இந்தியா மீண்டும் நம்பர் 1

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. 

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது. 

பின் ஹராரேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

இந்திய அணி 114 புள்ளிகளுடன் தனித்து முதலிடம் பிடித்தது. முத்தரப்பு தொடரில், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி (111 புள்ளி) தசம புள்ளிகள் வித்தியாசத்தில் 4வது இடத்தில் உள்ளது.      


நிலைக்குமா முதலிடம்: 

‘நடப்பு உலக சாம்பியன்’ இந்திய அணி, ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள, இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்த வேண்டும்.  

          
தென் ஆப்ரிக்க வாய்ப்பு: 

தென் ஆப்ரிக்க அணி, முதலிடத்துக்கு முன்னேற, முத்தரப்பு தொடரில் மீதமுள்ள லீக் போட்டிகளில், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்த வேண்டும். பின், பைனலில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், இந்திய அணி, இங்கிலாந்திடம் ஒரு போட்டியிலாவது தோல்வி அடைய வேண்டும். ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 115 புள்ளிகள் பெறும். தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி, முதலிடம் பிடிக்கும்.      

ஆஸ்திரேலிய அணி, மீண்டும் ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்க, முத்தரப்பு தொடரை கைப்பற்ற வேண்டும். அதேநேரத்தில், இந்தியாவை ஒரு போட்டியிலாவது இங்கிலாந்து அணி வீழ்த்த வேண்டும்.

புத்துயிர் தந்த புதியவர்கள் - ரகானே உற்சாகம்

ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு  உள்ளிட்ட புதிய வீரர்கள், இந்திய அணிக்கு புத்துயிர் தந்தனர்,’’ என, இளம் வீரர் அஜின்கியா ரகானே தெரிவித்தார்.      

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது. பின், ரெய்னா, அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்தனர். 

இவர்களின் வரவால் இந்திய அணி புத்துயிர் பெற்றது. கார்டிப், நாட்டிங்காமில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று, 2–0 என முன்னிலை பெற்றது.      

இதுகுறித்து இந்திய அணியின் இளம் வீரர் அஜின்கியா ரகானே கூறியது: ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட புதிய வீரர்களின் வரவால் இந்திய அணி புத்துணர்ச்சி பெற்றது. 

டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ‘பீல்டிங்’ படுமோசமாக இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளில், ‘பீல்டிங்கில்’ அசத்தி வருகின்றோம். இது மகிழ்ச்சியாக உள்ளது.      

டெஸ்ட் தொடரில் கண்ட மோசமான தோல்வி, எங்களை வெகுவாக பாதித்தது. பின், ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு, ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தினோம். 

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, கார்டிப்பில் நடந்த 2வது போட்டியில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் துவக்கினோம். பின், மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தக்கவைத்துக் கொண்டோம்.      

காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியதால், மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான்காவது வீரராக களமிறங்கி, திடீரென துவக்க வீரராக விளையாடுவது எளிதான காரியமல்ல. 

ஆனால், துவக்க வீரராக விளையாடிய அனுபவம் நிறைய இருப்பதால், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. பந்துகளை சந்திப்பதில் லேசான மாற்றம் செய்தால் போதுமானது. விராத் கோஹ்லி, ஷிகர் தவான் விரைவில் எழுச்சி காண்பார்கள்.      

இவ்வாறு ரகானே கூறினார்.      

எல்லை மீறினாரா தோனி - கடும் கோபத்தில் பி.சி.சி.ஐ.,

பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தோனிக்கு, பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது.      

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டு, இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். விரைவில் பிளட்சர் நீக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.            
                        
இதனை மறுத்த கேப்டன் தோனி கூறுகையில்,‘‘உலக கோப்பை தொடர்(2015) வரை இந்திய அணிக்கு பிளட்சர் தான் பயிற்சியாளர். இவர் தான் ‘பாஸ்’. இவரது அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ரவி சாஸ்திரி மேற்பார்வை மட்டும் செய்வார்,’’ என்றார்.    
  
பொதுவாக பயிற்சியாளர் தொடர்பான முடிவுகளை பி.சி.சி.ஐ., தான் எடுக்கும். இந்தச் சூழலில் தோனி தன்னிச்சையாக கருத்து வெளியிட்டது மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.      

அதிகாரம் இல்லை: இது குறித்து பி.சி.சி.ஐ.,யின் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி மற்றும் இந்திய அணியுடன் பல தொடர்களில் மானேஜராக சென்ற ஒருவர் கூறியது: இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் இருக்க வேண்டும் என்பதை தோனி முடிவு செய்ய முடியாது. 

இதை பி.சி.சி.ஐ., தான் தீர்மானிக்க வேண்டும். வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டன் யார், பயிற்சியாளர் யார் என்பதை தேர்வுக்குழு  தான் முடிவு செய்யும். இந்திய அணி கேப்டனிடம் இருந்து இது போன்ற கருத்து வெளியானது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அடுத்த செயற்குழு கூட்டத்தில் இது குறித்து கட்டாயம் விவாதிக்கப்படும்.    
        
அணியின் ‘பாஸ்’ யார் என்பது குறித்து தோனி கருத்து தெரிவித்திருக்கக் கூடாது. இதற்கான அதிகாரம் இவருக்கு கிடையாது.       
      
இவ்விஷயத்தில் தோனி வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். ‘மீடியா’ தரப்பில் இருந்து எப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கத்தான் செய்வர். அனுபவம் நிறைந்த கிரிக்கெட் வீரராக இருப்பவர், தனது எல்லை என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்குத் தகுந்து பதில் தர வேண்டும். 

போட்டியில் களமிறங்கும் 11 வீரர்கள் யார் என்பதை, பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் முடிவு செய்ய முடியாது. அதேபோல, யார், எத்தனை காலத்துக்கு பதவியில் இருப்பர் என்பதை தோனி முடிவு செய்யக் கூடாது. அணியின் துணை பயிற்சியாளர்களை நியமிப்பது,  தொடர்பாக கருத்து தெரிவிக்கும் உரிமையும் இவருக்கு கிடையாது.     இவ்வாறு அவர் கூறினார்.           

மோதல் ஆரம்பம்: பயிற்சியாளரை ஓரங்கட்ட வேண்டும் என்று தான் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இது தோனிக்கு பிடிக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் தான் வெளிப்படையாக பிளட்சருக்கு ஆதரவு தெரிவித்தார். இது தோனி–பி.சி.சி.ஐ., இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

பதிலடி கொடுக்க இளம் படை ரெடி - ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், குல்கர்னி, கரண் சர்மா போன்ற இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். 

இவர்கள், டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து, ஒருநாள் தொடரில் பயிற்சியாளர் பிளட்சருக்கு உதவ, சஞ்சய் பங்கர், பாரத் அருண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இவர்கள் பணியை மேற்பார்வை செய்யவுள்ள ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி, நேற்று அணியினருடன் இணைந்தார்.

 இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டலில் நடக்கவுள்ளது. ஒருநாள் அரங்கில் ‘உலக சாம்பியன்’ இந்தியா தான். சர்வதேச தரவரிசையிலும் ‘நம்பர்–2’ (112 புள்ளி) ஆக உள்ளது. 

இங்கிலாந்து அணி (109) ஐந்தாவது இடத்தில் தான் உள்ளது. ‘நடப்பு உலக சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்க, இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) உள்ளது.

இப்போதைய நிலையில், இங்கிலாந்து மண்ணில் மற்றொரு தொடரை இழக்காமல் இருப்பதே முக்கியம். ஒருநாள் கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும்.


கோஹ்லி எழுச்சி:

நேற்று முன்தினம் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. டெஸ்ட் தொடரில் சொதப்பிய கோஹ்லி (10 இன்னிங்ஸ், 134 ரன்கள்), பயிற்சியில் 71 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் இவர் தான் இப்போதைய ‘ரன் மெஷின்’. இதுவரை 134 போட்டிகளில், 5,634 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 19 சதம், 30 அரைசதங்கள் அடங்கும். இவருடன் ரெய்னாவும் இணைந்து அசத்த உள்ளார்.


சபாஷ் சஞ்சு:

அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், 19, தவால் குல்கர்னி, 25, உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவில் நடந்த இளம் வீரர்களுக்கான தொடரில் மிரட்டியவர்கள். கடந்த ரஞ்சி சீசனில் கேரள அணிக்காக பங்கேற்ற சாம்சன் 530 ரன்கள் குவித்தார். இவர் துடிப்பான விக்கெட் கீப்பர் என்பது கூடுதல் சிறப்பு.


கரண் கலக்கல்:

சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா, 23, ஐ.பி.எல்., தொடரில் ஐதாராபாத் அணிக்காக ரூ. 3.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.  ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது ‘எக்கானமி ரேட்’ 3.93 தான்.

அடுத்து வேகப்பந்து வீச்சாளர் குல்கர்னி, 58 முதல்தர போட்டிகளில் 181 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இவர்களுடன் அனுபவ ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ஜடேஜாவும் கைகொடுக்கலாம்.


தோனிக்கு சவால்:

தரவரிசையில் இங்கிலாந்து பின்தங்கியிருந்தாலும், சொந்தமண்ணில் அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுத் தராது. இதனால், டெஸ்ட் தொடரை போல, ஒருநாள் போட்டிகளிலும் கேப்டன் தோனிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

ராஜினாமா முடிவில் தோனி - முன்னாள் வீரர்கள் ஆவேசம்

டெஸ்ட் தொடரில் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. அடுத்து லார்ட்சில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. 1–0 என, முன்னிலை பெற்றவுடன் இந்திய வீரர்கள் வெற்றி மிதப்பில் சொதப்ப துவங்கினர். 

பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பினர். இவர்களை முன்னேற்ற பயிற்சியாளர் பிளட்சர் எதுவுமே செய்யவில்லை. சொந்தமண்ணில் வீறு கொண்டு எழுந்த இங்கிலாந்து அணி, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று 3–1 என, கோப்பை வென்றது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடரை மோசமாக இழந்ததால், இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

இது குறித்து அணியின் முன்னாள் வீரர்கள் ஆவேசமாக கூறியது:      


அஜித் வடேகர்: கடினமான ஆடுகளம் கொண்ட லார்ட்சில் நாம் வென்றோம். இந்த முன்னிலையை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் பயிற்சியாளர் பிளட்சருக்கு இல்லை. இவர் அங்கு என்ன செய்து கொண்டுள்ளார். இவர் கிளம்பும் நேரம் வந்து விட்டது என நினைக்கிறேன். 

பேட்டிங்கில் தனது யுக்தியை மாற்றிக் கொண்ட தோனி, கேப்டன் பணியில் மட்டும் ஏன், தன்னை மாற்றிக் கொள்ள மறுக்கிறார். ‘தேர்டு மேன்’ பகுதியில் பீல்டரை நிறுத்தாதால், இங்கிலாந்து ஸ்கோரில் பாதியளவு ரன்கள் இப்பகுதியில் இருந்து தான் கிடைத்தன. அஷ்வினை முதல் டெஸ்டில் இருந்து சேர்த்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது வியப்பாக இருந்தது.      

குண்டப்பா விஸ்வநாத்: தோனியின் கேப்டன் பொறுப்பு, விக்கெட் கீப்பிங் பணிகள் திருப்தி தரவில்லை. அவரது மனதில் நினைப்பதை செய்தார். இத்தவறை திரும்ப திரும்ப தொடர்ந்தார். எப்போதுமே ஏதாவது அதிசயம் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதிசயம் என்பது அடிக்கடி நிகழாது. ஏதாவது ஒரு முறை தான் ஏற்படும். இதற்காக தோனியை இப்போது நீக்கக் கூடாது. அணியை வழிநடத்த இப்போதைக்கு அனுபவமான, சரியான வீரர் இவர் மட்டும் தான்.       

எரபள்ளி பிரசன்னா: இந்திய அணியில் பிளட்சரின் பங்கு என்பது ‘பூஜ்யம்’ தான். இதை உறுதியாக சொல்ல முடியும்.       

ஸ்ரீகாந்த்: பயிற்சியாளர் பிளட்சர் இந்திய அணிக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை. இளம் வீரர்கள், அனுபவமில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அணியில் 7 முதல் 8 வீரர்களுக்கு போதிய அனுபவம் உள்ளது. ஆனால், போராடும் குணத்தை இழந்து விட்டனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவில்லை.