சகாரா விவகாரம்: சமரச தீர்வு

பி.சி.சி.ஐ., மற்றும் சகாரா நிறுவனம் இடையிலான பிரச்னைக்கு சமரச தீர்வு எட்டப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவு இன்று நடக்கும் பி.சி.சி.ஐ., செயற்குழுவில் எடுக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' 11 ஆண்டுகளாக சகாரா நிறுவனம் உள்ளது. ஐ.பி.எல்., "புனே வாரியர்ஸ்' அணியின் உரிமையாளராகவும் இருக்கிறது.

இந்நிலையில், புனே அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங், "கேன்சர்' பாதிப்பிற்காக சிகிச்சை பெற திடீரென அமெரிக்கா சென்றார். இவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை சேர்த்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் போர்டிடம்(பி.சி.சி.ஐ.,) சகாரா நிறுவனம் அனுமதி கேட்டது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட, ஆத்திரமடைந்த சகாரா நிறுவனம் இந்திய அணியின் "ஸ்பான்சர்' நிலையில் இருந்து விலகியது.

இதனால், பி.சி.சி.ஐ.,க்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதனை தவிர்க்க, சமரச பேச்சுவார்த்தை நேற்று மும்பையில் நடந்தது. இதில், சகாரா தலைவர் சுப்ரதோ ராய், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், ஐ.பி.எல்., ஏலத்தில் தேர்வு செய்யப்படாத வீரர்களை சகாரா நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்பேச்சுவார்த்தையின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், சமரச தீர்வு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று சென்னையில் நடக்கும் பி.சி.சி.ஐ.,யின் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""சில விஷயங்களுக்கு செயற்குழுவின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதனால் தான் பேச்சுவார்த்தையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இன்று நடக்க உள்ள கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, நல்ல முடிவு எடுக்கப்படும்,''என்றார்.

அவ்ளோ தானா அஷ்வின்?

அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அசத்திய அஷ்வின், தொடர் நாயகன் விருதை வென்று, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் நிலைமை தலைகீழாக உள்ளது. இவரது சுழல் சுத்தமாக எடுபடவில்லை.

தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின். சமீபத்தில் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், "சீனியர்' ஹர்பஜன் ஓரங்கட்டப்பட்டு, முதன் முதலாக அறிமுக வாய்ப்பு பெற்றார்.


திருமணத்துக்கு முன்...

இத்தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மும்பை டெஸ்டில் சதமும் அடிக்க, தொடர் நாயகனாக ஜொலித்தார். இதனால் ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. சிறிய ஓய்வில் சென்னை வந்து திருமணம் செய்து கொண்டார். மறுநாளை மனைவியுடன் கோல்கட்டா பறந்து, ஒருநாள் தொடரில் பங்கேற்றார்.


திருமணத்துக்குப் பின்...

இதையடுத்து ஆஸ்திரேலிய தொடரிலும் வாய்ப்பு தேடிவந்தது. இந்திய ஆடுகளங்கள் போல இங்குள்ளவை சுழலுக்கு ஒத்துழைக்காது என்பதால், விக்கெட் வீழ்த்த தடுமாறினார். டெஸ்ட் தொடரில் 3 போட்டியில் 9 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். பின் நடந்த இரண்டு "டுவென்டி-20' போட்டியில் 8 ஓவரில் 57 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.


பொறுமையிழந்த தோனி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனது மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். டெஸ்ட் தொடரில் பாண்டிங், கிளார்க், மைக் ஹசி என்றால், இம்முறை மாத்யூ வேட், டேவிட் ஹசி இவரை உண்டு இல்லை என்று செய்துவிட்டனர்.

இதனால், எப்போதும் அஷ்வினுக்கு ஆதரவாக இருக்கும் கேப்டன் தோனி, பொறுமை இழந்து,"" பவுலர்கள் சரியில்லை. அஷ்வினுக்கு இது கடின காலம். இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றாலும், இது முதல் தொடர் என்பதால் தடுமாறுகிறார்.

ஆடுகளங்கள் அதிக பவுன்ஸ் ஆகும் நிலையில், கவனமாக பவுலிங் செய்ய வேண்டும். இதை மனதில் வைத்து அஷ்வின் விளையாடினால் நல்லது,'' என்றார்.


மறந்து விட்டாரோ:

ஆஸ்திரேலியா சென்று ஏழு வாரம் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு திறமை வெளிப்படுத்த திணறுகிறார். வெள்ளை நிற பந்துகளில் எப்படி பவுலிங் செய்வது என்ற கலையை மறந்து விட்டது போல செயல்படுகிறார்.

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு போட்டியில் மட்டும் அசத்தினார். இதே போல தொடர்ந்து செயல்பட வேண்டும். தவறினால், அஷ்வினுக்கு மாற்றாக மீண்டும் புதிய வீரரை தேடவேண்டிய நிலை ஏற்படும்.

டாப் 10 பட்டியலில் கோஹ்லி

உலகில் சிறப்பாக ஆடை அணியும் "டாப்-10' ஆண்கள் பட்டியலில் இந்தியாவின் விராத் கோஹ்லி இடம் பெற்று அசத்தியுள்ளார்.

ஆண்களுக்கான "பேஷன்' இணையதள பத்திரிகை "ஜி.கியு'. இதன் சார்பில் சர்வதேச அளவில் சிறப்பாக ஆடை அணியும் நபர்களை தேர்வு செய்தது. இதில் ஆச்சரியப்படும் விதமாக, இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, 23, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் திறமையை வெளிப்படுத்தி வரும் இவருக்கு இது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,"" விராத் கோஹ்லி பேட்டிங் ஸ்டைல் காரணமாக இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறார்,'' என, தெரிவித்துள்ளது.

முதலிடத்தில் ஜெர்மனி நடிகர் மைக்கேல் பஸ்பாண்டர் உள்ளார். இதுதவிர, கனடா நடிகர் ரியான் கோஸ்லிங், வின்சென்ட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு, இந்த பட்டியலில் கடைசி இடம் தான் கிடைத்துள்ளது.

சச்சின் இல்லாமல் சாதிக்க முடியுமா?

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் வெற்றியில் சச்சின் பங்கு அதிகம். இவருக்கு, முத்தரப்பு தொடரின் அடுத்த போட்டியில் ஓய்வு கொடுத்தால், வெற்றி வசப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு தொடரில், ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு தருவதில், இந்திய கேப்டன் தோனி உறுதியாக உள்ளார். இவருக்காக "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதன்படி முதலிரண்டு போட்டிகளில் சேவக், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.

புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த 22 ஆண்டுகளில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 ஒருநாள் போட்டிகளில் தான் வென்றுள்ளது. இதில் சச்சின் பங்கு தான் அதிகம்.


முதல் வெற்றி:

1991-92ல் பெர்த் போட்டியில் இந்திய அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதில் சச்சின் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் (36 ரன்கள், 65 பந்து). அடுத்து 12 ஆண்டுகளாக 11 போட்டிகளில் தொடர் தோல்வி. 2003-04ல் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இப்போட்டியில் சச்சின் 86 ரன்கள் எடுத்தார்.


பைனல் அசத்தல்:

பின் வந்த மூன்று வெற்றிகளும் கடந்த 2007-08 தொடரில் கிடைத்தது. மெல்போர்னில் நடந்த லீக் போட்டியில் 159 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு, 54 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார் சச்சின்.

பின் நடந்த முதல் பைனலில் ஆஸ்திரேலியாவின் 240 ரன்கள் என்ற இலக்கை அடைய, சச்சின் சதம் அடித்து (117 ரன்கள்) உதவினார். தொடர்ந்து இரண்டாவது பைனலில், 91 ரன்கள் எடுத்து அசத்தினார்.


சேவக் மோசம்:

சேவக்கை எடுத்துக் கொண்டால், மூன்று தொடர்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 10 போட்டிகளில், 180 ரன்கள் மட்டுமே எடுத்தார். காம்பிர் பரவாயில்லை ரகத்தில் உள்ளார். இவர் கடந்த தொடரில் சிட்னியில் அடித்த சதம் (113) உட்பட, 7 போட்டியில் 230 ரன்கள் எடுத்துள்ளார்.

விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா, மனோஜ் திவாரி ஆகியோர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 10 போட்டிகளில் கூட பங்கேற்றதில்லை. கடந்த 2008 தொடரின் முதல் பைனலில் ரோகித் சர்மா, அரைசதம் அடித்தது தான் அதிகம்.

இதன் பின் இந்த அணிக்கு எதிரான 7 போட்டிகளில் மொத்தமே 37 ரன்கள் தான் எடுத்தார். எனவே, சுழற்சி முறை வீரர்கள் தேர்வு பற்றி தோனி நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.


எது முக்கியம்

வரும் 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதனை மனதில் கொண்டு, இப்போதே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், இங்குள்ள ஆடுகளத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வர்.

சுழற்சி முறையில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கும் போது, சச்சினுக்கு சலுகை காட்ட தேவையில்லை. இவர் 100வது சதம் அடிக்க வேண்டும் என்பதைவிட அணியின் நலன் தான் மிகவும் முக்கியம்.

ரோகித் சர்மாவால் புதிய குழப்பம்

ரோகித் சர்மா வரவால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வாய்ப்பு அளித்தால், "டாப்-ஆர்டரில்' இருக்கும் சேவக், சச்சின் அல்லது காம்பிரை நீக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

இந்திய அணியின் மிகச் சிறந்த "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. "சீனியர்' வீரர்கள் நிறைய பேர் இருப்பதால், நிரந்தர வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.


சுழற்சி முறை:

தற்போதைய முத்தரப்பு தொடரில் இவரை விளையாடும் லெவனில் இடம் பெறச் செய்வதில் கேப்டன் தோனி உறுதியாக உள்ளார். இதையடுத்து "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சேவக் நீக்கப்பட்டு, ரோகித் இடம் பெற்றார். இலங்கையுடனான போட்டியில் காம்பிர் நீக்கப்பட்டு, மீண்டும் ரோகித் வாய்ப்பு பெற்றார். இவ்விரு போட்டிகளிலும் இவர் சோபிக்கவில்லை.

ஆனாலும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க தோனி முடிவு செய்துள்ளார். இதையடுத்து அடிலெய்டில் வரும் 12ம் தேதி நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது குறித்து தோனி கூறுகையில்,""ரோகித் சர்மா அதிக போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது தான் சூழ்நிலைக்கு ஏற்ப பக்குவப்படுத்திக் கொள்ள முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியிலும் சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்,'' என்றார்.


கவாஸ்கர் எதிர்ப்பு:

தோனியின் இந்த முடிவுக்கு கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,""ஒரு வீரர் சரியாக செயல்படவில்லை என்றால், அவரை தாராளமாக நீக்கலாம். மாறாக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரருக்கு சுழற்சி முறை என்ற பெயரில் ஓய்வு அளிக்கக் கூடாது. என்னை பொறுத்தவரை சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். ரோகித் சர்மா அல்லது ரெய்னாவை நீக்கலாம்,'' என்றார்.

கவாஸ்கர் கூறுவதை ஏற்கலாம். "மிடில்-ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா ஆகிய 3 இளம் வீரர்கள் உள்ளனர். இதில் கோஹ்லி சிறப்பான "பார்மில்' இருப்பதால், அவருக்கு பிரச்னை இல்லை.

ரெய்னாவை எடுத்துக் கொண்டால் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த 22 போட்டிகளில் இரு அரைசதம் தான் அடித்துள்ளார். இதே காலக்கட்டத்தில் ரோகித் சர்மா 13 போட்டிகளில் 6 முறை அரைசதம் அடித்துள்ளார். உலக கோப்பைக்கு பின் ரெய்னாவின் சராசரி ரன் 44. ரோகித் சர்மா பங்கேற்ற இரு தொடர்களில், அவரது சராசரி 128, 76 என மிகவும் சிறப்பாக உள்ளது.

தவிர, ரெய்னாவின் "பவுன்சர்' பலவீனம் தொடர்கிறது. பெர்த்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் கூட "பவுன்சரை' தவறாக அடித்து தான் விக்கெட்டை பறிகொடுத்தார். செயல்பாட்டின் அடிப்படையில் பார்த்தால், ரெய்னாவைவிட ரோகித் முந்துகிறார்.


துணைக்கேப்டன் பிரச்னை

முத்தரப்பு தொடரில் "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதை அறிந்து தான், இந்திய அணியின் துணைக்கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை என தெரிகிறது.

ஆஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால், துணைக்கேப்டனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்டீவ் வாக், கேப்டனாக இருந்த போது, பாண்டிங் துணைக்கேப்டனாக இருந்தார். பின் பாண்டிங் கேப்டனாக இருந்த போது, மைக்கேல் கிளார்க் துணைக்கேப்டனாக இருந்தார்.

பாண்டிங்கிடம் இருந்து அணியை வழிநடத்தும் நுணுக்கங்களை கற்ற கிளார்க், தற்போது கேப்டன் பதவியில் அசத்துகிறார். இதனை இந்திய கிரிக்கெட் போர்டு புரிந்து கொண்டால் நல்லது.