சேவக்கை தடுத்த சச்சின்

‘‘கடந்த 2007ல் ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதை சக வீரர் சச்சின்தான் தடுத்து விட்டார்,’’ என, இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் தெரிவித்தார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் சேவக், 37. டெஸ்ட் அரங்கில் இரு முறை முச்சதம் உள்ளிட்ட அதிக சாதனைகளை எட்டியவர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட உள்ளார். 

இது குறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு வீரரும் சர்வதேச அரங்கில் உயரத்தில் இருக்கும்போது, ஓய்வு பெற்றுவிடுவர். இதன்படிதான் நானும் செயல்பட முடிவு எடுத்திருந்தேன். கடந்த 2007ல் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, ஓய்வு பெற்றுவிடலாம் என எண்ணினேன். 

ஆனால், சச்சின்தான் இதை தடுத்துவிட்டார். கடந்த 2013ல் ஆஸ்திரேலிய தொடரில் என்னை அணியிலிருந்து நீக்கினர். இது குறித்து எந்த தகவலையும் என்னிடம் முன்பே சொல்லவில்லை. அப்படி தெரிவித்திருந்தால், அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன். 


எப்போதும் நேர்மை:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியது எனது மகன்களுக்கு பிடிக்கவில்லை. இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் கும்ளே சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். 

வீரர்களுக்கு ஊக்கத்தை அளிப்பார். இந்திய கிரிக்கெட் போர்டு அல்லது வர்ணனையாளர் பதவிக்கு யாரேனும் அழைத்தால், பரிசீலனை செய்வேன். என் ‘பேட்டிங்கை’ போல, வர்ணனையும் நேர்மையுடன்தான் இருக்கும். இவ்வாறு சேவக் கூறினார். 

0 comments:

Post a Comment