தோனிக்கு எதுவுமே தெரியலை - கவாஸ்கர் திடீர் தாக்கு

இந்திய அணி கேப்டன் தோனியிடம் புதிய திட்டங்களை செயல்படுத்தும் திறன் இல்லை. பவுலர்களை சரியான முறையில் கையாளத் தெரியவில்லை,’’ என, கவாஸ்கர் குற்றம் சுமத்தினார்.

இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என, வென்றது. மும்பையில் நடந்த கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 438 ரன் குவித்தது.

இந்திய பவுலர்கள் சொதப்பல் காரணமாக குயின்டன் டி காக், டுபிளசி, டிவிலியர்ஸ் என, 3 பேர் சதம் அடித்தனர். இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி 224 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 214 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:

கேப்டன் தோனியிடம் சூழ்நிலைக்கு ஏற்ப பவுலர்களை எப்படி மாற்ற வேண்டும் எனச் சரியாகத் தெரியவில்லை. மாற்றங்களை எளிதில் விரும்பாத இவரிடம் புதிய திட்டங்கள் செயல்படுத்தும் திறமை இல்லை.

இதற்கு முன்பெல்லாம் பவுலிங்கில் மாற்றம் செய்யும் போது இவரது யோசனைகள் சிறப்பாக இருக்கும். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஒட்டுமொத்த பவுலர்களும் சேர்ந்து சொதப்பி விட்டனர்.

இப்போதைய நிலையில் இந்திய அணியின் பவுலிங் பிரிவு தான் மோசமாக உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டுவென்டி-20, ஒருநாள் தொடரில் எவ்வளவு மந்தமாக செயல்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

வான்கடே ஆடுகளம் நன்கு திருப்பம் தரக் கூடியது. இந்த சூழலுக்கு ஏற்ப நமது பவுலர்கள் செயல்படத் தவறி விட்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளாக வீசினர் என்றாலும், இதன் வேகம் 135 கி.மீ., என்பதால், எதிரணியினர் ரன் குவிக்க வசதியாக போனது.

ஒருமுறை கூட வேகத்தினால் அவர்களுக்கு தொல்லை தர முடியவில்லை. பவுன்சர்களாக வீச வேண்டும் எனில் பந்தின் வேகம் 145 கி.மீ., ஆக இருக்க வேண்டும்.

0 comments:

Post a Comment