பந்தை பார்த்தாலே பயம் - டுபிளசி

பந்தை நான் சேதப்படுத்தவில்லை. மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது,'' என, தென் ஆப்ரிக்காவின் டுபிளசி தெரிவித்தார்.
துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி, பந்தை பேன்ட் ஜிப்பின் மீது தேய்த்து சேதப்படுத்தியதாக அம்பயர்கள் புகார் கூறினர். 

இதற்கு, டுபிளசிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இது குறித்து டுபிளசி கூறியது: நான் ஒரு நேர்மையான வீரர் என எனக்குத் தெரியும். கடந்த வாரத்தில் நடந்த சம்பவம் கடினமானதாக அமைந்துவிட்டது. 

மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது. தற்போது, பந்தை யாராவது என் மீது எறிந்தால் கூட அதை பார்க்கவே பயமாக இருக்கிறது. 

போட்டியின்போது, பந்தை விதிக்குட்பட்டுதான் கையாண்டேன். களத்திலிருந்த அம்பயர் கூட, பந்தை பரிசோதித்தார். 

தவறு எதுவும் இருப்பதாக தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்தில் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். 

இவ்வாறு டுபிளசி கூறினார்.

ரோகித் சர்மா - சாதனை வீரராக புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட்டின் புதிய "ஹீரோ'வாக உருவெடுத்திருக்கிறார் ரோகித் சர்மா. ஏழாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இவர், அதிக சிக்சர் உட்பட பல சாதனைகளை படைத்து அசத்தினார். 
இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஏழாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. 

முதலில் "பேட்' செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா இரட்டை சதம் (209) அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. 

கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேம்ஸ் பால்க்னர் (116), மேக்ஸ்வெல் (60) ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், தொடரை இந்திய அணி 3-2 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இந்தியாவின் ரோகித் சர்மா பெற்றார்.

இம்மகிழ்ச்சியில் ரோகித் சர்மா கூறியது: ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு, ஐ.சி.சி.,யின் புதிய "பீல்டிங்' விதிமுறைகள் கைகொடுத்தன. இதன்படி, கடைசி 10 ஓவரில் ஐந்து பீல்டர்கள், "30 யார்டு' வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும் என்பதால், அதிரடியாகவும், சுலபமாகவும் ரன் சேர்க்க முடிந்தது.

பொதுவாக போட்டியில், அதிரடி ஆட்டத்துக்கு மாற சிறிது நேரம் எடுத்துக் கொள்வேன். இதுதான் எனது பேட்டிங் ஸ்டைல். சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த போட்டியிலும் இந்த முறையை கையாண்டேன். நேற்றைய போட்டியிலும் துவக்கத்தில் நிதானமாக ஆடி, பின் அதிவேகமாக ரன் எடுத்தேன்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் "மிடில்-ஆர்டரில்' களமிறங்க தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் போட்டியில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டேன். இப்பணியை சிறப்பாக செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலங்களில் எந்த வரிசையில் களமிறங்குவேன் எனத் தெரியாது.

டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, இலக்கு, எல்லாம். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். டெஸ்ட் போட்டியிலும் சாதிக்கும் பட்சத்தில், என்னை விட மகிழ்ச்சியான வீரர் யாரும் இருக்க முடியாது என்று தான் கூறுவேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

கோல்கட்டாவில் சச்சின் திருவிழா

சச்சினின் 199வது டெஸ்ட் போட்டிக்காக கோல்கட்டாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன்(நவ. 14-18) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

இதற்கு முன்னதாக கோல்கட்டாவில் தனது 199வது டெஸ்டில்(நவ. 6- 10) பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தின் முன்பு சச்சினின் மெகா "கட் அவுட்'கள் வைக்கப்பட்டுள்ளன. 

இவரது சாதனை படங்கள் அடங்கிய அலங்கார வாகனத்தை நேற்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா, கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

இது குறித்து மேற்கு வங்க கிரிக்கெட் சங்க பொருளாளர் பிஷ்வரூப் கூறியது:

சச்சினின் 199வது டெஸ்ட் போட்டிக்கான "கவுன்ட்-டவுன்' துவங்கி விட்டது. இவரது சாதனைகளை விளக்கும் சிறப்பு வாகனம் கோல்கட்டா முழுவதும் சுமார் 200 கி.மீ., தூரத்துக்கு உலா வரும். முக்கிய இடங்களில் இவ்வாகனம் நிறுத்தப்படும். 

இதன் மூலம் போட்டியை நேரடியாக காண இயலாத ரசிகர்களும், இவரது மகத்தான கிரிக்கெட் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளலாம்.

 இவருக்கான சிறப்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார். ஈடன் கார்டன் மைதானத்தின் ஒரு பகுதிக்கு இவரது பெயரை வைக்க திட்டமிட்டுள்ளோம். 

எங்களது சங்கத்தில் கவுரவ உறுப்பினர் அந்தஸ்து அளிக்க இருக்கிறோம். கோல்கட்டாவில் உள்ள காளி கோயிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்வார் சச்சின். இதையடுத்து காளியின் அருள் பெற்ற சேலை ஒன்றை சச்சின்-அஞ்சலி தம்பதிக்கு வழங்க உள்ளோம். இப்போட்டியை காண பாலிவுட் "சூப்பர் ஸ்டார்' அமிதாப், ஷாருக் கான் உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் வர வாய்ப்பு உள்ளது.

சச்சின் களமிறங்கும் போது வானில் இருந்து விமானம் மூலம் 199 ரோஜா இதழ்கள் தூவப்பட உள்ளன. பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிஷ்வரூப் கூறினார்.

வாட்சன் சாதனையை முறியடித்தார் ரோகித்

ஒரு நாள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 16 சிக்சர்கள் அடித்து வாண வேடிக்கை நிகழ்த்தினார்.
இந்த 16 சிக்சர்கள் மூலம் அவர் வாட்சனின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.

2011–ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஹார்னே வாட்சன், வங்காள தேசத்துக்கு எதிராக 15 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை ரோகித் சர்மா முந்தினார்.

ரோகித் சர்மா அதிகபட்சமாக மெக்காய், டோசர்ட்டி ஓவர்களில் தலா 5 சிக்சர்கள் அடித்தார். மேக்ஸ் லெவலுக்கு 3 சிக்சரும், பல்க்னெருக்கு 2 சிக்சரும், கோல்டருக்கு ஒரு சிக்சரும் அடித்தார்.

அதிக சிக்சர் அடித்த ‘டாப் 5’ வீரர்கள் வருமாறு:–

1. ரோகித் சர்மா (இந்தியா)– 16 சிக்சர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (பெங்களூர்).

2. வாட்சன் (ஆஸ்திரேலியா)– 15 சிக்சர் வங்காள தேசம் (டாக்கா).

3. மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்) – 12 சிக்சர். கனடா (சிங்சிட்டி).

4. ஜெய்சூர்யா (இலங்கை– 11 சிக்சர். பாகிஸ்தான் (சிங்கப்பூர்).

5. அப்ரிடி (பாகிஸ்தான்)– 11 சிக்சர். இலங்கை (நைரோபியா).

இக்கட்டான நிலையில் இஷாந்த்

ஒரு ஓவரில் இஷாந்த் சர்மாவின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இவர், அணியில் இருந்து தூக்கி எறியப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 25. கடந்த 2007ல் தனது 19 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். துவக்கத்தில் பவுன்சருடன் கூடிய, 145 கி.மீ., வேகத்தால் வீரர்களை மிரட்டினார். 

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை, சொல்லி வைத்தது போல அவுட்டாக்கி விடுவார். இப்போது 25 வயது ஆன நிலையில், பவுலிங்கில் சோர்ந்து விட்டார். 

வழக்கமான வேகத்துக்குப் பதில் 130 முதல் 135 கி.மீ., வேகத்தில் மட்டுமே பவுலிங் செய்கிறார். சரியான அளவு மற்றும் நீளம் இல்லாததால், இவரால் "டெயிலெண்டகளை' கூட வீழ்த்த முடியவில்லை. 

ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 3 போட்டியில் 24 ஓவர்கள் பவுலிங் செய்து, 189 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மூன்றாவது போட்டியில் ஒரு ஓவரில் 30 ரன்கள் விட்டுத்தர, இந்திய அணி தோற்க நேரிட்டது.

இதனால் அணியில் இருந்து எப்படியும் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி உள்ளிட்டோர் ஆதரவு கரம் நீட்ட, மீதமுள்ள 4 போட்டிகளுக்கான அணியில் மீண்டும் இடம்பெற்றார்.

இதனிடையே, கடந்த 23ம் தேதி நடந்த போட்டிக்காக, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க மைதானத்தில், சக வீரர்களுடன் இஷாந்த் சர்மா பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மதியம் 12.30 மணி அளவில் அங்கு வந்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல், உறுப்பினர் சபா கரீம் ஆகியோர் இஷாந்த் சர்மாவை அழைத்தனர்.


பேசியது என்ன:

இதையடுத்து அங்கு சென்ற இஷாந்த் சர்மாவின் தோள் மேல் கையை வைத்து, சந்தீப் பாட்டீல் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். சபா கரீம், அருகில் இருந்து அமைதியாக தலையை அசைத்து கேட்டுக் கொண்டிருந்தார். அரைமணி நேரத்துக்குப் பின், அங்கிருந்து கிளம்பினர். 

பிறகு தான் அன்றைய போட்டியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்படவில்லை. அணியில் இருந்து வெளியேற்றும் முயற்சிக்கு, இது முதல் நடவடிக்கையாக இருக்கும் எனத் தெரிகிறது. இவரது இடத்தில் வந்த ஷமி, 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, இனி இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம் பெறுவது கடினம் தான்.