இந்தியாவுக்கு இன்னும் இரண்டு சவால்



சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற இந்திய அணி, இன்னும் இரண்டு போட்டிகளில் சாதிக்க வேண்டியுள்ளது. இதனை இலக்காக கொண்டு வீரர்கள் செயல்பட வேண்டும்,''என, கேப்டன் தோனி வலியுறுத்தினார்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இம்முறை லீக் சுற்றில் அசத்திய இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. அடுத்து, வரும் 20ம் தேதி நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். பின் 23ம் தேதி நடக்கும் பைனலில் வென்றால், முதல் முறையாக கோப்பை கைப்பற்றலாம். 

நேற்று முன் தினம் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணியினர் அதே வேகத்துடன் செயல்பட வேண்டும் என தோனி கூறினார். 


தோனி கூறியது: 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் சிறப்பாக செயல்பட்டார். எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். புதிய பந்துகளிலும் "சுவிங்' செய்கிறார். குறைவான ஒரு நாள் போட்டிகளிலேயே விளையாடியுள்ள இவர், இன்னும் நல்ல வளர்ச்சி அடைவார். 


சிறப்பான அணி:

"மிடில்-ஆர்டர்' பலத்துடன் உள்ளது. நான், ரெய்னா, ஜடேஜாவின் ஆட்டம் நிலையானது. அதே நேரம் ரெய்னா வலைப்பயிற்சியில் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டும். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் திறமையாக இருக்கிறோம். 

உலக கிரிக்கெட் அரங்கில் பீல்டிங்கில் நமது அணிதான் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் தனக்குரிய பொறுப்புகளுடன் விளையாடுகின்றனர். நான் "கிளவுஸ்' அணிந்து செயல்படுகிறேன். ஆனால் இங்கு நிலவும் குளிரான சூழ்நிலையிலும் மற்ற வீரர்கள், வெறும் கையுடன் "கேட்ச்' பிடிக்கின்றனர்.

கோப்பை கைப்பற்ற இன்னும் இரண்டு சவால் பாக்கி உள்ளது. இதில், கடந்த போட்டிகளை போல அசத்தல் ஆட்டத்தை தொடர வேண்டும்.

 இவ்வாறு தோனி கூறினார். 


புவனேஷ்வர் உற்சாகம்

புவனேஷ்வர் குமார் கூறுகையில்,""என் பயிற்சியாளர், கேப்டன் தோனி என்ன சொன்னார்களோ அதன்படி நடந்தேன். பயிற்சி போட்டியின்போது "சுவிங்' செய்ய அதிக சிரமப்பட்டேன். ஆனால் கடினமான உழைப்பின் மூலம், இதை சாத்தியமாக்கினேன். 

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. "சுவிங்' செய்வதை என் பலமாக கருதுகிறேன். அதே நேரம் சீனியர் வீரர்களுடன் பேசுவதனால், இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்,'' என்றார். 

இந்தியா முதல் வெற்றி பெற்று அசத்தல்



சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றி பெற்று அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

மழையால் போட்டி அடிக்கடி பாதிக்கப்பட சுவாரஸ்யம் குறைந்து போனது. பேட்டிங், பவுலிங்கில் பாகிஸ்தான் சொதப்ப, வழக்கமான ஆக்ரோஷத்தை காண முடியவில்லை.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதன் "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் "பரம எதிரிகளான' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 

ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. பாகிஸ்தான் வெளியேறிய நிலையில், இப்போட்டி பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை.  "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். 


புவனேஷ்வர் மிரட்டல்:

பாகிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமார் "வேகத்தில்' துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. இவரது, பந்தில் "அபாய' ஜாம்ஷெத்(2) வெளியேறினார். 12 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. 16 நிமிட தாமதத்துக்குப் பின், போட்டி துவங்கியதும் புவனேஷ்வரின் பந்தில் முகமது ஹபீஸ் (27), தோனியின் "தீயான' கேட்ச்சில் அவுட்டானார்.


40 ஓவர்கள்:

நீண்ட நேரம் களத்தில் நின்ற கம்ரான் அக்மல் (21 ரன், 38 பந்து), அஷ்வின் "சுழலில்' சிக்கினார். 19 ஓவரில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்த போது, பலத்த மழை பெய்தது. 

அடுத்து 2 மணி நேரம், 37 நிமிட தாமதத்துக்குப் பின் போட்டி துவங்கியது. இம்முறை தலா 40 ஓவர்களாக மாற்றப்பட்டது. 


சுழல் ஜாலம்:

பின் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா இருவரும் சுழற்பந்து வீச்சில் அசத்தினர். இவர்களது நெருக்கடியால் பாகிஸ்தான் வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். கேப்டன் மிஸ்பா உல் ஹக் (22), ஜடேஜா பந்தில் போல்டானார். 

சுதாரித்து விளையாடிய ஆசாத் சபிக், ஜடேஜா ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் விளாசினார். இவர் 41 ரன்கள் எடுத்தார். இரண்டு பவுண்டரி அடித்த சோயப் மாலிக்கை (17), ஜடேஜா வெளியேற்றினார். 

பாகிஸ்தான் அணி 39.4 ஓவரில் 165 ரன்களுக்கு சுருண்டது. உமர் அமின் (27) அவுட்டாகாமல் இருந்தார். 


இலக்கு மாற்றம்:

"டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, இந்திய அணி 40 ஓவரில் 168 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. 

இந்தியாவுக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் தந்தனர். முகமது இர்பான் பந்துகளை ரோகித் சர்மா, அடுத்தடுத்து பவுண்டரிக்கு அனுப்பினார். தன் பங்கிற்கு தவானும் பவுண்டரிகள் அடித்தார். 8.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 47 ரன்கள் எடுத்த போது மழையால், போட்டி தடைபட்டது. பின் ஆட்டம் துவங்கியதும், அஜ்மல் வலையில் ரோகித் சர்மா(18) சிக்கினார். 11.3 ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது. 


102 ரன்கள் இலக்கு:

பின் மழை நின்றதும், 22 ஓவரில் 102 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மீண்டும் மாற்றப்பட்டது. தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த தவான், ரியாஸ் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். 

இவர் 48 ரன்களுக்கு அவுட்டாகி அரைசதத்தை நழுவவிட்டார். தினேஷ் கார்த்திக்(11*), கோஹ்லி(22*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 19.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. 
ஆட்ட நாயகன் விருதை புவனேஷ்வர் குமார் வென்றார்.


புதிய வரலாறு

 சாம்பியன்ஸ் டிராபி தொடரில்(மினி உலக கோப்பை) பாகிஸ்தானுக்கு எதிராக 2004 (பர்மிங்காம்), 2009 (செஞ்சுரியன்) என, இரு முறை மோதிய போட்டியில் இந்திய அணி தோற்றது. நேற்று முதல் முறையாக வென்ற தோனி தலைமையிலான அணி புதிய வரலாறு படைத்தது.

* தவிர, இம்முறை லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. 

நூறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

வரலாறு படைக்குமா இந்தியா?



சாம்பியன்ஸ் டிராபி(மினி உலக கோப்பை) வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானை வென்றதில்லை. இந்தக் குறையை போக்க, இன்றைய பரபரப்பான லீக் போட்டியில் இந்திய கேப்டன் தோனி "தீயாக' செயல்பட்டு, வெற்றி வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இரு வெற்றியுடன் (தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்) அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

 இரு தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, கோப்பை வெல்லும் போட்டியில் இருந்து வெளியேறியது. 

இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியின் முடிவு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. எனினும், கிரிக்கெட் <உலகின் "பரம எதிரிகள்' மோதுவதால், மொத்தமுள்ள 25 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிவது உறுதி. 

இந்திய அணியின் பேட்டிங் எப்போதும் போல வலுவாக உள்ளது. இங்கு விளையாடிய நான்கு போட்டிகளில் (2 பயிற்சி) மூன்றில் 300க்கும் அதிகமான ரன்களை எடுத்தது. துவக்க வீரர் ஷிகர் தவான், அடுத்தடுத்து சதம் அடித்து "பார்மில்' உள்ளார். 

இவருக்கு இரு அரைசதம் அடித்த ரோகித் சர்மாவும் கைகொடுப்பதால், ரன்கள் எளிதாக வருகின்றன. இவர்களுடன் தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, கேப்டன் தோனி ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர்.


ஜடேஜா நம்பிக்கை:

வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா உள்ளனர். உமேஷ் யாதவுக்குப் பதில், பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் இர்பான் பதானை களமிறக்கினால் நல்லது. 

"சுழலில்' அஷ்வினுக்கு பெரும் உதவியாக உள்ளார் "சர்'ரவிந்திர ஜடேஜா. கடந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய இவர், இன்றும் தோனிக்கு உதவ காத்திருக்கிறார்.


மிஸ்பா அசத்தல்:

பாகிஸ்தான் அணிக்கு "பேட்டிங்' தான் பெரும் தொல்லை. முதல் இரு போட்டிகளில் 170 (வெஸ்ட் இண்டீஸ்), 167 (தென் ஆப்ரிக்கா) என, 200 ரன்களை எட்டவில்லை. கேப்டன் மிஸ்பா உல் ஹக் மட்டும், இரு அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். மற்றபடி, இம்ரான் பர்கத், ஹபீஸ், சோயப் மாலிக் என, யாரும் நீடிப்பதில்லை. இந்தியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சதம் அடித்த நாசிர் ஜாம்ஷெத், எழுச்சி பெற முயற்சிக்கலாம்.


அஜ்மல் பலம்:

பவுலிங்கில் 7 அடி, ஒரு அங்குல உயரமுள்ள முகமது இர்பான், ஜுனைடு கான், வகாப் ரியாஸ் வேகத்தில் மிரட்டுவர். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் "அனுபவ' சயீத் அஜ்மல், முகமது ஹபீஸ் ஆகியோருடன் சோயப் மாலிக்கும் தொல்லை தருவார் எனத் தெரிகிறது.


போட்டி எப்படி:

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தானின் பவுலர்களுக்கும் இடையிலான சவாலாக, இன்றைய போட்டி பார்க்கப்படுகிறது. இரண்டவதாக பவுலிங் செய்யும் அணிக்கு, வேகப்பந்து வீச்சு நன்றாக எடுபடும் என்பதால், இன்று "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்.



யார் அதிகம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 124 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 49 ல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 71ல் வென்றது. 4 போட்டிகளுக்கு முடிவில்லை.


கடைசி வாய்ப்பு

 உலக கோப்பை (50 ஓவர், 5 முறை), "டுவென்டி-20' உலக கோப்பை (3 முறை) வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரை(மினி உலக கோப்பை) பொறுத்தவரையில், 2004 (பர்மிங்காம்), 2009 (செஞ்சுரியன்) என, இரு முறை மோதிய போட்டியிலும், இந்திய அணி தோற்றுள்ளது. இது கடைசி தொடர் என்பதால், இந்த வாய்ப்பை இந்திய அணி "மிஸ்' பண்ணாமல் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்.


மழை வருமா

இன்று போட்டி நடக்கும் பர்மிங்காமில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். மழை வர வாய்ப்பு குறைவு. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது எனத் தெரிகிறது. 


சாதிப்பாரா தவான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இம்முறை ஷிகர் தவான், தென் ஆப்ரிக்கா (114), வெஸ்ட் இண்டீசுக்கு (102) எதிராக தொடர்ந்து இரு சதம் விளாசினார். இன்று பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தினால், ஒருநாள் அரங்கில் "ஹாட்ரிக்' சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கலாம்.

ஏற்கனவே, பாகிஸ்தானின் ஜாகிர் அபாஸ், சயீத் அன்வர், தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், டிவிலியர்ஸ் ஆகிய நான்கு பேர் "ஹாட்ரிக்' சதம் அடித்துள்ளனர். 


ரசிகர்களுக்காக...

பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா கூறுகையில்,"" தொடரை விட்டு வெளியேறி விட்டோம் என்றாலும், உலக சாம்பியன் இந்தியாவுக்கு எதிராக வெல்வது என்பது, பெரிய ஆறுதலாக அமையும். இது பைனல் போல. எங்கள் திறமை நிரூபிக்க இது தான் கடைசி வாய்ப்பு. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவர்,'' என்றார்.


சவாலான போட்டி: தோனி

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" இது சவாலான போட்டி தான். யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது பொருட்டல்ல. ஏனெனில், சர்வதேச அணி என்பது போதிய திறமையுடன் தான் இருக்கும். பாகிஸ்தான் என்பதால், கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம். இப்போட்டியின் முடிவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி பெற பாகிஸ்தான் முயற்சிக்கும். இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?



சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 10-வது லீக் ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டோனி தலைமையிலான இந்திய அணிதான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. 

தென்ஆப்பிரிக்காவை 26 ரன்னிலும், வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இதன்மூலம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணிதான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. அரைஇறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. 

இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி “ஹாட்ரிக்” வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியோடு ஷிகார் தவானின் ஒருநாள் ஹாட்ரிக் சதமும் நடக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 114 ரன்னும், வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 102 ரன்னும் எடுத்த அவர் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தலாம். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தவான் தொடர்ந்து 3 சதம் அடித்து இருந்தார். மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தவான் 187 ரன் எடுத்தார். தற்போது சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்துள்ளார். இது தவிர ரோகித்சர்மா, தினேஷ்கார்த்திக், வீராட் கோலி, கேப்டன் டோனி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். 

ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்தும் அணிக்கு பலத்தை ஏற்படுத்தி உள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அவர் 5 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற போராடும். இரு அணிகளும் கடைசியாக டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி மோதிய போட்டியில் இந்தியா 10 ரன்னில் வெற்றி பெற்றது. 

இரு அணிகளும் 124 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 49 ஆட்டத்திலும், பாகிஸ்தான் 71 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டம் முடிவு இல்லை. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்சன் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 


இரு அணி வீரர்கள் வருமாறு:- 

இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித்சர்மா, வீராட்கோலி, தினேஷ்கார்த்திக், ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முரளி விஜய், இர்பான்பதான், அமித் மிஸ்ரா, வினய்குமார். 

பாகிஸ்தான்: மிஸ்பா- உல்-ஹக் (கேப்டன்), இம்ரான்பர்கத், நாசிர் ஜாம்ஷெட், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், உமர் அமின், கமரன் அக்மல், வகாப் ரியாஸ், அஜ்மல், ஜூனைத்கான், முகமது இர்பான், அப்துர் ரகுமான், ஆசாத் சபீக், ஆசாத் அலி, அதில்.

ஸ்ரீசாந்த்துக்கு ஜாமின் கிடைக்குமா?



ஸ்ரீசாந்த் ஜாமின் மனு மீதான விசாரணை, நாளை டில்லி கோர்ட்டில் தொடர்ந்து நடக்கவுள்ளது. இதில் இவருக்கு ஜாமின் கிடைக்கும் எனத் தெரிகிறது.

பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் மற்றும் பிடிபட்ட அனைவரும், திகார் சிறையில் உள்ளனர். இவர்களுக்கு "நிழல் உலக தாதா' தொடர்பு இருப்பதாக தெரிவித்து, "மொகோகா' எனும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதியப்பட்டது.

இதனிடையே, ஸ்ரீசாந்த் ஜாமின் மனு மீதான விசாரணை டில்லி கோர்ட்டில் நடந்தது. இவருக்கு ஆதரவாக வாதாடிய பினகி மிஸ்ரா, போலீஸ் தரப்பு சாட்சியங்களை உண்டு, இல்லை என்று செய்தார்.


இதன் விவரம்:

* ஸ்ரீசாந்த் இடுப்பில் "டவல்' வைத்திருந்தது குற்றமே இல்லை. ஒரு வேகப்பந்து வீச்சாளர், 38 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பவுலிங் செய்யும் போது, ஏற்படும் வேர்வையை துடைத்துக்கொள்ள இப்படிச் செய்யலாம். 

இதே போட்டியில் விளையாடிய டிராவிட் கூட "டவல்' வைத்திருந்தார். தவிர, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போதும், ஸ்ரீசாந்த் "டவல்' பயன்படுத்தினார் (இதற்கான போட்டோக்கள் சமர்ப்பிக்கப்பட்டது).

* கடவுளின் மீது பற்றுக்கொண்டவர் ஸ்ரீசாந்த். இவர், பவுலிங் செய்யும் முன், கடவுளை வேண்டிக்கொள்வார். இதை "சிக்னல்' கொடுத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

* தவிர, ஒரு ஓவரில் 14 ரன்களை கொடுக்க சம்மதித்தார் என்று கூறப்பட்டது. இதில் முதல் நான்கு பந்தில், 5 ரன்கள் தான் விட்டுத்தந்தார். கடைசி 2 பந்தில் 9 ரன்கள் தேவை. எப்படியும் ஒரு சிக்சர் அடிக்க வேண்டும். ஆனால், 5வது பந்தை ஸ்ரீசாந்த் "ஷார்ட் பிட்ச்' ஆக வீசிய நிலையில் எப்படி சாத்தியமாகும். எதிர்முனையில் அனுபவ வீரர் (கில்கிறிஸ்ட்) இருந்ததால், பவுண்டரியாக மாற்றினார். 

இந்த ஓவரில் "நோ-பால்', "வைடு' மற்றும் தேவையற்ற முறையில் பந்தை எறிவது என, எதையும் செய்யவில்லை. பிரிமியர் தொடரில் இவரது "எக்கானமி ரேட்' 9 ரன்கள். இந்நிலையில் 13 ரன்கள் கொடுத்தது என்பது பெரிய வித்தியாசம் இல்லை.

* அடுத்து, "புக்கி'களிடம் இருந்து பெற்ற பணத்தில் தான் இஷ்டம் போல செலவு செய்தார் என்று புகார் கூறுகின்றனர். இது தவறு. தனது வங்கிக்கணக்கில் ரூ. 10,000 வீதம் 5 முறை எடுத்துள்ளார். மற்ற நேரங்களில் "டெபிட் கார்டை' பயன்படுத்தி பொருட்கள் வாங்கியுள்ளார். 

இவ்வாறு பினகி மிஸ்ரா வாதாடினார்.