பயிற்சிக்கு "நோ' சொன்ன வீரர்கள்

டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய வீரர்கள் திருந்தவே இல்லை. தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, "கோ- கார்ட்டிங்' ரேசில் பங்கேற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணி, முதலிரண்டு டெஸ்டில் தோல்வி அடைந்தது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட் வரும் 13ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.

இதில், சாதிப்பதற்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "கோ-கார்ட்டிங்' எனப்படும் சிறிய வகை கார் ரேசில் கலந்து கொண்டு பொழுதை வீணாக்கினர்.


தோனி அணுகுமுறை:

இத்தொடரில் இந்திய வீரர்கள் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதது பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக சாடினார். இவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லவில்லை என விமர்சித்தார்.

வீரர்களின் தவறான மனநிலைக்கு கேப்டன் தோனியின் அணுகுமுறையும் ஒரு காரணம். வலைப்பயிற்சியில் ஈடுபடுவதால் உடனடி பலன் கிடைக்கப் போவதில்லை என நம்புகிறார். இவர் கூறுகையில்,""ஆஸ்திரேலிய பந்துவீச்சை நமது வீரர்கள் நன்கு அறிந்து கொண்டனர்.

தற்போதைக்கு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் நல்லது. சிலர் பயிற்சியில் அதிக நேரம் செலவழிக்க விரும்பலாம். தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால், கிரிக்கெட்டில் இருந்து விலகி, பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதே சிறந்தது. இது மனதளவில் புது உற்சாகம் தரும்,''என்றார்.

இதே கருத்தையே இந்திய அணியின் மானேஜர் அலுவாலியாவும் பிரதிபலித்தார். இவர் கூறுகையில்,""கோ-கார்ட்டிங் ரேஸ்' போன்றவை மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். சிறிய வகை ரேஸ் காரை ஓட்டும் போது புது அனுபவம் கிடைக்கும்.

2007-08ல் பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டிக்கு முன், இந்திய வீரர்கள் சைக்கிள் "ரேசில்' கலந்து
கொண்டனர். பின் அந்த போட்டியில் வெற்றி பெற்றனர்,'' என்றார்.

அலுவாலியா சொல்வது போல் இம்முறையும் இந்திய அணி வெற்றி பெறுமா?

ரேங்கிங்: இந்தியா பின்னடைவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி "டிரா' (2-2) செய்தால் கூட, ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில், இங்கிலாந்து (125), இந்தியா (118), தென் ஆப்ரிக்கா (117), ஆஸ்திரேலியா (103) முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் இந்திய அணி, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒருவேளை மீதமுள்ள இரண்டு டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தொடர் 2-2 என "டிரா' ஆகிவிடும்.

இருப்பினும், ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில், இந்திய அணி 117 புள்ளிகள் பெற்று, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். இதனால் தென் ஆப்ரிக்க அணி (117), ஒரு சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில், இரண்டாவது இடத்துக்கு முன்னேறும்.

டெஸ்ட் தொடரை, 3-0 என கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி 110 புள்ளிகளுடன், நான்காவது இடத்தில் நீடிக்கும். இந்திய அணி 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒருவேளை 3-1 என கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி 108 புள்ளிகளுடன் 4வது இடத்தில் தொடரும். இந்திய அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடிக்கும்.

ஒருவேளை, 4-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு தலா 111 புள்ளிகள் கிடைக்கும். ஒரு சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி மூன்றாவது இடத்தை பெறும்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், சச்சின் (6வது இடம்), டிராவிட் (15வது இடம்), லட்சுமண் (18வது இடம்), சேவக் (22வது இடம்) உள்ளிட்ட இந்திய வீரர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சிட்னி டெஸ்டில் 329 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் (8வது இடம்), சுமார் 15 மாதங்களுக்கு பின் "டாப்-10' வரிசையில் இடம் பிடித்துள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 12வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பென் ஹில்பெனாஸ், 11 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 11வது இடம் பிடித்தார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் காகிதப்புலிகள்

இந்திய பேட்ஸ்மேன்கள் காகித புலிகளாக உள்ளனர். களத்தில் தொடர்ந்து சொதப்பும் இந்த வயதான வீரர்கள் தேவைதானா'' என ஆஸ்திரேலிய "மீடியா'க்கள் சாடியுள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடக்கிறது. மெல்போர்னில் 122 ரன்கள் வித்தியாசம், சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்த இந்திய அணி, தொடரில் 0-2 என பின்தங்கியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் செய்திகள்:


"ஆஸ்திரேலியன் அசோசியேட் பிரஸ்'

காகித அளவில் பார்த்தால், இந்திய டெஸ்ட் அணியின் "பேட்டிங்' படை, இதுவரை பார்த்திராத அளவில் அஞ்சத்தக்க வகையில் இருந்தது. ஆனால் உண்மையில் இவர்களுக்கு வயதாகிவிட்டது. அனுபவம் பயனற்றதாகி விட்டது.

டிராவிட், சச்சின் 39 வயதை நெருங்குகின்றனர். லட்சுமண் 37ல் உள்ளார். இவர்களை வைத்து தான் சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மோசமாக தோற்றது. தற்போது ஆஸ்திரேலிய தொடரில் பின்தங்கியுள்ளது. இவையெல்லாம் ஏதோ கெட்ட செய்தியை உணர்த்துகின்றன.

சாம்பியன் வீரர்கள் அதிகம் நிறைந்திருப்பது எப்போதும் அணிக்கு ஆபத்து தான் தரும். இந்த மும்மூர்த்திகள் தவிர, சேவக், கேப்டன் தோனியும் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்திய அணி "நம்பர்-1' இடத்தை இங்கிலாந்திடம் இழக்கும் முன், இந்த சீனியர் வீரர்கள் பெரிய "பார்ட்னர்ஷிப்' அமைத்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். இப்போது அதுபோல நிகழவில்லை. இவர்களது வயது குறித்து கேள்விகள் எழுகின்றன.


"சிட்னி மார்னிங் ஹெரால்டு'

சிட்னி மைதானம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என மிகைப்படுத்தப்பட்ட வதந்தி இருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்குப் பின்னும் சச்சின், லட்சுமண் களத்தில் இருந்த போது, இந்திய அணி மீண்டுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. சச்சின், லட்சுமண் வெளியேறிய பின், மற்ற வீரர்கள் வழக்கம் போல போவதும் வருவதுமாக இருக்க, கிளார்க் மடியில் வெற்றி விழுந்தது.


"தி ஆஸ்திரேலியன்'

கிளார்க், சச்சினின் ஒரு விக்கெட்டை மட்டும் தான் வீழ்த்தினார். இது ஐந்து விக்கெட் எடுத்ததற்கு சமம். எப்போது சச்சின் அவுட்டானாரோ, அது மற்ற வீரர்களின் வெளியேற்றத்துக்கான வாசல் கதவை திறந்து விட்டது.


"ஹெரால்டு சன்'

பெரிய பேட்டிங் படை கொண்ட இந்திய வீரர்களை, நான்கு நாட்களில் வீழ்த்தி, இரு வாரத்தில் இருமுறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது. கேப்டன், ஒருநாள் 300 ரன்கள் எடுக்கிறார். மறுநாள் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி, 100வது சத சாதனையை தடுக்கிறார். இவர் கேப்டனாக இனி செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.


"டெய்லி டெலிகிராப்'

சொந்த மண்ணில் கிளார்க் அடித்த "டிரிபிள்' சதம், என்றென்றும் நினைவில் நீடித்து இருக்கும். சரியான நேரத்தில் பாண்டிங், ஹசி சதம் அடித்தனர்.

இவ்வாறு அவை தெரிவித்து இருந்தன.

54 நாட்கள்...76 போட்டிகள்: ஐ.பி.எல்., அட்டவணை அறிவிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், சென்னையில் வரும் ஏப்ரல் 4ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 54 நாட்களில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர், வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

இத்தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மும்பையில் நேற்று அறிவித்தது. வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

கடந்த தொடரில் அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, சமீபத்தில் ஐ.பி.எல்., தொடரில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்ட்டா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 54 நாட்கள் நடக்கும் இத்தொடரில், 72 லீக் போட்டிகள், மூன்று "பிளே-ஆப்' (பைனலுக்கான தகுதிச் சுற்று), ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கின்றன. பெங்களூருவில் இரண்டு "பிளே-ஆப்' போட்டிகளும், சென்னையில் ஒரு "பிளே-ஆப்' மற்றும் பைனல் (மே 27) நடக்கிறது.

லீக் போட்டிகள் அனைத்தும், முதல் மூன்று தொடரில் விளையாடியது போல நடக்கும். அதாவது ஒரு அணி, மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை லீக் போட்டியில் விளையாடும். இதில் ஒரு போட்டி உள்ளூரிலும், மற்றொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாடும்.

லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், பைனலுக்கான "பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

முதல் "பிளே-ஆப்' போட்டியில், முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு நேரடியாக முன்னேறிவிடும். இரண்டாவது "பிளே-ஆப்' போட்டியில் 3, 4வது இடத்தில் உள்ள அணிகள் மோதும்.

இதில் வெற்றி பெறும் அணி, முதல் "பிளே-ஆப்' போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன், மூன்றாவது "பிளே-ஆப்' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெறும்.

100வது சதத்தைப் பற்றி நினைக்கவில்லை

100-வது சதத்தைப் பற்றிய சிந்தனையின்றி போட்டியை மிகவும் ரசித்து விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறேன் என்று சச்சின் கூறியுள்ளார்.

சச்சினின் 100-வது சதத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவர் மேலும் கூறியது:

100-வது சதம் என்பது வெறும் எண்ணிக்கைதானே என்று சொல்வது எளிது. ஆனால் அதை அடிப்பது கடினம். 100-வது சதம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் நான் போட்டியை ரசித்து விளையாடவே விரும்புகிறேன். ரசிப்புத் தன்மை மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன்.

இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியோடு விளையாடுவதிலும், வெற்றிபெறுவதிலுமே முழுக் கவனமும் உள்ளது என்றார்.