சச்சினின் சிலையில் மாற்றம்


இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின், 40. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதான நிர்வாகம் சார்பில், இவரது மெழுகு சிலை திறக்கப்பட்டது. 

இந்த சிலையில் கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் "டி-சர்ட்டுடன்' சச்சின் காணப்பட்டார். 

ஆனால், 2006ல், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஜோகனஸ்பர்க், "டுவென்டி-20' போட்டி தான் இவர் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி ஆட்டம். இதையடுத்து "டி-சர்ட்' தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 

இதுகுறித்து சச்சின் சிலை வைக்கப்பட்டுள்ள "மேடம்-டுசாட்ஸ்' அருங்காட்சியக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,"" கடந்த 2012 "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சச்சின் பங்கேற்கவே இல்லை என்ற நிலையில், தவறான "டி-சர்ட்' அணிந்துள்ளது, படைப்பில் ஏற்பட்ட தவறு. 

இதற்காக வருந்துகிறோம். இதற்குப் பதில் 2011 உலக கோப்பை தொடரில் சச்சின் விளையாடிய, "டி-சர்ட்' போன்று விரைவில் மாற்ற முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.

விராத் கோஹ்லிக்கு அர்ஜுனா விருது


இந்திய வீரர் விராத் கோஹ்லியின் பெயரை, அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது.

இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 24. சிறந்த "மிடில் ஆர்டர்' வீரரான இவர், இதுவரை 18 டெஸ்ட் (1,175 ரன்), 98 ஒருநாள் (4,054 ரன்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,), சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது வென்றார். 

முதலில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடிய இவர், அடிலெய்டு டெஸ்ட் (2012, ஜன.,), இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் (2012, ஆக.,) போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார். 

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 

இதனிடையே, கோஹ்லியின் பெயரை இந்த ஆண்டு அர்ஜுனா விருதுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்தது. 

அர்ஜுனா விருது பெறவுள்ள 46வது கிரிக்கெட் வீரராகிறார் கோஹ்லி.

வாழ்நாள் சாதனையாளருக்கு தரப்படும் தயான்சந்த் விருதுக்கு, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 

சென்னை அணி அசத்தல் வெற்றி


கோல்கட்டா அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் மைக்கேல் ஹசி அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

இந்தியாவில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த  லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு சகா, மைக்கேல் ஹசி சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பாலாஜி ஓவரில் ஹசி, மூன்று பவுண்டரிகள் விளாசினார். தன் பங்கிற்கு ஷமி அகமது ஓவரில் சகா இரு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார். 

இவர் பாட்யா பந்தில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹசி (95) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின் வந்த ரெய்னா 44 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில், சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. தோனி (18), ஜடேஜா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோல்கட்டா அணி சார்பில் பாட்யா, நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

கடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு காம்பிர், பிஸ்லா ஜோடி துவக்கம் தந்தது. காம்பிர் (14) ஏமாற்றினார். மறுமுனையில், மோரிஸ் வீசிய ஓவரில் பிஸ்லா "ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டினார். 

அஷ்வின் பந்துவீச்சிலும் பவுண்டரி அடித்து அசத்திய இவரால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பிரண்டன் மெக்கலம் (6), காலிஸ் (19) நீடிக்கவில்லை. 

இக்கட்டான நேரத்தில் பிஸ்லா (92) ரன்-அவுட்டாக, அணியின் தோல்வி உறுதியானது. முடிவில், கோல்கட்டா அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து, தோல்வியடைந்தது. இயான் மார்கன் (32), யுசுப் பதான் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

சென்னை அணி சார்பில் மோகித் சர்மா, மோரிஸ், பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

தோனியை சமாளிப்பாரா காம்பிர்?


சென்னையில் இன்று நடக்கும் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 

சென்னை அணிக்கு துவக்க வீரர் மைக்கேல் ஹசி, பேட்டிங்கில் நம்பிக்கை தருகிறார். 

இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 அரைசதம் <உட்பட, மொத்தம் 350 ரன்கள் அடித்துள்ளார். தமிழகத்தின் முரளி விஜய் தான் பெரிதும் (8 போட்டி, 122 ரன்) ஏமாற்றுகிறார். 

துவக்க போட்டிகளில் சொதப்பிய "மிடில் ஆர்டர்' ரெய்னா, மீண்டும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆறுதல். சென்னை வீரர்களில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக உள்ள, கேப்டன் தோனி (235 ரன்கள்) இன்றும் அசத்தட்டும். அடுத்து வரும் பத்ரிநாத், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாடினால் நல்லது. 

"ஆல்-ரவுண்டர்' பிராவோ, பவுலிங்கில் 14 விக்கெட் வீழ்த்தினாலும், பேட்டிங்கில் அதிக பந்துகளை வீணடித்து ரசிகர்கள் பொறுமையை சோதிக்கிறார்.


கடைசியில் ஏமாற்றம்:

சென்னை அணியின் பவுலிங், துவக்கத்தில் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், கடைசி கட்ட ஓவர்களில் சொதப்புவது தொடர்கிறது. 

ஐதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில், கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்தது சிக்கலை தந்தது. 

இதற்கேற்ப, மோகித் சர்மா, கிறிஸ் மோரிஸ் இன்று கவனமாக செயல்பட வேண்டும். 

சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரது நம்பிக்கை தொடர்ந்தால் நல்லது. 

மீண்டும் விளாசுவாரா கெய்ல்?


மும்பையில் இன்று நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில், கெய்ல் மீண்டும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெங்களூரு அணியின் பலமே கெய்ல்தான். புனே அணிக்கு எதிராக 30 பந்தில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவரது சிறப்பான "பார்ம்' இன்றும் தொடரலாம். 

இவருக்கு பக்கபலமாக, கேப்டன் கோஹ்லி உள்ளார். சவுரப் திவாரி, அருண் கார்த்திக் ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுத்தால் நல்லது. 

வேகப்பந்துவீச்சில் அசத்த வினய் குமார், ராம்பால், ஆர்.பி.சிங் உள்ளனர். தவிர, உனத்கத்தும் அசத்துவது கூடுதல் பலம். 


ஸ்மித் அசத்தல்: 

ஏற்கனவே கோல்கட்டா அணியை அதன் சொந்த மண்ணில் வென்ற உற்சாகத்தில் உள்ளது மும்பை அணி. கடந்த போட்டியில் சிறப்பான அடித்தளம் அமைத்த டுவைன் ஸ்மித் இன்றும் மிரட்டலாம். 

சச்சின் திறமை நிரூபிக்க வேண்டும். பாண்டிங்கிற்கு பதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா, கடந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டார். இவருக்கு தினேஷ் கார்த்திக் கைகொடுக்கலாம். 

பவுலிங்கில் மலிங்கா, ஜான்சன் உள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஏழு போட்டியில் ஆறு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார். 

இவர் இன்றாவது, ஜாலம் காட்டுவாரா என பார்ப்போம். பிரக்யான் ஓஜா விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளிக்கிறார்.