 16 சிக்சர், 9 பவுண்டரி) அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 439 ரன்கள் குவித்தது. ஆம்லா (153 ரன்கள், 14 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.            

கெய்ல் ஏமாற்றம்: 

கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் (19) ஏமாற்றினார். டுவைன் ஸ்மித் (69) அரைசதம் கடந்தார். சாமுவேல்ஸ் (40) ஓரளவு ஆறுதல் தந்தார். ரசல் ‘டக்–அவுட்’ ஆனார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 38 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்து, 148 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

டேரன் சமி (25), கேப்டன் ஹோல்டர் (21) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மார்னே மார்கல், பிலாண்டர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

0 comments:

Post a Comment