டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்க முடிவு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை கடந்த 2008-ம் ஆண்டு ஏலத்தில் ரூ.592 கோடிக்கு டெக்கான் கிரானிக்கல் குரூப் வாங்கியது.

இந்த நிலையில் டெக்கான் அணியை முழுமையாகவோ அல்லது அணியின் மொத்த பங்குகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அணியை வாங்குவதற்கு தகுதியான நிறுவனத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

லண்டன் ஒலிம்பிக்: பூபதி திடீர் போர்க்கொடி

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் விளையாட லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி தேர்வு செய்யப்பட்டனர். போபண்ணாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற பூபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் கூட்டம்(ஏ.ஐ.டி.ஏ.,) நேற்று பெங்களூருவில் நடந்தது.

ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில், ஒரு நாட்டின் சார்பில் இரண்டு வெவ்வேறு ஜோடியை அனுப்பலாம். ஆனால், ஏ.ஐ.டி.ஏ., ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்ப முடிவு செய்தது. பயசுடன் பூபதி இணைந்து விளையாடுவார் என அறிவித்தது. இது பூபதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், போபண்ணாவுடன் இணைந்து விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தார்.

பயஸ்-பூபதியை பொறுத்தவரை ஏற்கனவே நான்கு முறை (1996, 2000, 04, 08) ஒலிம்பிக் போட்டியில் விளையாடியுள்ளனர். இதல் ஒரு முறை கூட பைனலுக்கு முன்னேறவில்லை. அதிகபட்சமாக 2004ல் அரையிறுதி வரை சென்றது. தற்போது, இவர்களை மீண்டும் தேர்வு செய்திருப்பது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தேசம் முக்கியம்:

இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் அனில் கண்ணா கூறியது: லண்டன் ஒலிம்பிக்கில் பயசின் ஜோடியாக பூபதியை தேர்வு செய்துள்ளோம். ஏற்கனவே இவர்கள் நான்கு முறை ஒலிம்பிக் போட்டியில் விளையாடி இருப்பதால், போதிய அனுபம் பெற்றிருப்பார்கள். இவர்கள், தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து, தேசத்துக்காக இணைந்து விளையாடுவார்கள் என நம்புகிறோம்.

தவிர சமீபகாலமாக பூபதியின் "பார்ம்' சிறப்பாக இருப்பதால், பயசுக்கு சரியான ஜோடியாக தீர்மானித்தோம். இவர்களது பயிற்சிக்காக இந்திய அரசு மாதம் ரூ. 3.50 லட்சம் வரை செலவு செய்கிறது. இதனால் இவர்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது.

லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இரண்டு இந்திய ஜோடிக்கு அனுமதி இருந்த போதிலும், ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்ப உள்ளோம். இது தகுதியான வீரர்கள் இல்லாததையே சுட்டிக்காட்டுகிறது. இது, இந்திய டென்னிசுக்கு ஏமாற்றமான விஷயம்.

சானியாவுக்கு "வைல்டு கார்டு' அனுமதி கிடைத்த பின்பு தான், கலப்பு இரட்டையரில் விளையாடும் வீரர் குறித்து முடிவு செய்யப்படும். பயஸ், பூபதி ஜோடி லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பதால், இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இவ்வாறு அனில் கண்ணா கூறினார்.ஒலிம்பிக் போட்டிக்கு முன்னரே இப்படி மோதிக் கொண்டால்


"முதுகில் குத்தியவர்'

பூபதி கூறுகையில், ""பயசுடன் இணைந்து மீண்டும் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பது ஏமாற்றமான முடிவு. ஏற்கனவே நான்கு முறை விளையாடி உள்ளோம். இதில் ஒரு முறை கூட பதக்கம் கிடைக்கவில்லை. கடந்த "சீசனில்' திடீரென பிரிந்து, எனது முதுகில் குத்தினார். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை. எங்களுக்குள் நட்பு இல்லை.

இந்நிலையில் மீண்டும் எங்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவது சரியான முடிவு அல்ல. தற்போது நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். இதில் ஒருவரை, பயசின் ஜோடியாக தேர்வு செய்திருக்கலாம். இரண்டு ஜோடிக்கு வாய்ப்பு இருந்தும், ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்புவது ஏமாற்றம் அளிக்கிறது,'' என்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னரே இவர்கள் இப்படி மோதிக் கொண்டால், பதக்கம் எப்படி கிடைக்கும் என்று டென்னிஸ் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

லியாண்டர் பயஸ் ஜோடி யார்?

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாடுவது யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங் (தரவரிசை) இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். மற்ற இந்திய வீரர்களான மகேஷ் பூபதி (14வது இடம்), ரோகன் போபண்ணா (12வது) லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ், ஆண்கள் இரட்டையரில் பயசுடன் இணைந்து விளையாடப் போவது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக உள்ளது. பூபதி அல்லது போபண்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீபகாலமாக பயஸ், பூபதியுடன் இணைந்து விளையாடுவதில்லை. இந்த ஆண்டு முதல், புதிதாக ஜோடி சேர்ந்துள்ள பூபதி-போபண்ணா ஜோடி இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் பூபதி-போபண்ணா ஜோடியை அனுப்ப இயலாது.


சர்ச்சை "மெயில்':

சமீபத்தில் பூபதி-போபண்ணா இணைந்து, இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு "இ-மெயில்' மூலம் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் லண்டன் ஒலிம்பிக்கில் நாங்களே இணைந்து விளையாட விரும்புகிறோம். இல்லையென்றால், பயசுக்கு ஜோடியாக வேறு யாரையாவது தேர்வு செய்து கொள்ளுமாறு கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.


பூபதிக்கு வாய்ப்பு:

இந்திய வீராங்கனை சானியா மிர்சா, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட நேரடி வாய்ப்பை இழந்த நிலையில், தற்போது "வைல்டு கார்டு' அனுமதியை எதிர்நோக்கி உள்ளார். ஒருவேளை இவருக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையரில் விளையாடப் போவது யார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

சமீபத்தில் சானியா-பூபதி ஜோடி பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் பட்டம் வென்றது. ஏற்கனவே இந்த ஜோடி, ஆஸ்திரேலிய ஓபனிலும் பட்டம் வென்று சாதித்துள்ளது. இதனால் பயசுடன் இணைந்து பூபதியை அனுப்பும் பட்சத்தில், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடலாம்.


இன்று முடிவு:

இதனால் இந்திய டென்னிஸ் சங்கம் குழப்பத்தில் உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் இன்று இறுதி முடிவை எடுக்க உள்ளது.

இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ""லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு யாரை தேர்வு செய்வது என்பது எங்களுக்கு தெரியும். வீரர்கள், தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து, தேசத்திற்காக இணைந்து விளையாட முன்வர வேண்டும்,'' என்றார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவுக்கு விளையாடத் தடை

இலங்கை அரசு சார்பில் எப்போது அழைத்தாலும் விளையாட வர வேண்டும் என்ற இலங்கை அரசின் விளையாட்டுத் துறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் லஸித் மலிங்காவுக்கு விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ளூர் விளையாட்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தம், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத வீரர்களுக்கு, விளையாடத் தடை விதிக்கவும் வகை செய்வதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தனந்தா கூறியுள்ளார்.

ரஞ்சி கோப்பை தொடரில் அதிரடி மாற்றம்

ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடரில் அதிரடி மாற்றங்களை செய்து, கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

உள்ளூர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர், ஆண்டுதோரும் நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இதில் 27 அணிகள், "எலைட்' மற்றும் "பிளேட்' என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் "எலைட்' பிரிவில் 15 அணிகளும், "பிளேட்' பிரிவில் 12 அணிகளும் விளையாடும்.

இதில் மாற்றம் கொண்டுவர, கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி முடிவு செய்தது. இதற்காக நேற்று மும்பையில் இரண்டு மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, பி.சி.சி.ஐ., செயற்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தொழில்நுட்ப கமிட்டியில் பரிந்துரை செய்யப்பட்ட முடிவுகள்:

ரஞ்சி கோப்பை தொடரில், மொத்தமுள்ள 27 அணிகள் "ஏ', "பி', "சி' என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 9 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணிகளும், தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும்.

லீக் சுற்றின் முடிவில் "ஏ' மற்றும் "பி' பிரிவில் தலா முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள், "சி' பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதன்பின் அரையிறுதி, பைனல் நடக்கும்.

* முன்னதாக லீக் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் தலா நான்கு நாட்கள் நடக்கும். பைனல் மட்டும் ஐந்து நாட்கள் நடத்தப்படும். ஆனால் இனிவரும் காலங்களில் லீக் சுற்றுப் போட்டிகளை வழக்கம்போல நான்கு நாட்கள் நடத்தவும், "நாக்-அவுட்' சுற்றான காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல் தலா ஐந்து நாட்கள் நடத்த ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முன்னதாக, வெற்றி பெறும் அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும். "டிரா'வில் முடியும் பட்சத்தில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அணிக்கு 3 புள்ளி, மற்றொரு அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். இனி, "டிரா'வில் முடிந்தால், இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெறும் அணிக்கு வழக்கம்போல 6 புள்ளிகள் கிடைக்கும். தவிர, இன்னிங்ஸ் அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணிக்கு கூடுதலாக ஒரு "போனஸ்' புள்ளி வழங்கப்படும். மழை போன்ற இயற்கை நிகழ்வுகளால் போட்டி பாதிக்கப்படும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

* ரஞ்சி கோப்பை "நாக்-அவுட்' சுற்றின் போது, ஐந்து நாட்களில் போட்டி முடியாத பட்சத்தில், 6வது நாள் போட்டி நடத்தப்படும். 6வது நாளும் போட்டி முடியாத பட்சத்தில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்படும். ஒருவேளை இரு அணிகளின் முதல் இன்னிங்சும் 6 நாட்களில் முடியாத பட்சத்தில் "டாஸ்' முறையில் வெற்றி பெறும் அணி தேர்வு செய்யப்படும்.

* உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில், ஒரு ஓவரில் இரண்டு "பவுன்சர்' பந்துகள் வீச அனுமதி அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு பவுலர் 12 ஓவர் வீச அனுமதி அளிக்கப்படும்.

* முன்னதாக சால்வே சாலஞ்சர்ஸ் தொடரில், இந்தியா "ரெட்', "புளூ', "கிரீன்' என மூன்று அணிகள் பங்கேற்கும். இந்த மூன்று அணிகளை பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தேர்வு செய்யும். இனிமேல் இரண்டு அணிகளை மட்டும் தேர்வுக்குழு நியமிக்கும். மூன்றாவது அணியாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி விளையாடும்.

இதுதவிர துலீப் டிராபி, இரானி கோப்பை, தியோதர் டிராபி, சயீத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களிலும் சில மாற்றங்கள் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்ப கமிட்டி தலைவர் கங்குலி கூறுகையில், ""ரஞ்சி கோப்பை தொடரில் சில முக்கிய மாற்றங்களை செய்ய பரிந்துரை செய்துள்ளோம். இதன்மூலம், இனிவரும் தொடரில் ஒவ்வொரு அணிகளும் நிறைய போட்டிகளில் பங்கேற்கலாம். இது வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும். இதற்கான இறுதி முடிவை, செயற்குழு தான் முடிவு எடுக்கும்,'' என்றார்.