கோல்டன் ஷூ யாருக்கு?

2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்க ஷூவை வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் தங்க ஷூவை வெல்வதற்கு 3 வீரர்களிடையே தற்போது கடும் போட்டி நிலவுகிறது.

அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா 5 கோல்கள் அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்த படியாக ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

அரை இறுதியில் ஸ்பெயின், ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வில்லா மற்றும் ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் கோல் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இவர்கள் அடிக்கும் கோல்களைப் பொறுத்துதான் தங்க ஷூவை தட்டிச்செல்வது யார் என்பது தெரியவரும்.

இதேபோல் உருகுவே வீரர் டீகோ போர்லான், நெதர்லாந்தின் வெஸ்லே ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர். இந்த இரு அணிகளும் அரை இறுதியில் விளையாடுகின்றன. சிறப்பாக விளையாடி அதிக கோல்களை அடிக்கும் பட்சத்தில் இவர்களுக்கும் தங்க ஷூ கிடைக்க வாய்ப்புள்ளது.

போதை உலக கோப்பை

போதைப் பொருளால் செய்யப்பட்ட உலக கோப்பை மாடலை, கொலம்பிய போலீசார் கைப்பற்றினர்.

தற்போது உலக கோப்பை கால்பந்து தொடர் நடப்பதால், ஆங்காங்கே ரசிகர்கள் பிளாஸ்டிக்கால் ஆன மாதிரி உலக கோப்பையை வைத்துக்கொண்டு, மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த சூழலுக்கு ஏற்ப, போதைப்பொருள் கடத்துபவர்கள் மனதில் "சூப்பர்' திட்டம் உருவெடுத்துள்ளது. அதாவது போதைப்பொருளை கொண்டே, மாதிரி உலக கோப்பை தயார் செய்துள்ளனர். 

இந்த கோப்பை, அசல் போலவே 36 செ.மீ., உயரம், அடிப்பகுதியில் பச்சை நிறத்திலான பட்டை என தயார்செய்து, தங்கமுலாம் பூசப்பட்டு இருந்தது. கொலம்பிய விமான நிலையத்தில் வழக்கமாக நடந்த, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனையின் போது, கோப்பை மீது சந்தேகம் வந்துள்ளது. 

இதையடுத்து கோப்பையை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பினர். இதன் முடிவில் "கோகைன்' என்ற போதைப்பொருளுடன் (11 கி.கி.,), அசிட்டோன் கலந்து உருக்கி செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

கால்பந்து சூறாவளி

கால்பந்து குறித்து சிறிது அறிந்திருப்பவர்கள் கூட ரொனால்டோவைப் பற்றி நிச்சயமாக அதிகம் அறிந்திருப்பார்கள். அந்த அளவுக்கு கால்பந்து விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தவர் பிரேசில் வீரர் ரொனால்டோ.

ரொனால்டோ லூயில் நசாரியோ டே லிமா என்பது அவரது முழுப்பெயர். 1976-ல் பிறந்த அவர், சிறுவயதில் கூடைப் பந்தாட்டத்தில் தொடங்கி பின்னர் கால்பந்தில் ஜொலிக்கத் தொடங்கினார். பந்தை நுணுக்கமாகவும், வேகமாகவும் எடுத்துச் சென்று கோல் அடிக்கும் திறமை அவருக்கு மட்டுமே உரியது. அவரது ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மைதானத்துக்கு வருவது வழக்கம்.

1996, 1997, 2002 ஆகிய ஆண்டுகளில் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிபா விருதை ரொனால்டோ வென்றுள்ளார்.

முன்னதாக 1993-ல் க்ரூசெயிரோ கிளப்புக்காக தொழில்முறையாக விளையாடத் தொடங்கினார். தொடர்ந்து ரியல் மாண்ட்ரிட், மிலன் உள்பட பல்வேறு புகழ்பெற்ற கிளப்புகளில் அவர் விளையாடினார்.

1994-ல் பிரேசில் அணியில் இடம் பிடித்து ஆர்ஜென்டீனா அணிக்கு எதிராக நட்பு ரீதியான போட்டியில் விளையாடினார். அப்போது ரொனால்டோவின் ஆட்டம் அவ்வளவாக எடுபடவில்லை.

எனினும் அடுத்து வந்த ஒவ்வொரு ஆட்டங்களிலும் அவரது வேகமும், அவர் அடிக்கும் கோல்களும் அதிகரித்து வந்தது. 1998 உலகக் கோப்பையில் நான்கு கோல்கள் அடித்ததுடன், 3 கோல்களை அடிக்க உதவியும் செய்திருந்தார். இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம், பிரேசில் தோல்வியடைந்தது. போட்டிக்கு முந்தைய நாள் இரவு ரொனால்டோ வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் சிறப்பாக விளையாட முடியாமல் போனது.

ஆனால் இதனை ஈடுசெய்யும் விதமாக 2002-ம் ஆண்டு உலக் கோப்பையை ரொனால்டோ தலைமையிலான பிரேசில் அணி வென்றது. அந்தப் போட்டியில் அவர் மொத்தம் 8 கோல்களை அடித்து தங்கக் காலணியை வென்றார்.

2006-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது ரொனால்டோ அதிக எடை கூடி விட்டார். அவரால் சிறப்பாக விளையாட முடியாது என்று கருத்து எழுந்தது.

ஆனால் அந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் புதிய சாதனை படைத்தார். உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 15 கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். உலகக் கோப்பையில் போட்டித் தொடரில் தொடர்ந்து 3 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் அவர் தனதாக்கினார்.

எனினும் காலிறுதியில் பிரான்ஸிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்று பிரேசில் வெளியேறியது. பின்னர் தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டதால் அவர் தேசிய அணியில் இடம் பிடிக்கவில்லை. தற்போது கொரிந்தியின்ஸ் கிளப் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

பிஃபாவின் சிறந்த வீரர்

1974-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் நெதர்லாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் ஜோஹன் குருயுஃப்.

இவர் 1947-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டேமில் பிறந்தார். இளம் வயதிலேயே கால்பந்தால் கவர்ந்திழுக்கப்பட்ட ஜோஹன், தனது 14-வது வயதில் அஜாக்ஸ் கிளப்பிற்காக விளையாட ஆரம்பித்தார். ÷அந்த அணிக்காக பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் நெதர்லாந்து தேசிய அணியில் 1966-ம் ஆண்டு இடம்பிடித்தார்.

1974-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்ற நெதர்லாந்து அணியில் ஜோஹனும் இடம்பெற்றிருந்தார். அந்த உலகக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களிலும் ஜோஹன் அபாரமாக ஆடினார். நெதர்லாந்து அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

பலம் வாய்ந்த பிரேசில், ஆர்ஜென்டீனா, மேற்கு ஜெர்மனி அணிகளுக்கு எதிராக அபாரமாக ஆடி கடும் சவாலை அளித்ததோடு, உலகக் கோப்பையின் சிறந்த வீரராக ஜோஹன் தேர்வு செய்யப்பட்டார். நெதர்லாந்து தேசிய அணிக்காக 11 ஆண்டுகள் விளையாடிய இவர், 48 ஆட்டங்களில் 33 கோல்கள் அடித்துள்ளார்.  

அஜாக்ஸ், பார்சிலோனா, லாஸ் ஏஞ்செல்ஸ், வாஷிங்டன் டிப்ளோமேட்ஸ், லீவன்டே, பெயினூர்டு கிளப் அணிகளுக்காக 520 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜோஹன் 291 கோல்கள் அடித்துள்ளார்.

1984-ல் கால்பந்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அஜாக்ஸ், பார்சிலோனா, கேட்டலோனிய கிளப்புகளுக்கு மேலாளராக இருந்துள்ளார். தற்போது நெதர்லாந்து அணியின் மேலாளராக உள்ளார்.

3 முறை ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர், 1984 உலகக் கோப்பையின் தங்கப் பந்து விருது, நெதர்லாந்தின் தங்க ஷூ விருது, 1987-ம் ஆண்டின் சிறந்த அணி மேலாளர் விருது, 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஐரோப்பிய வீரர் விருது, நெதர்லாந்தின் நம்பர் 1 வீரர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

உலக கோப்பை காணவில்லை

தென் ஆப்ரிக்காவிலுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தற்காலிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த, உலக கோப்பை மாதிரியை காணவில்லை. 

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

 உலக கோப்பை தொடர் நடக்கும் வேளையில் தென் ஆப்ரிக்காவில் திருட்டு மற்றம் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் உச்சகட்டமாக, இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப் படவுள்ள உலக கோப்பையை மாதிரியை திருடிச் சென்றுள்ளனர். 

பொதுவாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் தங்க கோப்பையை, அந்த அணிகள் சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாது. நான்கு ஆண்டுகள் கழித்து அவற்றை "பிபா' விடம் ஒப்படைத்துவிட வேண்டும். மாறாக அவற்றுக்குப் பதில் மாதிரி கோப்பை வழங்கப்படும்.

இந்த மாதிரி கோப்பை, பிபா அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதை வரும் ஜூலை 11ம் தேதி பைனல் நடக்கும் போது, மைதானத்தில் அமைக்கப்படும் மேடையில் வைக்க இருந்தனர். ஆனால், தற்போது இந்த கோப்பை திருடு போயுள்ளது. 

இதுகுறித்து தேசிய போலீஸ் கமிஷனர் பேகி செலே கூறுகையில்,"" மாதிரி கோப்பை மற்றும் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிற விளையாட்டு பொருட்கள் திருடு போனது உண்மை தான். இது பற்றி விசாரித்து வருகிறோம்,'' என்றார்.