களிமண் கதாநாயகனுக்கு மவுசு

அமெரிக்காவில் நடக்கும் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில், நடால் தான் கோப்பை வெல்வார் என, ஏராளமானோர் பந்தயம் கட்டுகின்றனர்.

ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால், 27. களிமண் கள நாயகன். இவருக்கு பிடித்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், 2005-2008, 2010-2013 என 8 முறை கோப்பை வென்றுள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் (2009), விம்பிள்டன் (2008, 2010) மற்றும் யு.எஸ்., ஓபனிலும் (2010) நான்கு பட்டம் கைப்பற்றினார்.

முழங்கால் காயம் காரணமாக ஏழு மாதமாக டென்னிசில் விலகியிருந்த நடால், பிப். மாதம் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பினார். அப்போது முதல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இதுவரை பிரேசில், மெக்சிகோ, இந்தியன் வெல்ஸ், பார்சிலோனா, மாட்ரிட், ரோம், மான்ட்ரியல், சின்சினாட்டி மற்றும் பிரெஞ்ச் ஓபன் என, மொத்தம் 9 போட்டிகளில் பட்டம் வென்றார். 


நடால் முதல்வன்:

நடாலின் இந்த அபாரமான "பார்ம்' காரணமாக, தற்போது அமெரிக்காவில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில், இவர் தான் கோப்பை வெல்வார் என, அதிகம் பேர் பந்தயம் கட்டுகின்றனர். இது 7/4 என்ற விகிதத்தில் <உள்ளது. 

ஓய்வு பெறும் முடிவில் அவசரப்படவில்லை - தெண்டுல்கர்



கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 

இதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள தெண்டுல்கள் 200–வது டெஸ்டோடு ஒய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது. 

அதற்கு ஏற்றவாறு 200–வது டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை நவம்பர் மாதம் இந்தியாவில் விளையாட அழைத்துள்ளது. முதலில் தென்ஆப்பிரிக்காவில் தான் அவரது 200–வது டெஸ்ட் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் ஓய்வு பெறும் முடிவில் நான் அவசரப்படவில்லை என்று தெண்டுல்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– 

நான் 23 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். மேலும் ஒரு அடியை எடுத்து வைக்க விரும்புகிறேன். நான் எல்லாவற்றையும் நினைத்து பார்ப்பது இல்லை. 

ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டிய அவசரம் எதுவும் எனக்கு இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர்தான். கிரிக்கெட்டின் கடவுள் என்று குறிப்பிட வேண்டாம். நான் தவறுகளை செய்பவன். 

நாம் எல்லோரும் தவறுகள் செய்யக் கூடியவர்கள்தான். ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன். 

1999–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது எனது தந்தையை இழந்தேன். இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. 

இவ்வாறு தெண்டுல்கள் கூறினார்.

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்



அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 55 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று அறிவித்தது.

கோல்கட்டாவில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று வெளியிட்டது. 

இதன்படி, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் செப்., 7ம் தேதி வரை ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்மூலம், 55 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

முன்னதாக 1959ல் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி 5-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

கடைசியாக 2011ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 4-0 என தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.

பயிற்சி போட்டிகள்: டெஸ்ட் போட்டிகள், டிரன்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், ஏஜியஸ் பவுல், ஓல்டு டிராபோர்டு மற்றும் ஓவல் மைதானங்களில் நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி, இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. 

இங்கிலாந்தில் உள்ளூர் அணிகளான லீசெஸ்டர்ஷயர், டெர்பிஷயர் அணிகளுக்கு எதிராக மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 

இதேபோல, ஒருநாள் தொடருக்கு முன், மிடில்சக்ஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 50 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள், பிரிஸ்டோல், சோபியா கார்டன்ஸ், டிரன்ட் பிரிட்ஜ், எட்பாஸ்டன், ஹெட்டிங்லி மைதானங்களில் நடக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைமை அதிகாரி டேவிட் கூலியர் கூறுகையில், ""55 ஆண்டுகளுக்கு பின், இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்,'' என்றார்.

ஐ.சி.சி., ரேங்கிங் - இந்தியா நம்பர் 1



ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112) அணிகள் உள்ளன.


கோஹ்லி "நம்பர்-4':

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் தோனி 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 16வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ், இலங்கையின் சங்ககரா உள்ளனர்.


ஜடேஜா "நம்பர்-1':

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளார். 

மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 18வது இடத்தில் நீடிக்கிறார்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 3வது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் உள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் தெண்டுல்கர், டிராவிட்



10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் செப்டம்பர் 21-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டிக்கு, ஐ.பி.எல். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தெண்டுல்கரை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுமாறு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேட்டு இருந்தது. 

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தெண்டுல்கர் பெயர் இடம் பெற்றுள்ளது. 

இதேபோல் இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் விடைபெறுவதாக தெரிவித்து இருந்த டிராவிட்டின் பெயர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறது. 

இதனால் இருவரும் இந்த போட்டியில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.