டெஸ்டில் இருந்து தோனி திடீர் ஓய்வு

இந்திய அணி கேப்டன் தோனி, டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. இதுவரை 90 டெஸ்ட் (4876 ரன்கள்), 250 ஒரு நாள் (8192), 50 ‘டுவென்டி–20’ (849) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்திய அணிக்கு ‘டுவென்டி–20’(2007), 50 ஓவர் (2011) என இரண்டு முறை உலக கோப்பை வென்று தந்தார். தவிர, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோப்பை வென்று காட்டினார்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து இவரது தலைமையிலான இந்திய அணி தோல்வி கண்டது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0–2 என. இழந்துள்ளது.

இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்.


பங்களிப்புக்கு நன்றி:

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, கேப்டன் தோனி டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். 

மிகச்சிறந்த கேப்டனான இவரின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இவருக்கு நன்றி.
வரும் ஜன.,6ல் சிட்னியில் துவங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஓய்வு ஏன்:

கடந்த 2005, டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான சென்னை டெஸ்டில் அறிமுகம் ஆனார் தோனி. கடந்த 2008ல் கும்ளே ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆனார். 1967-–68க்குப் பின், அதாவது 41 ஆண்டுகள் கழித்து, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தினார்.

இவர் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி உலகின் ‘நம்பர்–1’ இடத்தை பெற்று அசத்தியது.

2011 முதல் இவரது டெஸ்ட் வீழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து இங்கிலாந்த, ஆஸ்திரேலிய மண்ணில் இரு முறை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க மண்ணிலும் தோல்வி துரத்த, ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். 

இதுவரை கேப்டனாக பங்கேற்ற 60 டெஸ்டில், 27 வெற்றி, 15 ‘டிரா’ செய்த தோனி அணிக்கு, 18 தோல்விகள் கிடைத்தது. தவிர, அன்னிய மண்ணில் அதிக தோல்விகளை (15) சந்தித்த முதல் இந்திய அணி கேப்டன் தோனி தான்.

இவருக்கு அடுத்த இடத்தில், மன்சூர் அலிகான் பட்டோடி, அசார், கங்குலி ஆகியோர், அன்னிய மண்ணில் கேப்டனாக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் தலா 10 தோல்விகள் பெற்றனர்.

சீண்டினார் ஜான்சன் - சீறினார் கோஹ்லி

விராத் கோஹ்லியை வீணாக உசுப்பேற்றினார் ஜான்சன். இவரது உடலை நோக்கி பந்தை ஆவேசமாக எறிந்தார். இதற்கு பதிலடியாக சதம் அடித்து அசத்தினார் கோஹ்லி. 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், 83வது ஓவரை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் வீசினார். 

இதன் இரண்டாவது பந்தை இந்தியாவின் கோஹ்லி அடித்தார். பந்தை பிடித்த ஜான்சன், ‘ரன்–அவுட்’ செய்வதற்காக ‘ஸ்டெம்ப்சை’ நோக்கி எறிந்தார். ஆனால் பந்து விராத் கோஹ்லியின் உடலில் பட்டது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கோஹ்லியிடம், ஜான்சன் மன்னிப்பு கேட்டார். 

இந்த ஓவரின் கடைசி பந்தை ‘பவுண்டரிக்கு’ விரட்டிய கோஹ்லியிடம், ஜான்சன் ஏதோ கூறினார். இதனால் இருவருக்கும் வார்த்தை போர் முற்றவே, அம்பயர் கெட்டில்புரூக், கோஹ்லியை சமாதானம் செய்தார். அதன்பின், இவர்கள் இருவரும் அடிக்கடி முறைத்துக் கொண்டனர். 
          
இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது: 

ஜான்சன் எறிந்த பந்து என் மீது பட்ட போது மிகவும் கோபமடைந்தேன். அப்போது அவரிடம், ‘அடுத்த முறை என் மீது எறிய முயற்சிக்க வேண்டாம், ‘ஸ்டெம்ப்சை’ நோக்கி எறியவும்’ எனக் கூறினேன். அப்போதிருந்தே ஜான்சன் உள்ளிட்ட சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் வார்த்தை போர் ஆரம்பமானது. 

அவர்கள் என்னை ‘அடக்கமில்லாத குழந்தை’ என கேலி செய்தனர். ஜான்சனுக்கு பேட்டிங்கில் மூலம் பதிலடி கொடுக்க முடிவு செய்தேன். நேற்றைய ஆட்டத்தில் இவரது ஓவரில் சராசரியாக 5 ரன்கள் வரை எடுத்ததால், நெருக்கடியுடன் காணப்பட்டார்.                 

களத்தில் எதிரணி வீரர்களுடன் வார்த்தை போரில் ஈடுபடுவது குறித்து கவலையில்லை. இது, போட்டியில் சாதிக்க உதவியாக இருக்கும். இதனால் தான் மெல்போர்ன் டெஸ்டில் 169 ரன்கள் எடுக்க முடிந்தது.            
      
தற்போது ஆஸ்திரேலிய அணி தொடரில் 2–0 என முன்னிலையில் உள்ளது. இதனால் இவர்கள் எதிரணியினருடன் வம்பிழுப்பார்கள். ஒருவேளை தொடர் 1–1 என சமநிலையில் இருந்திருந்தால், இப்படி செய்வார்களா? கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் அமைதியாகவே காணப்பட்டனர். அப்போது அதிகளவில் வார்த்தை போர் இல்லை.        
          

மரியாதை இல்லை: 

ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஒரு சில வீரர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பேன். ஆனால் ஒரு சிலர் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. 

பின், அவர்களுக்கு  நான் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும். தவிர நான் இங்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமே வந்துள்ளேன். மற்றவர்களிடம் இருந்து மரியாதை பெறுவதற்கு அல்ல. 

நேற்றைய ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர் ரகானேவின் ஆட்டம் அருமையாக இருந்தது. எனக்கு பின் களமிறங்கிய இவர், முதலில் சதம் அடித்தது ஆச்சர்யம் அளித்தது. 

தவிர இவர், ஜான்சன் வீசிய பந்துகளை எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’ கிடைக்கும் போது எந்த ஒரு பவுலரையும் எளிதில் சமாளித்து விடலாம். அடுத்த முறை இதுபோல வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இரட்டை சதம் அடிக்க முயற்சிப்பேன்.                  
இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

தோனி புதிய உலக சாதனை

இந்திய அணி கேப்டன் தோனி, விக்கெட் கீப்பிங்கில் நேற்று புதிய உலக சாதனை படைத்தார். சர்வதேச அரங்கில் அதிக ‘ஸ்டெம்பிங்’ செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

மெல்போர்ன் டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், அஷ்வின் வீசிய பந்தில் இந்திய கேப்டன் தோனி, ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சனை ‘ஸ்டெம்பிங்’ செய்து அவுட்டாக்கினார். 

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ‘ஸ்டெம்பிங்’ செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், இலங்கையின் சங்ககராவை (485 இன்னிங்ஸ், 133 ஸ்டெம்பிங்) முந்தி முதலிடம் பிடித்தார். 

இதுவரை 460 இன்னிங்ஸ் விளையாடிய தோனி, டெஸ்டில் 38, ஒருநாள் போட்டியில் 85, சர்வதேச ‘டுவென்டி–20’யில் 11 என மொத்தம் 134 முறை ‘ஸ்டெம்பிங்’ செய்துள்ளார். 

இப்பட்டியலில் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் மோங்கியா (216 இன்னிங்ஸ், 52 ஸ்டெம்பிங்) 10வது இடத்தில் உள்ளார்.            

* தவிர, டெஸ்ட் போட்டிகளில் அதிக ‘ஸ்டம்பிங்’ செய்த இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில், முதலிடத்தை முன்னாள் வீரர் கிர்மானியுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 38 முறை ‘ஸ்டெம்பிங்’ செய்துள்ளனர்.

ரசிகர் கன்னத்தில் யூசுப் பதான் பளார்

தகாத வார்த்தைகள் பேசிய ரசிகரை, கன்னத்தில் அறைந்து சர்ச்சை கிளப்பியுள்ளார் யூசுப் பதான்.       

காஷ்மீர், பரோடா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி, வதோதராவில் நடந்தது. இதன் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பரோடா அணியின் யூசுப் பதான், 9 ரன்னுக்கு அவுட்டாகி திரும்பினார்.       

காலரியில் இருந்த ஆஷிஸ் பார்மர் என்ற ரசிகர் யூசுப் குறித்து, தகாத முறையில் பேசியுள்ளார். இதை பொறுத்துக் கொள்ளாத யூசுப், அவரை ‘டிரசிங் ரூம்’ வருமாறு அழைத்துள்ளார். 

அங்கு அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தாராம். கோபம் குறையாத யூசுப், அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.       

மீண்டும் ஆவேசம்: இதைக் கேள்விப்பட்ட இவரது சகோதரர் இர்பான் பதான் தலையிட்டு சமாதானம் செய்துள்ளார். யூசுப் செயலால் ஆத்திரப்பட்ட 30க்கும் மேற்பட்ட ரசிகர்கள், ‘டிரஸ்சிங் ரூம்’ செல்வதற்காக, அங்கிருந்த கதவை உடைக்க முயற்சித்தனர்.       

இதைக் கண்டு அஞ்சாத யூசுப், வெளியில் வந்து தைரியமாக நின்றார். அப்போது தடுப்புகளை தாண்டிக் குதித்த ரசிகர்கள் மோதலுக்கு தயாராகினர்.       
கடைசியில் சமாதானம்: கடைசியில் பரோட கிரிக்கெட் சங்கத்தினர் (பி.சி.ஏ.,) தலையிட்டு சமாதானம் செய்தனர்.   
   
பி.சி.ஏ., செயலர் கெய்க்வாட் கூறுகையில்,‘‘ சம்பந்தப்பட்ட ரசிகரின் செயலுக்காக, அவரது குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டனர். இதனால், பிரச்னை சுமூகமாக முடிந்தது,’’ என்றார்.

எங்கு சென்றனர் இந்திய வீரர்கள் - பிரிஸ்பேன் சர்ச்சை தீரவில்லை

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவின் ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் சரிந்த போது, பின் வரிசை வீரர்கள் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன் மைதானத்திலேயே இல்லையாம்.

பிரிஸ்பேன் டெஸ்ட் நான்கு நாட்களில் முடிந்துவிட்டது என்றாலும், இந்த பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் மூன்றாவது நாள் மதியம் இஷாந்த், ரெய்னா உள்ளிட்டோர் சைவ உணவுக்காக, மைதானத்தை விட்டு வெளியில் சென்று திரும்பினர்.

4வது நாள் காலையில் மோசமான ஆடுகளத்தில் பயிற்சி செய்த ஷிகர் தவான், கோஹ்லி காயமடைந்தனர். இதனால் ஏற்பட்ட ‘டிரசிங் ரூம்’ குழப்பத்தில், பேட்டிங் ஆர்டர் மட மடவென சரிய, இந்திய அணி எளிதாக வீழ்ந்தது. 

தற்போது மற்றொரு பிரச்னை கிளம்பியுள்ளது.

இந்திய அணி குறித்து ‘ஹெரால்டு சன்’ என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தி:
நான்காவது நாள் காலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். 

அப்போது, பின் வரிசை வீரர்கள் சிலர் மைதானத்திலேயே இல்லையாம். இந்திய அணியின் முன்னணி பவுலர் இஷாந்த், வருண் ஆரோன் உள்ளிட்டோர், தாமதமாகத் தான் இந்திய அணியுடன் இணைந்தனர்.

இருப்பினும், இதை மறுத்த இந்திய அணி நிர்வாகம்,‘ விளையாடும் லெவனில் இல்லாத பவுலர்கள் தான், நீச்சல் பயிற்சியை முடித்துவிட்டு, தாமதமாக வந்தனர்,’ என, தெரிவித்துள்ளது.

உண்மையில் யார் யார் வெளியில் சென்றது, எங்கு சென்றனர் என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை.