ரெய்னாவுக்கு திருமணம் - தோழியை கரம்பிடிக்கிறார்

இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரரான ரெய்னாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் ரெய்னா, 28. 

இதுவரை 18 டெஸ்ட் (768 ரன்கள்) , 213 ஒரு நாள் (5316), 44 ‘டுவென்டி–20’ (947) போட்டிகளில் விளையாடி உள்ளார். உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார். 

இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இது குறித்து ரெய்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில்,‘‘ ரெய்னா தாயாரின் தோழியின் மகள் பிரியங்கா சவுத்ரி. 

சிறு வயதிலிருந்தே ரெய்னாவும், பிரியங்காவும் நெருங்கிய நண்பர்கள். உ.பி., மாநிலம் மீரட்டை சேர்ந்த பிரியங்கா நெதர்லாந்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்திய அணி வீரர்கள், உலக கோப்பை தொடரை முடித்து, மார்ச்30ம் தேதி தாயகம் திரும்புகின்றனர். 

ஏப்ரல் 1ம் தேதி ரெய்னா, தனது நண்பர்களுக்கு விருந்து அளிக்கிறார். டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏப்ரல் 3ம் தேதி காலை நிச்சயதார்த்தமும், அன்று மாலையில் ரெய்னாவுக்கும், பிரியங்காவுக்கும் திருமணம் நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர்கள், உறவினர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பிரண்டன் டெய்லர் நம்பர் 1

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் முதல் 38 போட்டிகளில் 31 சதங்கள் அடிக்கப்பட்ட போதும், இந்திய அணிக்கு எதிராக, எந்த அணி வீரரும் சதம் அடிக்கவில்லை. 

நேற்று பிரண்டன் டெய்லர் (138) இதை முறியடித்தார். இதற்கு முன், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா, 76 ரன்கள் எடுத்தது தான் அதிகம்.

* உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் சதம் அடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் இவர் தான். இதற்கு முன், கெவின் குரான் 1983ல் 73 ரன்கள் எடுத்தார்.

* உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் (அயர்லாந்து 121, இந்தியா 138) அடித்த முதல் ஜிம்பாப்வே வீரரானார் டெய்லர். 

* உலக கோப்பை அரங்கில் 400 ரன்னுக்கும் மேல் குவித்த முதல் ஜிம்பாப்வே வீரரும் டெய்லர் தான். இத்தொடரில் 6 போட்டிகளில் 433 ரன்கள் குவித்தார். இதற்கு முன் நெய்ல் ஜான்சன், 1999ல் 367 ரன்கள் (8 போட்டி) எடுத்தார்.

* இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்துக்கு (433) முன்னேறினார். முதலிடத்தில் இலங்கையின் சங்ககரா (496) உள்ளார்.

* ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த ஜிம்பாப்வே வீரர்களில் முதலிடம் பெற்றார் டெய்லர் (8). அடுத்த இரு இடத்தில் கேம்பெல் (7), கிராண்ட் பிளவர் (6) உள்ளனர்.

* ஜிம்பாப்வே அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஆன்டி பிளவர் (213 போட்டி, 6786 ரன்), கிராண்ட் பிளவருக்கு (221ல், 6571) அடுத்து மூன்றாவது இடம் பெற்றார் டெய்லர் (167ல் 5258).


0 முதல் 138 வரை 

ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லர், இலங்கை அணிக்கு எதிராக 2004, ஏப்., 20ல் புலவாயோ போட்டியில் அறிமுகம் ஆனார். இதில் 5 பந்துகளை மட்டும் சந்தித்து ‘டக்’ அவுட்டானார். 

நேற்று கடைசி போட்டியில் களமிறங்கிய இவர், 110 பந்துகளில் 138 ரன்கள் சேர்த்து, ஒருநாள் அரங்கில் இருந்து விடைபெற்றார்.


அதிக சிக்சர்

நேற்று ஜிம்பாப்வே அணி, இந்திய அணிக்கு எதிராக 12 சிக்சர் விளாசியது. ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில், ஜிம்பாப்வே அணி இத்தனை சிக்சர் அடித்தது இது தான் முதன் முறை.


29 பந்தில் 70 ரன்

நேற்று சதம் அடித்த பிரண்டன் டெய்லர் முதல் 81 பந்தில் 68 ரன்கள் தான் எடுத்திருந்தார். அடுத்து எதிர்கொண்ட 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து, 138 ரன்னுக்கு (110 பந்து) அவுட்டானார்.

சங்ககரா சாதனை சதம் - இலங்கை வெற்றி

ஸ்காட்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், தில்ஷன், சங்ககரா சதமடித்து கைகொடுக்க, இலங்கை அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில், இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதும் உலக கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டி இன்று நடந்தது. 

இலங்கை அணியில் சண்டிமால், உபுல் தரங்கா, சேனநாயகே நீக்கப்பட்டு துஷ்மந்தா சமீரா, நுவன் குலசேகரா, குசால் பெரேரா சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு திரிமான்னே (4) ஏமாற்றினார். பின் இணைந்து அபாரமாக ஆடிய தில்ஷன் (104), சங்ககரா (124) சதமடித்தனர். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 4வது சதமடித்து வரலாறு படைத்தார் சங்ககரா. 

தவிர இது, உலக கோப்பை அரங்கில் இவரது 5வது சதம். இதன்மூலம் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில், 2வது இடத்தை ஆஸ்திரேலியாவின் பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டார். 

உலக கோப்பை அரங்கில் தில்ஷன் 4வது சதமடித்தார். மகிளா ஜெயவர்தனா (2) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் மாத்யூஸ் 21 பந்தில் 51 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.

இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 363 ரன்கள் எடுத்தது. குலசேகரா (18), சமீரா (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஸ்காட்லாந்து சார்பில் டேவி 3 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து அணிக்கு கோட்ஜெர் (0), மெக்லியாடு (11), மக்கான் (19) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய பிரடீ கொலேமென் (0), கேப்டன் பிரஸ்டன் மம்சன் (60) அரைசதம் கடந்தனர்.

ஸ்காட்லாந்து அணி 43.1 ஓவரில் 215 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. இலங்கை சார்பில் குலசேகரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

51 பந்தில் சதம் - நிறைய சாதனைகள்

2வது அதிவேகம்

ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் நேற்று 51 பந்தில் சதத்தை எட்டினார் இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில், 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் (50 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2011)  உள்ளார்.

* இந்த உலக கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 52 பந்தில் சதம் அடித்தார்.

* ஒருநாள் அரங்கில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரரானார். இவர், பால்க்னரின் சாதனையை(57 பந்து, எதிர் இந்தியா, 2013) தகர்த்தார். 


5

நேற்று 5வது வீரராக வந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் சதமடித்தார். இதன்மூலம் இம்முறை 5வது வீரராக களமிறங்கி, 5 பேர் சதமடித்துள்ளனர். 

ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர், டிவிலியர்ஸ், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லர் ஆகியோர் 5வது வீரராக வந்து சதமடித்தனர். 

கடந்த 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில், இந்தியாவின் வினோத் காம்ப்ளி, நியூசிலாந்தின் கிறிஸ் ஹாரிஸ் என இரண்டு பேர் 5வது வீரராக களமிறங்கி சதமடித்தனர். மற்ற உலக கோப்பை தொடர்களில் தலா ஒரு பேட்ஸ்மேன் இம்மைல்கல்லை எட்டினர்.


சாதனை நழுவியது

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. 

இவர், 49 பந்தில் 99 ரன்கள் எடுத்திருந்த போது, மலிங்கா பந்தை அடிக்க முயன்றார். அப்போது பந்து, பேடில் பட்டுச் செல்ல ஒரு ரன் எடுக்கப்பட்டது. 

இதனை அறியாத அம்பயர், ‘லெக் பைஸ்’ சிக்னல் காட்டவில்லை. பின், மேக்ஸ்வெலிடம் கேட்டு ‘லெக் பைஸ்’ என தெரிவித்தார். சாதனைக்கு ஆசைப்படாத மேக்ஸ்வெல், உண்மையை தெரிவித்தது பாராட்டுக்குரியது.


14 ஆயிரம் ரன்கள்

அபாரமாக ஆடிய இலங்கையின் சங்ககரா, ஒருநாள் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதுவரை 402 போட்டிகளில் விளையாடிய இவர், 24 சதம், 93 அரைசதம் உட்பட 14,065 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (18,426 ரன், 463 போட்டி) உள்ளார்.

அயர்லாந்து அணி திரில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடந்த மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 4 புள்ளிகளுடன் உள்ள அயர்லாந்து அணி, மீதமுள்ள 3 போட்டியில், 2ல் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு சுலபமாக முன்னேறலாம். 

ஆனால் கடைசி இரண்டு போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை சந்திக்க இருப்பதால், இன்று எப்படியும் வெல்ல வேண்டும் என, களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே பீல்டிங் தேர்வு செய்தது.


ஜாய்ஸ் சதம்:

அயர்லாந்து அணிக்கு ஸ்டெர்லிங் (10) துவக்கத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போர்டர்பீல்டு (29) நிலைக்கவில்லை. இருப்பினும், ஜாய்ஸ், பால்பிர்னே இணைந்து சிறப்பான ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். 

ஜிம்பாப்வே அணியின் ‘பீல்டிங்கும்’ மந்தமாக அமைய, ஜாய்ஸ் ஒருநாள் அரங்கில் 3வது சதம் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்த நிலையில், ஜாய்ஸ் (112) அவுட்டானார். 

கெவின் ஓ பிரையன் (24), வில்சன் (25), மூனே (10), நெயில் ஓ பிரையன் (2) என, வரிசையாக அவுட்டான போதும், பால்பிர்னே 79 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். அயர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. டாக்ரெல் (5), கசாக் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 


டெய்லர் ஆறுதல்:

கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு சிபாவா (18), சிக்கந்தர் (12), மிர்ரே (11) அடுத்தடுத்து வெளியேறினர். மசகட்சா 5 ரன்கள் மட்டும் எடுத்தார். பின் இணைந்த பிரண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. 

ஸ்டெர்லிங் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த டெய்லர் சதம் விளாசினார். இவர் 121 ரன்களில் ஆட்டமிழந்தார். சீன் வில்லியம்ஸ் சத (96) வாய்ப்பை இழந்தார். 

பின் வந்த எர்வின் (11), பன்யான்கரா (5) நிலைக்கவில்லை. கெவின் ஓ பிரையன் பந்துவீச்சில் முபரிவா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். சகபவா 17 ரன்களில் அவுட்டானார். 

கசாக் பந்தில் முபரிவா (18) அவுட்டாக, ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 326 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக கசாக் 4 விக்கெட் வீழ்த்தினார்.