உலக கோப்பை தொடரில் சூதாட்டம்

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.சி., விசாரணையில் ஈடுபட்டுள்ளது. தவிர, இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை' ஆகும் என்று வார்ன் எப்படி கணித்தார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.


லார்ட்ஸ் டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட் (10 ஆண்டு), முகமது ஆசிப் (7 ஆண்டு), முகமது ஆமிர் (5 ஆண்டு) ஆகியோருக்கு சமீபத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தண்டனை கொடுத்தது.

இதனால் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி., தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பினும், கிரிக்கெட் உலகை சூதாட்டத்தின் நிழல் மீண்டும் படர்ந்துள்ளது போலத் தோன்றுகிறது.

கடந்த பிப். 25ல் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான லீக் போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து முதலில் மந்தமான துவக்கம் கொடுத்தனர். முதல் 11 ஓவரில் 28 ரன்கள் தான் எடுத்தனர்.

15 ஓவரின் முடிவில் 53 ரன்கள் எடுத்தனர். தவிர, முதல் 2 ஓவரில் 5 ரன் மட்டுமே எடுத்தது, ஐ.சி.சி.,க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இதனை ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டிம் நீல்சன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,"" எல்லோரும் வாட்சன், ஹாடின் மெதுவாக விளையாடியது குறித்து தான் பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் நன்றாகத்தான் விளையாடினர்.

ஜிம்பாப்வே அணியினர் துவக்கத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால், விக்கெட்டுகளை பாதுகாக்க வேண்டியது இருந்தது. எங்களைப் பொறுத்தவரையில் சரியாகத்தான் விளையாடினோம்,'' என்றார்.


வார்னுக்கு சிக்கல்:

அதேநேரம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி "டை' ஆகும் என, ஏழு மணி நேரம் முன்னதாக, ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் வார்ன், கணித்ததும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பாராட்டினாலும், பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் ஒருவர் கணிக்கும் போது, யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்கள் என்று தான் கூறமுடியும். மாறாக வார்ன் மட்டும், "டை' ஆகும் என்று எப்படி சொன்னார் என்பது, பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.


அமிர் சொகைல் எதிர்ப்பு:

சூதாட்ட சந்தேகம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அமிர் சொகைல் கூறுகையில்,"" போட்டி "டை' ஆகும் என, இந்தியா அல்லது பாகிஸ்தான் வீரர்கள் யாராவது தெரிவித்து இருந்தால், இந்நேரம் மேற்கு நாடுகளின் "மீடியா' பெரிய அளவில் விவாதித்து, குதித்திருக்கும். ஆனால், சொன்னது ஆஸ்திரேலியா வீரர் என்றவுடன் "ஜீனியஸ்' என்கிறார்கள்,'' என்றார்.

சச்சின் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை எட்டினார் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் போட்டியில் அவரது 47-வது சதம் இது.


இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங், மார்க் வாஹ், இந்தியாவின் கங்குலி ஆகியோர் 4 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். இவர்களில் மார்க் வாஹ், கங்குலி ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டனர்.


6-வது உலகக் கோப்பையில் விளையாடும் சச்சின், அதிக சதம் மட்டுமின்றி, அதிக அரை சதங்கள் (13) அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பையில் இதுவரை 38 ஆட்டங்களில் விளையாடியுள்ள சச்சின் 1,944 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங் 41 ஆட்டங்களில் 1,577 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 98 சதங்கள் அடித்துள்ளார் சச்சின்.

அடுத்த டிராவிட் - விராத் கோஹ்லி

ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் விராத் கோஹ்லி, இந்தியாவின் அடுத்த டிராவிட்டாக ஜொலிக்கிறார்.

இந்திய அணியின் இளம் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி (22). 19 வயதுக்குட்பட்டவர்கள் உலக கோப்பை தொடரை இந்திய அணிக்காக வென்று தந்தவர்.

கடந்த 2008ல் இலங்கை சென்ற அணியில் சேவக் காயம் காரணமாக திரும்ப, விராத் கோஹ்லிக்கு முதன் முறையாக வாய்ப்பு கிடைத்தது. இதில் 5 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 159 ரன்கள் எடுத்தார்.

பின் 2009ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல் சதம் அடித்து தான் இவருக்கு திருப்பு முனையானது. அதன் பிறகு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர், பலரது கவனத்தை கவர்ந்தார்.


அடுத்தடுத்து சதம்:

கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 118 ரன்கள் விளாசிய இவர், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே மற்றொரு சதம் அடித்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்க சென்ற அணியில் இடம் பெற்று, அங்கும் இரண்டு அரைசதம் (54, 87*) அடித்தார்.


பயிற்சியில் அசத்தல்:

சமீபத்தில் கோஹ்லி பங்கேற்ற 12 போட்டிகளில் 3 சதம், 4 அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இருப்பினும், உலக கோப்பை அணியில் இடம் என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. ஆனால், இரண்டு பயிற்சி போட்டிகளில் இரண்டு அரைசதம் அடிக்க, கேப்டன் தோனியின் கடைக்கண் பார்வை இவருக்கு கிடைத்தது.


அடுத்த டிராவிட்:

உலக கோப்பை தொடரில் முதன் முறையாக களமிறங்கிய இவர், 83 பந்துகளில் சதம் அடித்து, அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், இந்திய அணியின் அடுத்த டிராவிட்டாக பார்க்கப்படுகிறார்.


திறமையில் நம்பிக்கை:

இதுவரை 46 ஒருநாள் போட்டிகளில் 1,772 ரன்கள் எடுத்துள்ள கோஹ்லி கூறுகையில்,"" அனைத்துமே நாம் எதிர்கொள்ளும் எதிரணியினரை பொறுத்து தான் அமைகிறது. அவர்களில் உலகின் சிறந்த பவுலர்கள் இருக்கலாம். ஆனால், நமது திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடினால் வெற்றி கிடைக்கும்,'' என்றார்.

இடது கை பேட்ஸ்மேனான சச்சின்

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கி 7 சிக்ஸர்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதற்காக பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட சச்சின், திடீரென்று இடது கை பேட்ஸ்மேனானார். கையில் உறை கூட அணியாமல் விளையாடிய சச்சின், முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார்.

மொத்தம் 8 பந்துகளை சந்தித்த சச்சின் அதில் 7 சிக்ஸர்களை விளாசினார். சச்சினின் அதிரடியைப் பார்த்த மற்ற வீரர்களும், மைதானத்தில் இருந்தவர்களும் உற்சாகம் அடைந்தனர்.


வீரேந்திர சேவாக், ஹர்பஜன் ஆகியோர் பயிற்சியில் ஈடுபடவில்லை.

இவர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளிலுள்ள சில முக்கிய வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கப் போகிறது.


உதாரணமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளீதரன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரைச் சொல்லலாம்.


இந்த உலகக் கோப்பை போட்டிதான் எனக்கு கடைசி என்று ஏற்கெனவே முரளீதரன் அறிவித்துவிட்டார்.


இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் 6-வது உலகக் கோப்பை போட்டியாகும் இது. 1992, 96, 99, 2003, 2007-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 2011-ம் ஆண்டு போட்டி அவருக்கு 6-வது உலகக் கோப்பை போட்டி என்பதோடு, பாகிஸ்தானின் மியான்தத்தின் சாதனையையும் அவர் சமன் செய்யவுள்ளார்.


ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள மிக முக்கியமான சாதனைகளை தன்னிடத்தில் வைத்திருக்கும் சச்சினின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லாக இது அமையப் போகிறது. இதுதான் சச்சினுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டி என்று பெரும்பாலானவர்கள் சொல்லிவிட்டனர். நமது கேப்டன் தோனி உள்பட...


ஆனால் சச்சின் தனது ஓய்வு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக அவரைக் கேட்டால், ""நான் இப்போது விளையாடுவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். ஓய்வு குறித்து நான் நினைக்கவே இல்லை. விளையாடும் வரை சிறப்பாக விளையாடவேண்டும். நான் எத்தனை ரன்கள் எடுத்தேன் என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. ஆனால் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்றுதான் எப்போதுமே நினைப்பேன்'' என்கிறார்.


இந்த உலகக் கோப்பை வீரேந்திர சேவாக், ஜாகீர் கான் ஆகியோருக்கும் கடைசி போட்டியாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (36), பிரெட் லீக் (34), மைக்கேல் ஹசி (34) ஆகியோருக்கும் இது கடைசி போட்டியாக இருக்கலாம்.


அதேபோல இலங்கையின் குமார சங்ககாரா (33), மஹேல ஜெயவர்த்தனே (33), திலகரத்னே தில்ஷன் (34) ஆகியோருக்கும் இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் (35), மிஸ்பா உல் ஹக் (36), யூனிஸ் கான் (34) ஆகியோருக்கும், மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெய்ல் (31), சிவநாராயண் சந்தர்பால் (36), ராம்நரேஷ் சர்வான் 30) ஆகியோருக்கும் இது கடைசி போட்டியாக இருக்கலாம்.


இதேபோல இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் (33), பால் காலிங்வுட் (35), நியூஸிலாந்து கேப்டன் வெட்டோரி, ஸ்காட் ஸ்டைரிஸ் (35), ஜேக்கப் ஓரம் (32), கென்யாவின் ஸ்டீவ் டிகாலோ (40), தாமஸ் ஓடோயா (32) ஆகியோருக்கும் இதுவே கடைசி ஆட்டமாக இருக்கலாம்.


பெரும்பாலான அணிகளின் முக்கிய வீரர்கள் இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்று விடவும் வாய்ப்பிருக்கிறது. அவர்களின் அற்புதமான ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வரலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அவர்களால் முடிந்த அளவுக்கு இந்த போட்டிகளில் பிரகாசிப்பார்கள் என்று நம்பலாம்.