சிட்னி ஆடுகளம் யாருக்கு சாதகம்

சிட்னி ஆடுகளம் "சுழலுக்கு ஒத்துழைக்குமா அல்லது "வேகத்துக்கு கைகொடுக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இது ஆஸ்திரேலிய அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இந்திய அணியை சிதறடிக்க, கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டமிடுகிறார். அதே நேரத்தில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் கட்டாயம் வேண்டுமென வலியுறுத்துவதால், பிரச்னை வெடித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.


மாறிய களம்:

இரண்டாவது டெஸ்ட் நாளை சிட்னியில் துவங்குகிறது. இங்குள்ள ஆடுகளம் பொதுவாக சுழலுக்கு ஒத்துழைக்கும். ஆனால், கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய "ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மொத்தம் வீழ்ந்த 30 விக்கெட்டுகளில், 3 விக்கெட்டை தான் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர்.

இது, சிட்னி ஆடுகளம் "வேகத்துக்கு சாதகமாக மாறியிருப்பதை சுட்டிக் காட்டியது. இதே நிலை இம்முறையும் தொடரலாம். இதன் காரணமாக தான் ஆஸ்திரேலிய அணியில் அவசர அவசரமாக "வேகப்புயல் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பீட்டர் சிடில், ஹில்பெனாஸ், பட்டின்சன், ஹாரிஸ் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க, கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டம் வகுத்து இருக்கிறார். இதற்கு பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எல்லாம் வேகம் என்ற கொள்கையில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்தர் கூறுகையில்,""பந்துவீச்சாளர்கள் தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. சிட்னி ஆடுகளம் பாரம்பரியமாக சுழலுக்கு ஒத்துழைக்கும். என்னை பொறுத்தவரை "ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்குவதை ஏற்க முடியாது.

மெல்போர்ன் டெஸ்டில் நாதன் லியான் "சுழலை இந்திய வீரர்கள் எளிதாக சமாளித்தனர். வலுவான இலக்கை நிர்ணயிக்கும் பட்சத்தில் எதிரணிக்கு இவர் நிச்சயமாக சவால் கொடுப்பார்,என்றார்.


வானிலை முக்கியம்:

ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறுகையில்,""கடந்த ஆண்டு ஆஷஸ் போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் போல் இருக்கும்.

இரு அணிகளுக்கும் சாதகமாக அமையும். இதன் தன்மை, வானிலையை பொறுத்து மாறும். மேகமூட்டத்துடன் காணப்பட்டால், பந்துகள் நன்கு "ஸ்விங் ஆகும். போகப் போக "சுழலுக்கும் கைகொடுக்கும்,என்றார்.

2011ம் ஆண்டின் சிறந்த வீரர் டிராவிட்

2011ம் ஆண்டின் சிறந்த வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் "பெருஞ்சுவர் டிராவிட், ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டார். கேப்டன் தோனிக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

இந்திய விளையாட்டு நட்சத்திரங்களில் சிறந்த வீரர்களை, ஆங்கில பத்திரிகை ஒன்று தேர்வு செய்தது.

இதற்காக 2011ல் வீரர்கள் வெளிப்படுத்திய திறமை அடிப்படையில் சச்சின், தோனி, டிராவிட், யுவராஜ், ரோகன் போபண்ணா (டென்னிஸ்), ரஞ்சன் சோதி (துப்பாக்கி சுடுதல்) உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இரண்டு வாரங்களாக நடந்த ஓட்டெடுப்பில், துவக்கத்தில் இருந்தே டிராவிட் தான் முன்னிலையில் இருந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் 2011ல் பங்கேற்ற 12 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு "டுவென்டி-20 போட்டிகளில், தலா 5 சதம், அரைசதம் உட்பட மொத்தம் 1300 ரன்கள் எடுத்து இருந்தார்.

கடைசியில், 28 ஆண்டுகளுக்குப் பின் உலக கோப்பை வென்ற கேப்டன் தோனி, தொடர் நாயகன் யுவராஜ், சச்சின் ஆகியோரை பின் தள்ளி 48 சதவீத ஓட்டுகளுடன் டிராவிட், இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனி மனிதனாக போராடியது (4 டெஸ்டில், 3 சதம் உட்பட 461 ரன்கள்), இவரை சிறந்த வீரராக தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.

இரண்டாவது இடத்தை, 20 சதவீத ஓட்டுகள் பெற்ற, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தட்டிச் சென்றார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என புகழப்படும் தோனிக்கு மூன்றாவது இடம் (14 சதவீதம்) தான் கிடைத்தது. யுவராஜ் (12%) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அடுத்த நான்கு இடங்களை துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதி (3%), டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா (தலா 2%), குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணன் (1%) ஆகியோர் பெற்றனர்.

நூறாவது டெஸ்டில் நூறாவது சதம் எகிறுகிறது எதிர்பார்ப்பு

சிட்னி மைதானத்தில் நடக்கும் நூறாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் சச்சின், நூறாவது சதத்தை எட்டுவார் என, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ல் சிட்னியில் துவங்குகிறது.

இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட் என்ற பெருமை பெறுகிறது. இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சதத்தை எட்டுவார் என அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில், சச்சின் இதுவரை 59 அன்னிய மைதானங்களில் விளையாடியுள்ளார். இதில் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள வங்கதேசத்தின் டாகா, மிர்புரில் சிறந்த சராசரி வைத்துள்ளார்.

இருப்பினும், சிட்னி மைதானம் சச்சினுக்கு ராசியானது. இதுவரை இங்கு நான்கு டெஸ்டில் பங்கேற்றுள்ளார். 1992ல் முதல் போட்டியில் சதம் (148*) அடித்தார். பின் 2000த்தில் 45, 4 ஏமாற்றினார். 2004ல் நடந்த டெஸ்டில் இரட்டை சதம் (241*, 60*) அடித்து அசத்தினார்.

கடைசியாக 2008ல் மீண்டும் சதம் (154*, 12) என, இதுவரை ஒரு இரட்டை சதம், 2 சதங்கள் அடித்து மிரட்டியுள்ளார். இம்மைதானத்தில் சச்சினின் சராசரி 221 ரன்கள் என்பது திகைப்படைய வைக்கும் தகவல்.

இது குறித்து சச்சின் கூறியது:

அன்னிய மண்ணில் நான் விளையாடிய மைதானங்களில் சிட்னி எனக்கு பிடித்தது. இங்குள்ள நேர்த்தியான சூழ்நிலை அற்புதமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை இம்மைதானத்துக்கு சிறப்பான இடம் உண்டு. ஏனெனில், இங்கு ரசித்து விளையாடுவேன். இம்மைதானத்தில் களமிறங்கும் போதே, சிறப்பாக விளையாடுவோம் என்ற எண்ணம் தோன்றிவிடும்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

கடந்த 9 மாதங்களாக சச்சினிடம், பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கும் 100வது சதம், இவருக்கு பிடித்தமான சிட்னியில் பிடிபடட்டும்.


விற்பனை அதிகரிக்கும்:

இதனிடையே சிட்னி டெஸ்டின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகளில் 14,600 வரை விற்றுள்ளதாம். அடுத்த மூன்று நாட்களுக்கு முறையே 8,500, 7,000, 1,600 டிக்கெட்டுகளை வரை இதுவரை விற்றுள்ளது. இங்கு சச்சின் சாதிக்கும் பட்சத்தில், முழு அளவு டிக்கெட்டுகளும் காலியாகும் என நம்பப்படுகிறது.

சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட். இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இது இங்கு நடக்கும் 100வது டெஸ்ட் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. கடந்த 1882ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இங்கு நடந்தது.

சிட்னி ஆடுகளம் வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இரு போட்டிகளிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) முதலில் பேட் செய்யும் அணி சுருண்டதை காண முடிந்தது. இதனால், இந்திய அணிக்கு சிட்னியிலும் சோதனை காத்திருக்கிறது.


இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறியது:

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது ஆடுகளம் அமைந்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

இதன் படி முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும். அடுத்தடுத்து ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும். ஏனெனில், இங்குள்ள சூழ்நிலையும் அப்படி உள்ளது.

கடந்த ஆண்டு அதிகமாக மழை குறுக்கிட்டது. இம்முறை புத்தாண்டில் வானிலை மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், ஆடுகளத்தை மூடித்தான் வைத்துள்ளோம். ஏனெனில், அடுத்து வரும் நாட்களில் இங்கு அதிக போட்டிகள் நடக்கவுள்ளன.

தவிர, வேகம், சுழற் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருக்கும் சாதகமான ஆடுகளத்தை தரத்தான் எப்போதும் விரும்புகிறேன். இதற்கு தகுந்து தான் ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம்.

இவ்வாறு டாம் பார்க்கர் கூறினார்.

சச்சின் வீடு ரூ. 100 கோடிக்கு இன்சூரன்ஸ்

மும்பையில் சச்சின் கட்டியுள்ள புதிய வீடு, ரூ. 100 கோடிக்கு "இன்சூரன்ஸ்' செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர் சமீபத்தில் மும்பை, பாந்த்ரா பகுதியில் 5 மாடி கொண்ட புதிய வீடு கட்டி குடியேறினார்.

இந்த வீட்டை இரு பிரிவுகளாக பிரித்து சச்சின் இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

முதல் பிரிவு தீ விபத்து. அதாவது தீ, பயங்கரவாத நடவடிக்கைகளால், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு, குண்டு வெடிப்பு, திருட்டு உள்ளிட்டவைகள் ஏற்படும் பாதிப்புக்கு ரூ. 75 கோடிக்கு பாலிசி எடுத்துள்ளார்.

இரண்டாவதாக சச்சினின் கிரிக்கெட் உபகரணங்கள், படங்கள், கைக்கடிகாரங்கள், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தவிர, வீடு அமைந்த நிலப்பகுதி, சுற்றுச் சுவர், பாதுகாப்பு கருவிகளுக்காக ரூ. 25 கோடி என மொத்தம் ரூ. 100 கோடி வரைக்கும் "இன்சூரன்ஸ்' செய்திருப்பதாக தெரிகிறது.

இதற்கு சச்சின் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 40 முதல் 50 லட்சம் வரை பிரிமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த இன்சூரன்ஸ் பிரிவில் சச்சின் இரண்டாவது தளத்தில் நிறுத்திவைத்திருக்கும் கார்களுக்கு கிடையாது. ஏனெனில் இந்தக்கார்களுக்கு தனியாக "இன்சூர்' செய்யப்பட்டுள்ளது.