ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டம்

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வெளிநாட்டு கேப்டன் உள்ளிட்ட சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

பிரபல இந்தியா "டிவி சேனல், புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுடன் ரகசியமாக உரையாடி உண்மைகளை கண்டறிந்துள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக பங்கேற்கும் சுதிந்திரா என்ற வீரர், கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டி ஒன்றில், "டிவி நிருபரின் விருப்பத்திற்கு ஏற்ப,வேண்டுமென்றே "நோ-பால் வீசியுள்ளார். இவர், ரூ. 60 லட்சம் கொடுத்தால், ஐ.பி.எல்., தொடரில் அணி மாற தயார் என கூறியுள்ளார்.

இதே போல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீவாஸ்தவ் "நோ-பால் வீச ரூ. 10 லட்சம் கேட்டுள்ளார். புனே அணிக்காக விளையாடும் மோனிஸ் மிஸ்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) விதிமுறைப்படி சர்வதேச போட்டியில் பங்கேற்காத வீரர்கள், ஐ.பி.எல்., தொடரில் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் தான் பெற முடியும்.

ஆனால், மிஸ்ராவுக்கு உரிமையாளர்கள் ரூ. 1.45 கோடி கொடுத்து தக்க வைத்துள்ளனர். இவருக்கு ரூ. 1 கோடி வரை கறுப்பு பணமாக கொடுத்துள்ளனர். சில நேரங்களில் சொகுசு கார் போன்றவற்றை பரிசாக கொடுத்து இளம் வீரர்களை கவர்கின்றனராம்.

தற்போதைய ஐ.பி.எல்., தொடரில், ஒரு அணிக்கு கேப்டனாக உள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் கூறுகையில்,""ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூடி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்,என்றார்.

சச்சின் பேட்டை ஏலத்துக்கு அளித்தார் பிரிட்டிஷ் பிரதமர்

சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்ட பேட்டை ஏலத்தில் விடுவதற்காக கொடுத்துள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்.

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க நிதி திரட்டுவதற்காக, அந்த பேட்டை ஏலத்தில் விட கொடுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் பாதுகாப்பாக வைத்திருந்த முக்கியப் பொருள்களில் சச்சினின் பேட்டும் ஒன்று. 2010-ம் ஆண்டில் இந்தியா வந்தபோது அந்த பேட் எனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஏலத்தில் அந்த பேட் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தங்க மகன் சச்சின்

இந்தியாவின் தங்க மகன் சச்சின் டெண்டுல்கர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, மேற்கு வங்க மாநிலம் சார்பில் சச்சினுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த சாதனைக்காக சச்சின் அப்போது கெüரவிக்கப்பட்டார்.

அப்போது மம்தா பேசியது: சச்சின் இந்தியாவின் தங்க மகன், எனவேதான் அவருக்கு தங்கத்தினால் ஆன கிரிக்கெட் பேட், பந்தை எங்கள் மாநிலம் சார்பில் பரிசாக அளித்துள்ளோம். உங்கள் சாதனைக்காக நாங்கள் தலைவணங்குகிறோம். உங்களால் அனைவருமே பெருமையடைந்துள்ளோம் என்று மம்தா பேசினார்.

பாராட்டை ஏற்றுப் பேசிய சச்சின், "உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலமுறை விளையாடியுள்ளேன். அவை மகிழ்ச்சிகரமான அனுபவம். இப்போது இந்த பாராட்டு விழாவும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் கொல்கத்தா மக்கள் எப்போதும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட பேட், பந்தை சச்சினுக்கு மம்தா வழங்கினார். மேற்குவங்கத்தில் பிரபலமான இனிப்பு வகையான ரசகுல்லா (100 எண்ணிக்கை) சச்சினுக்கு வழங்கப்பட்டது.

மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கொல வெறியை மிஞ்சும் கங்குலி வீடியோ'

கங்குலியின் சாதனைகள் தொடர்பான "வீடியோவை' இன்டர்நெட்டில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதன் "ஹிட் ரேட்' கொல வெறிப் பாடலை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்கியவர் கங்குலி. கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இவரை, தனியார் "இன்சூரன்ஸ்' நிறுவனம் ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு விளம்பர தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிறுவனம், "சவுரவ் கங்குலி - தி மூவி' என்ற பெயரில் ஒரு குறும்படம் தயாரிக்க முடிவு செய்தது.

இதில் கங்குலியின் வாழ்க்கை, தலைமை பண்பு, சாதனைகள், கிரிக்கெட்டில் சந்தித்த ஏற்ற, தாழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சுவையான தகவல்கள் இடம் பெற உள்ளன.

இதற்கான மூன்று நிமிடங்கள் கொண்ட "டிரைலர்' சமீபத்தில் "இன்டர்நெட்டில்' வெளியிடப்பட்டது.

பாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட இந்த "டிரைலருக்கு' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இந்த "வீடியோவை' கண்டு ரசித்துள்ளனர்.

காதலில் விழுந்த சச்சின் மகன்

எனது மகன் அர்ஜுன், கிரிக்கெட் மீது காதல் கொண்டுள்ளான்,''என, சச்சின் தெரிவித்தார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல "டைம்' பத்திரிகை, இந்த வார இதழின் அட்டைப்படத்தில் இவரது படத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது.

இப்பத்திரிகைக்கு சச்சின் அளித்த பேட்டி:

எனது மகன் அர்ஜுனை,11, கிரிக்கெட்டை தேர்வு செய்யும்படி யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. அவனாகவே கிரிக்கெட் மீது காதல் கொண்டுள்ளான்.

எத்தனை மணி நேரம் பயிற்சி செய்கிறான் என்பது கணக்கில்லை. கிரிக்கெட்டை அவன் அனுபவித்து விளையாட வேண்டுமென விரும்புகிறேன்.

கிரிக்கெட் ஆர்வம் முதலில் இதயத்தில் இருந்து துவங்கும். பின் ஒருவர் வளர்ச்சி அடையும் போது மூளைக்கு செல்லும்.

கிரிக்கெட் போட்டிகளில் எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரமாக செயல்பட விரும்புவேன். இதன் காரணமாக பல இரவுகளில் தூக்கத்தை தொலைத்து இருக்கிறேன்.

ஆனாலும், இந்த நெருக்கடி என்னுள் இருக்கும் திறமையை வெளிப்படுத்த உதவியாக அமைந்தது. எனது கவனம் எப்போதும் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் மட்டுமே இருக்கும்.

இவ்வாறு சச்சின் கூறினார்.