டெஸ்ட் ரேங்கிங்கில் இந்தியா முன்னேற்றம்

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. 

டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி (112) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இந்திய அணி (116 புள்ளி) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இப்பட்டியலில், தென் ஆப்ரிக்கா (135) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய (105), பாகிஸ்தான் (102), வெஸ்ட் இண்டீஸ் (99) ஆகிய அணிகள் முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடத்தை பிடித்தன. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 அல்லது அதற்கு மேல் கைப்பற்றும் பட்சத்தில், மீண்டும் "நம்பர்-2' இடத்துக்கு முன்னேறலாம்.

தோனிக்கு கேக் தெரபி

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் பயணத்தின் போது தொடைப் பகுதியில் காயம் அடைந்த இவர், ஓய்வில் உள்ளார். 

இவர் நேற்று முன்தினம் போர்ட் ஆப் ஸ்பெயினில் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். 

இதற்கான "பார்ட்டியில்' பங்கேற்ற டுவைன் பிராவோ உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், தோனியின் முகம் முழுவதும் பிறந்தநாள் "கேக்கை' பூசி மகிழ்ந்தனர்.

இது குறித்து "டுவிட்டர்' இணையதளத்தில் தோனி வெளியிட்ட செய்தியில்,"என் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரும்பினர். "கேக்கை' தடவி என் முகத்தை மென்மையாக மாற்றிய பிரவோவுக்கு நன்றி. இதை "கேக் தெரபி' என்று கூறலாம்,'என, குறிப்பிட்டார்.

பைனலுக்கு செல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

முத்தரப்பு தொடரின் இன்றைய லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதுகின்றன. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்றது. இலங்கை, இந்திய அணிகள் தலா 5 புள்ளிகளுடன், பட்டியலில் அடுத்த இரு இடங்களில் உள்ளன. 

இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றால் 14 புள்ளியுடன் பைனலுக்கு தகுதி பெற்றுவிடும். தோற்கும் பட்சத்தில் இலங்கை 9 புள்ளிகள் பெறும். 

அடுத்து 9ம் தேதி நடக்கும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தினால், மூன்று அணிகளும் தலா 9 புள்ளிகள் பெறும். அப்போது "ரன்ரேட்' அடிப்படையில் பைனலுக்கு செல்லும் அணிகள் முடிவாகும். 

இதுபோன்ற சிக்கலை தவிர்க்க, இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று பைனலுக்கு செல்ல முயற்சிக்கும். இதற்கேற்ப கெய்ல், சார்லஸ் ஜோடி விழித்துக் கொள்ள வேண்டும். "மிடில் ஆர்டரில்' டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், போலார்டு, சமி கைகொடுக்க வேண்டும். 

பெஸ்ட் "பெஸ்ட்': பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட், சிறப்பாக செயல்படுகிறார். தவிர, கீமர் ரோச், "அனுபவ' சமி, "சுழல் மாயாவி' சுனில் நரைனும் அசத்தலாம். 

மிரட்டல் "பேட்டிங்': இந்திய அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிரட்டிய தரங்கா, ஜெயவர்தனா, இன்றும் இலங்கைக்கு ரன்குவிக்கலாம். கேப்டன் மாத்யூஸ், திரிமான்னே, சங்ககராவும் உதவ தயாராக உள்ளனர். 

பவுலிங்கில் "சீனியர்' வீரர்கள் மலிங்கா, குலசேகராவுடன் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே, முதல் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு இன்று இலங்கை பழிதீர்க்க முயற்சிக்கும். 

தோனி உள்ளிட்ட 5 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு



ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் தோனி, வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, புவேனஸ்வர் குமார், உமேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் வீரர் பர்வேஸ் ரசூல் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் என்ற பெருமையை ரசூல் பெற்றுள்ளார்.

விராட் கோலி தலைமையில் விளையாடவுள்ள இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெயதேவ் உனட்கட், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா சிறப்பாக பந்துவீசியதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதேநேரத்தில் தொடர்ந்து சரியாக விளையாடாத தமிழக வீரரான முரளி விஜய் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக்குழு கூட்டத்தின்போது மூத்த வீரர்களான கம்பீர், சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர்கான், பிரவீண் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை.

தேர்வுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அணியின் விவரத்தை வெளியிட்ட பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல், "ஜிம்பாப்வே தொடருக்கு இளம் வீரர்கள் அடங்கிய அணியுடன் செல்ல விரும்பினோம்' என்றார்.

ஜூலை 24-ம் தேதி தொடங்கும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 3-ம் தேதியோடு நிறைவடைகிறது.

இதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க "ஏ' அணிகளுடன் முத்தரப்புத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய "ஏ' அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சேதேஷ்வர் புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முத்தரப்புத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

யார் இந்த பர்வேஸ் ரசூல்? ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவரான பர்வேஸ் ரசூல், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இந்திய "ஏ' அணியில் இடம்பிடித்தார். 

அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் 36 ரன்கள் சேர்த்தார். இது அந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த 2-வது அதிகபட்ச ரன்னாகும். 

இதன்பிறகு கடந்த ஐபிஎல் போட்டியில் புணே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ரசூல், இப்போது இந்திய அணியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஆல்ரவுண்டரான ரசூல், இதுவரை 17 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளையும், 1,003 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், சேதேஷ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது சமி, வினய் குமார், ஜெயதேவ் உனட்கட், மோஹித் சர்மா.

இந்திய ஏ அணி: சேதேஷ்வர் புஜாரா (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக், அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சாஹா, பர்வேஸ் ரசூல், சபேஸ் நதீம், முகமது சமி, ஸ்டூவர்ட் பின்னி, ஈஸ்வர் பாண்டே, ஜெயதேவ் உனட்கட், சித்தார்த் கெளல்.

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்ட முதல் காஷ்மீர் வீரர்



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஸ் ரசூல் என்ற  கிரிக்கெட் வீரர் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியக் கிரிக்கெட் தேர்வுக் குழுவினரால் நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்திய அணிக்குள் நுழையும் முதல் காஷ்மீரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.  

கலவரங்களால் அலைக்கழிக்கப்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கை மூடிவைக்கும் போதெல்லாம் வெறிச்சோடி இருக்கும் பிஜ்பெஹாரா நகரத் தெருக்களில் விளையாடி ரசூல்  தனது கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொண்டார். 

கடந்த 2009ஆம் ஆண்டில் தீவிரவாத செயல்களுடன் தொடர்பு கொண்டவர் இவர் என்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தின் வெளியே காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டார்.  

முன்னாள் இந்திய சுழல் பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி, ஜம்மு, காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றார். இவரே, இந்திய அணியில் ரசூல் இடம் பெறுவதற்கும் காரணமாக இருந்துள்ளார். 

ஒரு எளிய கடை முதலாளியின் மகனான ரசூல்(வயது24), அணியின் நடுத்தர வரிசை ஆட்டக்காரராகவும், சிறந்த ஆப்-ஸ்பின் பந்து வீச்சாளராகவும் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.  இந்த வருட ஆரம்பத்தில் புனே வாரியர்ஸ் அணிக்காக டி20 போட்டியில் ரசூல் விளையாடினார். 

அதேபோல், இந்தியா ஏ பிரிவினருக்கான அணியிலும் விளையாடிய முதல் காஷ்மீரி என்ற பெருமையைப் பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய அணியினருடன் போர்டு பிரெசிடெண்ட் XI அணியில் விளையாடியபோது, 45 ரன்கள் கொடுத்து 7  விக்கெட்டுகளை எடுத்தார். 

சென்ற ரஞ்சிப் போட்டிகளின் போதும் ஜம்மு,காஷ்மீர் மாநில அணியில் விளையாடி 594 ரன்களும், 33 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இவரது மூத்த சகோதரர் ஆசிப் உள்ளூர் டி20 போட்டிகளில் மாநில அணியில் விளையாடியுள்ளார்.  இவரது பயிற்சியாளரான அப்துல் கையும், இவரது தேர்வு குறித்து தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்ககளையும் வெளியிட்டுள்ளார்