இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகரா டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டி 20 போட்டியிலும் விளையாட உள்ளது. 

அதில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் ப்ளட்சர் கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டு மிகுந்த அனுபவம் உள்ள டிராவிட் அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொண்டதை தொடர்ந்து டிராவிட் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ.யின் செயலாளரான சஞ்சய் படேல் தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், இந்திய அணியின் முக்கிய பொறுப்பை டிராவிட் ஏற்க உள்ளது இது தான் முதன்முறையாகும். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பாவனான சுனில் கவாஸ்கர் கடந்த மார்ச் மாதம் இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா பங்கேற்கும் 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா 2 பயிற்சி ஆட்டங்கள் ஆடுகிறது. 

இதன்படி இந்தியா-லீசெஸ்டர்ஷைர் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று (பிற்பகல் 3.30 மணி முதல்) தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கும், டெஸ்டுக்கு தயாராவதற்கும் இந்த பயிற்சி ஆட்டம் உதவிகரமாக இருக்கும். 

கவுண்டி அணியான லீசெஸ்டர்ஷைரில் இங்கிலாந்து வீரர்களை தவிர்த்து சர்வான் (கேப்டன்), நியல் ஓ பிரையன், ஸ்டைரிஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இத்தாலி வீரரை கடித்த சுராசுக்கு தடை

உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

இத்தாலிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சுராஸ் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.

ஆட்டத்தின் 80–வது நிமிடத்தில் இத்தாலி பின்கள வீரர் சிலினியின் தோள்பட்டையில் சுராஸ் கடித்தார். டெலிவிசன் ரீபேளயில் இத்தாலி வீரரை அவர் கடிப்பது தெளிவாக தெரிந்தது.

நடுவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது அதை அவர் கவனிக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிலினியன் கடித்த பகுதியில் காயம் ஏற்பட்டதை காண்பித்தார்.

சுராஸ் கடித்த விவகாரம் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பிபாவின் ஒழுங்கு நடவடிக்கை குழு சுராஸ் மீது அதிகாரபூர்வமான குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சுராசுக்கு எஞ்சிய போட்டிகளில் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தி நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு (பிரேசில் நேரம் மாலை 5 மணி) சுராஸ் மீதான தடை குறித்து அறிவிக்கப்படும்.

சுராஸ் எதிர் அணி வீரரை கடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2 தடவை இது மாதிரி கடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் இவானோவிக் என்ற வீரரை கடித்ததற்காக அவருக்கு 10 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா–ஆஸ்திரேலியா மோதல் - அட்டவணை அறிவிப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. இதற்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று அறிவித்தது.     

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளது. 

இத்தொடருக்கு முன், இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 

இதற்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று வௌியிட்டது. இதன்படி முதல் டெஸ்ட், பிரிஸ்பேனில் வரும் டிச., 4ம் தேதி துவங்குகிறது. 

மற்ற போட்டிகள் அடிலெய்டு (டிச., 12–16), மெல்போர்ன் (டிச., 26–30), சிட்னி (2015, ஜன., 3–7) நகரில் நடக்கும்.      

அதன்பின், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர், அடுத்த ஆண்டு ஜன., 16ம் தேதி முதல் பிப்., 1ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், பெர்த்தில் பிப்., 1ல் நடக்கும் பைனலில் விளையாடும்.      

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடருக்கு முன், ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று ‘டுவென்டி–20’ (நவ., 5, 7, 9), ஐந்து ஒருநாள் (நவ., 14, 16, 19, 21, 23) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.      

கடைசி நேரத்தில் டிரா செய்தது போர்ச்சுகல்

அமெரிக்காவுக்கு எதிரான உலக கோப்பதொடரின் லீக் போட்டியை போர்ச்சுகல் அணி ‘டிரா’ செய்தது. 

பிரேசிலில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ஜீ’ பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல், அமெரிக்கா அணிகள் மோதின. 

இதில் துவக்கம் முதல் அசத்திய போர்ச்சுகல் அணிக்கு நானி, போட்டியின் 5வது நிமிடத்திலே‌யே முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இதற்கு அமெரிக்க வீரர்களால் முதல் பாதியில் பதிலடி கொடுக்கமுடியவில்லை. 

பின் விறுவிப்பாக நடந்த இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க அணிக்கு ஜோன்ஸ் (64), டெம்ப்சே (81) ஆகியோர் இரட்டை அடி கொடுத்தனர். 

இதற்கு பதிலடி கொடுக்க மும்முரமாக போராடி போர்ச்சுகல் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்த‌ை மற்றொரு போர்ச்சுகல் வீரர் வரேலா (90+5) கடைசி நிமிடத்தில் தலையால் முட்டி கோலாக மாற்றினார். 

இதையடுத்து அமெரிக்காவின் வெற்றி வாய்ப்பு பரிபோனது. 

இறுதியில் போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது.