இந்திய அணியின் நம்பர் 1 அம்போ

மூன்றாவது போட்டி ரத்தானதால், ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ இடம் பெறும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது.       
     
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 

பின், டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலை ஆனது. அடுத்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றால், இரண்டாவது இடத்தில் இருந்து ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. 

இந்நிலையில், மூன்றாவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்க இருந்தது. இங்கு ‘ஹூட் ஹூட்’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட, போட்டியை ரத்து செய்வதாக பி.சி.சி.ஐ., தெரிவித்தது. 

இதையடுத்து, ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்கும் வாய்ப்பு பறிபோனது. தற்போது இந்திய அணி 113 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3–0 என வென்ற ஆஸ்திரேலிய அணி 114 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தை தக்க வைத்துக் கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.          
  
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் கூட 114 புள்ளிகளுடன் 2வது இடத்தையே பிடிக்க முடியும். ஆஸ்திரேலிய அணி, தசம புள்ளிகள் (0.02) வித்தியாசத்தில் முதலிடத்தில் நீடிக்கும்.           

ஒருவேளை இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் 112 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்படும். இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்தால், 111 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்படும்.

நான்காவது போட்டிக்கு சிக்கல்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி(அக்., 17) திட்டமிட்டபடி  நடக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது.        
          
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா, தரை மட்டத்தில் இருந்து 6,800 அடி உயரத்தில் உள்ளது.  இங்கு வீரர்களை ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்கள் மறுக்கின்றன. 

இங்கு விமானம் தரையிறங்கும் இடம் சிறியது என்பதால், மிகவும் துல்லியமாக, தரையிறக்க வேண்டும். தவிர, இரவில் தரையிறங்கும் வசதி கிடையாது.              
           
சாலை வழியாக செல்லலாம் எனில், 5 மணி நேரம் பஸ்சில் செல்ல வேண்டும் என்பதால், இந்த திட்டத்தை கைவிட்டனர்.             
            
உறுதி இல்லை: வேறு வழியில்லாத நிலையில், ஆந்திரா கிரிக்கெட் சங்கத்தை தொடர்பு கொண்ட பி.சி.சி.ஐ., விசாகப்பட்டின மைதானத்தை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தெரிவித்துள்ளது. 

ஆனால், தொடர் மழை காரணமாக, இங்கு மூன்றாவது ஒருநாள் போட்டி(அக்., 14) நடப்பதே கேள்விக்குறியாக உள்ளது.


டிக்கெட் தயார்          
              
இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க செயலர் மோகித் சூட் கூறுகையில்,‘‘ தரம்சாலாவில் போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடக்கின்றன. 

டிக்கெட்டுகள் அச்சடித்து விற்பனைக்கு தயாராக உள்ளன. போட்டியை இங்கு நடத்த முடியாது என்று கூறுவதற்கே இடமில்லை,’’ என்றார்.

400 கோல்களை கடந்தார் மெஸ்சி

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) , கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார். 

இதில் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 

இந்த இரண்டு கோல்களையும் சேர்த்து மெஸ்சியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக அவர் இதுவரை 524 ஆட்டங்களில் விளையாடி 401 கோல்கள் அடித்திருக்கிறார். 

இது போன்ற மைல்கல்லை தொடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்று மெஸ்சி கூறியிருக்கிறார்.

ஹாட்ரிக் வெற்றிக்கு கோல்கட்டா ரெடி

இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இன்று ஐதராபாத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர் கொள்கிறது. 

கடந்த இரு போட்டிகளில் வென்ற கோல்கட்டா அணி, இம்முறை மூன்றாவது வெற்றி பெற காத்திருக்கிறது.


பலமான துவக்கம்: 

கோல்கட்டா அணியை பொறுத்தவரை சென்னை, லாகூர் அணிகளை வீழ்த்தி சிறப்பான நிலையில் உள்ளது. 

கடந்த போட்டியில் மிரட்டிய ராபின் உத்தப்பா, கேப்டன் காம்பிர் ஜோடி இன்றும் அசத்தலாம். 

‘மிடில்–ஆர்டரில்’ பிஸ்லா, யூசுப் பதான் ஏமாற்றுகின்றனர். இவர்களின் போக்கில் மாற்றம் வேண்டும். சென்னைக்கு எதிராக வெளுத்து வாங்கிய டஸ்காட்டே, ரசல் ஜோடி மீண்டும் கைகோர்த்தால் எதிரணிக்கு சிக்கல்தான். 

பந்துவீச்சில் ‘சுழல் மாயாவி’ நரைன் அசத்துகிறார். இவருடன் சாவ்லா, வேகப்பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ரசுல் அசத்தலாம். 

சென்னை வலையில் தப்புமா டால்பின்ஸ்

பெங்களூருவில் இன்று நடக்கும் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் சென்னை, தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ் அணிகள் மோதுகின்றன.       

சென்னை அணி கடந்த முறை கோல்கட்டாவிடம் தோற்ற சோகத்தில் உள்ளது. டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் வலுவான அடித்தளம் அமைக்காமல் போனதே இதற்கு முக்கியக்காரணம். 

இவர்கள் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா, டுபிளசி கைகொடுத்தால் நல்லது. கேப்டன் தோனி தனது பணியை சிறப்பாக செய்கிறார். கடந்த போட்டியில் இவருடன் கைகோர்த்த டுவைன் பிராவோ இன்றும் அசத்த வேண்டும்.       

நெஹ்ரா நம்பிக்கை: கோல்கட்டாவுக்கு எதிராக மிரட்டிய அனுபவ நெஹ்ரா 4 விக்கெட் வீழ்த்தினார். 

இவரது ‘வேகம்’ மீண்டும் எடுபட்டால், எதிரணியின் கூடாரம் காலியாவது உறுதி. ஈஷ்வர் பாண்டே, அஷ்வின் ஜடேஜா எழுச்சி பெற்றால், சென்னை அணி முதல் வெற்றியை ருசிக்கலாம்.     
  
ஜுன்டோ நம்பிக்கை: டால்பின்ஸ் அணியின் கேப்டன் மார்னே வான், டெல்போர்ட் உள்ளிட்டோர் கடந்த போட்டியில் ஒற்றை இலக்கில் வெளியேறினர். 

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் கடந்த ஹயா ஜுன்டோ மட்டும் நம்பிக்கை தருகிறார்.  கேசவ், டார்யன் ஸ்மித் போன்ற வீரர்கள்  திறமை நிரூபிக்க முயற்சிக்கலாம்.