இந்திய அணியின் நம்பர் 1 அம்போ

மூன்றாவது போட்டி ரத்தானதால், ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ இடம் பெறும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது.       
     
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 

பின், டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலை ஆனது. அடுத்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றால், இரண்டாவது இடத்தில் இருந்து ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. 

இந்நிலையில், மூன்றாவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்க இருந்தது. இங்கு ‘ஹூட் ஹூட்’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட, போட்டியை ரத்து செய்வதாக பி.சி.சி.ஐ., தெரிவித்தது. 

இதையடுத்து, ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்கும் வாய்ப்பு பறிபோனது. தற்போது இந்திய அணி 113 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3–0 என வென்ற ஆஸ்திரேலிய அணி 114 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தை தக்க வைத்துக் கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.          
  
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் கூட 114 புள்ளிகளுடன் 2வது இடத்தையே பிடிக்க முடியும். ஆஸ்திரேலிய அணி, தசம புள்ளிகள் (0.02) வித்தியாசத்தில் முதலிடத்தில் நீடிக்கும்.           

ஒருவேளை இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் 112 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்படும். இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்தால், 111 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்படும்.

0 comments:

Post a Comment